காங்கிரசு தமிழ் மாநிலத் தலைவர் திரு கே.எஸ். அழகிரி அறிக்கைக்கு எதிர்வினை – இந்திய அரசு உருட்டி விளையாட ஈழத் தமிழரின் தலைகள் என்ன பகடைக் காய்களா?

24 May 2021

நேற்றைக்கு காங்கிரசின் தமிழ் மாநில தலைவர் திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து, ”இலங்கை தமிழர்களின் உரிமையைப் பறிக்கின்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு காரணமாக அவர் சொல்லியிருப்பது சீனாவின் ஆதிக்கத்திற்குள் இலங்கை செல்வதில் இருந்து தடுக்க தவறியுள்ளது பாசக அரசு என்பதாகும்.

மே 20 ஆம் நாள் அன்று கொழும்பு துறைமுக நகரத்திற்கான பொருளாதார ஆணைய சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதும் அதற்கான பெயர்பலகையில் சீனாவின் மாண்டரின் மொழி இடம்பெற்றிருப்பதும்தான் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியைத் துடியாய் துடிக்க வைத்துள்ளது. எனவே, ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி இந்தியா இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அறிக்கை கொடுக்கிறார்.

இதுதான் கடந்த 50 ஆண்டுகால வரலாறாக இருந்து வருகிறது. இந்தியாவின் விரிவாதிக்கத்திற்கு ஈழத் தமிழர் பிரச்சனையை ஊறுகாய்ப் போல் தொட்டுக்கொள்வது. பிறகு தேவை தீர்ந்தவுடன், இரத்தக்கடலில் அவர்களை மூழ்கடித்து சாகடிப்பது. இந்திய அரசின் இந்த ஓநாய்த்தனத்துக்கு ஒத்தாசை செய்யும் வேலையை தமிழ்நாட்டின் ஆளும்வர்க்க கட்சிகள் செய்து வருகின்றன. பெயர்பலகையில் மாண்டரின் வந்ததற்காக வாடும் கே.எஸ்.அழகிரி ஈழத் தமிழர்களுக்கு அன்றாடம் நேர்ந்து வரும் துன்பத்திற்கு ஏன் கலங்கவில்லை, ஏன் அறிக்கை கொடுக்கவில்லை?

  1. மே12 ஆம் தேதி அன்று முள்ளிவாய்க்காலில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை இரவோடு இரவாக சிங்கள இராணுவம் அகற்றியபோது..
  2. மே 11 ஆம் தேதி அன்று முள்ளிவாய்க்காலில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள குறுந்தூர் மலையில் உள்ள அய்யனார் சிலை சிங்கள இராணுவத்தால் அகற்றப்பட்டு புக்க விகாரை நிறுவப்பட்ட போது.
  3. ஏப்ரல் மாதத்தில் யாழ் நகர மேயர் மணிவண்ணன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அதிகாலை 3:30 க்கு கைது செய்யப்பட்ட போது.
  4. மார்ச் இறுதியில் ஐ.நா. மனித மன்ற கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உலகில் உள்ள 22 நாடுகள் ஆதரித்த போதும் இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்ட போது.
  5. சனவரி இறுதியில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிசேல் பசசே இலங்கை குறித்து முன்வைத்த அறிக்கையில், சிறுபான்மையினர் ( தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள்) ஓரங்கட்டப்படுகிறார்கள், மீண்டும் மோசமான மனிதவுரிமை மீறல்கள் நடக்கும அபாயம் உள்ளது என்று சொன்ன போது, இலங்கை அரசைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்ன போது… எல்லை கடந்த மேலுரிமையை ( universal jurisdiction) பயன்படுத்தி இலங்கை மீது தங்கள் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல், பயணத் தடை விதித்தல் என்று பரிந்துரை செய்த போது..
  6. 18000 த்திற்கும் மேற்பட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆண்டுக்கணக்கில் நீதி கோரி போராடும் போது…2020 ஆம் ஆண்டு கோத்தபய இராசபக்சே, “அவர்கள் யாரும் உயிருடன் இல்லை, இறப்புச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொன்ன போது..
  7. அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களின் மக்கள்தொகை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில்..
  8. வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புத்த விகாரைகள் நிறுவப்பட்டு வரும்போது..
  9. 70000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மன்றம் ஒப்புக் கொண்ட போதும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும் என்று கோரி போராடும் போதும்.

கே.எஸ். அழகரி அவர்கள் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.

சீனாவுக்கு கொழும்புத் துறைமுக நகரம் கொடுக்கப்பட்ட போதுதான் தமிழர்கள் இலங்கையில் இருப்பதே அவர் நினைவுக்கு வருகிறது. அவர்களின் உரிமைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்கிறார். தமிழ் மக்கள் மீது என்ன ஒரு அக்கறை!

இந்திய அரசின் இலங்கை தொடர்பான  வெளியுறவுக் கொள்கைக்கு பாசகவை குற்றம் சொல்கிறார்.  வெளியுறவுக் கொள்கையின் தோல்விக்கு பாசக காரணம் என்று சொல்கிறார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் பாசக செய்துள்ள மாற்றம் என்ன? காங்கிரசின் கொள்கை என்ன? அப்படி ஆட்சியில் இருக்கும் கட்சிகளைப் பொருத்து இந்தியாவோ அல்லது வேறெந்த நாடோ தமது வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ளுமா? காங்கிரசு ஆட்சியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை இந்திய அரசுக்கு  வெற்றிகளைத் தந்ததா? அதைவிடுங்கள், அதனால் தமிழர்களுக்கு கிடைத்தது என்ன?

150 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்று அந்த மண்ணை வளமாக்கிய மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை பண்டாரநாயக்காவும் லால் பகதூர் சாஸ்திரியும் போட்டுக் கொண்டனர். அந்த மண்ணில் அவர்களுக்கு உரிய உரிமையைப் பெற்றுக் கொடுக்க வக்கற்று ஆடு, மாடுகளைப் போல் தமிழர்களைக் கையாண்டது இந்திய அரசு. இப்படியான துயரந்தோந்த ஓர் எடுத்துக்காட்டை உலக வரலாற்றில் எங்கேனும் காட்ட முடியுமா?

தமிழர்களுக்கு உரித்தான கச்சத் தீவை சிங்களர்களுக்கு தாரை வார்த்து ஸ்ரீமாவோவின் மனங் கவர முயன்றதுதான் இந்திராகாந்தியின் இராஜதந்திரம்!  சுட்டுக் கொல்லப்பட்டு தமிழக மீனவர்கள் பிணமாக வரும் போது, அதன் பொருட்டு கொலை வழக்குக்கூட பதியாமல் சிங்களக் கடற்படையினருக்கு மன்னிப்பு வழங்கியதுதான் காங்கிரசின் இராஜதந்திர மெருகு!

மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் – ஆகிய மூன்று தரப்பினருக்கும் இறைமை கொண்டாடிய இந்தியா, இவர்களின் நலன்களை இந்தியப் பெருங்கடலில் பலியிட்டு இலங்கை தீவைத் தன் அந்தப்புர அழகியாக்க முடியுமா? என்று பார்த்தது. அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களை இன அழிப்புக்கு உள்ளாக்கி, முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் இரத்தத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தாவது சிங்கள அரசைக் கைக்குள் வைத்துக் கொள்ள முடியுமா? என்று இந்திய அரசின் இராஜதந்திரம் முயன்று பார்த்தது. மொத்தத்தில், ஈழத் தமிழர்களின் தலைகளை உருட்டி விளையாடி சிங்கள அரசைக் தன் கட்டுப்பாட்டில் வைக்க முயன்றதுதான் இந்திய அரசின் இராஜதந்திரம்!

எழுவர் விடுதலையிலும் காங்கிரசுக்கு உடன்பாடில்லை. ஈழத் தமிழர் சிக்கலில் பன்னாட்டுப் புலனாய்வுக்கோ அல்லது பொதுவாக்கெடுப்புக்கோ காங்கிரசுக்கு ஏற்பு இல்லை. காங்கிரசு மட்டுமல்ல, பாசக  போன்ற அனைத்திந்திய கட்சிகள் அனைத்தும் நேர்க்கோட்டில் நிற்கக் கூடிய பிரச்சனை இது. இன அழிப்பு என்பதையும் சரி இன அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் சரி இந்த இரண்டு கட்சிகளும் ஏற்பதில்லை. ஆனால், இவர்கள் அவ்வப்போது தமிழர்களின் உரிமைக்காக கண்ணீர் விட்டு அறிக்கை விடுவார்கள்.

ஈழத் தமிழ் இன அழிப்புக்கு நீதியையும் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வையும் ஒப்புக் கொள்ளாத இந்தியத் தலையீடென்பது தன்னுடைய விரிவாதிக்கத் தேவைக்காக ஈழத் தமிழர்களை கருவேப்பிலைப் போல் பயன்படுத்திக் கொண்டுப் பின்னர் இந்தியப் பெருங்கடலில் தூக்கி வீசுவதுதான். இத்தகைய தலையீட்டை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இந்திய விரிவாதிக்கத்திற்கு பங்கம் ஏற்பட்டால் பொங்கும் காங்கிரசார் ஈழத் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுவது பற்றி கவலைப்படவில்லை என்பதைவிடவும் அதற்கு எல்லாவகையிலும் உதவியே வந்துள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை, ஈழத் தமிழர்கள் சந்தித்து வருவது கட்டமைப்பு வகையிலான இன அழிப்பு என்பதும் முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட இன வழிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் அதற்கு பன்னாட்டு மன்றத்தில் குற்றவியல் நீதியும் பொதுவாக்கெடுப்பின் வழி ஈடுசெய் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும்  கவலைக்குரிய, அறத்தின் பாற்பட்ட  முதற்பெரும்  பிரச்ச்னையாகும்.

இந்த எளிய உண்மையையும் நியாயத்தையும்கூட ஏற்காமல் இந்திய ஆளும் வகுப்பின் விரிவாதிக்க நலன் பற்றி மட்டுமே கவலைப்படுவதுதான் காங்கிரசாரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்திய விரிவாதிக்க நலனின் பொருட்டு ஈழத் தமிழர்களை அணைப்பது போல் அணைத்து எரிமலைக் குழம்பில் தள்ளிவிடும்  வழமையான வஞ்சக அரசியலை தமிழகம்  புரிந்துகொண்டு இதை முறியடிக்க அணியமாக வேண்டும்.

-செந்தில்

சுட்டி:

https://www.dinamani.com/tamilnadu/2021/may/23/chinas-dominance-in-sri-lanka-is-increasing-ks-alagiri-3628323.html

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW