‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை
தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் கடந்த 05-10-2020 இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக இன்று 8.10.2020 வியாழன் அன்று மாலை 4 மணி அளவில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி, எஸ்.டி.பி.ஐ., மதிமுக, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், திசம்பர் 03 இயக்கம் ஆகிய கூட்டியக்கத்தின் உறுப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். இவ்வார்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் நவீன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக தோழர் செந்தில், எஸ்.டி.பி.ஐ. சார்பாக மாவட்டத் தலைவர் தோழர் ஜுனைத் அன்சாரி, மதிமுகவின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலச் செயலாளர் தோழர் முராத் புகாரி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் குமரன், திசம்பர் 03 இயக்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் சரவணன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் சார்ஜில் ஆகியோர் உரையாற்றினர். மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த தோழர் ஜின்னா முழக்கங்களை எழுப்பினார். மமகவின் மாவட்டச் செயலாளர் தோழர் நவீன் நன்றியுரை வழங்கி ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.
சாத்தான்குளம் காவல் படுகொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் காப்பாற்ற நடுவண் அரசும், தமிழக அரசும் கூட்டுச் சதி செய்கின்ற சந்தேகம் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்திற்கு எழுகின்றது. மேலும், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், தென்மண்டல காவல்துறை தலைவர், தென்மண்டல காவல்துறை துணைத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அலட்சியப் போக்கால் சாத்தான்குளம் காவல் நிலையம், அதன் துணை காவல் கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக காவல் சித்திரவதைகளும், படுகொலைகளும் நடந்துவருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக தெரிகின்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தொடர் கண்காணிப்பு தொடரும் நேரத்திலும் மேலும் மேலும் அப்பகுதியில் காவல்துறையின் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அச்செயல்கள் நீதிமன்ற மாண்பை குறைக்கும் செயல்களாகக் கருதுகிறோம். இதுதவிர கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி மாவட்டத்தில் அணைக்கரை முத்து அடித்துக் கொல்லப்பட்டார். சென்னையில் போலி மோதல் சாவு மூலம் சங்கர் என்பவர் சுட்டுக் கொலை, மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலையத்தில் ரமேஷ் திருப்பூர் புறநகர் காவல் நிலையத்தில் மணிகண்டன் ஆகியோர் காவல் சித்திரவதையால் மரணமடைந்துள்ளனர்.
இதுபோன்று தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல் சித்திரவதைகள், காவல் படுகொலைகளைக் கண்டித்து தமிழகத்தில் செயல்படும் இயக்கங்கள் கட்சிகள் சார்ந்த 90 அமைப்புகள் கூட்டாக இணைந்து செயல்படும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
கோரிக்கைகள்
- காவல் சித்திரவதை வழக்குகளில் அலட்சியத்தோடும் பொறுப்பற்ற தன்மையோடும் இருக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. திரிபாதி உடனே பதவி விலக வேண்டும்.
- சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சாத்தான்குளம் வழக்குடன் அதன்பின் அப்பகுதியில் நடந்த காவல் சித்திரவதை வழக்குகளையும் கண்காணிக்க முன்வரவேண்டும்.
- வேலூர் மாவட்டம் ஷாலினி மற்றும் அவரது குழந்தை ஷெனிசால் மீது தொடர்ந்து சித்திரவதை செய்துவரும் காவல் ஆய்வாளர் புகழ் மீது வழக்கு பதிவுசெய்
- தென்காசி மாவட்டம், வனத்துறையால் படுகொலை செய்யப்பட்ட அணைக்கரை முத்து வழக்கில் கொலை செய்த வனக்காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்
- மதுரை சாப்டூர் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட ரமேஷ் வழக்கில் தொடர்புடைய சார்பு ஆய்வாளர் புதியராஜ் மற்றும் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்
- சென்னை அயனாவரம் போலி மோதல் சாவில் படுகொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உட்பட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்
- திருப்பூர் புறநகர் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட மணிகண்டன் வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உட்பட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்.
- சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் சரவணன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனே அவர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
- சாத்தான்குளம் முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் தூத்துக்குடி கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் மீது முறையான விசாரணை தொடங்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- சாத்தான்குளம் காவல் படுகொலையில் தொடர்புடைய காவல்துறை நண்பர்கள் (Friends of Police) அனைவரும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்கள் அத்தனை பேர் மீதும் கொலைக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
- மார்ட்டின் காவல் சித்திரவதையில் தொடர்புடைய சாத்தான்குளம் காவலர்கள் மீது உடனே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.
- செல்வம் கொலை வழக்கில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் அரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.
- சாத்தான்குளம் தற்போதைய காவல் துணைக் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வினிலா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் கோவில்பட்டி கிளைச் சிறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும்.
இப்படிக்கு,
செந்தில், 9941931499