ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி மறுப்புக்கு வரவேற்பு ! – காவிரிப் படுகையைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை என்ன?
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை
அண்மையில் ஒன்றிய எண்ணெய் மற்றும் எரிசக்திதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹைட்டோகார்பன் இயக்குநரகம் கண்டறியப்பட்டுள்ள சிறு எண்ணெய் வயல்களின் பட்டியலை வெளியிட்டு ஆய்வு செய்வதற்காக ஏலம் விட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வடத்தெரு என்ற இடமும் அப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த செய்தியறிந்து தமிழக முதல்வர், தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் 2022 இன் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் வடத்தெரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருவதால் ஏலப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி ஜூன் 13 அன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பேணிக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியக் கடமைகள் சில உள்ளன.
காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக 2013 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் – 2020 முந்தைய ஆட்சியால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே குறிப்பாக 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ”காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று தமிழக அரசு சொல்லிவந்தது. ஆனால், அதற்கு முன்பே ஒன்றிய மோடி அரசு கடலூர் தொடங்கி நாகப்பட்டினம் வரை பெட்ரோகெமிக்கல் மண்டலத் திட்டத்தை அனுமதித்திருந்தது. இந்த சட்ட அறிவிப்புக்கு முன்பும் பின்பும் சிதம்பரம் தொடங்கி இராமநாதபுரம் மாவட்டம் வரை நிலத்திலும் கடலிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக நான்குமுறை ஏலங்கள் அறிவிக்கப்பட்டன. 2019 ஆண்டிற்கும் 2020 ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள 2337. 43 சதுர கி.மீ. பரப்பளவு அகழாய்வுக்காக ஏலம் விடப்பட்டது. அதில் ஒரு திட்டத்திற்காக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 474.2 சதுர கி.மீ. பரப்பளவு இடம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு கொடுக்கப்பட்டது. கடலூர், நாகை, காரைக்கால், இராமநாதபுரம் மாவட்டங்களில் எரிவாயு எடுக்கும் இரண்டு திட்டங்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 1259. 43 சதுர கி.மீ. நிலம் அகழாய்வுக்கு ஏலம் விடப்பட்டிருந்தது. இதைப் போல், விழுப்புரம், புதுச்சேரி , நாகை பகுதிகளில் நிலத்திலும் கடலிலும் எண்ணெய் – எரிவாய் எடுப்பதற்காக அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசால் ஏலம் விடப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான சட்டம் 2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நிலையில், மேற்சொன்ன திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதா? இல்லை அனுமதியின்றி ஒ.என்.ஜி.சி. ஆய்வுப் பணியை செய்து கொண்டிருக்கிறதா? என்பவை குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இச்சட்டம் புதிய திட்டங்களின் வருகையைத் தடுப்பதற்கு பயன்படுமே தவிர ஏற்கெனவே பல்வேறு பகுதியில் ஓ.என்.ஜி.சி.யால் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணெய் – எரிவாயு திட்டங்களைத் தடுக்காது. பழைய திட்டங்களின் பெயரில் புதிய திட்டங்களை அமல்படுத்திவிடுவார்கள் என்ற அச்சமும் காவிரிப் படுகையில் நிலவுகிறது.
முந்தைய அரசு ஒருபுறம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை இயற்றிவிட்டு இன்னொருபுறம் 2021 பிப்ரவரி 18 ஆம் நாள் நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் மேற்கொள்ளும் 31,500 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தது. இதற்கு பிரதமர் மோடியும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அடிக்கல் நாட்டியதே இச்சட்டத்திற்கு எதிரானது. ஆனால், அதற்கு எழுந்திருக்க வேண்டிய அளவுக்கு எதிர்ப்பு இல்லை. தேர்தல் களேபரத்தில் பலரது கவனத்தைப் பெறாமலும் போயிருக்கக் கூடும்.
இந்த சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இதை உயிரோட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் காவிரிப் படுகையின் களநிலவரம் பற்றிய வரைப்படம் தேவை. அந்த நோக்கத்தில், பின்வருவன பற்றி தமிழக அரசு தெளிவான வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
- காவிரிப் படுகையில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் எண்ணெய் எரிவாயு திட்டங்கள், இறால் பண்ணைத் திட்டங்கள், பெட்ரோ கெமிக்கல் திட்டங்களின் நிலை என்ன? இவற்றால் வேளாண் நிலத்திற்கும் நீர் வளங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்ன?
- ஒன்றிய அரசால் ஏலம் விடப்பட்டு தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் திட்டங்கள் எவை?
- நாகை மாவட்டம் பனங்குடி திட்டம் போல் சட்டம் இயற்றப்பட்டப் பிறகு அதன் நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசால் அனுமதி கொடுக்கப்பட்ட திட்டங்கள் எவை?
இரண்டாவது, இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு முதல்வர் தலைமையில் 30 பேரை கொண்ட வேளாண் மண்டல அதிகார கட்டமைப்பு ஒன்றும் அதற்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்த நிர்வாக கட்டமைப்பு முறையானது, கிட்டத்தட்ட தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தை ஒத்துள்ளது.
ஆனால், இதில் போதாமைகள் பல உண்டு என்ற காரணத்தால் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக இதற்கானக் கட்டமைப்பு பற்றி சில முன்மொழிவுகளை முந்தைய அரசிடம் வைத்தோம். அதை முந்தைய அரசு பொருட்படுத்தவில்லை. அப்பரிந்துரைகளாவன,
- பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டலத் திட்டங்களை செயல்படுத்த, காவிரி வேளாண் மண்டல ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.இந்த அமைப்பை ஒரு பொருளாதாரத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக அரசு உருவாக்க வேண்டும்.
- இந்த ஆணையமானது காவிரி வேளாண் மண்டலத்தின் நீடித்த சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.அதற்காக அறிவுத்துறையினர், வேளாண்மை அறிஞர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிகள் கொண்ட குழு அமைத்து அதனிடம் இருந்து ஆலோசனைப் பெற்று அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
- இந்த ஆணையமானது கூட்டறவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
- கல்லணைக்கு கீழே உள்ள சுமார் 47,000 கிலோ மீட்டர் வாய்க்கால்களை முறையாகப் பராமரிப்பது,கடல் நீர் உட்புகாமல் காவிரிப் படுகை ரெகுலேட்டர்களைப் பராமரிப்பது, ஆற்று மணல் கொள்ளையைத் தடுப்பது என காவிரிப் படுகையில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
- காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வருகிற கடல் நீர் மட்ட உயர்வு சிக்கலானது. கடலோர காவிரிப் படுகை மாவட்டத்தை மூழ்கடிக்கக் கூடிய அபாயமுள்ளது.இந்த சிக்கலையும் இந்த ஆணையம் முதன்மையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
மூன்றாவதாக, மண்ணுக்கும் கடலுக்கும் அடியில் இருக்கும் கனிம வளங்கள் ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலுக்குள் வருகிறது. மாநில அரசுக்கு கனிம வளங்கள் மீது இறைமை இல்லை. எனவே, இந்த சட்டத்தை மீறி ஒன்றிய அரசு எண்ணெய் – எரிவாயு திட்டங்களைக் கொண்டு வருவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே, இச்சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் மூலம் காவிரிப் படுகையைப் பாதுகாப்பதற்கும் கனிம வளங்கள் மீதான நமது இறைமையை உறுதிசெய்யும் வகையில் அது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். இதற்கானப் போராட்டத்தை ஒன்றிய அரசுடன் நடத்துவதற்கு உறுதிமிக்க ஓர் அரசியல் தலைமையை வெளிப்படுத்த வேண்டும்.
நான்காவதாக, புவி வெப்பமாவதைத் தடுப்பதற்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் ’ஜீரோ கார்பன் வெளியேற்றம்’ என்ற இலக்கை எட்டுவதற்கு ஏற்ற எரிசக்தி கொள்கையை வகுத்துப் பாடுபட்டு வருகின்றன. உலகம் ஒருதிசையில் சென்றுகொண்டிருக்கும் போது அதற்கு எதிர்திசையில் ஒன்றிய மோடி அரசு பயணிக்கிறது. மோடி அரசு நிலக்கரி வயல்களை தனியாருக்கு திறந்துவிடுகிறது, ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான சிறு எண்ணெய் வயல்களை ஏலம்விடுகிறது. தமிழ்நாடு இதுவிசயத்தில் ஒன்றிய மோடி அரசின் தவறான எரிசக்திக் கொள்கைக்கு பலியாகிவிடக் கூடாது. ஏனெனில் புவிவெப்பமயமாதலின் ஆபத்துகள் காவிரிப் படுகைக்கும் உண்டு. காலநிலை மாற்றத்தால் காவிரிப் படுகையின் கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகும் அபாயம் இருக்கிறது. எனவே, புவிவெப்பமாயதல் ஆபத்தைக் கருத்தில் எடுத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகளுக்கு மாறிக் கொண்டிருக்கும் நாடுகளின் கொள்கைகளை ஆராய்ந்து தமிழ்நாடு இனிமேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை மட்டுமே அனுமதிக்கும்; கார்பன் திட்டங்களை அனுமதிக்காத என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி காவிரிப் படுகை தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருப்பதால் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் 2020 ஐ அப்பகுதியில் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எல்லோரது எதிர்ப்பாகவும் இருக்கிறது. ஆகவே, காவிரிப் படுகையைப் வேளாண் மண்டலமாக பாதுகாக்க வேண்டும் என்ற மனத்திட்பத்துடன் மேற்சொன்ன கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.