சாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்

24 Jun 2020

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது தோப்புக்கொள்ளை என்ற கிராமம். இக்கிராமத்தில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலை சார்ந்திருப்பவர்கள். கொத்தனார், பெயிண்டிங் வேலைக்கும், செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் மில், திருப்பூர் கார்மெண்ட்ஸ் வேலைக்கு செல்கிறார்கள். அப்பகுதியில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த 200 குடும்பங்கள் வசிக்கின்றன. வாழ்க்கைநிலையில் ஒடுக்கப்பட்ட மக்களும், முத்தரையர் மக்களும் அடித்தட்டு வர்க்க மக்களாகவே உள்ளனர். தோப்புக்கொள்ளை பகுதியில் முத்தரையர் மக்களைவிட ஒடுக்கப்பட்ட மக்கள் நகர்மய வாழ்க்கைக்குள் சென்று சிறிது முன்னேறியுள்ளனர். முத்தரையர் சமூக மக்களோ வாழ்க்கைநிலை, கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள். இந்த பின்தங்கிய சமூகவாழ்நிலையை பயன்படுத்திதான் பாஜக ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகள் அதிகாரத்தில் பங்கு என்கிற உத்தியில் இவர்களை அணிதிரட்டுவதில் கவனம் செலுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளர் முத்தரையர்களுக்குமான முரண்பாட்டை தூண்டிவிடும் வேலையை பாஜக செய்கிறது. முத்தரையர்கள் அதிகமாக வாழும் தோப்புக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த விவேக் என்கிற இளைஞன் (19)வயது பெயிண்டர் வேலை செய்துவருகிறார். விவேக் பெயிண்டர் வேலை செய்துவரும் ஊதியத்தை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார்.

 

தோப்புக்கொள்ளை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 10கி.மீ தொலைவில் உள்ளது இடையன்வயல் என்ற கிராமம். இக்கிராமத்தில் கோனார் சாதியை சேர்ந்த கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆடுமாடு, சவுக்கு மரம் வியாபாரம் செய்யும் தொழில்களில் ஈடுபடுகின்றனர். கோனார் சமூகம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலிலேயே சிறுபான்மையினராக கடைசியில் இருப்பவர்கள். சாவித்திரியின் குடும்பம் வசதிவாய்ப்பு கொண்டது. விவசாய குடும்பம். சாவித்திரி கல்லூரி 3 ஆம் ஆண்டு படித்துவந்திருக்கிறார். விவேக்கும் சாவித்திரியும் ஒரே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே பழகிவந்திருக்கிறார்கள். இவர்கள் பழகிவருவது வீட்டிற்கு தெரியவே திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாவித்திரி விவேக்கிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து கடந்த சூன் 7 அன்று வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். கரூர் அருகே குளித்தலை காவல்துறை அதிகாரிகள் இருவரையும் விசாரித்திருக்கிறார்கள். விவேக்கிற்கு திருமணவயது எட்டவில்லை 4 மாதங்கள் இருக்கிறது. ஆதலால் சாவித்திரி பெற்றோரிடம் செல்லவேண்டும் என பெற்றோரை வரவழைத்து சாவித்திரியின் விருப்பமின்றி ஒப்படைத்திருக்கிறார் குளித்தலை இன்ஸ்பெக்டர் திருமலைராஜன். சாதி மறுப்பு தம்பதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே சாவித்திரியின் கொலைக்கு முக்கியக் குற்றவாளியாகியிருக்கிறார்கள். சாவித்திரி, “என்னை கொன்றுவிடுவார்கள் நான் போகமாட்டேன், விடுதிக்கு அனுப்புங்கள்“ என மன்றாடியபின்பும் அவளை பெற்றோர்களுடன் அனுப்பிவைத்த காவல்துறையே சாதித்துறையாக இருக்கும் பொழுது மக்கள் யாரிடம் முறையிடுவார்கள்? சாவித்திரி, விவேக் இருவரையும் பிரிப்பதற்கு சாவித்திரியின் அப்பா யாதவர் சங்கத்தை நாடியிருக்கிறார். அவர்களின் தலையீடு இருந்திருக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக ஊராட்சிமன்றத் தலைவர் இதற்கு முழு உதவியாக இருந்திருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கிறது. அழைத்துச்சென்ற பெற்றோர்களோ சாவித்திரியைக் கொன்று எரித்து அடையாளங்களை அழித்துள்ளனர். விவேக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தபின்பே விசாரித்து சாவித்திரியின் தாய் உட்பட உறவினர்கள் 7 பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. சாவித்திரி கொலைக்கு குடும்பம் மட்டுமின்றி, சாதிமத சங்கத்தின் பின்புலம் இருக்கிறதா? என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.

சாவித்திரி ஒரு தலித் இளைஞனை தேர்வுசெய்திருந்தால் வெட்டிக்கொன்றதற்கு இச்சாதியசமூகம் நியாயத்தை கற்பித்திருக்கும். சாவித்திரி இயல்பாய் தேர்வுசெய்த அந்த இளைஞன் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். கோனாரும், முத்தரையரும்  பிற்படுத்தப்பட்டோர் சமூகம். இருந்தும் ஏன் இவ்வளவு கொடூரமாக கொல்லவேண்டும்?  ‘

கோனார் சமூகம்

தமிழகத்தில் கோனார் அல்லது இடையர் சாதி மக்கள் 5 சதவீதமாக உள்ளனர். இவர்கள், ஆயர், இடையர், கோன், கோனார், யாதவர், கரையாளர், பிள்ளை, யாதவ்  மந்திரி போன்ற பல பிரிவுகளாக உள்ளனர். தெலுங்கு பேசும் கோனார், தமிழ்பேசும் கோனார் என இருபிரிவாக உள்ளனர். இந்த பிரிவினருக்குள் என்னவகையான உறவுமுறை  இருக்கிறது கலப்புமணம் என்பதுபற்றியும், இவற்றில் எந்தெந்த பிரிவினர் திருமண உறவுமுறை, புறமணமுறையைக் கொண்டுள்ளனர் என்பது பற்றியும் நாம் ஆய்வு செய்தால்தான் தீண்டாமையின் வடிவத்தை துல்லியமாக தெரிந்துகொள்ளமுடியும்.

கோனார் சமூகம், ஐந்திணைகளில் குறிஞ்சிக்கும், மருதத்திற்கும் இடையில் முல்லை காடுகளில் ஆடுமாடு மேய்த்து மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்ததால் இவர்களை இடையர்கள் எனக் குறிப்பிடுவதாக வரலாறு கூறுகிறது. இன்றும் விவசாயம், ஆடு மாடுகள்தான் அவர்களின் சொத்து. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தஞ்சை, சென்னை  போன்ற மாவட்டங்களில் பரவலாக வாழ்கிறார்கள். இவர்கள் கொங்கு வெள்ளாளர், முக்குலத்தோர் சாதிகள் போன்று வலுவாக பொருளாதார, அரசியல் பலம் கொண்ட சாதியில்லை. பெரும்பான்மை சாதியாகவும் இல்லை. பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்குள்ளேயே கடைநிலையில் உள்ள சாதி. சில இடங்களில் வலுவாகவும், சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலும் உள்ளனர். அரசியல் செல்வாக்கும் ஓரளவு உள்ளது. முத்தரையர் சமூகத்தை ஒப்பிடும்போது பொருளாதாரத்தில் சிறிது முன்னேறிய பிரிவினர் என்று சொல்லலாம். மக்கள் தொகையில் குறைவானவர்கள் கோனர் சமூகத்தினர். தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் சாதிகளுக்கும் இவர்களுக்குமான முரண்பாடு என்றும் உண்டு. இவர்களை கீழாக பார்க்கும் மனோபாவமும் கள்ளர்களை கண்டால் கோனார் சமூகம் வணங்கும் வழக்கமும் உண்டு. கள்ளருக்கும் கோனாருக்கும் சண்டை வந்தால் இவர்களைப் பாதுகாப்பது முத்தரையர் சமூகம்தான் என்கிறார்கள் மக்கள். இவ்வளவு உறவுகள் இருந்தாலும் காதல் திருமணம் சடங்கு சம்பிரதாயங்கள் என வரும்பொழுது சாதியாகத்தான் நிற்கிறார்கள்.

 

முத்தரையர் சமூகம்

தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் முத்தரையர் சமூகம். முத்தரையர் சமூகமானது 29 உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 18லட்சத்திற்கும்மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இச்சமூகம், முத்துராஜா, முத்திரியர், அம்பலக்காரர், சேர்வை, வலையர், கன்னபகுல வலையர், பரதவ வலையர், பாளையக்காரர், காவல்காரர், தலையாரி, வழவடியார், பூசாரி, முதிராஜ்,முத்திரிய மூப்பர், முத்திரிய மூப்பனார், முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர், பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு, முத்துராஜா நாயுடு, வன்னியர் குல முத்துராஜா, முத்துரிய ராவ், வேட்டுவ வலையர், குருவிகார வலையர், அரையர், அம்பலம், பிள்ளை போன்ற பிரிவுகளாக இருக்கிறது. ஆனால் இவர்களில் எந்தெந்த பிரிவினருக்குள் கலப்பு மணம் இருக்கிறது, இல்லை என்று தெரியவில்லை. முத்தரையர் பிரிவு மக்கள், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் அதிகளவு வாழ்கிறார்கள். சில இடங்களில் பொருளாதாரத்தில் முன்னேறியும் பல இடங்களில் அடித்தட்டு வர்க்கமக்களாகவும் இருக்கிறார்கள். சாதிகளின் அடித்தளம் கொண்ட அதிமுக கட்சியில் அங்கம் வகித்தாலும் அரசியல் அதிகாரத்தில் முக்கியமான இடத்தில் முத்தரையர் சமூகம் இல்லை என்றே சொல்லலாம். கல்வி, வேலைவாய்ப்பு அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர் சமூகத்தை ஒப்பிடும்போது பின்தங்கியே இருக்கிறார்கள். மைய மாவட்டங்களில் முக்குலத்தோருக்கும் முத்தரையர் சமூகத்திற்குமான முரண்பாடு சாதி ரீதியாகவும் இன்றளவும் நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது. முக்குலத்தோருக்கு முத்துராமலிங்க தேவர் சிலை குருபூஜை செய்வதுபோல் முத்தரையர் மக்களும் தங்களுக்கான அடையாளமாக அரசன் பெரும்பிடுகு முத்திரியர் சிலையை நிறுவி அரசு விழாவாக நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல் முக்குலத்தோரிலேயே அகமுடையர் சாதி சமூகத்தில் நிலவுடமை சமூகமாக உள்ளனர். இவர்களுக்கும் இவர்களைவிட பொருளாதாரத்தில், பின்தங்கியுள்ள மறவர், கள்ளர் சாதிக்கும் தென் மாவட்டங்களில் முரண்பாடு வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் பிரன்மலைக்கள்ளர் என்ற சமூகம் முத்தரையர் போன்ற பின்தங்கிய சமூகம். அகமுடையரும், மறவரும் பிரன்மலைக்கள்ளரை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கும் முரண்பாடு நிலவுகிறது. திருமணங்கள் நடப்பதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், “முக்குலத்தோர் என்பது அரசியலுக்குத்தான். சமூகத்தில் இவை மூன்றும் தனித்தனி சாதி இனக்குழுக்கள்தான்.

 

இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தபின்பு ஒவ்வொரு சாதிக்குள்ளும் வர்க்க ரீதியில் வசதிபடைத்த ஒரு பிரிவினர் உருவாகியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த சாதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சில சாதிகள் அரசியல், பொருளாதார, கல்வி,வேலைவாய்ப்பில் முன்னேறுவதும் அவற்றில் கடைக்கோடி உழைப்பாளி மக்கள் அதிகமுள்ள சில சாதி, பிரிவினர் பின்தங்கியிருப்பதும் சமூகத்தில் அரசியலில் புறக்கணிக்கப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தங்களுக்கும் இடம் வேண்டும் என்று சொந்த சாதி மக்களின் நலனுக்காக வேலைவாய்ப்பிற்காக போராடுவது நியாயமானது. தங்களைவிட கீழ் உள்ள சாதிகளை, பிரிவுகளை முன்னேறாமல் தடுப்பது அநீதியானது என்பதை பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் முன்னேறிய வர்க்க சக்திகள் உணர்வதில்லை. இந்த முரண்பாட்டை அடித்தட்டு  தலித் மக்கள் மீது வன்முறை நிகழ்த்தி தீர்த்துக்கொள்ள எத்தனிக்கிறது சாதித்திமிர்.

 

அதேபோன்றுதான் முக்குலத்தோர் சாதிகள் கோனார், முத்தரையர் சாதிகளை கீழான சாதிகளாக பார்ப்பதும், ஒதுக்குவதில் தீண்டாமையை சாதிய மனப்பான்மையை கடைபிடிக்கிறது. அதேபோல் முக்குலத்தோர், முத்தரையர் கோனார் சாதிகள் அங்குள்ள பள்ளர், பறையர், அருந்ததியர் சமூகத்தை இழிவான சாதியாக நடத்துவது சாதி ஆதிக்கத்தில் வன்முறை, கொலை செய்வது என்ற இருவிதமான முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதில்தான் சாதியின் புதிர்கள் அடங்கியிருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் கோனார் சமூகம், பிற்படுத்தப்பட்ட சாதிப்பட்டியலுக்குள்ளேயே உள்ள முத்தரையர் சமூகத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஆணவக்கொலை செய்திட துணிந்திருக்கிறது. சாதிரீதியாக தனக்கு கீழ் என்கிற பார்வையும் பொருளாதார அந்தஸ்துமே தீர்மானித்திருக்கிறது. இங்கு சாதி என்பது ஒவ்வொன்றும் தனித்தனியாகவே இயங்குகிறது. வட்டாரத்திற்கு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஒவ்வொரு உட்பிரிவுகளும் தனி சாதிக்குழுக்களாக குலம், கோத்திரம், இரத்த உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது என்பதை நுணுக்கமாக பார்க்க வேண்டியிருக்கிறது. சாதிகளின் உட்பிரிவுகளுக்கிடையிலேயே எந்தவித கலப்பும் மண உறவும் இல்லாமல் இருக்கும்போது சாதிவிட்டு சாதி என்றால் இரத்தக்களரியாக்குவது ஒவ்வொரு சாதிக்கும் நியாயமாகத் தெரிகிறது. சாதிய பாகுபாடு தீண்டாமை இரத்தஉறவு புனிதம் இவை அனைத்தும் இன்றைய சூழலில் உடைந்துவருவதும் அரசியல் அங்கீகாரம் கிடைக்கும்போது உயிர்த்தெழுவதுமாக சாதி இருக்கிறது. அனைத்து சாதிகளிலும் தீண்டாமையும், கீழ் சாதி எனும் மனோபவாமும் உடைமை ஆதிக்கமும் நிலவுகிறது. ஆக, தீண்டாமை, வர்க்கம், சாதிக்குமான உறவை, முரணை கூர்மையாக கவனிக்க வேண்டும் என்பதையே சாவித்திரி ஆணவக்கொலை உரக்கச்சொல்கிறது. சாதிகளுக்கிடையில், சாதிகளுக்கு அப்பால், ஒரு பெண் தனக்கான வாழ்க்கையை தேர்வுசெய்வதற்கும், இரத்த உறவுமுறையை அகமணமறையை அறுத்தெறிவதற்கும் உரிமை வேண்டும். ஒவ்வொரு சாதிக்குழுக்களும் சனநாயகப்படுத்தப்பட வேண்டும். அதற்கான அணுகுமுறையை நாம் கையாள வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருகிறது.

 

சாதியும் பெண்ணும்

‘பெண் என்பவள் ஒரு உடைமை பொருள். பெண் என்பவள் குடும்ப கௌரவத்தை காப்பவள், பெண் என்பவள் சாதி மத ஆணாதிக்க புனிதத்தைப் பாதுகாப்பவள், கற்புக்கரசி’. என்ற சட்டகத்திற்குள் பூட்டி சாதியை காத்துவருகிறது சமூகம். எப்பொழுது அதனை உடைக்க முற்படுகிறாளோ அன்று அவள் இச்சமூகத்தால் தூற்றப்படுகிறாள். ஒதுக்கப்படுகிறாள். ஒழுக்கங்கெட்டவளாக்கப்படுகிறாள், இறுதியில் கொல்லப்படுகிறாள். சமூகத்திலுள்ள அனைத்து சாதியும் சாதியஇனக்குழுக்களும்  அகமுணமுறை இரத்தஉறவு குடும்பமுறைக்குள்தான் இயங்குகிறது. இவை சாதிக்குள்ளும் சாதிக்கு வெளியிலும் ஒவ்வொரு உட்பிரிவிலும் மணத்தேர்வை சாதி கலப்பை மறுக்கிறது சாதியின் இருத்தலின் அடிப்படையே ஒன்று பெண், இன்னொன்று மூலதனம். ஆதலால்தான் ஒரு ஆண் சாதிமுறையை மீறும் போது நடக்காத வன்முறை கொலை அக்குடும்பத்திலுள்ள ஒரு பெண் மீறும்போது பெரும் கலவரமாக வெடிக்கிறது.

கண்ணகி, விமலாதேவி, சங்கீதா, திலகவதி, ஜனனி போன்ற இன்னும் பல பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் தலித் இளைஞர்களை தேர்வுசெய்த காரணத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்டவர்கள். அதேபோல் முருகேசன், சிற்றரசு இளவரசன், கோகுல்ராஜ், பார்த்திபன், சங்கர், பரந்தாமன் இன்னும் பல தலித் இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களை தேர்வுசெய்த காரணத்திற்காக கொல்லப்பட்டவர்கள். அதேபோல் திருச்சி அருகே உடையார், பிள்ளைமார் சாதியில் கொலை நடந்திருக்கிறது. ரெட்டி வன்னியர் சாதியில் ஆணவக்கொலை நடந்திருக்கிறது. பழங்குடிகள், குறவர்கள், மீனவர்கள், புதிரை வண்ணார்கள் போன்ற பிரிவினருக்கு நடக்கும் அநீதிகள் வெளியில் வருவதில்லை. பிராமண சாதியைப் பொறுத்தவரை இவர்கள் சாதி ஆணவக்கொலையில் ஈடுபடுவதில்லை. அவர்கள் நிலம் சார்ந்த விவசாய உடைமை உற்பத்தியில் வாழ்க்கைமுறையில் இல்லாததும் காரணம். இடைப்பட்ட சாதிகளான இந்த சாதிகள்தான் இத்தகைய கொடூரக் கொலையை செய்கிறது. பெற்ற பிள்ளையை கொல்லும் பண்படாத வாழ்க்கைமுறையை கொண்டிருக்கிறது. ஆதலால்தான் பெற்றோர்கள், சாதி சங்கங்களை நோக்கி கேள்வி எழுப்புவதில்லை. “என் குடும்ப சிக்கலில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.“ என சொல்வதற்கு பதிலாக அவனை, அவளையும் வெட்ட எவ்வளவு பணம் வேண்டும்? என்று கூலிப்படைகளிடம் பேரம் பேச முடிகிறது. பல ஏழைக் குடும்பங்கள்  வேண்டாம் என ஒதுங்கிப்போனாலும் சுற்றுவட்டார ஊர் சாதிசனம் பெற்றோர்களை கொலைகாரர் களாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாசத்தோடு வளர்த்த மகளை, தலித் இளைஞர்களை கொன்று குற்றவாளியாக்கியப்பின் சாதி கௌரவம் “வீரன்“ எனப் பட்டம் சூட்டுகிறது. சாதிய கட்சிகளும், சங்கங்களும் உடனே அந்த குடும்பத்தைத் தன் வசமாக்கிக்கொண்டு சாதி பலத்தை திரட்டி அரசியல் செய்யத் தயாராகிவிடுகிறது. மாற்று சமூகத்தில் பல குடும்பங்கள் சாதிமாறிய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து அமைதியாக இருந்தாலும், சாதிய கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் அக்குடும்பத்தையும், தம்பதிகளையும் அடித்து ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் முடிவுகளை எடுக்கிறார்கள் உள்ளூர் ஆதிக்கவாதிகள்.

 

ஆணவக்கொலைகள் பல நூறு ஆண்டுகாலமாக நடந்துவருகிறது. அன்று உடைமைச்சமூகம் வலுப்பெறவில்லை. ஆட்சி, அரசியல் சொத்துடமை, அதிகாரம் செல்வாக்கு அனைத்திற்கும் இன்று சாதி பின்புலமாக்கப்பட்டுள்ளது. ஆதலால்தான் நிலவுடமை கிராமப்புற அமைப்பின் இறுக்கம் தகராமலிருக்க, குடும்ப உறவை பாதுகாக்க, சிதைந்துவிடாமல் தடுத்திட இரத்த உறவு பாதுகாத்திட பெண்ணை கட்டுப்படுத்துவது அடிப்படையாக மாறுகிறது. 1990களுக்குப் பின்புதான் ஆணவக்கொலைகள் கூடுதலாகியிருக்கிறது. இதுவரை நடந்துள்ள ஆணவக் கொலைகளில் கொல்லப்பட்டவர்கள் 70 சதவீதம் பேர் தலித்கள். 30சதவீதம் பேர் மாற்று சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாளித்துவ வளர்ச்சி சாதியக்கட்டமைப்பை தளர்த்துகிறது. நகர்மயம் பல காதல், சாதிமறுப்பு திருமணங்களை உருவாக்கியிருக்கிறது. பெண்ணுக்கு சிறிது சுதந்திரம் உறுதிசெய்திருக்கிறது. தமிழகத்தில் சாதி மாறிய திருமணங்கள் அதிகரித்துவருவதும் முக்கியக் காரணம். இன்றைக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டுமென்றால் ஆட்சியை தக்க வைக்கவேண்டுமனால் சாதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சாதியின் அடித்தளத்தை வலுப்படுத்தி ஆட்சியில் அமருகிறது.. சாதியின் அடித்தளத்தை வலுவாக்கிட ஆணவக்கொலைகள் தேவைப்படுகிறது. சாதி சங்கங்கள் கட்சிகள் அதனை வலுவாக்குகிறது. நலிவடைந்த பின்தங்கிய ஒவ்வொரு சாதியும் சாதி வன்முறைகளில் ஈடுபடுவதும், ஆணவக்கொலைகளை செய்து தங்களை அரசியல் தளத்தில் அங்கீகாரத்தை உறுதிசெய்யும் இத்தகைய போக்கு இன்று ஆபத்தானதாக வளர்ந்துவருகிறது.

கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் குறிப்பாக எம்எல் இயக்கத்தின் செல்வாக்கு இருந்த பகுதிகளில் சாதிய வன்முறையும் ஆணவக்கொலையும் நடக்கவில்லை. சாதி இணக்கமும், வர்க்க ஒற்றுமையும் இருந்தது. மோதல்கள் இல்லை. அப்படியே எங்கோ ஒன்று நடந்தாலும் அதனை தீர்க்கும் முறையில் இரு தரப்பிலும் பேசி தீர்க்கப்பட்டது. செங்கொடி இயக்கம் செயல்பாடு வலிமையாக இல்லாத இன்றைய சூழலில் இத்தகைய கும்பல் மேலெழுந்து வருகிறது. பிராமணர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்ட சாதிகள் அன்று செங்கொடி யின்பின் அணிதிரண்டார்கள். இன்று இந்த சாதிகளுக்குள் இருப்பவர்கள் குறிப்பாக இளைஞர்கள் சாதி கடந்து பொது அரசியலுக்குள் வருவதற்கு மாறாக, சாதி அடையாளத்தின்பின் அணிதிரளும் போக்கினால் மக்கள் ஒற்றுமைக்கும் ஊருவிளைவிப்பதாகவே மாறிவருகிறது

இன்று உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு வந்திருக்கிறது. ஆணவக்கொலை செய்த குற்றவாளிகள் பின்னால் இருந்து முழுவதுமாக இயக்குவது சாதிய அமைப்புகள் எனத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிகேட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழக்கை நீர்த்துப்போகசெய்வதற்கான உள் வேலைகளை கச்சிதமாக செய்கிறது இத்தகைய அமைப்புகள். கூலிப்படை மூலம் ஆணவக்கொலைகளை செய்வதில் குடும்பங் கள்தான் முதன்மையானது. குடும்பத்திற்க சம்பந்தமில்லை என விடுவிப்பது ஆணவக்கொலைகளை ஊக்குவிக்கவே வழிவகுத்திருக்கிறது. சங்கர் கொலை வீடியோ ஆதாரம் இருந்தும் வெட்டுபட்ட கவுசல்யா சாட்சியாக இருந்தும் குற்றவாளிகள் விடுதலையாகிறார்கள் என்றால், எங்கே நாம் தவறுகிறோம் என நாம்தான் ஆராயவேண்டும். நாம் எதிர்வினையாற்றிவிட்டு அடுத்த சிக்கலுக்கு ஓடிவிடுகிறோம். சமூகத்தின் மனசாட்சியைத் தட்டுவதில் நாம் புதுவிதமான உத்திகளை கையாளவேண்டும் என்பதைதான் சங்கர் தீர்ப்பு உணர்த்துகிறது.

தமிழக அரசியல் களத்தில் இத்தகைய போக்கை நாம் முறியடிக்காவிட்டால் குற்றங்களுக்கு அதிகாரவர்க்க நீதிமன்றம், காவல்துறை, துணைபோவதை தடுக்காவிட்டால் நடக்கும் பல ஆணவக்கொலைகளுக்கு எங்கோ ஓர் மூலையில் நாமும் பொறுப்பாளியாகிவிடுவோம்.

 

-ரமணி

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW