தங்கலான் – ஆதிக்குடிகள் நிலத்தின் வேர் தேடி போரிடும் வீர காவியம்

31 Aug 2024

வ.ரமணி

தமிழ் சினிமாவில் ஒரு  திருப்புமுனையாக தொல்குடி இன மக்களின் வாழ்க்கையை, நில உரிமைப் போராட்டத்தை பறைசாற்றும் படைப்பே தங்கலான். மின்னும் தங்கத்திற்குப் பின்னுள்ள அடித்தட்டு உழைப்பாளர்களும் சுரங்கக் குழிகளில் ஆயிரக்கணக்கானோர் சிந்திய ரத்தமும் வியர்வையும் மக்களின் தீராத சாதிக்கு எதிரான விடுதலை வேட்கையும் தங்கலான் திரைப்படத்தில் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வில் இணைந்திருக்கும் ஆவி வழி மூதாதையர்களைத் தேடி அறிதல் எனும் பழக்கவழக்கம் கொண்ட தொன்மக் கதையையும் ஆரத்தி எனும் ஆளுமை கொண்ட குலத்தலைவியை முக்கியக் கதாபாத்திரமாக்கி பொன்னையும் நிலத்தையும் காக்கும் பழங்குடியினமாக நாகர் இனத்தின் வலிமையை உரக்கச்சொல்கிறது.

தங்கலான் சொல்லும் கதைக் கரு  என்ன?

கிபி 18ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான காலகட்டத்தையும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிக்குடிகள் வாழ்ந்த காலகட்டத்தையும் பிரதிபலிக்கிறது. முதலில், நிலமுள்ள விவசாயக் குடிகளாக வாழ்ந்த தலித் மக்களின் வாழ்வியல். அடுத்து, அம்மக்களின் சொந்த வயலும் பண்ணையாதிக்கவாதியால் இரவோடு இரவாகக் கொளுத்தப்பட்டு நிலங்கள் பறிக்கப்பட்டு தலித் மக்கள் நிலமற்றவர்களாக்கப்படும் அவலத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. அத்தோடு சாதி ஆதிக்கம், வர்க்கச் சுரண்டலைப் பற்றியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தக் காட்சி மூலம் இயக்குநர் ரஞ்சித் ஏற்கனவே சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பி விவாதமான “மன்னர் (சோழர்) ஆட்சிக் காலத்தின்போது தலித் மக்களிடமிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டன“ என்பதை இப்படத்திலும் பதிவு செய்கிறார்.

அத்தோடு, குலதெய்வம், சைவம், வைணம், பௌத்தம், போன்ற பல சமய மார்க்கங்களின் பாத்திரம் குறித்த வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரமாக்கியுள்ளார்.

அடுத்து, வட ஆற்காடு, செங்கல்பட்டு ஜில்லாவிலிருந்து கோலார் நோக்கி சுரங்கம் தோண்டும் பணிக்காக நுண் திறன் கொண்ட கடும் உழைப்பாளி மக்களான (தங்கலான் எனும் பறையர் பிரிவு) தலித் மக்களை பிரிட்டிஷ் அதிகாரி அழைத்துச் செல்கிறார். அப்பொழுது ஒரு வசனம் வரும், “சோழர் காலத்தில இருந்து திப்பு சுல்தான் ஆட்சிக் காலம் வரை உங்க ஜனங்கதான் தங்கத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நீங்களும் வந்து தங்கத்தை எடுத்துக் கொடுக்க வரவேண்டும்.“ அதற்கானக் கூலி தருவதாகவும் தங்கம் கிடைத்தால் பங்கு தருவதாகவும் பிரிட்டிஷ் அதிகாரி சொல்கிறார். தங்கலான் இதற்குச் சம்மதித்து சிலரை அழைத்துக்கொண்டு புறப்படுகிறார்.

இந்த இடம் மிக முக்கியமான மாற்றத்தை வலியுறுத்துகிறது. அதாவது, கிராமப்புற சாதிய நிலவுடமையோடு பின்னப்பட்ட தலித் மக்கள், சாதி ஒடுக்கு முறையிலிருந்தும்  பண்ணை அடிமை வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். சுதந்தரமான உழைப்பாளி களாகத் தங்களைக் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடாக பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் சமமாக மதித்து கைக்கொடுக்கும் முதல் முதலாக நடந்த அந்த உணர்வை நினைத்து மகிழ்கிறார்கள்.

அடுத்ததாக, இடம் பெயர்ந்த நவீனக் கூலி அடிமைமுறைக் காலகட்டம். பிரிட்டிஷ் அதிகாரி நமக்கு நல்லது செய்வார் என்று நம்பிச் செல்கிறார் தங்கலான். தங்கம் தேடி பயணிக்கும் வழியில் தங்கலான் கண்ணுக்கு மட்டும் ஆரத்தியும் தங்கம் உள்ள இடமும் தென்படுகிறது. யானை மலை தென்படுவதை நோக்கி பயணிக்கிறார்கள். கிணற்றுக்குள் புத்தரின் தலைப்பகுதி மட்டும் கிடைக்கிறது. தங்கலான் தன் பாட்டன்கள் நடத்திய சண்டையை நினைத்துப் பார்க்கிறார்.

“பாட்டன்கள், தங்கம் இருக்கும் இடம் நோக்கிச் செல்லும்போது ஓடும் ஆற்றில் தங்கத்தை சலித்து எடுக்கிறார்கள். அதனை அறிந்த அரசன், இவர்களைக் கைதுசெய்கிறார். கிடைத்தத் தங்கத்தைப் பார்த்து பிரமிக்கிறார். “தங்கம் எங்களுக்கு வேண்டும்” என எடுத்துத் தர உத்தரவிடுகிறார். அதற்குச் சன்மானமாக “நிலம் வேண்டும்“ என்று நிபந்தனை வைக்கிறார் தங்கலானின் பாட்டன். அதனை ஏற்றுக்கொண்டு தங்கம் இருக்கும் மலை நோக்கிச் செல்கிறார்கள். நாகங்கள் துரத்துகின்றன. முன்னேற முடியாமல் திணறுகிறார்கள். ஆரத்தி எனும் ஆளுமை அச்சுறுத்தி நிலத்தின் அருகில் வராமல் தடுக்கிறார். ஆரத்தியின் அலறல் சத்தத்தால் பூமியேப் பிளக்கிறது. தீப்பற்றி எரிகிறது. பலர் இறக்கிறார்கள். தங்கத்தை எடுக்க முடியாமற் போவதற்கு புத்தர் தான் காரணம் என புத்தரின் தலையை சீவச்சொல்லி சைவ பார்ப்பனர் உத்தரவிடுகிறார். அதற்கு அடிபணிந்த அரசன் புத்தரின் தலையை சீவி சாய்க்கிறார்.

அதன்பின் ஆரத்தியின் ஆக்ரோஷத்தை தங்கலான் அடக்கி அவள் வயிற்றைக் கிழித்ததில் ரத்தம் பீறிட்டு ஆறாய் ஓடுகிறது. அது பொன்னாய் மாறுகிறது. அந்தத் பொன்னை அரசன் அள்ளி எடுக்கையில் எழுந்த பூமியின் கொந்தளிப்பால் தப்பி ஓடுவிடுகிறார்கள். பாட்டனும், ஆரத்தியும் இறந்து விடுகிறார்கள். தங்கலான், அதன் நினைவுகளை அசை போட்டவாறே பிரிட்டிஷாரோடு தங்கத்தைத் தேடி வரும்போது வீழ்த்தப்பட்ட புத்தரின் தலையையும், உடலையும் தேடி எடுத்து அதே இடத்தில் சிலையை நிறுவுகிறார்கள் அந்த இடத்தில் தான் தங்கம் இருக்கும் என்பதை உறுதிசெய்து தோண்டுகிறார்கள்.

பிரிட்டிஷ் அதிகாரியின் கூலி ஆட்களாக செல்லும் தங்கலான் தன் இனத்தின் தலைவி என்பதை அறியாது ஆரத்தியை வீழ்த்த முயற்சித்துத் தோல்வி அடைகிறார்.  தங்கம் கிடைக்காத ஆத்திரத்தில் பிரிட்டிஷ் அதிகாரி இம்மக்களுக்கான ஊதியத்தைக் கொடுக்க மறுக்கிறார். இதனால் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பசி பட்டினியில் பலர் இறக்கிறார்கள். சோர்ந்திருப்பவர்களை நம்பிக்கையூட்டி தட்டி எழுப்புகிறார் தங்கலான். பல துன்பங்களுக்கு இடையில் தங்கத்தைத் தேடி இறுதி இடத்தை அடைகிறார்கள். ஆவியாக ஆரத்தியும் தங்கலானுடன் பயணிக்கிறார். சுரங்கத்தைக் கண்டடைகிறார்கள்.

தங்கம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் அதனை  எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் அதிகாரி அதனை தடுத்து, “அது எனக்குத் தான் சொந்தம் நீங்க உழைக்க வந்த கூலி அடிமைங்க” என்று சுட்டுக்கொல்லும் போது, ஆத்திரத்தில் பிரிட்டிஷ்  அதிகாரிக்கு எதிராக சண்டையிடுகிறார்கள் மக்கள். அவர்களை வீழ்த்தும் அதே நேரத்தில் தங்கலானுக்கு ஆரத்தி யார் என்ற நினைவும் வருகிறது. “நான்தான் ஆரன் உன் இனம்தான், எங்கோ சென்று வேறு இனத்தோடு கலந்து மாறிவிட்டேன் மன்னித்துவிடு“ என்று ஆரத்தியிடம் முறையிடுகிறார் தங்கலான். ஆரத்தி நம் மூதாதையர் என உணர்ந்து மூதாதையரோடு அப்பழங்குடி இனத்தோடு ஒன்றிணைந்து பிரிட்டிஷாரை வீழ்த்தி, பொன்னையும் நிலத்தையும் மீட்டு வெற்றி கொள்கிறார்கள் தங்கலான் மக்கள். இதுதான் படத்தின் மையமானக் கதை.

இப்படத்தின் தொடக்கத்திலேயே வட தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கும் வைணவத்தின் அடையாளங்கள் காட்டப்படுகின்றன.  குறிப்பாக பசுபதி கதாபாத்திரம் காத்திரமானது. அவர் தலித் மக்களில் ஒரு பிரிவினருக்கு அடுத்தத் தலைமுறை சிறுவர்களுக்குப் பூணூல் அணிவிப்பார். பின் கூறுவார், இனி நாம் கீழ் சாதி கிடையாது, “ராமானுஜர் வழியில் நாம் செல்வோம், வைகுண்டம் அடைவோம் இனி யாரும் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது. நாம் உயர்வானர்கள் என்பார்.”

(இந்த ராமானுஜர் யார் என்றால், 10-11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ சித்தாந்தவாதிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக வைணத்தைப் பரப்பியவர். குறிப்பாக தமிழ்நாட்டில் திருச்சி ஸ்ரீரங்கநாதர், திருப்பதி பெருமாள் கோவில்களுக்குள் தலித் மக்களை அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார். கடும் எதிர்ப்பால் அம்முயற்சி நடக்கவில்லை. கடும் நெருக்கடியை சந்தித்ததன் விளைவு இறுதிப் பத்தாண்டுகளில் மைசூரில் அடைக்கலமானார். அங்கு மேலக்கோட்டை எனும் பகுதியில் தலித் மக்களை கோவிலுக்குள்  அழைத்துச் சென்று வெற்றிகண்டுள்ளார். அதன் பின் பலருக்கு பூணூல் அணிவித்தார். தீண்டாமையை கடுமையாக எதிர்த்திருக்கிறார். தலித் மக்களுக்கு “திருக்குலத்தார்“ என்று பெயர் சூட்டி அழைத்தார். இதனைக் கண்ட கவிஞர் பாரதியாரும் கனகலிங்கம் எனும் தலித் ஒருவருக்கு பூணூல் அணிவித்தார் என்பது வரலாறு.) இவரின் சாதி எதிர்ப்புசீர்திருத்தப்பணியை அடையாளப்படுத்தும் விதமாக பசுபதியின் கதாபாத்திரத்தை இயக்குநர் ரஞ்சித் அடையாளப்படுத்துகிறார். அது நடக்கும் இடமும் மைசூராகவும் இருக்கிறது.

இதுபோன்று 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சாதிய தீண்டாமையை வைதீகத்தை எதிர்த்து சீர்திருத்தப் பணியை செய்தவர்கள் பலர். ராமானுஜரை போன்று, வ.ராமாசமி அய்யங்கார், பொதுவுடமை இயக்கவாதி ஏ.எஸ்.கே எனும் சீனிவாச ஐயங்கார், கவிஞர் சுப்ரமணிய பாரதி, வள்ளலார், நாராயண குரு, வைகுண்டர், அயோத்தி தாசர் போன்ற சமய, சாதி எதிர்ப்பு சமுதாய சீர்திருத்த வாதிகளின் பங்கை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு பண்பாட்டு மாற்றமாக பெருவாரியான தலித் மக்கள் இந்து மதத்தின் சாதி இழிவிலிருந்து விடுபடும் வடிகாலாக கிருத்துவத்தையும், இசுலாத்தையும் தழுவினர் என்பதும் வரலாறே.

இப்படத்தில் கோலார் தங்கவயல் களம் என்பது, பௌத்தத்தின் களமாக அடையாளப்படுத்துகிறார். காரணம், அயோத்திதாசர் முன்னெடுத்த பௌத்தப் பரப்புரையின் தொடர்ச்சியாக, கோலார் தங்க வயலில் உள்ள மாரிக்குப்பம், பெங்களூர், வட ஆற்காடு, உள்ளிட்ட பகுதிகளில் சாக்கிய பௌத்த சங்கக் கிளைகள் நிறுவப்பட்டன. அயோத்திதாசர் நடத்திய “ஒரு பைசா தமிழன்“ என்ற பத்திரிகையை அச்சிடுவதற்கு நிதி நெருக்கடியை சந்தித்த வேளையில், கோலார் தங்க வயலில் இயங்கிய பௌத்த சங்கத்தைச் தொழிலாளர்கள்தான் அதற்கானப் பெரும் ஊதியத்தை வழங்கியுள்ளனர் என்பது வரலாறு.

இந்த வரலாற்றுச் சான்றுகளிலிருந்துதான் இயக்குநர் ரஞ்சித் புத்தரையும் புத்தரின் நிலமாகவும் காட்சிப்படுத்துகிறார். கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் எனும் கோட்டையை உருவாக்கிவர்கள் தமிழர்கள். அவற்றிலும் பூர்வக்குடி மக்களான தலித் மக்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

தங்கலான் திரைப்படம் சொல்லும் மூலக் கருத்தான நில உரிமை, வாழ்வுரிமை, சுய மரியாதை, சமத்துவம் அதிகாரம் என்பது தலித் மக்ககளுக்கு இன்றைக்கும் தீராத தீண்டாமை சிக்கலாக தொடர்கிறது. நாடெங்கும் நகரத்தில் வாழும் குடிசைப்பகுதி மக்கள் நகரங்களை விட்டு துரத்தியடிக்கப்படுகிறார்கள். காடுகளில் இருந்து பழங்குடிகள் வெளியேற்றப்படுகிறார்கள். ஆக இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமாக விளங்கும் உழைப்பாளி மக்களுக்கான அதிகாரம் எங்கே? என்பதுதான் தங்கலான் எழுப்பும் கேள்வியும் கூட..

கடும் உழைப்பைச் செலுத்தி நடித்துள்ள விக்ரம் உள்ளிட்ட நாயகர்களின் அபாரமான நடிப்பு மிகச் சிறப்பானது. அவற்றிலும் வட ஆற்காடு மாவட்டங்களின் வட்டார மொழியில் படமாக்கப்பட்டிருப்பது புதுவிதமானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியாகி பல மொழிகளிலும் வெற்றியடைந்திருக்கிறது தங்கலான். நாயகர்கள், பார்வதி, மாளவிகா, பசுபதி, பிரீத்தி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் அற்புதமாக அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவர்களாக உயிர்ப்போடு நடித்துள்ளனர். பெண் கதாபாத்திரங்களுக்குச் சமமான இடமும் பெண்களை கண்ணியமாக மதிக்கும் பண்பையும் சம உரிமையையும் வலியுறுத்தும் விதம் சிறப்பு. எளிய மக்களின் இயல்பான சூதுவாதற்ற வெளிப்படையான வாழ்க்கை முறையை அப்படியே காட்சிப் படுத்தியுள்ளார். சில இடங்களில் வார்த்தை புரியவில்லை. நீண்டு செல்லும் காட்சிகள் சிலவற்றை தவிர்த்திருந்தால் தங்கலான் வரலாறு பொதுமக்களிடம் இன்னும் வலுவாக சென்று சேர்ந்திருக்கும்.

தலித் மக்களின் விடுதலை என்பது உழைப்புச்சுரண்டல், சாதிய தீண்டாமை ஒடுக்குமுறை, நிலம், அதிகாரம் என்பதோடு இணைந்தது என்பதை தங்கலான் மூலம் ஒரு விரிந்த பார்வையை முன்வைத்திருப்பது மிகவும் சிறப்பு. திசைவழியில் நமக்கு மாறுபாடு இருந்தாலும் திரைப்படத் துறைக்குள்ளும் சமூகத்திலும் தலித் மக்களின் அரசியலை சாதி எதிர்ப்பை மிகத் துணிச்சலாக பேசுபொருளாக்கும் தோழர் ரஞ்சித் அவர்களுக்கு கூடுதல் பாராட்டுகள். தமிழ்ப்பிரபா, அழகிய பெரியவன் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நேர்த்தியாக நடித்துள்ள அத்தனை கலைஞர்களுக்கும் எமது பாராட்டுகள் வாழ்த்துக்கள்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW