கொரோனா இன்று கொல்லும், அரசின் கொள்கைகள் தொடர்ந்து கொல்லும்!

- அனைவருக்குமான மருத்துவ சேவை (universal health care) வழங்கிடு
- அனைவருக்குமான அடிப்படை ஊதியத்தை (universal basic income) வழங்கிடு!
- அரசியல் சுதந்திரத்தை மட்டுப்படுத்தாதே! (stop draconian measures)
ஆங்கிலத்தில் ’pandemic’ என அழைக்கபடும் உலகுதழுவிய கொள்ளை நோயாக கொரோனா பரவி வருகிறது. டிசம்பர் மாதம் இறுதியில் சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு(WHO)நோய் பரவல் குறித்த அறிக்கையை அளித்திருக்கிறது. அதன் பிறகு உலக சுகாதார நிறுவனம் மற்ற நாடுகளுக்கு தனது அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது, ஆனால், மார்ச் மாதம் 11 ந் தேதி உலக சுகாதார நிறுவனம் உலகு தழுவிய கொள்ளை நோய் (pandemic) என அறிவித்த பிறகுதான், உலகம் துயில் கலைத்திருக்கிறது. மந்தப் புத்தி கொண்ட இந்திய அரசும் பத்தொடு பதினொன்றாக விழித்து கொண்டு அரக்க பரக்க அவசர நடவடிக்கைகளை அறிவித்துகொண்டிருக்கிறது. இன்றைய தினம் வரை உலக அளவில் 6 லட்சத்திற்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்கள் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். சீனாவை மையமாக கொண்டு பரவ தொடங்கிய கொள்ளைநோய் இன்று அமெரிக்காவை அதன் மையமாக மாற்றியிருக்கிறது. சீனாவில் டிசம்பரிலிருந்து மார்ச் மாதம் மூன்றாவது வாரம் வரை 83 ஆயிரம் பேருக்குதான் பரவியது, ஆனால் கடந்த பத்து நாட்களில் அமெரிக்காவில் 1000 எண்ணிக்கையிலிருந்து இன்று 1 லட்சமாக உயர்ந்திருக்கிறது இது கொள்ளை நோய் பரவலின் தீவிரத் தன்மையைக் காட்டுகிறது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்றால் இரண்டாம் உலகபோருக்கு பிறகு மனிதகுலம் சந்திக்கும் மாபெரும் இடராக அமையகூடும் என்பதாக மேற்குலக ஊடகங்கள் பேசுகின்றன.
சீனாவும் அமெரிக்காவும் வர்த்தகப் போரை ஒத்த வாய்சண்டையை கொரோனாவுக்கு எதிரானப் போரிலும் தொடங்கியுள்ளன, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இனவெறி பார்வையோடு கொரானா வைரசை சீன வைரஸ் அல்லது உகான் வைரஸ் என அழைத்ததோடு தனக்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு நெருக்கடியை திசைதிருப்ப சீனா தகவலை மூடி மறைத்ததே இவ்வளவு அழிவிற்கும் காரணம் என குற்றம்சாட்டியிருக்கிறார், மேலதிகமாக உலக சுகாதார நிறுவனமும் அதன் தலைவரும் சீன சார்பாக செயல்படுவதாகவும் அதானால் கொள்ளைநோய் கட்டுபாட்டிற்கு வந்தவுடன் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் என்றும் சீனாவும் WHO வும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ட்ரம்பும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதே குரலை மேற்கு நாடுகளின் தலைவர்கள் சிலரும் எதிரொலித்துள்ளனர், எனவே இந்த போர் கொரோனாவுக்கு எதிரான தாக்குதலோடு மட்டும் முடிவடையப் போவதில்லை, கொரோனாவுக்குப் பிந்தைய உலகம் என்ற புதிய உலக அரசியல் சூழல் ஒன்று உருவாவதையும் முன்னறிவிப்பதாகவே வெளிப்படுகின்றது.
உலகம் இப்பொழுது இரண்டு கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக முன்வைத்து தொடர்ந்து பேசி வருகிறது. கொரோனா கொள்ளைநோயை எவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மற்றும் அதை பின்தொடரும் பொருளாதார நெருக்கடியை உற்பத்தியில் ஏற்படும் அழிவை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என பெரும் குழப்பமாக மாறியிருக்கிறது, ஒருபுறம் மருத்துவ உபகரணங்களும் தடுப்பு மருந்தும் இல்லாத சூழலில் நோய் பீடிக்கப்படுவோர் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் பெரு வெடிப்பாய் மாறிக்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் பொருளாதாரத்தில் வழங்கல் சங்கிலி அறுந்து போவதும் வேலையின்மை தீவிரம் அடைவதும் சமூக நல சேவைகளை மக்களுக்கு சேர்க்கின்ற நிதி ஒதுக்கீடும் பொதுக் கட்டமைப்பும் இல்லாததுமாக இணைந்து மேற்குறிப்பிட்ட மருத்துவ நல, பொருளாதார நல அரசியல் கேள்விகளை விவாதத்திற்கு முன் கொண்டு வந்திருக்கிறது
நோய்த் தடுப்பு பணியில் உலக சுகாதார நிறுவனம் பல்வேறுமட்ட அளவிலான தீவிரப் பரிசோதனையை வலியுறுத்தினாலும் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் பாணியில் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு இருக்கின்றன. சீனா தனது அதீத மையப்படுத்தப்பட்ட அரசு இயந்திரங்களைக் கொண்டு போர்க்கால இராணுவ பாணியில் ஹூபேய் மாகாணத்தை அதன் தலைநகர் உகானை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை புதிதாக கட்டப்பட்ட பிரத்தியேக மருத்துவமனையில் தனிமைப்படுத்தி ஏறக்குறைய 45,000 சுகாதார ஊழியர்களை நாடு முழுவதும் திரட்டி ஊகான் நகரத்தில் குவித்து மருத்துவ சேவையை மேற்கொண்டு மரண எண்ணிக்கையையும் நோய்த் தொற்றையும் முற்றிலுமாக குறைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஆனால், தென்கொரிய அரசு இதுபோன்று பெரிய அளவிலான மையப்படுத்தல் திட்டங்கள், முழு அடைப்பு, ஊரடங்கு, உற்பத்தி முடக்கம் போன்றவை எதுவும் இல்லாமல் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் 650 பரிசோதனை மையங்கள் திறந்து இலட்சக்கணக்கான பரிசோதனைகளை செய்து உள்ளுர் சமூக அளவிலான(community level)விழிப்புணர்வை மேற்கொண்டதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களை நோயிலிருந்து குணமாக்கி மரண எண்ணிக்கையை முற்றிலும் குறைத்தது. ஆனால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தியாவும் இந்த இரண்டில் எந்தவொரு அணுகுமுறையையும் கடைபிடிக்காததோடு உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையும் மீறி அசட்டையாகவே இருந்தன அதனால்தான் இன்று போதுமான பரிசோதனைக் கருவிகளும் மருத்துவ சாதனங்களும் மையப்படுத்தப்பட்ட தயாரிப்பும் இன்றி நிலைகுலைந்து போயுள்ளன. அதனால் வேறுவழியின்றி இந்நாடுகள் உற்பத்தி முடக்கம், சமூக விலக்கம் என்ற நெருக்கடிமிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன இந்நடவடிக்கைகள் முந்தைய சீன, தென்கொரிய உத்திகளை காட்டிலும் பின்தங்கிய தாகவும் பலவீனமானதாகவும் இருப்பதோடு உலகளவில் மாபெரும் பொருளியல் நெருக்கடிகளையும் தோற்றுவித்துள்ளன. இன்று ஊகான் நகரம் உற்பத்தியை தொடங்கியிருக்கின்ற நிலையில் தென் கொரியா அனைத்தையும் வழக்கமாக நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் உலக வர்த்தக தலைநகரான நியூயார்க் தொடங்கி உலகின் அனைத்து நகரங்களும் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவேதான் இது மருத்துவ உலகம் சார்ந்த கேள்வியாக மட்டுமில்லாமல் உலகை இயக்குகின்ற சக்திகளின் பலப்பரிட்சைக்கு உரிய அரசியல் பொருளாதார கேள்வியாகவும் மாறியிருக்கிறது
நீண்ட காலம் தொடர்ந்து வருகிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு பெரிய நெருக்கடி புதிய வாய்ப்புகளை உண்டாக்கித் தருகிறது. இத்தருணத்தை அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பாக கருதி உலக அதிகார மையங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. கொள்ளைநோய் நெருக்கடி கொஞ்சம் தணிய தொடங்கியவுடன் உலகைக் கட்டுப்படுத்தும் பொருளாதார ஒழுங்கிற்கான போராட்டம் ஆளும் ஏகபோக சக்திகளின் நலனில் இருந்து தொடங்கிவிடும். அமெரிக்க சீன வடிவில் நடக்கும் அந்த போராட்டம் ஆளும் வர்க்கங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அரசியல் பொருளாதார சுமைகளை மக்கள் மீது சுமத்துவார்கள். இந்த இடத்தில்தான் இந்த நெருக்கடியின் தருணத்தை மக்கள் கைப்பற்றுவதற்கான திசைவழியில் திருப்புவதற்கான வேலைத்திட்டமும் உடனடி மருத்துவக் கோரிக்கைகளோடு இணைந்தே முன்வைக்கப்பட வேண்டியிருக்கிறது. வடஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களும் செயற்பாட்டாளர்களும் உடனடி மருத்துவ நல கோரிக்கைகளை மட்டும் தனித்து வைக்காமல் மக்களின் வாழ்வாதார பொருளாதாரக் கொள்கை சார்ந்த கோரிக்கைகளையும் இணைத்தே தீர்வுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறார்கள் நம்முடைய சூழலில் சுகாதார நலக் கோரிக்கைகளை பொருளாதார நல கோரிக்கைகளோடு இணைப்பது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கிறது. எனவே இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்க வேண்டிய கவனம் தேவைப்படுகிறது
நாம் உடனடியாகவும் நீண்டகால நோக்கிலும் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. 1. அரசியல் சுதந்திரம் 2. பொருளாதார சீர்திருத்தம் 3. பொது சுகாதாரக் கட்டமைப்பு. முதலாவது விஷயத்தில் மோடியும் அவரை ஒத்த மேற்கத்திய பாசிச சிந்தனை கொண்ட அரசு தலைவர்களும் ஏற்கனவே நீடித்துக் கொண்டிருக்கிற பொருளாதார மந்த நிலை நெருக்கடியை கொள்ளைநோயின் ஊடாக தீர்த்துக் கொள்ள முனைவார்கள் அதாவது ஏற்கனவே அவர்கள் தோற்றுவித்துக் கொண்டிருந்த பாசிச அரசியல் நெருக்கடிகளை மருத்துவ கால நெருக்கடிநிலை பிரகடனம், ஊரடங்கு, போலீஸ், இராணுவ நடவடிக்கைகளின் ஊடாக தீவிரப் படுத்துவதற்கும் அதைத் தொடர்ந்து அமலில் வைத்திருப்பதற்கும் மேலும் மேலும் அதிகாரத்தை மையப் படுத்துவதற்கும் தொற்றுநோய் நெருக்கடி நிலையை பயன்படுத்துவார்கள். எனவே இந்த சுகாதார நெருக்கடியை அரசியல் சுதந்திரத்தை பறித்துக் கொள்ளும் கருவியாக நாம் அனுமதித்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்து முழுப்பொறுப்பையும் அரசிடம் ஒப்படைக்காமல் மக்கள் சார்ந்து இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நமது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவது பொருளாதார நெருக்கடி நிவாரண நிதியாக அமெரிக்கா 2.2 ட்ரில்லியன் டாலரையும் இந்தியா 1.7 ட்ரில்லியன் ரூபாயையும் ஒதுக்கி உள்ளன. மற்ற முதலாளிய நாடுகளும் ஏறக்குறைய இதேபோன்ற ஒரு நிவாரண தொகைகளை ஒதுக்கி உள்ளன ஆனால் இது ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருக்கிற பொருளாதார நெருக்கடிக்கு கூட போதுமானதல்ல அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் மோடி அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்கள் பெரும்பாலும் ஏற்கெனவே இருக்கின்ற திட்டங்கள்,நலவாரியங்களில் உள்ள சேமத்தொகையை பயன்படுத்துதல் மற்றும் மாநில அரசு நிதி ஒதுக்கி இருக்கிற திட்டங்கள் என்ற உள்ளார்ந்த மோசடி வேலையை கொண்டிருக்கிறது முதலாளிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 1.75 லட்சம் கோடி தொகையை மற்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிற 6 லட்சம் கோடி தொகையை கூட ஏழை எளிய மக்களுக்கு இந்த நிவாரணத் தொகையில் ஒதுக்கவில்லை இந்த இடத்தில் இந்த சில்லறை சலுகைகளை எல்லாம் மறுத்து மக்களின் உழைப்பில் திரண்டு உபரியாக கிடக்கின்ற நிதி மூலதனத்தை மக்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். அந்த வகையில் நிதிப் பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படாமல் காங்கிரசினுடைய நியாய்( பின்தங்கிய 20 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6000 ரூபாய் வழங்குதல்) திட்டத்தைவிட மேம்பட்டதாக அனைவருக்கும் அடிப்படை ஊதியம்(universal basic income) வழங்க வேண்டும் அதுதான் ஏற்கெனவே இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து இப்பொழுது வருகின்ற பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கு வழி வகையாக அமையும். அதுமட்டுமன்றி இவர்கள் அறிவிக்கின்ற குழப்படியான ஏமாற்றுகின்ற பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மாற்றாக சோசலிச மயமாக்கலுக்கு முந்தைய தற்காலிக தீர்வாக அமையக்கூடும்.
மூன்றாவது, கொள்ளை நோயால் ஏற்பட்டுள்ள சுகாதார துறை நெருக்கடியை தற்காலிகமாக தீர்வு காணுகின்ற வகையில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் முகமூடிகள், வெண்டிலேட்டர்கள் அதிக எண்ணிக்கையிலான படுக்கைகள் தடுப்பு மருந்து கண்டுபிடித்தல், பரிசோதனை கருவிகளின் எண்ணிக்கையை அதிக அளவில் கொள்முதல் செய்தல் ஆய்வகங்களை உருவாக்குதல், இதற்கு உதவி செய்கின்ற வகையில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ், இந்தியாவின் அம்பானி, ஆனந்த் மகேந்திரா, அசீம் பிரேம்ஜி போன்ற தனியார் ஏகபோக முதலாளிகளை கட்டமைப்பு ரீதியாக பயன்படுத்துதல் என்ற வகையில் முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள் இதை நிரந்தர நெருக்கடியாக அதை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான தீர்வு தேவை என்றோ உலக வல்லாதிக்க சக்திகளும் மோடி கும்பலும் கருதவில்லை.
உலகமயமும் முதலாளித்துவக் கொள்ளை பொருளாதாரமும் உருவாக்கிய கொள்ளைநோய் என அவர்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. எனவே இதை நாம் தற்காலிக தீர்வுகளோடு விட்டுவிட முடியாது. ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளில் சார்ஸ், எபோலா என பல்வேறு வகையான உலகு தழுவிய கொள்ளை நோய்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. இதை ஒரு தனி நபராலோ குடும்பத்தாலோ பின்தங்கிய நாடுகளின் மருத்துவக் கட்டமைப்பாலோ எதிர்கொண்டு விடமுடியாது. மேலும் இந்த கொள்ளை நோய் முதலாளித்துவம் ஏற்படுத்திய சூழலியல் கேட்டாலும் அதீத மையப்படுத்தப்பட்ட அராஜக உற்பத்தியாலும் தீவிரமடைந்து இருக்கிறது. உலகமயமான வர்த்தக பாதைகளின் வழியாக தான் பின்தங்கிய நாடுகளில் இறக்குமதி ஆகிறது. பின்தங்கிய நாடுகளில் இருந்து மனிதர்களிடமிருந்து வளத்தையும் லாபத்தையும் உபரியையும் கொள்ளையடித்துவிட்டு சூழல் கேட்டையும் வறுமையையும் பரிசளித்தது போல உலக ஏகபோக சக்திகள்தான் கொள்ளை நோயையும் பரிசளித்து இருக்கிறார்கள். எனவே உலகமயம் சிலரின் லாபத்திற்காக மட்டும் என விட்டுவிட முடியாது. கொள்ளை நோய்க்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். உலகில் வசதிபடைத்த ஜி7 நாடுகள், ஜி20 நாடுகளின் கூட்டம் ஆடம்பர மாளிகைகளில் நடத்தமுடியாமல் இணைய உலகத்தில் நடத்தவேண்டிய நெருக்கடியில் அக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். உலக சுகாதாரத்திற்காக 5 ட்ரில்லியன் டாலர் நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் மத்தியில் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன. நாம் இது மட்டும் போதாது என்கிறோம்.
உலகு தழுவிய அனைவருக்குமான பொது சுகாதார சேவை அத்தியாவசியமானது என்ற கொள்கை முடிவெடுத்து சுகாதாரத் துறை என்பது பொது துறையாக மட்டுமே இருக்க வேண்டும், தனியார் என்பது சில தேவைகளில் பங்கு அளிப்பதாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற நிலையெடுக்க வேண்டும். காப்புரிமை கொண்ட தனியார் மருந்து நிறுவனங்கள் அகற்றப்பட்டு பொதுத் துறைகள் அதிலேயே வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்து சர்வதேச அளவிலும் ஒவ்வொரு நாட்டிலும் வலுவான திறன் மிகுந்த பொது சுகாதார சேவைக் கட்டமைப்பு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அடுத்தடுத்து வருகின்ற கொள்ளை நோய்களை எதிர்கொள்வதற்கான உடனடி நீண்டகால தீர்வாக அமைய முடியும். எனவே, அரசியல் பொருளாதாரத் துறைகளில் கவனம் செலுத்தாமல் சுகாதாரத்துறையில் நலன் பயக்கும் தீர்வுகளை எட்ட முடியாது.
அனைவருக்கும் பொது சுகாதார சேவையை வழங்கு (universal health care) அனைவருக்கும் அடிப்படை ஊதியம் வழங்கு (universal basic income) அரசியல் சுதந்திரத்தை மட்டுப்படுத்தாதே (stop draconian measures) என்ற தீர்வை முன்னெடுப்போம்.
பாலன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி