ஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை

02 Jun 2020

ஒன்றிய அரசின் கொரோனா நிதி தொகுப்பில் எளிய மக்களுக்கான நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை.

  • ஒன்றிய அரசால் கொரோனா நெருக்கடிக்கிடையே அறிவிக்கப்பட்ட சுயசார்பு கொள்கை என்ன?.
  • அரசால் அறிவிக்கப்பட்ட நிதி தொகுப்பு நிவாரணமா அல்லது பொருளாதார ஊக்குவிப்பா?
  • கொரோனாவிற்கு முந்தைய பொருளாதார சூழல் என்ன?
  • குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்குவிப்பு தொகை என்ன? அதில் உள்ள குறைபாடுகள் என்ன?
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம் என்ன? தொழிலாளர் அவசர சட்டத்தின் அவசியம் என்ன? அதனால் பறிபோகும் உரிமைகள் என்ன?

என பல்வேறு கேள்விகள் மேலெழுகின்றன.

பொருளாதாரத்தை மேம்படுத்த பணவியல் தொகுப்புடன் நிதி தொகுப்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்பது வழமையான பொருளாதார கோட்பாடு. அவ்வாறாக கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 வரை ரிசர்வ் வங்கி அறிவித்த பணவியல் தொகுப்புடன் நிதி தொகுப்பும் அறிவித்தது வரவேற்கத்தக்கது ஆனால் ரிசர்வ் வங்கியின்  ₹. 5 – 6 லட்சம் கோடி பணவியல் தொகுப்பையும் ஒன்றிய அரசு 20 லட்சம் கோடி நிதி தொகுப்பின் கீழ் சேர்த்துள்ளது. மேலும் கடந்த மார்ச் 27 ஆம் நாள் ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்த ₹. 1.7 லட்சம் கோடியையும் இதன் கீழ் சேர்த்துள்ளது.

மேலோட்டமாக பார்த்தாலே ₹. 20 லட்சம் கோடி நிதி தொகுப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணவியல் மற்றும் நிதி தொகைகளை சேர்த்துள்ளதால் உண்மையிலே சாமானிய மக்களுக்கும் கால் நடையாய் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு உள்ளது என்று அலசி ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியமாகிறது.

நிதி தொகுப்பை ஆராய்வதற்கு முன் இன்றைய பொருளாதார சூழலை அறிவோம்.

ஒன்றிய அரசால் ஊரடங்கு மார்ச் 25 அதாவது 2019 – 20 நிதி ஆண்டின் இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட்டது.  அதனால் கொரோனாவிற்கு முன்பிருந்த பொருளாதார நிலையை அறிய கடந்த நிதி ஆண்டின் உள் நாட்டு உற்பத்தியை (GDP) குறியீடாக எடுத்து கொள்ளலாம். கடந்த ஆண்டின் உள் நாட்டு பொருளாதார வளர்ச்சி  4.2% (GDP). இது கடந்த 11 ஆண்டுகளில் காணாதச் சரிவு ஆகும். இந்த உள் நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் உள்ளது என்று பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர். பழைய முறையில் உள் நாட்டு உற்பத்தியை கணக்கிட்டால் அது 1%  (GDP) தான் இருக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் (CMIE) மார்ச் இறுதியில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 8.5% என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி முதலான நடவடிக்கைகளால் பொருளாதாரம் சரிந்து வீழ்ச்சியுற்று இருந்தது.

கொரோனா ஊரடங்கால் வறுமையிலும் பசியிலும் வாடும் 93% இந்திய மக்கள்

இத்தகையச் சூழலில் நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கொரோனாவை முன்னிட்டு அரசு முடக்கியுள்ளது. ஏற்கனவே வீழ்ச்சியுற்ற பொருளாதாரச் சூழலில், கொரோனா ஊரடங்கும் அதற்குப் பின்பான அரசின் கொள்கைகளும் எளிய உழைக்கும் தொழிலாளர்களை மேன்மேலும் மிகப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் 93% தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி இருக்கின்றனர். இவர்கள் அன்றாட தேவைகளை வேலைக்கு சென்றால் தான் நிறைவேற்ற முடியும். அரசின் நிதி  முதற்கண் இவர்களின் தேவையை நேரடியாக நிறைவேற்றுவதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ₹. 20 லட்சம் கோடியில் பெரும்பான்மையான தொகை ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையிலும் பசியிலும் வாடும் மக்களின் துயர் துடைக்கும் உதவித் தொகையாகத்தான் இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக உணவுக்கு அடுத்தபடியான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்ள மக்களுக்கு உதவித்தொகை கொடுத்து தேவையையும் உற்பத்தியையும் ஊக்குவித்து இருக்க வேண்டும்.

 

ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில் உள்ள உண்மையான ஊக்க தொகை என்ன என்று அறிவோம்.

முதலாவதாக ஒன்றியத்தின் நிதி தொகுப்பில் 20-25% பணம் ரிசர்வ் வங்கியின் பணவியல் தொகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு வழங்கும் கடன் வட்டியை குறைத்துள்ளது. மாநிலங்களுக்கு வழங்கும் கடன் வரம்பையும்   அதிகரித்துள்ளது. வங்கிகளுக்கு கொடுக்கப்படும் கடனை வங்கிகள் மேற்கொண்டு மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கினால் தான் அது கடைநிலை மக்களை சென்று அடையும். இது கொரோனா போன்ற தேசிய பேரிடர் காலத்தில் அரசாங்கங்கள் மக்களுக்கு உடனடியாகவும் நேரடியாகவும் வழங்கும் உதவித் தொகைக்கு நேர் எதிரானது. இத்தகைய செயல் ஒன்றியத்தின் நிதித் தொகையை பெருந்தொகையாக விளம்பரப்படுத்துவதற்கும் மக்களின் மத்தியில் வெற்று நம்பிக்கையை விதைக்கும் ஓட்டு அரசியலுக்கான முன்னெடுப்பாகவே விளங்கும்.

இரண்டாவதாக நிதி அமைச்சரால் மே 13 – 17 தேதிகளில் அறிவிக்கப்பட்ட நிதி தொகுப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவிப்புகளுடன் பொருத்தி பார்க்க வேண்டியது அவசியமானது. அரசின் அறிவிப்புகள் எந்த அளவிற்கு வங்கிகள் கடன் கொடுப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

தற்பொழுது உள்ள பணபுழக்க நெருக்கடியில், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தது மக்களின் கடன் செலவை குறைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அது நிதி ஊக்குவிப்பு தொகைக்கு மாற்றாகாது. வரலாறு காணாத இப்பேரிடரை எதிர்கொள்ள அரசின் ₹. 20 லட்சம் கோடியில் 10% குறைவான பணமே பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மக்களுக்கு நேரடியாக வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும் பொருளாதாரத்தையும் அதன் அடிப்படைகளையும் மீட்டு  எடுக்க அரசு எடுக்கும் முன்னேற்பாடுளை மறுக்கவில்லை      ஆனால் இத்தருணத்தில் பேரிடரால் வேலை இழந்து ஒவ்வொரு நாளையும் கடத்த அரும்பாடு படும் தொழிலாளர்களின் துயர் துடைக்க அல்லவா அரசு முன்னுரிமை வழங்கி இருக்க வேண்டும். பிரதமர் மே 12 இல் ஆற்றிய சுயசார்பு கொள்கை உரையில் அறிவித்த நான்கு தூண்களில் ஒன்றான தொழிலாளர்களை விடுத்து பணப்புழக்கம், சட்டம் என்று சுருக்கி கொண்டது ஏனோ.

குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அளிப்பதாக கூறப்பட்ட ஊக்குவிப்பு தொகை பற்றி காண்போம்;

நமது நாட்டில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களே (MSME) பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகின்றது. இந்நிறுவனங்களுக்கு ₹. 3 லட்சம் கோடி மதிப்பிலான பிணையற்ற கடன், ₹. 20,000 கோடி மதிப்பிலான துணை கடன், ₹. 50,000 கோடி மதிப்பிலான பங்கு முதலீடு போன்ற கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை அரசு மாற்றி அமைத்துள்ளது. முன்பு முதலீட்டின் அடிப்படையில் மட்டும் வரையறைக்கப்பட்ட நிறுவனங்கள் தற்பொழுது முதலீடு மற்றும் வருவாயின் அடிப்படையில் வரையறுக்கப்படும். அத்துடன் முன்பு இருந்த சேவை துறைக்கும் உற்பத்தி துறைக்கும் இருந்த வரையறை அளவு வேறுபாட்டினையும் அகற்றியுள்ளது. மேலும் நிறுவனங்களுக்கான வரையறை அளவையும் உயர்த்தியுள்ளது. அணைத்து நிறுவனங்களுக்கும் ஒரே வகையான முதலீடு வருவாய் விகிதத்தை அதாவது ஐந்து மடங்கு விகிதத்தை செயல்படுத்தியதன் மூலம் நிறுவனங்கிளுக்கிடையான முதல் மற்றும் தொழிலாளர் சார்ந்த வேறுபாடுகளை கணக்கில் கொள்ளவில்லை. இதன் மூலம் நாட்டில் பெரும்பான்மையான வேலை வாய்ப்பை அளித்து வரும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அரசு குறிப்பிட்ட வரையறைக்குள் பொருந்த முடியாமல் கடன் பெரும் தகுதியை இழக்க நேரிடும். அவ்வாறு நேரிடும் பொழுது யாருடைய பயன்பாட்டிற்காக அரசு இந்த கடன் மூலம் கூடிய பண புழக்கத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது என்பது மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

புலம்பெயர்  தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் (MGNREGA) மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க போவதாக அரசு அறிவித்துள்ளது ஆனால் இதிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது. ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்காக ₹. 40,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 300 கோடி தனி நபர் வேலை நாட்கள் உருவாக்கப்படும் என்றும் சராசரி ஊதியமாக ₹. 202 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது ஆனால் இத் திட்டம் எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக இத்திட்டத்தின் மூலம் அதிகமான வேலை வழங்குவதில் முதல் 10 இடங்களை பிடித்திருக்கும் ராஜஸ்தான், உத்தர்பிரதேஷ், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்கள் தொழிலாளர்களுக்கான அவசர சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அச்சட்டத்தின் வழியாக  தொழிலாளர்கள் உரிமைகளான குறைந்த பட்ச ஊதியம், போதுமான வேலை நேரம் (optimal work), பாதுகாப்பான வேலையிடம் ஆகியவற்றை தனியார் முதலீட்டை ஊக்குவிக்கிறோம் என்னும் பெயரில் பறித்துள்ளது. இதில் என்ன முரண்பாடு என்றால் நிதி அமைச்சரின் சீர்திருத்த நடவடிக்கை அறிவிப்புகளில் வணிகத்தை எளிதாக்குவது என்பதை மட்டும் உறுதியுடன் கூறியுள்ளது. மற்ற முதன்மையான சுகாதார சீர்திருத்தங்களும் முயற்சிகளும் முறையான திட்டமிடுதலோ நிதி ஒதுக்கீடோ இல்லாமல் விரைவாக விவாதிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு கையாளும் நான்கு சிக்கல்கள்:

தற்சமயம் அரசு நான்கு சிக்கல்களை ஒருங்கே கையாண்டு கொண்டிருக்கின்றது என்பது உண்மையே. அவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் கொரோனா பேரிடர் தாக்குதல்களை எதிர்கொள்ளுதல்,  கொரோனா ஊரடங்கால் சரிவிலிருந்து அதி வேகமாக சரியும் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளித்து மேம்படுத்துதல், மேற்குறிய இரு சிக்கல்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்தல், கொரோனா ஊரடங்கிற்கு பிந்தைய பொருளாதாரத்தை மீளுருவாக்கம் செய்தல். அரசால் அறிவிக்கப்பட்ட ₹. 20 லட்சம் கோடி ஊக்குவிப்பு தொகை கொரோனா ஊரடங்கிற்கு பின்பு நாட்டின் பெரும் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கான செயல் திட்டம் என்று பல்வேறு தரப்பினர் வாதிடலாம் ஆனால் தற்சமயம் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழக்கப்பட்டுவிட்டதா என்பதே நம் முதன்மையான கேள்வி ஆகும். அரசின் உடனடி நடவடிக்கை என்பது ஊக்குவிப்பு தொகையின் மூலம் பொதுமை சமூகத்தின் நுகர்வு தன்மையையும் மனித ஆற்றல்களின் தேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நேரடி பண பரிமாற்றம் மூலம் மக்கள்களின் கைகளில் நேரிடையாக பணம் சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களின் வாழ் வாதாரத்தை உறுதியளிக்கும் பணி பாதுகாப்பும், வேலையில்லா காலங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கிட வேண்டும்.  உள் நாட்டு உற்பத்தியில் 10% நிதி தொகுப்பாக அறிவிக்கப்பட்ட சுய சார்பு இந்தியா திட்டத்தில் அத்தகைய இலக்குகளை அடைவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதே உண்மை ஆகும்.

 

தொகுப்பு:  ராபின்சன்

 

https://www.epw.in/journal/2020/21/editorials/no-stimulus-economic-stimulus-package.html

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW