தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி குண்டர்களின் தாக்குதலை கண்டிப்போம்! செய்தியாளர்கள் ஆசிப், குணசேகரன், செந்தில், கார்த்திகேயன், நெல்சன் ஆகியோருடன் துணைநிற்போம்!

21 Jul 2020

பிரதமர் மோடியை மையப்படுத்திய முதல் பக்க செய்தி வெளியிடாத காரணத்தால் ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து சித்தார்த் வரதராஜன் தகுதி குறைப்பு செய்யப்படுகிறார். நிறுவனத்தின் தகுதி குறைப்பு நடவடிக்கைக்கு  கண்டனம் தெரிவித்து சித்தார்த்  ராஜினாமா செய்து வெளியேறுகிறார்.  அடுத்து, ஏபிபி செய்தி சேனலின் நெறியாளர் பாஜ்பாய்,மோடியை  விமர்சித்த “மாஸ்டர் ஸ்ட்ரோக்” நிகழ்ச்சிக்காகாகவும் அவரது பிற மோடி விமர்சன செய்திகளுக்காகவும்  வலுக்கட்டாயமாக நிறுவன வெளியேற்றம் செய்யப்படுகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் பாபி கோஷ், மோடி ஆட்சியில் அதிகரித்துள்ள வெறுப்பரசியலை பதிவு செய்ததற்காக  வெளியேற்றப் படுகிறார். என்டிடிவி மற்றும் இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள்  மீது பதான்கோட் தாக்குதல் குறித்து விமரசரணங்கள் ஒளிபரப்பினார்கள் என்று குற்றம்சட்டி ஒளிபரப்ப தடை செய்ய முயற்சித்தனர்.

இவையெல்லாம்  இந்தியாவின் வட மாநிலங்களில் மோடி வித்தையை மக்களிடம் அம்பலப்படுத்திய, பாஜகவிற்கு காவடி தூக்காத ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான இருநூறு நபர் கொண்ட பாஜகவின் செய்தி கண்காணிப்பு குழாம் மேற்கொண்ட வன்முறை தாக்குதல்கள் ஆகும்.

தற்போது இந்த கும்பல் தமிழகத்தை  குறி வைத்து காட்சி, அச்சு செய்தி ஊடகங்களில் பணியாற்றுகிற முற்போக்கு கருத்தியலாளர்கள் மீது அவதூறு பரப்பி, நிறுவன வெளியேற்ற சதியை முயற்சிக்கின்றன. அதனது ஒரு பகுதியாக தற்போது நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் செய்தியாளர் ஆசிப்பை நிர்வாக அழுத்தத்தின் பெயரில் பலவந்தமாக ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். போலவே நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் தலைமை செய்தி ஆசிரியர்  குணசேகரனின்  மீதும் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ள செய்திகள் வருகிறது.

விமர்சனக் கருத்தை வன்முறையின் துணைக்கொண்டும் பொய் அவதூறு எதிர்க் கூச்சலைக்  கொண்டும் எதிர்கொள்வது ஆர்எஸ்எஸ் – பாஜகவின் மரபில் ஊறியதாகும். அவ்வகையில் பாஜக ஊதுகுழல் யூடீப் மாரிதாஸ், கல்யான் ராமன், கிஷோர் சுவாமி போன்ற காவி அடிப்படைவாத சக்திகளின் வெறிக்கூச்சலுக்கு பயந்து தனது நிறுவனத்தின் பணியாளர்களை செய்தி நிறுவனம் பலி கொடுப்பது தொழிலாளர் உரிமைக்கு எதிரானதோடு, அவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.

சேனல் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பணி செய்கிற பணியாளருக்கு சொந்தமாக தனிப்பட்ட வகையிலே எந்தவித சித்தாந்தம் மீதும் சார்பும் நம்பிக்கையும் இருக்கலாம். மாறாக, சேனலின் நிர்வாக எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் குறிப்பாக  நிறுவன பணியாளர்களின் தனிப்பட்ட சித்தாந்த நிலைப்பாட்டை காரணமாக காட்டி பலவந்த வெளியேற்றம் செய்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

நியூஸ் 18 ஊடக நிறுவனத்தின் வெட்கக்கெடான இந்த நடவடிக்கையானது புற அரசியல் அதிகார அழுத்தத்திற்கு சிரம் தாழ்த்தி பணிந்து நடந்துகொள்வதை உள்ளது உள்ளவாறு மக்கள் முன்னே  அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது.

மௌனமான பிரதமர் என முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து பிரதமர் பதவிக்கு வந்த மோடி, இதுவரையிலும் ஒரு பக்க உரையாக மான் கி பாத் மூலமாகவோ பிற பதிவு செய்யப்பட்ட காணொளி மூலமாகவோ மக்களிடம் ‘உரையாடுகிறார்’, மாறாக அவர் நடத்திய ஒரே  ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் அமித்ஷாவை அழைத்து வந்து ஓரமாக அமர்ந்துகொண்டார். இவ்வாறான “வலிமையான” பிரதமர்தான் நாட்டின் ஊடகங்களை கண்டு அஞ்சி நடுங்கி தனது அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்தி தன் மீதான, தனது அரசின் மீதான விமர்சனங்களை “மௌனிக்க” வைக்க முயற்சிக்கிறார்.

பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்துகிற செய்தி நிறுவனங்கள் மீது ரைடு நடத்தப்படுகிறது, வழக்குப் போடப்படுகிறது, லைசன்ஸ்கள் இழுத்தடிக்கப்படுகிறது, ஊடக நிறுவன உயர் பொறுப்பில் யார் வரவேண்டும் என கட்டளை இடப்படுகிறது. ஜனநாயக ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டும், வேலையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அதேநேரம் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகரின் ரிபப்ளிக் சேனலிலுக்கு மின்னல் வேகத்தில் லைசென்ஸ் கிடைக்கிறது. ஆனால் மோடி அரசை விமர்சித்து வந்த வலைதள செய்தி நிறுவனம் ப்ளூம்பெர்க் கியூன்டுக்கு இரண்டு ஆண்டுகளாக லைசன்ஸ் வழங்காமல் இழுத்தடித்தது. ஆனால் இந்த செய்தி நிறுவனத்தை அம்பானி வாங்கியதும், உடனடியாக லைசன்ஸ் கிடைகிறது.

இந்திரா காந்தி எமெர்ஜென்சி அறிவிப்பிற்கு மறுநாள் தனது இந்தியன் எக்ஸ்ப்ரஸ் முகப்பு பக்கத்தை மொட்டையாக எழுத்தே இல்லாமல் அச்சடித்து விநியோகித்த ராம்நாத் கோயங்கா வரலாற்றின் நாயகன் ஆனார். ஆனால் இந்திராவோ பிறகு ஆட்சியை இழந்தார், எமெர்ஜென்சிக்காக இன்றளவிலும் விமரசிக்கப்பட்டுவருகிறார்.

அதிகார பலத்தாலும் ஒடுக்குமுறையாலும் அரசிற்கு எதிரான கருத்தை அமுக்கி தடுத்திட முடிந்திருந்தால் வரலாற்றில் மக்கள் புரட்சியே நடந்திருக்காது அல்லவா?

தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி குண்டர்களின் தாக்குதலை கண்டிப்பது மட்டுமின்றி ஜனநாயக பண்புகளோடு செயல்படும் ஆசிப், குணசேகரன், செந்தில், கார்த்திகேயன், நெல்சன்  போன்ற ஊடகவியலாளர்களுடன் துணை நிற்போம். காவி குண்டர்களின் தாக்குதலை முறியடித்து ஜனநாயக வெளியை காத்திடுவோம்.

-அருண் நெடுஞ்சழியன், சோசலிச தொழிலாளர் மையம் (SWC)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW