ஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்

18 Sep 2020

1962 இந்திய சீனப் போருக்குப் பிறகு முதல்முறையாக இருநாட்டு இராணுவத்திற்கு இடையிலான கைகலப்பில் இருபது இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்விற்கு பிறகு இந்திய சீன எல்லைத் தகராறு அன்றாட தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. (சீனா தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி சீன அரசு அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடவில்லை) தற்போது கிழக்கு லடாக்கில் கோக்ரா, கோங்கா லா, பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக்கரை பகுதிகளில் அசல் கட்டுப்பாட்டு எல்லை பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பதற்றம் தொடர்கிறது என மக்களவையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஜூன் 15 பின்னிரவில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் அதையடுத்து, இரு நாட்டு உறவிலான வாணிக உறவுகளைப் பின்னுக்குத் தள்ளி போர் பதட்டத்தை முன்னுக்குத் தள்ளிவிட்டது.

பாகிஸ்தானில் எல்லைக்குள்ளே சென்று தீவிரவாத முகாம்களை ஒழிப்பதற்கு இராணுவ ஆலோசனைகளை வழங்கிய இந்தியப் பிரதமர் மோடி சீனாவின் சீற்றத்திற்கு முதலில் மௌனம் காத்தார். பிறகு இந்திய மண்ணில் ஓர் அங்குலம் கூட சீன இராணுவம் கைப்பற்றவில்லை என பேசி எதிர்க் கட்சிகளின் விமர்சனத்திற்குள்ளானர். அடுத்து, கைகலப்பில் காயம்பட்ட இராணுவ வீரர்களை பார்த்து ஆறுதல் அளிக்கிற நிகழ்வும் விமர்சனத்திற்குள்ளானது.

முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு  கல்வான் பகுதியிலிருந்து சீன இராணுவம் பின்வாங்கி சென்றுவிட்டதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது. சீனா பின்வாங்கிவிட்டதாக ஊடகங்கள் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கத் தொடங்கின. ஆனால் அப்போதே எல்லையின்  ஐந்து இடங்களில் மூன்றில் இன்னும் இந்திய சீன இராணுவ மோதல் தீர்க்கப்படாமல்  உள்ளதாக  சில செய்திகள் வந்தன. இருநாட்டு இராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் டான்சங், ஹாட் ஸ்ப்ரிங் ஆகிய இடங்கள் பற்றி பேசி வருவதாகவும், இந்தியாவிற்கு பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்பாங் பகுதிகளின் நிலை குறித்த  பேச்சை இந்தியா இன்னும் தொடங்கவே இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சீனா எல்லையில் இருந்து பின்வாங்கிவிட்டது என இந்திய ஊடகங்கள் பிரமாதப்படுத்தின.

ஆனால் அது உண்மையல்ல என்ற செய்தி ஆகஸ்ட் மாதத்திலேயே தெரிந்துவிட்டது. கடந்த மூன்று நான்கு வாரங்களாக  டெஸ்பாங் தெற்கு ஏரி பகுதியில் பதட்டம், அருணாச்சல எல்லையோரத்தில் பதட்டம் என  போர் பதட்ட நிலை மீண்டும் தொடரத் தொடங்கியுள்ளன.

தற்போது நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சீன எல்லைத் தகராறு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்றும்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய கோரிக்கையை மக்களவை சபாநாயகர் மறுத்துள்ளார்.

அண்மைக்கால இந்திய சீன எல்லைத் தகராறு தொடங்கிய நாள் தொட்டு செய்திகளின் உண்மைத் தன்மையை  இரு நாட்டு அரசுகளும் மழுப்பியும் மறைத்தும் வருவதைப் பார்க்கிறோம். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார் சீன தரப்பிலோ உடனே மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. கல்வான் தாக்குதலின் பொது  இந்திய தரப்பில் சீன இராணுவம் எல்லை மீறியதாகவும், சீன தரப்பில் இந்திய இராணுவம் எல்லை மீறியதாகவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன. 1962 இந்திய சீனப் போர் செய்திகள் போலல்லாமல், தற்போதைய தகவல் தொடர்பு வளர்ச்சியால் நம்மால் சீன தரப்பு செய்திகளையும் இந்திய தரப்பு செய்திகளையும் ஒப்பீடு செய்துகொள்ள முடிகிறது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் எல்லையில் சீனப் படைகளின் அத்துமீறல் குறித்தும் 1993, 1996 எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறுகிறது என்றும் நாடாளூமன்றத்தில் பேசினார். மறுபுறம் இதற்கு மறுப்பு தெரிவிக்கிற வகையிலே சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பேசுகிறார். “தற்போதைய எல்லை நிலவரங்களுக்குப் பொறுப்பு சீனாவிடத்தில் இல்லை. இப்போதைக்கு மிகவும் அவசரமான முக்கிய காரியம் என்னவெனில் இந்தியா தன் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்பதே. தன் தவறை இந்தியா திருத்திக் கொள்ள வேண்டும். தரைப்படைகளை விலக்கிக் கொண்டு தூலமான நடவடிக்கைகள் மூலம் பதற்றத்தைத் தணிக்குமாறு நடந்துகொள்ள வேண்டும். இந்தியப் படைகள்தான் உடன்படிக்கைகளை மீறுகிறது. முதலில் ஊடுருவி சீனப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்தியப்படைகளே” என குற்றம் சாட்டுகிறார்.

“முதலில் யாரும் எல்லைக்குள் நுழையவில்லை என்று பிரதமர் கூறினார் … பின்னர் சீனாவை தளமாகக் கொண்ட வங்கியில் இருந்து பெரும் கடன் வாங்கினார். பின்னர் சீனா நாட்டை ஆக்கிரமித்ததாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இப்போது எந்த விதமான அத்துமீறலும் இல்லை என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார்.” என ராகுல் காந்தி மத்திய பாஜக அரசின் முரண்பட்ட தகவல்களை சாடுகிறார்.

2017 இல் தொக்லாம் நிகழ்வு தொடங்கி 2020 கல்வான் மோதல் வரை இந்திய சீன எல்லை விவகாரத்தில் இந்தியா கடுமையாக நடந்துகொள்கிறது எனவும் அமெரிக்கத் துணையுடன் சீனா மீது அழுத்தம் கொடுக்க முயல்வதாகவும் சீன அரசின் இணைய இதழான க்ளோபல் டைம்ஸ் இந்தியா மீது  குற்றம் சாட்டுகிறது. இவ்வாறு கிழக்கு இமாலய மலைத்தொடரின் பணிபோர்த்திய வெள்ளை பாலைவன பிரேதசத்தில் இரு அணு ஆயுத நாடுகள் முஷ்டியை மடக்கி மல்லுக்கட்டி கொண்டுள்ளன. நெடிந்துயர்ந்த பிரம்மாண்ட இமயமலை மீண்டும் தேசிய உணர்வு வெறியூட்டல் அரசியலுக்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது!

இமயமலை சாகசத்தின் தொடக்கம்

இங்கிலாந்து காலனிய ஆட்சியாளர்கள் இந்திய சீன எல்லை பற்றின தெளிவான வரைபடத்தையோ நில எல்லைகளையோ உருவாக்கவில்லை. லடாக் அக்சாய் சின்னை ஒட்டிய  சுமார் 13,500 சதுர மைல் நிலப்பரப்பும், அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய 3,500 சதுர மைல் நிலப்பரப்பும் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை முரண்பாடுகளின் ஆதாரமாக உள்ளது. இதில் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள  அக்சாய் சின்னை இந்தியா பாத்தியம் கோருகிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்ற பெயரில் சீனா பாத்தியம் கோருகிறது. LOC என்று சொல்லப்படுகிற பகுதியிலே ரோந்து செல்கின்றன. இரு பகுதிகளில் பெரிய சாலை போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டியுள்ளன. 1993 முதலாக எல்லையில் சமாதனம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஐந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

இந்திய சீன எல்லைத் தகராறை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

இந்த சண்டைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு அனுமானங்கள் முன்வைக்கப்படுகிற நிலையில் இச்சண்டைக்கு பின்னாலுள்ள காரணங்களை தத்துவார்த்த வகையிலே, வரலாற்று ரீதியில் வைத்து மதிப்பீடு செய்வது ஒவ்வொரு சோசலிஸ்டுகளுக்கும் அவசியமான பணியாகிறது.

 1. அண்டை நாடுகள் மீதான இந்தியாவின் அயலுறவுக் கொள்கை

சீனா மீதான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையானது வெளிப்பார்வைக்கு நட்பானதாகவும் உள்ளார்ந்து பகையுணர்வையும் அடிப்படையாக கொண்டது. நேரு காலத்தைய காங்கிரஸ் ஆனாலும் சரி,மோடி காலத்தைய பாஜகவானாலும் சரி இந்தியாவின் ஆளும் கட்சிகள் மாறினாலும், இந்திய அரசின் சீன எதிர்ப்பு அரசியல் என்பது இந்திய தேசிய அரசியல் நீரோட்டத்தின் ஒரு அங்காமாகிவிட்டது. பாஜக ஆட்சியில் தேசிய உணர்வு வெறியூட்டல் அரசியல் கூடுதலாக பிரமாதப்படுத்தப்படுகிறது. இரு கட்சிகளுமே ஆசியப் பிராந்தியத்தின் வல்லரசு எனும் ஒரே கனவை இலட்சியாமாக கொண்டவை.

இந்தியாவின் பொதுவான அயலுறவுக் கொள்கையானது எல்லை விரிவாக்கத்தையும்  வல்லரசு நோக்கத்தையும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் அடிப்படையாக கொண்டவை. கூடவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுடன்  முரண்படாதவாறு  பார்த்துக் கொள்வதாகும். வடகிழக்கு மாகாணம் ஆனாலும் சரி, இந்தியாவின் மாநிலங்களானும் சரி  பிரதேச சுயாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கு எதிரான மைய அதிகார குவிப்பில் நாட்டம் கொண்டிருக்கும்.

கடந்த காலத்தில் நேரு அரசானது, காஷ்மீர் மன்னனுடனான 1947 இணைப்பு ஒப்பந்தத்திற்கு வரலாற்று துரோகம் இழைத்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் பலவந்தமாக இணைத்தது. ஜம்மு காஷ்மீர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவை மக்களிடம் விட்டுவிடுவோம் என்ற நேரு வழங்கிய உறுதிமொழியை அவரே மீறினார். இன்று அதனது தொடர்ச்சியாக பாஜக கும்பலாட்சியாளர்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவான 370 ஐ நீக்கியும் ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியாவின் யூனியன் பிரதசங்களில் ஒன்றாக ஒருங்கிணைந்த பகுதியாக அறிவித்துகொண்டது.

காஷ்மீரை இந்திய அரசு கையாண்டது போலவே நேருவின் மகள் இந்திராகாந்தி,  சிக்கிமை பலவந்தமாக இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார். 1974 இல் சிக்கிம் மீதான ராணுவ படையெடுப்பு மூலமாக சிக்கிம் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. போலவே பூட்டான், நேப்பாளம்  மற்றும் திபெத் மீதும் இந்திய ஆட்சியாளர்கள் கண் வைத்தப்படி  இருந்தனர். அண்டை நாடுகளைப் பொருத்தவரைக்கும் இந்திய ஆட்சியாளர்களின் அயலுறவுக்  கொள்கையானது, காலனியாதிக்கவாதிகளின் கொள்கைகளையே தனது மரபுரிமையாக பாவித்துக் கொண்டது.

 1. திபெத்  ஆசிய ஆன்மாக்களுக்கிடையிலான முரண்பாட்டின் தொடக்கப் புள்ளி  

1950 இல் மக்கள் சீன இராணுவம் திபெத்தில் நுழைந்து சீனாவுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்தது. திபெத் மீதான சீனாவின் படையெடுப்பும் இணைப்பும் இந்தியாவுடனான சீனாவின் எல்லை வரையறையை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்தது. முன்னதாக திபெத் விவகாரத்தை அமைதி வழியில் தீர்க்க முயன்ற மக்கள் சீனத்தின் முயற்சியை அமெரிக்காவும் இந்தியாவும் தோல்வியுறச் செய்ததை தனது இமாலய சாகச நூலில் தோழர் சுனிதி குமார் கோஷ் விவரித்திருப்பார். கம்யூனிச முன்னேற்றத்தை தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் திபெத்தை துருப்புச் சீட்டாக .பயன்படுத்தியதும் திபெத்தின் பண்ணையடிமை உடைமையாளர்களின் ஆட்சியைக் காப்பாற்ற முயன்றதும் திபெத் மீதான சீன படையெடுப்பிற்கு காரணமாகியதை விரிவாக ஆதாரங்களுடன் விவரித்திருப்பார்.

1951 ஆம் ஆண்டில் மக்கள் சீனத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சீனக் குடியரசுக்கு உள்ளேயே திபெத்தின் பிரதேச சுயாட்சி உறுதி வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தனது மேற்குலக சகபாடிகளின் கூட்டணியோடு திபெத்திய ஆட்சியாளர்களை தாங்கிப் பிடித்து வந்த இந்தியா. திபெத்தை பிரதேச  சுயாட்சியுடன் சீனா இணைத்துக் கொண்டதை ஏற்றுக் கொள்ள இயலாமல் தவிக்கத் தொடங்கியது. இன்றளவிற்கும் தலாய் லாமாவிற்கு அரசியல் அடைக்கலம் எனும் பெயரில் திபெத் விவகாரத்தை இந்திய அரசு கையாள்வதைப் பார்க்கிறோம்.

திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அது நமது நாட்டின் வாயிற்கதவை எட்டிவிட்டது. அதன் விளைவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றில் வடகிழக்கு எல்லையைப் பற்றி நாம் அரிதாகவே கவலைப்படுகிறோம். வடக்கில் எல்லா ஆபத்துகளுக்கும் முன்னால் இமயமலை நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக நின்று கொண்டிருக்கிறது. திபெத் நமது அண்டை நாடாக இருந்தது, அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. முன்பு சீனர்கள் பிளவுபட்டிருந்தனர், அவர்களுக்கு சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் இருந்தன, அவர்கள் ஒருபோதும் நம்மை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது ,”என அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் எழுதினார்.

இந்திய – சீனா எல்லையென இங்கிலாந்து காலனியாதிக்கவாதிகள் 1914 ஆண்டு மக் மோகன் வரைந்த எல்லைக் கோட்டையே தனக்கு சாதமாக இந்திய அரசு பற்றிக் கொண்டதை நாமறிவோம். அதேவேளையில் மக் மோகன் எல்லைக் கோட்டை தொடக்கம் தொட்டே சீனா ஏற்கவில்லை. ”மக் மோகன்கோடு  என்ற நூலை எழுதிய லேம்ப் கீழ்வருமாறு இந்த எல்லைக் கோடு தொடர்பான நேரு அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்கிறார்.

கம்யூனிஸ்ட் சீனாவுடன் நட்புறவு மற்றும் சமாதான சகவாழ்வுக் கொள்கையை பற்றி நிற்பதாக நேரு அறிவித்துக் கொண்டார். பின் ஏன்-குறைந்தபட்சம் சீனர்களின் பார்வையில்-பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சிம்லா மாநாடு, மக்மோகன் எல்லைக் கோடு ஆகியவற்றை உடும்பு பிடியாக பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார்? இது  20 ஆம் நூற்றாண்டின் புரியாத புதிர்களில் ஒன்று” என்றார்.

ஒருபுறம் இங்கிலாந்து ஏகாதிபத்திய சக்திகள் வரைந்த எல்லைக் கோட்டை புனிதமாக பாவிப்பது மறுபுறம்  சீனாவுடன் சமாதான சகவாழ்வு என்ற நேருவின் நிலைப்பாடு  எதார்த்தத்தில் முரண்பாடாக உள்ளது. சீனாவுடன நேரு அரசாங்கத்தின் அயலுறவுக் கொள்கையானது ஒருபுறம்  சமாதான பஞ்சசீல கொள்கையும் மறுபுறம் முன்னேறும் கொள்கையாக இருந்தன.

திபெத்திய இணைப்பிற்கு பின் மக் கோகன் எல்லை வரை இந்தியா பாத்தியம் கோருகிற எல்லை வரை இந்திய இராணுவம் சோதனைச் சாவடிகளை அமைக்கவேண்டுமென நேரு உத்தரவு பிறப்பித்ததாக இந்தியாவின் முன்னால் வெளியுறவுதுறை செயலாளர் டி.என். கவுல் எழுகிறார். சீனாவின் எச்சரிக்கையை மீறி வடகிழக்கு மற்றும் வடமேற்கு எல்லைகளில் இந்திய அரசு பாத்தியம் கோரிய எல்லை வரை முன்னேறியது என எழுதுகிறார்.

எல்லை சிக்கலை பேச்சுவார்த்தை மூலமாக ஜனநாயகப் பூர்வமாக  தீர்க்க வேண்டுகோள் விடுத்த சீனாவின் வேண்டுகோளை உதாசீனப் படித்திய நேரு அரசு, முன்னேற்றக் கொள்கை திட்டத்தை இவ்வாறு தொடர்கிறார். எல்லையில் காவல் சாவடிகளை அமைத்துவிட்டால், சீனா ஏதும் செய்யாது என்ற அவதானிப்பு பின்னர் போருக்கு இட்டுச் சென்றது. 1962 இல் சீனாதான் ஆக்கிரமிப்பை தொடங்கியது என்ற இந்திய தரப்பு செய்திகளோடு இக்கூற்று முரண்படுகிறது.

இறுதியில் 1962 அக்டோபரில் மக்கள் சீன ராணுவம் இந்திய மீது போர் தொடுத்தது. ஒரு கட்டத்தில் இந்திய நிலைகளை தாண்டி வேகமாக முன்னேறி வந்தது. தில்லியில் கலவரமும் பீதியும் சூழ, தனது அமெரிக்க, இங்கிலாந்து  சகபாடிகளுடன் கூட்டணி அமைத்து, தனது  அணி சேரா கொள்கையை தன் கையாலேயே கொலை செய்தார் நேரு. அமெரிக்காவிடமும் இங்கிலாந்திடமும் இராணுவ போர் விமானங்கள் ஆயுதங்கள் வழங்கக்கோரி பட்டியல் அனுப்பினார். இந்திய சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் பொருளாதார சந்தை நலனை எதிர்பார்த்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, இந்தியர்களின் போர் தேவையை பூர்த்தி செய்ய ஆயுத தளவாடங்களை அனுப்பத் தொடங்கியது. இந்தியாவிற்கு இராணுவ பொருளாதார  உதவிகளை வாரி வழங்கியது.

பின் யாருமே எதிரபார்த்திராத வகையில் சீன ராணுவம் கைப்பற்றிய பகுதிகளை விட்டுவிட்டு பழைய இடத்திற்கு சென்றது. அக்சாய் சின்னை மட்டும்  தனது வர்த்தகப் பாதை முக்கியத்துவம் கருதி விட்டுக் கொடுக்காமல் நிலைகொண்டது.

இவ்வாறு போரானது இந்திய ஆட்சியாளர்களுக்கு பேரிடியாகவும் அமெரிக்க ஐரோப்பிய சதிகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளியையும் வைத்தது. அதேநேரம் சீனா மீதான இந்தியாவின் பகையுணர்வை போர் ஆழப்படுத்தியது. நேருவின் அரசியல் வாழ்வை முடித்தும் வைத்தது.

3.தாராளமய சகாப்தத்தில் இந்தியாவும் சீனாவும்

இந்திய சீனப் போருக்கு அடுத்து பத்து ஆண்டுகளில் இந்தியாவிலும் சீனாவிலும் பல அரசியல் பொருளாதார மாற்றங்கள் வெவ்வேறு திசைப் போக்கில் வளர்ந்தது. சீனப்போருக்கு பிந்தைய சில ஆண்டுகளிலேயே நேரு மரணமடைந்தார். சீனப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு  அமெரிக்கா,  சோவியத் என மாறிமாறி இந்திய அரசு கூட்டணிக்கு செல்லத் தொடங்கியது. அயல் மூலதனம் மற்றும் அயல் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என்ற அவா முன்னுக்கு வந்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு சரிந்தது. போருக்குப் பின் இந்தியாவின் அணிசேரா நாடு என்ற கொள்கை காகித முழக்கமாகிவிட்டது. ஆனால் நடைமுறையில்  அமெரிக்காவிடமும் சோவியத்திடமும் இந்தியப் பொருளாதாரம் அடமானம் வைக்கப்பட்டது. ’அடகுவைக்கப்பட்ட இந்தியா’ நூலில் இது குறித்து விரிவாக தோழர் நாகி ரெட்டி பதிவு செய்திருப்பார்.

சோவியத் சீனாவுடனான  முரண்பாட்டில் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஆசிய சுற்றிவளைப்பாக சோவியத் பயன்படுத்தியது. அமெரிக்கவுடனான இந்தியாவின் கூட்டணியையும் கண்டுகொள்ளமாட்டோம் என்றும், சொல்லப்போனால் சோவியத் உதவியைக் காட்டி, அமெரிக்காவிடம் மேலதிக உதவிகளைப் பெறலாம் என்றுகூட இந்திய ஆட்சியாளர்களுக்கு சோவியத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. ஒருபக்கம் அமெரிக்காவிடமிருந்தும் மறுபக்கம் சோவியத்திடமிருந்தும் தொழில்நுட்ப உதவிகளையும் இயந்திர சாதனங்களையும் இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான  பற்றாக்குறை அதிகரித்தது. வறுமையும் ஏழ்மையும் மக்களை பற்றிப் பிடித்தது. பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடியையும் அதி வலது சக்திகள் வலுப்பெறுவதற்கும் ஆதரமாகியது. அவசரநிலை பிரகடனம், பாபர் மசூதி இடிப்பு, தாராளமய கொள்கை அமலாக்கம் என நாடு காவி கார்பரேட்களின் வசமாகியது. மக்களோ வறுமை, வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டனர்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது அந்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரத்தோடு தொடர்புடையதாகும். உலக நாடுகளின் அரசியல் உறவுகளை அந்நாடுகளின் பொருளாதார உறவுகளே தீர்மானிக்கின்றன. ஏகாதிபத்திய சகாப்தத்தில், வெளியுறவுக் கொள்கைகள் என்பது உற்பத்தி விநியோகத்தை மையப்படுத்திய சந்தை நலனை ஆதாரமாக கொண்டுள்ளவை. ஏழை நாடுகளின் அயலுறவுக் கொள்கைகள், ஏகாதிபத்திய நாடுகளை அச்சாகக் கொண்டு சுழல்கின்றன. எனவே ஏழை நாடுகளின் அயலுறவுக்  கொள்கை என்பது   பெரும்பாலும் அரசியல் சுயேச்சைத்தன்மை இல்லாதவையாகும். இந்தியாவில் அரசியல் சுயேச்சைத்தன்மையற்றப்போக்கை தாராளமய கொள்கை அமலாக்கம் உறுதி செய்தது.

சீனாவிலோ மாவோவின் மரணத்திற்கும் பின் சீனாவின் அரசியல்  பொருளாதாரப் போக்கில் தலைகீழான மாற்றங்கள் நிகழத் தொடங்கின.சோஷலிச நிர்மாணத்தில் இருந்து விலகி ஏகாதிபதிபத்திய வலைப்பின்னலில்  இணைந்தது. சொல்லளவில்  சோசலிசம் நடைமுறையில் முதலாளித்துவ சக்திகளின் நலனுக்கான அரசாக மாறியது.

பின் சீனாவின் டென் கும்பலாட்சி வந்தது. சோஷலிச நிர்மாணத்தை தாராளமய கொள்கை ஆதரவாக வியாக்கியானபப்டுதியது. தற்போதைய  ஷி-ஜின்பிங் அரசோ, சீனப் பண்பிலான சோசலிசம் என சோஷலிச விலகலை சொல்லில் நீட்டி முழங்குகிறது.

 1. புதிய உலக ஒழுங்கும் அமெரிக்க சீன முரண்பாடும்

ஆசியாவின் பிராந்திய ஏகாதிபத்திய சக்தியாக தன்னைப் பாவித்துக் கொள்கிற இந்தியாவும் சர்வதேச ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்காவிற்கு மாற்றீடாக தன்னை நிறுவத் துடிக்கிற சீனா ஆகிய இரு நாடுகளும் கெடுவாய்ப்பாக தங்களுக்குளே தீர்க்கப்படாத சுமார் 16,500 சதுர மைல் பரப்பளவிலான எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதால், இவ்விரு நாடுகளுக்குமிடையிலான உறவானது சர்வதேச அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப உறவையும் முரண்களையும் தோற்றுவிக்கிறது. அதனால்தான் இந்திய சீன தரப்பு சந்திப்புகள் யாவுமே பேச்சுக்களாக உள்ளனவே தவிர பேச்சுவார்த்தைகளாக இருப்பதில்லை. அண்மைக்கால நிகழ்சிகளைப் பார்ப்போம்.

இந்தியாவில் மோடி அரசின் அரசியல் நடவடிக்கைகள் வருமாறு

 • சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவின் யூனியன் பிரதசமாக பாஜக அரசு அறிவித்தது. அறிவிப்பைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின்னை மீட்போம் என கொக்கரித்தார். அதைத்தொடர்ந்து புதிய இந்திய வரைபடத்தை இந்திய அரசு வெளியிட்டது.
 • ஒரே மண்டலம், ஒரே சாலை என்ற சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தை எதிர்ப்பது, அதில் சேராமல் இருப்பது. அதேநேரம் பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த சீன அதிபர் ஷி-ஜின்பிங்  அந்நாடுகளைப் பட்டுப்பாதை திட்டத்தில் இணைத்தார்.
 • சீனாவில் இருந்து திட்டமிட்ட வகையில் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டது என அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டியதோடு, இது குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பிற்கு இந்தியா ஆதரவளித்தது.
 • இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்வது.
 • கொரோனா காலத்தில், தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு என்ற பெயரில் இந்தியாவில் சீனாவின் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது.
 • எல்லைப்போர் பதட்டத்தை சீன செயலிகளுக்கு தடை என வர்த்தக நடவடிக்கையின் ஊடாக எதிர்கொள்வது.

சீனாவைப் பொறுத்தவரை,

 • மாறி வருகிற உலக ஒழுங்கில் அமெரிக்காவின் வீழ்ச்சியை இட்டு நிரப்புகிற சக்தியாக தன்னை நிறுவிக் கொள்வது.
 • இதற்கு இந்தியாவின் அதீத அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டை மட்டுப்படுதுவது.
 • இந்தியாவுடன் பொருளாதார இணக்கத்தை வற்புறுத்துகிற வூஹான் மற்றும் மாமல்லபுரம் சந்திப்பை நடத்தியது. இந்திய சீன உறவில் விரிசல் அல்லது நம்பிக்கையின்மை அதிகரிக்கும்பொழுது இவ்வாறான முறைசாரா பேச்சுவார்த்தை உக்திகளை காலம் காலமாக அமெரிக்கா கையாண்டு வந்த உத்தியாகும். இச்சந்திப்புகள் மூலம் பண்பாட்டு உறவை அடிப்படையாக கொண்டு அதன்மேல் அரசியல் உறவு கட்டப்படுகின்றன.

சீனாவின் இந்த நிலைப்பாடு தவிர்க்கவே முடியாத வகையில் சீனா குறித்த இந்தியாவின் கடந்த கால நிலைப்பாட்டை மீள் வரையறை செய்வதற்கு கோருகிறது. காங்கரஸ் காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து சிவசங்கர மேனன் கடந்த சில ஆண்டுகளாக உலக அரங்கில் மாறி வருகிற அரசியல் பொருளாதார போக்கில் இந்தியா சீனாவுடனான முரண்பட்டப் போக்கை கைவிட்டு நட்புறவு பாராட்ட வேண்டும் என தொடர்ச்சியாக பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார்.

மேற்குலக அமெரிக்க மையமாக  சுழன்ற உலகப் பொருளாதார ஒழுங்கை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்க டாலரை சர்வதேச வர்த்தக நாணயமாக ஏற்க மறுக்கிறது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைப் போல அமெரிக்காவின் தலைமைக்கு ஒத்தூத சீனா தயாராக இல்லை. அதேநேரம் மேற்குலக தாராளமய ஜனநாயக அமைப்பின் அடிப்படைகளுக்கு ஆதரவாக இருக்கிறது. சர்வதேச அரசியல் பொருளாதார அரங்கினில் அமெரிக்க தலைமை வீழ்ந்தாலும்,தாராளமய சகாப்தத்தையே தொடர்வதற்கு விரும்புகிறது.

சீனாவின் பொருளாதாரக் கொள்கைகள் யாவுமே சர்வதேச தாராளமய சட்டகத்திற்கு இசைவாக உள்ளன. உலக வர்த்தக கழகம், காட் போன்ற சர்வதேச பொருளாதர ஒப்பந்தங்களில்  சீனாவிற்கு   எந்த முரண்பாடும் இல்லை.போலவே உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் தவறாமல் சீனா கலந்துகொள்கிறது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டில் டாவோசில்  நடைபெற்ற உலகப் பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் சீன  அதிபர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சின் சாராம்சம் முழுவதுமே ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஆதாரவான தனது சமாதான சகவாழ்வு பிரசங்கத்தை நடத்தினார். முன்னாள் சோவியத் ரசியாவின் திரிபுவாதத்தை குறிப்பிட பயன்படுத்துகிற “சொல்லில் சோசலிசம் நடைமுறையில் ஏகாதிபத்தியம்” (SOCIAL IMPERIALISM) என்ற பதம் இன்று சீனாவிற்கும் பொருந்துகிறது.சீன பண்பிலான  சோசலிசம் என்பது தனது முதலாளித்துவ போக்கை மறைப்பதற்கு பயன்படுத்துகிற மூடு திரையாகும்.

ஏகாதிபத்திய சகாப்தத்ததில், அதாவது முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச கட்டத்தில், ஏழை பணக்கார வர்க்க முரண்பாடுகள் தீவிரப்படுவதும், இராணுவ ஆதிக்கம் வளர்வதும், பிற்போக்கு சக்திகள் வளர்ச்சியும், தேசங்களின் சுய நிர்ணய உரிமை மீதான  ஒடுக்குமுறையும்  பொதுவான நிகழ்ச்சிகளாகின்றன. முதலாளித்துவ தேசியவாதமும் தேசிய வெறியும் வெகுஜன மக்களிடத்திலே மதுபோதைப் போல ஊட்டப்படுகிறது.

அவ்வகையிலே ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாடுகளின் முதலாளித்துவ சக்திகளின் நலன்களுக்கு ஏற்ப, அவர்களின் சர்வதேச வர்த்தக நலன்களுக்கு ஏற்ப போரையும் பேச்சுவார்த்தையையும் மாறிமாறி பயன்படுத்துகின்றன.

ஆளும்வர்க்கத்தின் இந்த உத்தியை நாம் உணர்ந்துகொள்ளாவிட்டால், அதன் தேசிய உணர்வு வெறியூட்டல் அரசியலுக்கு இரையாகிவிடுவோம்!

-அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்:

இமாலய சாகசம்-1962 இந்திய சீனப் போர்:காரணங்களும் விளைவுகளும்-சுனிதி குமார் கோஷ்

https://www.nytimes.com/2020/06/19/opinion/China-India-conflict.html

https://www.thehindu.com/news/national/russia-should-be-more-involved-in-indo-pacific-indian-envoy/article32093190.ece?utm_source=pushnotifications&utm_campaign=pushnotifications&utm_medium=ALL_USER

https://www.epw.in/journal/2020/26-27/strategic-affairs/us%E2%80%93china-disruption-and-world-order.html

https://www.thehindu.com/news/national/china-has-crossed-its-1960-claims-along-the-lac/article32133689.ece?utm_source=pushnotifications&utm_campaign=pushnotifications&utm_medium=ALL_USER

https://www.hindutamil.in/news/india/579917-lac-standoff-china-rebuts-rajnath-singh-says-india-violated-agreements.html

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW