மே தின போராட்ட வாழ்த்துகள்!

01 May 2020

உலகத் தொழிலாளர் தினமான மேதினத்ததன்று தமிழகத் தொழிலாளர்களுக்கு, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மேதினப் போராட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு மேதினம் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடுமையான நெருக்கடிக்குள் நம்மை ஆட்படுத்தியுள்ளது.

எந்தவித மாற்று ஏற்பாடுமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ச.க.வின் இந்திய ஒன்றிய அரசு உணவுக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் உழைக்கும் மக்களை வழிவகையின்றி கையேந்த வைத்துள்ளது.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாராக்கடன் தள்ளுபடி செய்யும் இந்திய ஒன்றிய மோடி அரசு
பெரும்பான்மை உழைக்கு மக்களின் பட்டினியைப் போக்க உணவுக் கிட்டங்கியைத் திறக்க மறுக்கின்றது.

தமிழ் மாநில அரசின் 1000 ரூபாய் உதவியும், ரேசன் கடை அரிசியும் மட்டுமே வழங்கி வேலையும் – வருமானமுமில்லாத ஊரடங்கில் அடங்கிப் போயுள்ள பலதரப்பட்ட உழைக்கும் தமிழர்களை கடந்த ஒரு மாதமாக கை கழுவியுள்ளது. ஒரு நாளைக்கு, 3 பேர் உள்ள குடும்பத்திற்கு ஒருமாதத்திற்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் தேவை என்றால் கூட 15,000 அவசியத் தேவை. குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 200 ரூபாய் மாதத்திற்கு 6000 ரூபாய் வழங்க அரசிடம் கோரிக்கை வைத்தால், ரேசன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் ஏப்ரல் மாதம் வழங்கிய 1000 ரூபாயுடன் வாய் திறக்க மறுக்கிறது. ரேசன் அட்டை இல்லாத உழைக்கும் தமிழர் கதி, லட்சக் கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் கதி அதோ கதிதான்.

கைதட்டச் சொல்லும், விளக்கேற்றச் சொல்லும் மோடியின் இந்திய ஒன்றிய அரசு பெரும்பான்மை முறைசாரா உழைக்கும் மக்களுக்கு என்ன நிவாரணத்தை வழங்கியுள்ளது. பேரிடர் நிவாரண நிதி எனும் பேரில் உள்ள கோடிக்கணக்கான கோடிகளை மோடி அரசு யாருக்கு வைத்திருக்கிறது.

குடும்பத்தினருக்கான உணவு தேடி, உணவுக்கான பொருள் தேடி வீதிக்கு வருபவர்களை காவல்துறையின் லத்திக் கம்புகள் வீட்டிலிரு! தனித்திரு! என அதிகாரத் தோரணையில் மந்திரம் பாடுகின்றனர். வண்டிகளைப் பிடுங்கி தண்டத் தொகை எனக் கொள்ளையடிக்கின்றனர்.

கொரோனா நோய்க்கு மருந்து கிடையாது. இறப்புகளைத் தடுக்க முடியவில்லை. வல்லரசு முதலாளித்துவ நாடுகள் திணறிக் கொண்டுள்ளனர். GST உள்ளிட்ட கோடிக்கணக்கான கோடி ரூபாய் வரிகளை சுரண்டிக் குவிக்கும் மோடியின் இந்திய ஒன்றிய அரசு பட்டினிச் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. கொரோனாவிற்குப் பிந்தைய சூழல் நமது வேலை வாய்ப்பை, வேலை நேரத்தை, வருமானத்தை, நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை, உழவர்களின், வியாபாரிகளின் வாழ்க்கையைப் பறிக்கப் போகின்றது.

தாய்மொழி உரிமை, கல்வி, தேர்வு, நீர்ப்பங்கீடு உரிமை, என அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்தும் மோடியின் இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக, எடுபிடி எடப்பாடி அரசுக்கு எதிராகக் களம் காண மேதினத்தில் உழைக்கும் தமிழர் நாம் சபதமேற்போம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST
1 comments

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW