தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலின் நிலை என்ன? – செந்தில்
தமிழீழத்திற்கு இரண்டு பலங்கள் உள்ளன. இரண்டும் அமைவிடம் சார்ந்தவை . ஒன்று இந்திய பெருங்கடலில் அமைந்திருப்பது. இன்னொன்று தமிழ்நாட்டை தனக்கு அருகில் கொண்டிருப்பது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாடு அப்போராட்டத்திற்காக தோள் கொடுத்து நின்றிருக்கிறது; சிலுவை சுமந்து இருக்கிறது; இரத்தம் சிந்தியிருக்கிறது; நெருப்பாற்றில் இறங்கியிருக்கிறது. ஒரு நேரம் இந்திய அரசும் தமிழக அரசும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்துள்ளன. இன்னொருப் பொழுதில் இந்திய அரசு எதிராகவும் தமிழக அரசு ஆதரவாகவும் இருந்துள்ளது.. இன்னொரு தருணத்தில் இவ்விரு அரசுகளும் அவற்றில் அதிகாரத்திற்கு செல்லும் கட்சிகளும் எதிராக இருந்துள்ளன.
இவ்வெல்லாக் காலகட்டத்திலும் கூடவோ குறையவோ தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் இருந்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்வேண்டும். எனவே இங்கு தமிழீழ மக்களுக்கு தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவு என்பது இந்திய அரசையோ தமிழ்நாடு அரசையோ சார்ந்தது அல்ல,
இன்னும் தெளிவாகச் சொன்னால் ஈழ ஆதரவு அரசியல் என்பது எம்.ஜி.ஆர். கலைஞர், ஜெயலலிதா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை சார்ந்ததும் அல்ல.
ஒத்த தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கும் தேசிய இன உணர்ச்சியின் செயல்வடிவமே தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு அரசியல். பாலத்தீன விடுதலைப் போராட்டத்திற்கு அரேபியர்களிடம் இருக்கும் ஆதரவை ஒத்தது இது. எனவே, மக்களிடம் பீறிட்டு எழும் அந்த இயல்பான உணர்ச்சிக்கு எதிராக கட்சிகளும் தலைவர்களும் சென்றுவிட முடியாது. மாறாக அவ்வுணர்ச்சியோடு அடையாளப்பட்டு, அதில் ஊடுருவி அந்த உணர்ச்சி பீறிட்டு எழுவதை மட்டுப்படுத்த முடியுமே ஒழிய அதில் நேருக்குநேராக மோதிக்கொள்ள மாட்டார்கள்.
இதிலிருந்து பெறவேண்டிய மிக முக்கியமான செய்தி என்னவென்றால் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இடையிலான உறவு ஊழிகளைக் கடந்து தொடரக்கூடிய நிரந்தர நட்பாகும். எனவே, நிரந்தர நண்பனுடனான உறவைப் பாதுகாத்து, போற்றி, வளர்த்தெடுக்கும் நோக்கிலான வெளியுறவுக் கொள்கையை வடித்துக்கொள்ள வேண்டிய கடமை சமகால ஈழ விடுதலை ஆற்றல்களுக்கு உண்டு.
இந்திய அரசு ஈழத் தமிழர் போராட்டத்தின் வெற்றி, தோல்விகளிலும், ஏற்ற, இறக்கங்களிலும் வகிக்கும் பாத்திரத்தைப் பற்றி புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதை நோக்கியே ஈழத் தமிழர்கள் காலத்தை எதிர்நோக்கியுள்ளனர். அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதில் தமிழ்நாட்டின் பாத்திரம் என்ன, பங்கு என்ன? என்பதை மதிப்பிட வேண்டியுள்ளது.
நவீன கால அரசியலில் மக்களிடம் இருந்து இறைமையைப் பெறுகிறது அரசு. எனவே, மக்களின் முழுமனதான விருப்பங்களுக்கு எதிராக வெளிப்படையாக செல்ல முடியாது என்ற அரசியல் பண்பாடு வளர்ந்து வருகிறது. ஐ.நா. வில் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது இந்திய அரசு வாக்களிக்காமல் விலகி நிற்பதில் மேற்சொன்ன விதி செயல்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக வெளிப்படையாக சென்றுவிட முடியாது என்ற ஓர் அழுத்தம் இந்திய அரசுக்கு இருக்கிறது. அத்தகைய உள்நாட்டு அழுத்தம் சீனாவுக்கோ உலகில் உள்ள வேறெந்தவொரு அரசுக்கோ இல்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழர் தமது குடிகளாக இருக்கும் யதார்தத்தை இந்திய அரசு ஈழச் சிக்கலில் பயன்படுத்திக் கொண்ட அதே அளவுக்கு இந்த யதார்த்தத்தை ஈழத் தமிழர் பயன்படுத்திக் கொண்டார்களா?
உலகம் அரசுகளின் முறைமையாக இருக்கும் அதே வேளையில் அந்த அந்த நாட்டு அரசுகளின் திசைப் போக்கையும் நகர்வுகளையும் நிலைப்பாட்டையும் நிர்ணயிப்பதில் மக்களுக்கு தனிச்சிறப்பான பங்கு உண்டு. எதிர்கால அரசு என்ற வகையில் ஈழ விடுதலை ஆற்றல்களுக்கு இந்திய அரசைக் கையாளவல்ல அரசதந்திரம் வேண்டும். தமிழ்நாட்டோடு உறவாடவல்ல தொலைநோக்குப் பார்வையும் கொள்கையும் வேண்டும். அதாவது, தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு எழுச்சி என்பதன் மீதேறி நின்று இந்திய அரசுடன் கைகுலுக்குவதே ஈழத் தமிழரின் அரசதந்திர அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
அப்படியான ஆதரவு அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் பேணுவதன் மூலம்தான் இந்திய அரசுடன் பேரம்பேசும் வலிமையை ஈழத் தமிழர் பெறமுடியும். தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு அரசியல் இயங்கும் பொறிமுறையைப் புரிந்து கொண்டாற்தான் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க முடியும். . அத்தகைய புரிதல் இல்லாத காரணத்தாற்தான், அதை எந்த அளவுக்கு குழப்ப முடியுமோ அந்த அளவுக்கு குழப்பிப் போட்டுள்ளோம். இதில் ஈழத் தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் என இருதரப்பாரும் பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதற்கு இணங்க நமது வெற்றிக்கும் தோல்விக்கும் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் நாமே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறோம்.
முள்ளிவாய்க்காலுக்கும் இது பொருந்தும். சிங்கள பெளத்த பேரினவாதம் இனவழிப்பு இயந்திரமாக செயல்பட்டது. தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய இந்திய அரசு ஈழத் தமிழரைக் கொல்ல ஆயுதம் கொடுத்து, ஆலோசனை கொடுத்து துணை நின்றது. இதை தட்டிக் கேட்டிருக்க வேண்டிய தமிழ்நாடு அரசு சமரசம் செய்து கொண்டது.
தமிழ்நாட்டு அரசை உலுக்கி எடுத்து இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றத்தக்க வகையில் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க தமிழ்நாட்டுத் தமிழர்கள் தவறிவிட்டனர். எனவே, அத்தகைய போராட்ட எழுச்சியைக் காட்ட தவறியமைக்காக தமிழ்நாட்டு மக்கள் வரலாற்றில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர். அந்த இயலாமையின் , இரண்டகத்தின் ஆளுருவாகவே கட்சிகளும் இயக்கங்களும் தலைவர்களும் இருந்தனர். எனவே, ஒரு தலைவர் மீதோ ஒரு கட்சியின் மீதோ பழிபோடுவது என்பது தமது பொறுப்பில் இருந்து விலகி கொள்வதும் அதைவிட முக்கியமாக முதல் குற்றவாளி சிங்கள அரசு என்பதையும் அதற்கு துணைபோன இந்திய அரசின் பங்கு , பாத்திரத்தையும் மறைக்கும் வேலையாகும்.
ஈழ ஆதரவு அரசியல் என்பது சிங்கள பெளத்த பேரினவாத எதிர்ப்பாகவும் இந்திய அரசின் சிங்கள ஆதரவு வெளியுறவுக் கொள்கைக்கான எதிர்ப்பாகவும் வளர்ந்தோங்கி இருக்க வேண்டும். ஆனால், ஓர் அரசியல் முள்ளிவாய்க்கால் ஏற்பட்டது போல் அது திராவிட எதிர்ப்பாகவும் தெலுங்கு எதிர்ப்பாகவும் கருணாநிதி எதிர்ப்பாகவும் வக்கிரம் அடைந்துகிடக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோரை கூட்டி முள்ளிவாய்க்காலின் பெயரால் கூப்பாடு போட்டு தனக்கு வாக்களிக்க கோருவதைவிடவும் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்து தெருக்களை நிரப்பி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதே ஆகச் சிறப்பான ஈழ ஆதரவாகும். இனவழிப்புக்கு உள்ளாகி தமது இருப்பைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு முதல் எதிரி சிங்கள பெளத்தப் பேரினவாதம்தான். எனவே, இந்திய எதிர்ப்புவாத சுமையையோ, திராவிட எதிர்ப்பையோ, தெலுங்கு எதிர்ப்பையோ, திமுக எதிர்ப்பையோ, கருணாநிதி எதிர்ப்பையோ, பாசக எதிர்ப்பையோ, காங்கிரசு எதிர்ப்பையோ, பார்ப்பன எதிர்ப்பையோ அவர்கள் தலையில் ஏற்றிவிடுவது அவர்களுக்கு தீங்கு பயப்பதாகும்.
இன்று கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாகிவரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒருதுரும்பைக் கூட கிள்ளிப் போடாத ஈழ ஆதரவு அரசியலால் ஈழத் தமிழருக்கு ஆகப் போவதென்ன?
ஈழ ஆதரவு அரசியலையும் குருதி தோய்ந்த முள்ளிவாய்க்கால் பெருந்துயரையும் திமுக எதிர்ப்புக்கான களமாக பாவிக்கும் அரசியல் ஈழ ஆதரவு அரசியலை விழுங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்வினையாக, ஈழத் தமிழர் பிரச்சனை பன்னாட்டுப் பிரச்சனை, இந்தியாவோ தமிழ்நாடோ என்ன செய்துவிட முடியும் என்ற கதையாடலை இன்னொரு தரப்பினர் கட்டியெழுப்பி வருகின்றனர். இந்திய அரசாலே முடியாது என்றால் தமிழ்நாட்டுக் கட்சிகள் என்ன செய்துவிட முடியும்? என்ற முடிவுக்கு கொண்டு வந்து இந்திய அரசின் பாத்திரத்தை மறுத்து தமிழ்நாடின் பொறுப்பைத் துறக்கச் செய்யும் வேலை இது.
வழமையான ஈழ ஆதரவு தேர்தல் கட்சிகளோ ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்தால் அது தேர்தல் அரசியலில் திமுக கூட்டணிக்கு எதிராகப் போய்விடுமோ என ஒதுங்கி நிற்கும் நிலை.
2014 ஆம் ஆண்டில் பாஜக ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வந்தது. தெலுங்கு எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு என ஈழ ஆதரவு நாசம் செய்யப்பட்ட நிலையில் ’எங்களுக்கு தமிழ்நாட்டுப் பிரச்ச்னைதான் முக்கியம் , ஈழமல்ல’ என்று ஈழ ஆதரவாளர்களில் ஒருபகுதியினர் சொல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. ஈழ ஆதரவு ஆற்றல்கள் திராவிட அரசியல், தமிழ்த்தேசிய அரசியல் என எதிரும்புதிருமாக பிரிந்து நின்றனர். மொத்தத்தில், ஈழ ஆதரவு இயக்கம் ஓரடிகூட முன்னேற முடியாமல் அதன் சக்கரங்கள் புதைக்குழியில் மாட்டிக் கிடக்கின்றன.
இப்போது எங்கிருந்து தொடங்குவது?
மேற்சொன்னதில் இருந்து பதவி அரசியலுக்கு வெளியே நிற்கும் இயக்கங்கள், கட்சிகளை கொண்ட ஈழ ஆதரவு அணியை எல்லா முரண்பாடுகளுக்கும் அப்பால் ஈழ ஆதரவு என்ற அடிப்படையில் அணிசேர்க்க வேண்டும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்பது போல் இந்த அணி மக்களிடம் ஏற்படுத்தும் அதிர்வலைகள், போராட்டங்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும். அந்த கருத்துருவாக்க வெப்பம்தான் பதவி அரசியலில் இருக்கும் தேர்தல் கட்சிகளை அசைத்துப் பார்க்கும்; அந்த கட்சிகளை நிலைப்பாடு எடுக்க வைக்கும் , அறிக்கைகள் விடச்செய்யும்; போராட உந்தித் தள்ளும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் ஈழம் தொடர்பான அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது என்பதற்கான போராட்ட அழுத்தத்தை ஏற்படுத்தி அக்கட்சிகளின் நிலைப்பாட்டை தக்க வைக்க வேண்டும்.
அதற்கான அடிப்படைக் கொள்கை என்ன?
முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்கால்.
இனவழிப்பு என்பதை கழித்துவிட்டுப் பேசுவதற்கு எதுவும் இல்லை. இனவழிப்பு, இனவழிப்புக்கு குற்றவியல் நீதி – பன்னாட்டுப் புலனாய்வு, இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி – பொதுவாக்கெடுப்பு . இந்த நிலைப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பதவி அரசியல் கட்சிகள் வழுவாமல் நிற்கும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
ஈழத் தமிழரைப் பொறுத்தவரை அவர்கள் தமிழகத்திலுள்ள எந்தவொரு கட்சியிடமும் தனிநபரிடமும் குழுக்களிடமும் இயக்கங்களிடமும் ஈழ விடுதலைக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைக்கலாம். பாசக தொடங்கி மாவோவியர்கள் வரை யாரையும் அணுகி எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கும் உரிமை ஈழத் தமிழருக்கு உண்டு. இக்கட்சிகள் தமக்குள் எதிரும் புதிருமாக இருப்பதைப் பற்றி ஈழத் தமிழர்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.
திமுகவை எதிர்க்க வேண்டும் என்று பாசகவும் நாம் தமிழர் கட்சியை எதிர்க்க வேண்டும் என்று திமுகவும் ஈழத் தமிழரிடம் நிபந்தனை வைக்கலாம். ஆனால், ஈழ விடுதலை ஆற்றல்கள் கொஞ்சமும் தடுமாறாமல் தமது நிலையை முன்வைத்து எவரிடமும் ஆதரவு கேட்டு நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் நிலையிலேயே தாம் இருப்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு ஈழ அதரவு அரசியலை பதவி அரசியல் அணி, அதற்கு வெளியே நிற்கும் அணி என இரண்டாகப் பாவித்து கையாள வேண்டும், உரையாட வேண்டும். இவ்விரண்டையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டு ஈழ ஆதரவு அரசியல் இயக்கம் எழுச்சிக் கொண்டு நிமிர்ந்து நின்றால் தில்லி செவிசாய்க்கும். தில்லி – கொழும்பு உறவுப் பாலத்தில் விரிசல் விழும். தில்லி – ஈழம் நட்புப் பாலத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான திறவுகோல் சென்னையில் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்திய அரசிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் கடைபிடிக்கவல்ல தெளிவான கொள்கையை வகுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டிய கடமை ஈழ விடுதலை ஆற்றல்களுக்கு உண்டு.
நன்றி: உலகத் தமிழர் இதழ்