மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி – 2 – தோழர் செந்தில்

29 Feb 2024

தமிழ்த்தேசிய ஓர்மையின் முக்கியத்துவம்

தேசிய ஓர்மை, நாம் என்ற உளவியல் என்பது தேசியத்தில் மிக முக்கியமானது. தேசத்திற்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே ஐக்கியம் காண்பதில் வெற்றியடையக் கூடிய ஆற்றல்தான் தேசிய தலைமை ஆக முடியும்.  

தமிழர் என்பது ஏற்கெனவே இருக்கும் (existing) அல்லது கையளிக்கப்பட்ட (pre given) அரசியல் வகையினம் கிடையாது. தமிழ் மொழியைப் பொதுமொழியாக கொள்வதாலேயே ஒருவர் அரசியல் வகையில் தமிழர் ஆகிவிட முடியாது. தமிழ்த்தேசியப் பொருளில் தமிழர் என்பதற்கு வேறு ஒரு வரையறை உண்டு.

எடுத்துக்காட்டாக, இராமரையோ, கிருஷ்ணரையோ, சிவனையோ, காளியையோ ஒருவர் வழிபடுவதால் அவர் சமய வகையில் இந்துவாக இருக்க முடியுமே ஒழிய அரசியல் வகையில் ’இந்து’ என்று சொல்லிவிட முடியாது. ’இந்து’ என்பதற்கான பதினெட்டாம் நூற்றாண்டு உள்ளடக்கம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களையும் இசுலாமியரையும் விலக்கி வைக்கக் கூடியதாகவே இருந்தது. இது ’இந்து’ என்ற அடிப்படையில் மக்களை திரளாக்கவும் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தவும் உதவாத வரையறையாகும். இந்த இடத்தில், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் வருகை ஒரு பண்பு வகையிலான மாற்றத்தை ஏற்படுத்த முயன்றது. அவர் தீண்டாமையை எதிர்க்கக் கூடிய, முஸ்லிம்களிடம் சகோதரத்துவத்தைப் போற்றக் கூடிய ’இந்து’ வரையறை ஒன்றை முன்வைத்தார், அதற்கு செயல்வடிவம் கொடுத்தார். அவர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட மக்களைத் திரட்டியதில் மற்றெல்லாத் தலைவர்களைவிடவும் அதிகம் வல்லமைக் கொண்டவராக இருந்தார் என்பதற்கு அப்பால் இந்திய தேசிய ஓர்மையைக் கட்டமைப்பதில் அவர் செய்த சோதனை முயற்சிகளில்தான் தனித்துவமான தலைவராக உயர்கிறார். அதாவது, சாதி, சமயம், மொழி ஆகிய முரண்பாடுகளைக் கையாள்வதற்கு அவர் எடுத்த முன்முயற்சிகளால்தான் வரலாற்றில் மிளிர்கிறார்.

தேசிய ஓர்மைக்கான போராட்டத்தில்தான் தமிழர் என்றொரு அரசியல் வகையினம் உருப்பெறுகிறது. இன்றளவில் அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட சிலர் உள்ளனர், அவ்வளவே.

”அரசியல், பண்பாட்டுத் தளத்தில் தமிழ்நாட்டின் மக்கள் ஒவ்வொருவரும் சமம்” என்பதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும்போது தான் ’தமிழர்’ என்ற புதிய அரசியல் வகையினம் உருப்பெறுகிறது.  

தமிழருடைய நலன், தமிழருடைய பாதுகாப்பு, தமிழருடைய எதிர்காலம் என்று சொல்லும்போது அதில் உள்ள பல்வேறு சாதியினர், பல்வேறு சமயத்தவர், பல்வேறு வட்டாரத்தை சேர்ந்தோர், ஆண் – பெண் – திருநர்  – திருநங்கையினர் என்று பல தரப்பட்டோரின் நலனையும் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் எடுத்தால்தான் அது தமிழர் நலனாகவும் தமிழர் பாதுகாப்பாகவும் தமிழர் எதிர்காலம் பற்றிய சிந்தனையாகவும் அமையும்.

இந்த பல்வேறு தரப்பினருக்கு இடையே நலன்களுக்கு இடையே முரண்பாடு இருக்கும் இடத்து காலமும் களமும் வரம்பிடும் அளவுக்கு உட்பட்டு ஒடுக்கப்பட்டோர், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தரப்பினர் பக்கம் நின்று நிலைப்பாடு எடுப்பதுதான் தமிழர் நலன் சார்ந்த சிந்தனையாக அமைய முடியும். 

மேலும் தேசிய ஓர்மை இல்லை என்றால் அது வல்லரசியத்தால் வேட்டையாடப்படுவதற்கான பட்டுக் கம்பளம் என்பதே உலகெங்கும் உள்ள வரலாறாகும்.

தலித் மக்களையும் சமயச் சிறுபான்மையினரையும் மொழிச் சிறுபான்மையினர் என்று குறிவைக்கப்படும் சாதியினரையும் சமூகநீதியையும் தமிழ்த்தேசியத்தையும் எதிர்த்துக் கொண்டும் அதனாலேயே அயலார் என்று முத்திரையிடப்பட்டும் உள்ள பார்ப்பனர்களையும் வென்றெடுப்பதற்கான கோட்பாடும் செயல்திட்டமும் இல்லாமல் பார்ப்பனரல்லாத சாதி இந்து அரசியலாக சுருங்கிப்போனால் அதை தமிழ்த்தேசியம் என்று சொல்ல முடியுமா?

காங்கிரசு இந்திய தேசியக் கட்சி. பாஜக இந்து தேசியக் கட்சி. தமிழ்த்தேசிய நோக்கில் இவ்விரண்டும் பகைப்புலமே. இந்திய தேசியக் கட்சி தமிழர் என்ற தேசிய அடையாளத்தை மறுக்கிறது. இந்து தேசியமும் தமிழர் என்ற தேசிய அடையாளத்தை மறுக்கிறது. எனவே, ”எங்களுக்கு காங்கிரசும் பாசகவும் ஒன்றே. நாங்கள் இரண்டுக்கு இடையே வேறுபாடு காணவில்லை” என்று சொல்லும் போது ’எங்கள், நாங்கள்’ என்ற வரையறையில் வருவோர் யார்?  தமிழர்கள்தான் என்று ஒருவர் அடித்துச் சொன்னால் அந்த தமிழர் வரையறையில் இசுலாமியரும் கிறித்தவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனரா?

இந்து தேசியம் தமிழர் என்ற அடையாளத்தை மறுப்பது மட்டுமின்றி தமிழர்களை இந்து என்றும் கிறித்தவர்- இசுலாமியர் என்றும் பாகுபடுத்தி அரசியல் செய்கிறது.

ஒன்றிய அரசின் அதிகாரப் பலம், அதானியின் பண பலத்துடன் ‘என் மண், என் மக்கள்’ என்று பாசக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார். தமிழர்களை ‘இந்து’ என்ற அரசியல் அடையாளத்திற்குள் அணிதிரட்ட முயல்கிறார். இது தமிழர்களின் தேசிய ஓர்மையைத் தாக்குகிறது. இந்து – இசுலாமியர் என தமிழர்களைப் பிளவுபடுத்துகிறது.

“இசுலாமியர்களைப் பார்த்து நீங்கள் இசுலாமியர்களாக உணராதீர்கள், தமிழர்களாக் உணருங்கள்” என்று பத்தாம்பசலித் தனமாக சிலர் பேசுவதுண்டு.  இந்து தேசியம், இந்திய தேசியம், இந்துப் பெரும்பான்மைவாதம், அரபு உலகம் என இன்றைய உள்நாட்டு உலகளாவிய அரசியல் போக்குகள் என்ற மெய்நடப்பு ஒருபுறம். இன்னொருபுறம்,  இந்துப் பெரும்பான்மைவாதம் தம்மை விழுங்க முனையும்போது அதற்கு எதிராக தம்மை ’இசுலாமியர்கள்’ என்ற அரசியல் அடையாளத்தின்கீழ் அணிதிரட்டிக் கொள்வது தற்காப்புரிமையாகும்.

அப்படியெல்லாம் இல்லை. தமிழ்த்தேசிய அரசியலின் வழியாக இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கு தீர்வு காண முடியும் என்றால் அதற்கான கருத்தியலும் செயல்திட்டமும் நடைமுறையும் இங்கு இருக்கிறதா? அல்லது தமிழ்த்தேசியத்தின் பெரும்போக்காக உள்ளதா? தமிழர் என்று தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் பேசும் பொழுது இசுலாமிய சமய நெறியில் வாழும் மக்களையும் மனதில் எண்ணிக் கொண்டுதான் பேசப்படுகிறதா என்று மனச்சான்றுப்படி சொல்லுங்கள்?

  1. குடியுரிமை திருத்தச் சட்டம் இசுலாமியரின் குடியுரிமையைப் பறிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தால் இசுலாமியர்கள் நாடெங்கும் தெருக்களில் அமர்ந்து நாட்கணக்கில் போராடினார்கள். தமிழ்நாட்டிலும் அப்படித்தான் போராடினார்கள். ”தமிழர்களில் ஒரு சாராரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தமிழ்த்தேசிய அரசியல் தமிழர் அனைவரையும் திரட்ட வில்லை. தமிழ்நாட்டில் சல்லிக்கட்டுப் போன்றதொரு போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழவில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டில் வாழும் இசுலாமியருக்கு எதிரானவொரு சட்டம் ’தமிழர்’ என்ற உருப்பெறும் அரசியல் வகையினத்திற்கு எதிரான சட்டமாக பார்க்கப் படவில்லை.
  2. இசுலாமியர் அமைப்பாகுவதற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு தடை செய்யப்பட்டது, தமிழ்நாட்டைச் சேர்ந்த இசுலாமிய இளைஞர்கள் ஊபாவில் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றாடம் இசுலாமியர் தம் வீடுகள், அலுவலங்களைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை ( NIA) வேட்டையாடி வருகிறது. இதற்கு எதிராக தமிழ்த்தேசிய அமைப்புகளில் 100 க்கு 90% அமைப்புகள் ஒரு துரும்பையேனும் தூக்கிப் போட்டனவா? முனுமுனுத்தனவா? இல்லை. ஏனென்றால், பாதிக்கப்பட்ட இசுலாமியர்கள் ‘தமிழர்’ என்று உருப்பெறும் அரசியல் வகையினத்தின் பகுதியாக கருதப்படுவதில்லை.
  3. கிலாபத் இயக்கத்தில் இசுலாமியர்களுடன் காந்தியார் கைகோர்த்து போராடியதற்கு என்ன  ஏரணம் உள்ளதோ அதே ஏரணம் பாபர் மசூதி, ஞானவாபி மசூதி காக்கும் போராட்டங்களில் இசுலாமிய தமிழர்களோடு ஏனைய இசுலாமியர் அல்லாத தமிழர்களும் கைக்கோர்க்க வேண்டும் என்பதில் இல்லையா?
  4. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையைப் போலவே இசுலாமியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம், ஊபா, என்.ஐ.ஏ. வை ரத்து செய்ய வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உடனடி, அவசர கோரிக்கைகள் அல்லவா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதில் எழும் அறச்சீற்றம் இந்த கொடுமைகளுக்கு எதிராக ஏன் பெரும்பாலான தமிழ்த்தேசியர்களிடம்  எழவில்லை?

இப்படி அடுக்கடுக்காய் தமிழ்நாட்டு சனநாயக அரசியலின் போதாமையை சுட்டிக்காட்ட முடியும். இந்த கசப்பான உண்மைகள் குறித்து சிந்திப்பதற்கு கூட  நம்மவர்கள் அணியமாக இல்லை.

எப்படி திராவிடர் அரசியல் பார்ப்பனரல்லாத இந்து அரசியலாகவும் ஒரு சிலருக்கு பார்ப்பனரல்லாத சாதி இந்து அரசியலாகவும் தொழில்படுகிறதோ அதன் நீட்சியாக தமிழ்த்தேசிய அரசியலின் பெயரால் இங்கு நடப்பது பார்ப்பனரல்லாத இந்து அரசியலாகவும் ஒரு சிலருக்கு பார்ப்பனரல்லாத சாதி இந்து அரசியலாகவும் இன்னும் சிலருக்கு பார்ப்பரனல்லாத, நாயுடு, ரெட்டியார் போன்ற சாதிகளல்லாத சாதி இந்து அரசியலாகவும் தொழில்படுகிறதே ஒழிய புதுமக் கால சனநாயக  உள்ளடக்கத்துடனான தமிழ்த்தேசிய அரசியலாக தொழிற்படவில்லை. பொதுவான காரணம், நமது அரசியலில் அதிகம் மேலோங்கி இருப்பது சாதி உணர்வுதானே ஒழிய சாதி மறுத்த தமிழ்த்தேசிய உணர்வு அல்ல! அதனால்தான், இயக்குநர் அமீர், “என்னை பாய்ன்னு நினைச்சியா? நானும் சேர்வை தான்” என்று சாதியோடு அடையாளப்படுத்தி தற்காத்து கொள்ள வேண்டிய அரசியல் மெய்நிலை நிலவுகிறது.

காங்கிரசும் பாசகவும் தமிழ்த்தேசியத்தை மறுக்கும் அதேவேளையில் பாசக தமிழ்த்தேசிய ஓர்மைக்கு வேட்டு வைக்கும் வேலையை செய்கிறது. இவ்விடத்தில் காங்கிரசுக்கும் பாசகவுக்கும் வேறுபாடு உண்டு. எனவே, காங்கிரசுக்கு எதிராக சண்டையிடுவது நமக்கு எளிதானது. ஆனால், பாசகவுக்கு எதிரான சண்டை அத்தனை எளிதானதல்ல, அதனால்தான், நம்மவர்கள் குழம்பிப்போய் ‘தமிழ் இந்து’, ’சாமானிய இந்து’ என்றெல்லாம் முன்வைக்க வேண்டி வருகிறது.

எளிய மொழியில் சொன்னால், தமிழ்நாட்டில் வாழும் இசுலாமிய சமயத்தவர்கள் ’தமிழர்’ என்ற புதிய வகையினத்தின் பிரிக்க முடியாத அங்கம்( integral part of tamil nationality) என்ற புரிதல் இல்லாத விடத்துதான் ஒருவர் காங்கிரசையும் பாசகவையும் நேர்ப்படுத்துவார்.

இன்றைய அரசியல் சூழமைவில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்  பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து கீழிறக்குவதற்கு ஆளும்வகுப்பின் மற்றொரு தரப்போடு சேர்ந்து சண்டையிடுவதை தவிர வேறு வழியில்லை.

மாறாக, ஆளும் வகுப்புக்குள் இருக்கும் முரண்பாட்டைக் காணத் தவறி கண்ணை மூடிக்கொன்டு கத்தியை சுழற்றினால் அது பாசிச பாசக ஆட்சியில் தொடர்வதால இந்நாட்டுக்கு ஏற்படவல்ல பேரழிவுகளுக்குப் பாதை அமைத்து தருவதுதான். எனவே, பாசிச பாசகவை தேர்தலில் தோற்கடிக்கக்கூடிய வலிமையான கூட்டணிக்கு வாக்களித்து அவர்களை ஆட்சியில் இருந்து கீழிறக்குவதுதான் தமிழ்த்தேசிய ஆற்றல்கள் செய்ய வேண்டிய கடமையாகும்.

சனநாயக கோரிக்கைகள் எதுவும் இல்லாமல், செயல் திட்டம் இல்லாமல், அதற்காகப் போராடாமல் திமுகவையும் காங்கிரசையும் ஆதரித்துக் கொண்டிருந்தால் போதும் என்பது செயலற்ற நிலையே ஆகும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் உவப்பில்லாத சனநாயக கோரிக்கைகளையும் முன்வைத்து ஒரு செயல் திட்டத்துடன் தொடர்ச்சியாக செயல்பட்டுக்  கொண்டு தேர்தல் களத்தைப் பாசிச பாசகவைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துவது வேறு. மேற்படி இரண்டிலும் இல்லாமல், தேர்தல் புறக்கணிப்பு, பாசக, காங்கிரசு இல்லாத ஆட்சி என்பதெல்லாம் செயலின்மை, மக்கள் மீது அக்கறையின்மையின் வெளிப்பாடே ஆகும்.

தமிழ்த்தேசியர்கள் தமது உடனடி, நீண்ட கால நலன்களைக் கருத்தில் கொண்டு மோடியின் ஆட்சி தொடர விடாமல் செய்வதற்கு இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்ய முன்வரவேண்டும்.

வினைவலியும் தன்வலியும் மாறறான்வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்


ஞாலம் கருதினுங் கைக்கூடும் காலம்  

கருதி இடத்தாற் செயின்

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட இவ்வரிகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நம்மை வழிநடத்தக் கூடியவை; கற்பனாவதத்திற்கும் தூய இலட்சியவாதத்திற்கும் அழிவுவாதத்திற்கும் எதிரானவை.

நன்றி : வையம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW