‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2

01 Jun 2020
  1. அரசாங்கம் இங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசலாம். முதலில், எல்லோரும் நாம் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மே 22 காலை 9 மணி நிலவரப்படி, இந்தியா 27 லட்சம் சோதனைகளை நடத்தியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 1,03,000 சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இது பெரிய எண் போல மேலோட்டமாகத் தோன்றலாம், ஆனால் இந்த எண்ணிக்கை 10 லட்சம் பேரில் வெறும் 1,823 மட்டுமே. இந்த எண்ணிக்கை ஸ்பெயினில் 65,000 ஆகவும், இத்தாலியில் 51,000 ஆகவும் உள்ளது. எனவே சோதனையை நாம் கடுமையாக அதிகரிக்க வேண்டுமா?

 

உண்மைதான். மே 21-22 வாக்கில், ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கும், இங்கிலாந்து 45,000, ஜெர்மனி 42,910 மற்றும் இந்தியா 1,650 சோதனைகள் செய்தன. சோதனைகளை அதிகரிப்பதற்கு முன், சோதனையின் நோக்கம் என்ன என்று நாம் தீர்மானிக்க வேண்டும். ஒப்பீடுகள் செய்யப்பட வேண்டும் என்றால், சோதனையின் நோக்கங்கள் மிகவும் சீரானதாக இருக்க வேண்டும். ஐரோப்பா முழுவதும், சுகாதார மேலாண்மை அமைப்பு பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத்துறை இரண்டையும் கொண்டுள்ளது, அவை சுகாதாரம், நோய் மற்றும் இறப்புகள் குறித்த நம்பகமான தரவைக் கொண்டுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா பொது-சுகாதார கண்காணிப்பு உள்ளிட்ட பொது சுகாதாரத்தை நிறுவுவதைத் தவிர்த்துவிட்டது, இப்போது முழுமையாக  சுகாதாரத்துறையையே நம்பியுள்ளது.

பொது சுகாதாரத்தின் கீழ் தரவு உருவாக்கும் அமைப்பு இல்லாத நிலையில், தற்காலிக முறைகள் மூலம் உருவாக்கப்படும் தகவல்களைக் கொண்டு எதையும் விளக்க பயன்படுத்த முடியாது. அந்நாடுகளில், இறக்குமதி மற்றும் தொடர்பு-தடமறிதல்(contact-tracing) ஆகியவற்றை கண்காணிப்பதற்கு சோதனைகளை பயன்படுத்தும் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்கள் உள்ளவர்கள் பரிசோதிக்கப்படலாம் என்று இந்தியா சமீபத்தில் அறிவித்தது. கொரோனா நோய்த்தொற்றுக்குப் பதிலாக இன்ஃப்ளூயன்ஸா நோயை ஏன் சோதிக்க வேண்டும்? அதாவது இன்ஃப்ளூயன்ஸாவை எதிர்த்து கொரோனா- ஐக் கண்டறிய நம் மருத்துவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. சுகாதாரத்துறையில் கூட நாம் இன்னும் துறை சார்ந்து மேலும் வளர வேண்டும்.

இத்தகைய கொள்கை மாற்றம் நிகழாமல், மேலும் சோதனை செய்வது உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை சோதனை விகிதாசாரத்திற்கு இணையாக அதிகரிக்கும், ஒவ்வொரு 1,000 சோதனைக்கும் 40 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படலாம்.

 

  1. வைரஸ் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைப் பற்றிய அறிந்துகொள்ள, சீரற்ற மற்றும் குறைந்த இலக்குடனான சோதனைகள் தேவைப்படுகிறதா?

 

நாம் சமைக்கும்போது, ஒரு சில தனிப்பட்ட தானியங்களை தோராயமாக எடுப்பதற்கு முன் பானையை நன்றாக குலுக்கி சமமாக தானியன்களைக் கலக்கச்செய்கிறோம், பின்னர் அதன் அடிப்படையில் தானியம் நன்றாக சமைத்திருக்கிறதா என்று தீர்மானிக்கிறோம். நீங்கள் பானையை சீராக குலுக்கவில்லை என்றால், சில தனியங்களிலிருந்து ஒட்டுமொத்தத்திற்கும் சேர்த்து தீர்மானிக்க முடியாது.

அதாவது ஒரேமாதிரியான நிபந்தனை கடைபிடிக்கப்பட்டால், சீரற்ற மாதிரிகளைச் சோதனை செய்வது செயல்திறன் மிக்கதாக இருக்கும். கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, தற்போது இந்த பரவல் சீரற்றதாக இல்லை. எனவே நாம் நிறைய சோதனைத்திறனை வீணாக்கி, முடிவுகளைப் பெறும்போது, அந்த முடிவுகளை வைத்து விளக்குவது இயலாதது.

வைரஸ் எவ்வளவு தூரம் பரவியது என்பதை சோதனை மூலம் நாம் ஏன் அறிய விரும்புகிறோம்? லேசான, மிதமான மற்றும் கடுமையான கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் நிகழ்வுகளைக் கண்டறிய சோதனைகளை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது? எல்லா ஐரோப்பிய நாடுகளும் அதைத்தான் செய்தன. லேசான மற்றும் மிதமான அறிகுறிகளுடன் இருந்த நோய்த்தொற்றுகளின் மருத்துவ சந்தேகத்தை உறுதிப்படுத்த அவர்கள் சோதனைகளை பயன்படுத்தினர்.

 

  1. எண்ணிக்கை நமக்குத் தெரியாது, ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி ஏராளமான இந்தியர்கள் வைரஸின் அறிகுறியற்ற கடத்திகளாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் மற்றவர்களை எளிதில் பாதிக்கக்கூடும் என்று நம்பப்பட்டது, ஆனால் இப்போது அது குறித்து சந்தேகம் அதிகரித்து வருகிறது. அவர்களைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

 

அறிகுறி இல்லாத நபர்களுடனான பொதுமக்களின் தொடர்புகளை விட அறிகுறி உள்ளோர்  மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே தொடர்பு நேரம் மற்றும் தீவிரம் அதிகமாக இருக்கும். அறிகுறியற்ற நோயாளிகளின் எண்ணிக்கை அறிகுறி உள்ளவர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதால், அறிகுறியற்ற தொற்று உள்ளவர்கள் சமூகப்பரவலின் இயந்திரங்களாக மாறுகிறார்கள். மருத்துவமனை அமைப்புகளில், COVID-19 உடன் அனுமதிக்கப்பட்ட நபர்களால் இந்த பரிமாற்றம் இயக்கப்படும்.

பல அறிகுறியற்ற வைரஸ் பரவல்கள் இருப்பதால், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். யார் தொற்றுக்குள்ளானோர் என்று யாருக்கும் தெரியாததால், நோய்த்தொற்று இல்லாதவர்கள் பாதிக்கப்படும் நிகழ்வைக் குறைக்க முகக்கவசம் அணிய வேண்டும். உலகளாவிய முகக்கவசம் அணிதலுக்கான எனது நீண்டகால வாதத்தின் அடிப்படை இதுதான். கை கழுவுவதும் மிக அவசியம்.

 

  1. உருவாக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் COVID-19 சோதனை மையங்களின் எண்ணிக்கையை லாவ் அகர்வாலிடமிருந்து நாம் அறிவோம், ஆனால் இப்போது புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் கிராமங்களுக்கு வைரஸைக் கொண்டு சென்றால், அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளைக் கையாள கிராமப்புற ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் சுகாதார உள்கட்டமைப்பு உள்ளதா?

 

அங்குள்ள யதார்த்தங்கள் எனக்குத் தெரியாததால் பதில்சொல்ல முடியவில்லை.

 

  1. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரிக்கும் தருணத்தில் சரியான நேரத்தில் வெளிப்படையான தகவல்கள் தேவை. மற்ற நாடுகளில், அமைச்சர்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். இந்தியாவில், அரசு அதிகாரிகளே சந்திப்புகளை வழிநடத்துகின்றார்கள், கடந்த இரண்டு வாரங்களில் அவை மிகவும் ஒழுங்கற்றவையாக உள்ளது. கவலை மற்றும் பயத்தைக் கட்டுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால், நமக்கு மேலும் சிறந்த விளக்கங்கள் தேவையில்லையா?

 

பழைய சொல்லாடல் என்னவென்றால், வாயைத் திறந்து எந்த சந்தேகத்தையும் அகற்றுவதை விட, வாயை மூடிக்கொண்டு ஞானமாகவும் அறிவாகவும் காட்டிக்கொள்வது நல்லது.

முதல் படியாக, ஜனவரி நடுப்பகுதியில், DGHS, என்சிடிசி(NCDC), டிஎச்ஆர் (DHR), ஐசிஎம்ஆர் (ICMR), சுகாதார அமைச்சகம் மற்றும் பிஎம்ஓ(PMO) ஆகியவற்றில் சுகாதார மேலாண்மைத் தலைவர்கள் நோய், தொற்றுநோயியல், ஒரு தொற்றுநோயின் புவியியல் வளர்ச்சி, மருந்தியல் அல்லாத தலையீடுகள், சமூக இடைவெளியின் பயன், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பராமரித்தல், நோயறிதல் மற்றும் ஆராய்ச்சிக்கு உயிரியல் மருத்துவ தயாரிப்புகளின் தேவை, மற்றும் இந்திய மக்களுக்கு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமூக அணிதிரட்டல், நடத்தை மாற்றத்தை கற்பிக்கும் அளவுக்கு முன் ஏற்பாடுகள் என   தொற்றுநோய்க்கான தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி தங்களால் இயன்றவரை கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக இவற்றை மாநில சுகாதார மேலாண்மை அமைப்புகளுக்கு கற்பித்திருக்க வேண்டும். பின்னர் சமூக அணிதிரட்டல் பணிகளை மையத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் பிரித்திருக்கவேண்டும். இதுவே பிப்ரவரியின் நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கலாம். சமூக தடுப்பாற்றல் (social vaccine)  என்ற கருத்தை தலைவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.

நான் நமது நாட்டை நன்கு அறிந்ததும், சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தும், மார்ச் 12 அன்று தி இந்துவில் ‘எளிமையான ஒரு கோவிட் -19 கட்டுப்பாட்டுத் திட்டம்’ என்று எழுதினேன்.

தகவல் அளிக்காமலோ அல்லது தவறான தகவல்கலை வழங்குவதற்குப் பதிலாக குடிமக்கள் நன்கு அறியப்பட்டவர்களாக இருக்கத் தகுதியுடையவர்கள். இந்த தலைவர்கள் அனைவரும் தமக்கும் தேசத்துக்கும் தங்கள் பொறுப்புகளை தவறவிட்டனர். “என்ன செய்திருக்க வேண்டும்…” என்பதைப் பற்றி பேசி எந்த அர்த்தமும் இல்லை. உண்மையான சமூக அணிதிரட்டலுடன் அவர்கள் இப்போது கூட தொடங்கலாம்.

 

  1. இறுதியாக, மே 20 அன்று, லாவ் அகர்வால் இந்தியாவை மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான 15 நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார், மொத்தமாக எடுத்துக் கொண்டால், அவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய நம்முடையதுதான். ஆனால் அவர்களின் 34 மடங்கு அதிகமான நோய்தொற்றுகளையும் 83 மடங்கு அதிகமான இறப்புகளையும் சுட்டிக்காட்டினர். அவரது முடிவு என்னவென்றால், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள் பற்றி நிறைய கூறுகிறது” என்பதுதானா? இல்லை இதில் எந்த அர்த்தமும் இல்லையா?

 

கொள்கைகளை விளக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரியாக நான் திரு லாவ் அகர்வாலுடன் ஒத்துழைக்க விரும்புகிறேன்.

நாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள் மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும், சாதாரணமாக அல்ல. நம்முடைய சொந்த தரவு, பலங்கள் மற்றும் பலவீனங்கள் மற்றும் ஒப்பீடு பற்றி நாம் முழுமையாக இருக்க வேண்டும்.

வேவ்வேறு நாடுகளில் தொற்றுநோய் பரவல் ஒத்திசைவற்ற முறையில் நடந்தன. பிற நாடுகள் தொற்றுநோய்களை கையாளத் தொடங்குவதற்கு முன்பு நமக்கு  அதிக நேரம் இருந்தது. அவற்றில் பல நாடுகள் ஏற்கனவே உச்சக்கட்டத்தில் இருந்தன, ஆனால் நமக்கு உச்சக்கட்டம்  ஜூலை-ஆகஸ்டில் இருக்கும். இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட விரும்பினால், அந்தந்த நாடுகளின் உச்சக்கட்டத்திற்கு  இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்களின் விவரங்களை எடுக்க வேண்டும். இந்த வகையான அறிவியல் விளக்கத்திற்கு தொற்றுநோயியல் நுண்ணறிவு தேவைப்படுகிறது.

நம் அணுகுமுறை ஒரு தேசத்திற்கானதாக இல்லை, பல மாநில திட்டங்களுடன் மற்றும் பல மாறுபாடுகளுடன் இருந்தது. இது தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட  மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது.

 

14 மணி நேர ‘ஜனதா ஊரடங்கு உத்தரவு’ (மார்ச் 22 அன்று) தொற்று பரிமாற்றத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்று பிரதமரை தவறாக வழிநடத்தியவர் யார்?

ஊரடங்கினைச் செயல்படுத்துவதற்கு முன் நன்கு திட்டமிட வேண்டியதன் அவசியத்தை மறந்து, மார்ச் 24 அன்று பிரதமரை ஊரடங்கை நடைமுறைபடுத்த வைத்து பீதி அடைய செய்தது யார்?

ஏப்ரல் 15 க்கு அப்பால் ஊரடங்கினை நீட்டிக்க என்ன காரணம்?

குடிமக்கள் குடிமக்களாக மதிக்கப்படுவதற்கும், ஒவ்வொரு நாளும் நன்கு அறியப்படுவதற்கும் தகுதியானவர்கள். இந்த பெரிய நெருக்கடி காலம்  அனைத்து நாடுகளையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்தும்போது, கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தீவிரத்தன்மையையும், நிபுணத்துவத்தையும் காட்டி இந்தியாவை சிறப்பாக வழிநடத்த ஒரு வாய்ப்பு இருந்தது.

திட்டங்கள் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தலில் எல்லா வளரும் நாடுகளையும் வழிநடத்தும் நிபுணத்துவமும் திறமையும் இந்தியாவுக்கு இருந்தது. அதற்கு நம் மீதும், நம் நிபுணர்கள் மீதும் தன்னம்பிக்கை தேவையாயிருந்தது. ஆனால் கடந்த கால சாதனைகள் குறித்த ஆணவம் இல்லாத பெருமை தேவைப்பட்டது.

 

தமிழில்: ராதா

‘Why Was the Lockdown Extended Beyond April 15?’: Dr T. Jacob John

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW