தமிழ்நாடு அரசே! பேராசிரியர் ஜவஹர்நேசனையும் உள்ளடக்கி மாநிலக் கல்விக் கொள்கைக்கான வல்லுநர் குழுவை மறுசீரமைத்திடுக! தமிழ்நாட்டிற்கான தனித்துவமான சனநாயகக் கல்விக் கொள்கையை உருவாக்குவதை உறுதிசெய்திடுக!தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை
தமிழ்நாட்டிற்கு என்று தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் பன்னிருவர் அடங்கிய வல்லுநர் குழுவொன்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 இல் உருவாக்கியது தமிழ்நாடு அரசு. அக்குழுவில் இருந்து முன்னாள் துணைவேந்தர் ஜவஹர்நேசன் மே 10 அன்று விலகியுள்ளார். ஒன்றிய அரசு முன்வைத்துள்ள தேசிய கல்விக் கொள்கை – 2020 ஐ மாநில அரசின் கல்விக் கொள்கையில் உள்வாங்குமாறு அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் முதல்வரின் தனிச் செயலர்களில் ஒருவராக இருந்த திரு உதயச்சந்திரன் அதிகாரத்துவமாக தன்னிடம் நடந்துகொண்டதாக சொல்லியுள்ளார்.
உடனே, இக்குற்றச்சாட்டுகளை மறுத்து கல்விக் கொள்கைக்கான வல்லுநர் குழுவின் தலைவர் மே 12 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த மறுப்பறிக்கைக்கு வலுசேர்க்குமாறு எட்டு பேர் ஒப்புதல் தந்து மற்றொரு அறிக்கை வெளிவந்துள்ளது. இரண்டு உறுப்பினர்கள் குறிப்பாக பேராசிரியர் இராமானுஜமும் தலைமை ஆசிரியர் பாலுவும் இந்த கூட்டறிக்கைக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
எதுவுமே நடக்காதது போலவும் பேராசிரியர் ஜவஹர்நேசன் தாமாக வெளியேறுகிறார் என்பது போலவும் ஓர் அறிக்கை வெளியிட்டிருப்பது அதன் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பேராசிரியர் ஜவஹர்நேசன் நீட் விலக்கின் பொருட்டு அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவில் பங்காற்றி ஒரு சிறப்பான அறிக்கை வெளிவர உழைத்தவர். தேசிய கல்விக் கொள்கை 2020 இன ஆபத்துகளை அம்பலப்படுத்தி ” வல்லாட்சிய தேசியவாதத்தின் ஓர் குறியீடு” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியவர். கல்வி காவிமயமாவதற்கும் வணிகமயமாவதற்கும் மையப்படுவதற்கும் எதிராக தொடர்ச்சியாக கருத்துகளை வெளிப்படுத்தி வந்துள்ளார். அவர் 232 பக்கங்களுக்கு “Initial Policy Inputs’ என்ற அறிக்கையை அணியமாக்கி இருந்த நிலையில்தான் இந்த விலகல் நேர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இப்போதைய கல்விக் கொள்கை புதுத்தாராளிய வளர்ச்சிக் கொள்கைக்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள் போன்று அடுக்கடுக்காய் வரும் புதிய திட்டங்கள் ஆகும். தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது காவிமயம், ஒன்றிய அரசிடம் அதிகாரக் குவிப்பு, வணிகமயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அதுவொரு முழுமைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் என்று பார்க்கப்பட வேண்டும். இதை துண்டுதுண்டாக புரிந்து கொள்ளக்கூடாது.
தமிழ்நாடு அரசு புதுத்தாராளிய வளர்ச்சிக் கொள்கையைக் கருத்தில் கொண்டு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கு ஏற்ப குறைந்த கூலிக்கு உழைக்கும் , சிற்சில திறன்களை மட்டுமே கொண்ட மனித உழைப்பாற்றலை உருவாக்கும் நோக்கத்தை கல்வி நிறைவு செய்தால் போதும் என்ற கருத்து இருப்பது போல் தெரிகிறது. மேலும் கல்வி வணிகமயமாவதை ஆதரிக்கும் கொள்கையை அரசு கொண்டிருக்கிறது. இது கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாகும். எனவே, தமிழ்நாடு அரசு இந்த தவறான போக்கைக் கைவிட்டு தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கையை அறிவியல், அறவியல் அடிப்படையை கொண்டதாக உருவாக்குவதற்கு உறுதியேற்க வேண்டும்.
இப்போதிருக்கும் கல்விக் கொள்கை குழு மிகுந்த குழப்பமுடையதாக மாறி அதன் நோக்கத்தை நிறைவு செய்யவியலாத நிலைமையை எட்டிவிட்டது. எனவே, பேராசிரியர் ஜவஹர்நேசனையும் உள்ளடக்கி கல்விக் கொள்கை குழுவை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்கள், சனநாயக ஆற்றல்கள் தமிழ்நாடு அரசு உருவாக்கப் போகும் கல்விக் கொள்கை மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அந்த எதிர்ப்பார்ப்பு அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொய்யாக்கிவிடக் கூடாது என்று தமிழ்த்தேச மக்க்ள் முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
மீ.த. பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தொடர்புக்கு: 9443184051