கார்ப்பரேட் வரி சலுகைகள்; பொருளாதார மந்தநிலைக்கு தீர்வா ?

22 Sep 2019

கடந்த வெள்ளிக்கிழமை (20-செப்டெம்பர்) கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்பான செய்தியாளர்கள் சந்திப்பில், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான  வரிக் குறைப்பு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதராமன் வெளியிட்டார்.அவை முறையே

  • கார்ப்பரேட் வரி, 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக  குறைக்கப்பட்டுள்ளது.
  • புதிதாக தயாரிப்பு தொழிலை துவங்கும் சில நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 விழுக்காட்டிலிருந்து  15 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.
  • வருமான வரிச் சட்டம்1961 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த அறிவிப்புகள் நடைமுறையாக்கப்படும்.

இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையால் நாட்டில் முதலீடு அதிகரிக்கும்,பொருளாதாரம் வளர்ச்சி பெறும் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் “நம்பிக்கை” தெரிவித்துள்ளார்.

மேலும், கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” என பிரதமர் மோடி ட்வீட் செய்கிறார்.

ஆனால் எதார்த்தத்தில் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெற்றியாகவும் ஏனையே மக்களின் பொருளாதார வாழ்க்கைக்கு தோல்வியாகவும் உள்ளது.மேலும், இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையானது சமகால இந்தியப்  பொருளாதார மந்தப்போக்கிற்கு தடுத்து நிறுத்தப் போவதும் இல்லை.

 

கார்ப்பரேட் வரி சலுகைகள்:எதிர் திசையில் ஏவப்படுகிற அம்புகள்

சமகால பொருளாதார மந்தப்போக்கு இந்தியப் பொருளாதாரத்தின் “கட்டமைப்பு சிக்கலை” வெளிப்படுத்தி வருகின்றன. இந்த கட்டமைப்பு சிக்கலுக்கான காரணத்தை சென்ற கட்டுரையில் சுருக்கமாக பார்த்தோம்.

இந்திய அரசும் சரி ஆளும்வர்க்க பொருளாதார அறிவுஜீவிகளும் சரி, சமகால இந்தியப் பொருளாதார மந்த நிலையையை எதிர்பாராத ஒன்றாகவும், தற்காலிகமானதாகவும் கருதுகிறார்கள். இந்தக் கண்ணோட்டமானது, முதலீட்டாளர்களின் முதலீடு தொடர்பான சிக்கலாகவும், முதலீடுகளை அதிகப்படுத்த வரிச் சலுகைகளை வழங்குவது, கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைப்பது போன்ற திசைப்போக்கில் அரசை செயல்படவைக்கிறது. முதலீட்டார்களின் நலன் சார்ந்த சலுகைகளை வழங்கினால், முதலீடு பெருகும், பொருளாதாரம் வளர்ச்சிப் பெறும் என நம்புகிறார்கள். ஆனால் சிக்கலே கடை விரித்தும் கொள்வாரில்லை என்பதுதான்! அதாவது பிரச்சனையை அளிப்பு (SUPPLY) பகுதியில் அல்ல பிரச்சனையே தேவை (DEMAND) பகுதியில் என்பதுதான்.

தற்போதைய பொருளாதார மந்தப் போக்கானது, சந்தையில் குவிந்துள்ள உற்பத்திப் பொருட்ளை (அது வாகனங்கள் ஆனாலும் சரி, துணிமணிகள்  ஆனாலும் சரி, பிஸ்கட் பாக்கேட்கள் ஆனாலும் சரி), வாங்குவதற்குரிய வாங்கு திறன் பற்றாக்குறையே மந்தப் போக்கிற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. கடந்த கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு கூலிக்கு உழைப்பை விற்கிற மக்களின் கூலிவீத சரிவு மற்றும் வேலைவாய்ப்பின்மையே “நுகர்வுச் சந்தையை” தேக்கமடைய வைத்துள்ளன. முதலாளிகளின் லாப வீத வீழ்ச்சிக்கு வித்துடுகின்றன.

இந்திய மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டு கார்ப்பரேட் பணக்காரர்களின் வருமான உயர்வும், மக்கள் தொகையில் 50 விழுக்காட்டு மக்களின் வருமான வீழ்ச்சியும் வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளன.

இந்நிலையில் நிறுவனங்களுக்கு மேன்மேனும் சலுகைகளை வழங்குவது அபத்தமான முடிவாகும். ஏனெனில் ஏற்கனவே முதலீடு செய்து உற்பத்தி செய்துள்ள பொருட்கள் விற்பனையாகாமல் சந்தையில் தேங்கியுள்ள நிலையில், மேற்கொண்டு மறு முதலீட்டில் நிறுவனங்கள் ஈடுபடுமா என்பது கேள்விக் குறியே. இந்நிலையில் மேற்கொண்டு வரிச் சலுகைகள் முதலீட்டை அதிகரிக்கும் என அரசு கருதுவது அபத்தத்திலும் அபத்தமான முடிவாகவும் மந்த காலத்தில் கார்ப்பரேட்களின் லாப வீத வீழ்ச்சியை குறைக்கிற நோக்கமாகவும் உள்ளது.

 

அதிகரிக்கும் அரசின் நிதிப் பற்றாக்குறை

பொருளாதார கட்டமைப்பு சிக்கலால் ஏற்படுகிற விளைவுகளை தற்காலிகமாக அமுக்குவதன் பொருட்டு அரசு மேற்கொள்கிற கோமாளித்தனமான நடவடிக்கைகள் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அது இறுதியில், மந்தநிலையின் சுமையை சாமானிய மக்களின் தோள் மேல் ஏற்றுகின்றன.

தற்போதைய கார்ப்பரேட் வரிச்சலுகை அறிவிப்பானது, அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என ‘மூடி’ கருத்து தெரிவித்துள்ளளது. இந்த வரிக் குறைப்பு முடிவால், அரசுக்கு  ஆண்டுதோறும் 1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என அமைச்சரே தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)  3.3 விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறையானது தற்போது 3.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

முன்னதாக ரிசர்வ் வங்கியின் 1.75 லட்சம் கோடியை அபகரித்த மத்திய அரசு தற்போது கார்ப்பரேட் வரிச் சலுகையால் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயும் இழந்துள்ளது. இது அரசின் மக்கள் நலத் திட்டங்களின் மீதான அரசின் செலவீனங்களை கட்டுப்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

மக்கள் நலன் சார் திட்டங்களை, கார்ப்பரேட் நலன்களுக்காக பலி கொடுக்குற அரசு, கார்ப்பரேட் சக்திகளிடம் முழுவதும் சரணடைந்துள்ளது. ஆனால் அரசின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப கார்ப்பரேட் செயல்படுவது ஐயமே!

அரசின் அறிவிப்பால் சலுகை பெற்றுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்டு தனது உபரியை (வரிச் சலுகை உபரியை) உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு துளியும் வாய்ப்பில்லாத நிலையில் நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புகள், மோடி அரசின் பொருளாதார அழிவுவாத நடவடிக்கையின் மற்றொரு மைல்கல்லே தவிரே வேறொன்றுமில்லை!

https://www.business-standard.com/article/economy-policy/flip-side-of-corporate-tax-bonanza-fiscal-deficit-may-widen-to-3-7-119092001413_1.html

– அருண் நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW