பசுமை விவசாயத்தை அழிக்கும் 8 வழி சாலைக்கு பத்தாயிரம் கோடி ! புயல்ல அழிஞ்ச விவசாயிக்கு தெருக் கோடியா?

21 Nov 2018

கஜா புயல் பேரிடர் – 3 – மறுசீரமைப்பும் நிவாரணமும்

புயலுக்கு முந்தைய நாள் பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்து விவரித்த அரசின் பம்மாத்து புயல் விடிந்த காலையில் நொறுங்கிப் போனது. இப்பொழுது மறுசீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இயற்கை அழித்தது போதாதென்று அரசின் திறனற்ற செயலற்ற வாய்வீச்சு மக்களைப் பேரிடருக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.

2004 ஆம் ஆண்டின் சுனாமிக்குப் பின்னர் அடுத்த சில மாதங்களில் பேரிடர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர் ஏழாண்டுகள் கழித்து 2011 இல் வந்த ’தானே’ புயல் கடலூரைக் கடுமையாக தாக்கி சேதாரத்தை ஏற்படுத்திய பொழுதும் அதை எதிர்கொள்வதற்கென்று திட்டமிடப்பட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு செயல்படவில்லை. அதற்குப்பின் ஏழாண்டு  கழித்துவந்தது ஒக்கிப் புயல்,  அரசை நம்பி எந்தப் பயனுமில்லை என்பதை மீனவர்களின் சாவு உறுதிபடுத்தியது. ஆனால், சென்னைப் பெருவெள்ளமும்,  வர்தா புயலும் கேரள மழை வெள்ளமும் குடிமை சமூகத்தின் எழுச்சியால் திறம்படக் கையாளப்பட்டது.

’தானே’ புயல் சூறையாடிய பொழுது அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் புயல் அடித்த ஒருவாரத்திற்குப் பின்னர்தான் கடலூரை சுற்றிப் பார்க்க வந்தார். ஒக்கிப் புயலின்போதும் பொய்யான விவரங்களைக் கூறிவிட்டு பிறகு காலங்கடந்தே ஆட்சியாளர்கள் பார்க்க வந்தனர். இப்பொழுது கஜா புயலிலோ முதல்வரும் துணை முதல்வரும் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில்கூட தரையிலேயே இறங்காமல் வானூர்தியில் பறந்து கொண்டே வேடிக்கைப் பார்த்துவிட்டு காவிரிப் படுகையைவிட்டே தப்பியோட முயன்றுள்ளனர். இது வெறும் வருகை சம்பந்தப்பட்ட விசயமல்ல. மக்களை எவ்வளவு அலட்சியமாக கையாள்கிறார்கள் என்பதும் அரசின் கொள்கையாக மக்களின் துயரங்களை நீடிக்கச் செய்து அதை இயல்பாக ஏற்றுக் கொள்ள வைக்கிறார்கள் என்பதுமாகும்.

நவம்பர், திசம்பர் மாதங்கள் என்பது வடகிழக்குப் பருவ மழை மற்றும் புயல், இயற்கை சீற்றங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடியவையாக கடலோர மாவட்டங்கள் இருந்து வருகின்றன. இது இன்று நேற்றைய விவகாரமல்ல, இந்தப் பருவ கால சூறையாடல் என்பது வரலாற்று ரீதியாகயும் பூகோளரீதியாகவும் தொடர்ந்து இருப்பதாகும். அண்மைய சுனாமி தொடங்கி இந்த பதினைந்து ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு பேரழிவுகளை இந்த மாதங்களில் சந்தித்து வருகிறோம். இதை கையாள்வதற்கு ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை வேண்டும். அதுமட்டுமின்றி இந்த காலங்களில் சேதம் அடைகின்ற மின் கட்டுமானங்கள், மரங்கள், விளைநிலங்கள், விளைந்த பயிர்கள், கட்டிட வீடுகள், குடிசைகள், வெள்ள அபாயம் போன்றவையும் ஏறக்குறைய ஒரே தன்மையில்தான் இருக்கிறது. கடலூரில் முந்திரி மரம் சாய்ந்தது என்று சொன்னால் பட்டுக்கோட்டையிலும் பேராவூரணியிலும் தென்னை மரங்கள் விழுந்திருக்கின்றன. அனைத்துக்கும் இன்றியமையாத தேவையாய் இருக்கிற மின்கட்டுமானங்கள் ஒரே மாதிரிதான் வீழ்ந்து கிடக்கின்றன. ஆகவே, இத்துறை சார்ந்த மீட்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மையாக வளர்த்தெடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? நிதிதான் சிக்கல்! பிரதேச ரீதியான இயற்கை சார்ந்த கட்டமைப்பு ரீதியான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு மாறாக கமிசன் பெறுவதற்கு எந்த பெருந்திட்டங்கள் வசதியோ அதற்கு திட்டமிடுவதுதான் இந்த கமிசன் ஆட்சிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது.

சென்னைப் பெருவெள்ளத்தின்போது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள உடைமைகள் நாசமாயின. ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் தந்து கணக்கை முடித்தார்கள். அதே சமயம் ஆயிரக்கணக்கான குடிசை வாழ் மக்களை அப்புறப்படுத்தி கண்ணகி நகர், பெரும்பாக்கத்திற்கு அனுப்பிவிட்டு விலையுயர்ந்த அந்நிலங்களைப் பெருந்திட்டங்களுக்கென கையகப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து மீனவர்களை அழிந்து போக விடுவதிலும் காவிரிப் படுகையின் விவசாயத்தை அழிந்து போகவிடுவதிலும் பெருநிறுவனங்களின் தேவை இல்லாமல் இல்லை.

சேத விவரமும் அதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்கும் நிதியும் அதற்கு அவர்கள் ஒதுக்கும் நிதியும் அத்தோடு சேர்ந்து மாநில அரசும் இணைந்து ஒதுக்கும் நிதியும் கேலிக்கூத்தான ஒன்றாக இருக்கின்றது. ஒவ்வொரு பேரிடரின் போதும் 20,000 கோடியிலிருந்து 30,000 கோடி வரை சேத மதிப்பீடு செய்கிறார்கள். மாநில அரசுக்கு நிதி அதிகாரம் இல்லாததால்  மத்திய அரசிடம் இருந்துதான் நிதியைப் பெற்றாக வேண்டும். எனவே, மாநில அரசு மத்திய அரசிடம் நிவாரணத்திற்கான நிதியைக் கேட்கின்றது. அவர்கள் ஒதுக்குவதோ 300 கோடியிலிருந்து 500 கோடி ரூபாய் வரைதான்! அதோடு மாநில நிதியையும் சேர்த்து மொத்தமாக 500 கோடியிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. விதிவிலக்காக சுனாமியின் போது மட்டும் மத்திய அரசு 2300 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். சுனாமிக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட முழுமையாக நிவாரணத்திற்குப் பயன்படுத்தாமல் வேறு விவகாரங்களுக்கு திருப்பிவிட்டதாகப் புகார் எழுந்தது. ’தானே’ புயல் நிவாரண நிதியில் ஊழல் நடைபெற்றதாக 2014 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலைமையில்தான் கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து விடுபட மறுசீரமைப்பு மற்றும் நிவாரணம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை மத்திய அரசின் பேரிடர் ஆய்வுக் குழு பார்வையிடவில்லை. மாநில அரசோ துரிதகதியில் செயல்பட்டு முழுமையான சேதங்களை மதிப்பிடுவதற்கான நடவடிக்கை இல்லை. இயற்கைப் பேரிடரை எதிர்கொள்வதற்கான திட்டமில்லாமல் இருப்பதும் அது நிகழ்ந்த பின்னர் அதன் பாதிப்புகளை சீரமைப்பதிலும் இவர்களுக்கு ஒரே கொள்கைதான். உடனடி கண் துடைப்பு நாடகம், அந்தக் குறிப்பிட்ட பகுதியின் தென்னைப் பொருளாதாரமோ முந்திரிப் பொருளாதாரமோ மீன்பிடிப் பொருளாதாரமோ எதுவும் மீள்வதற்கு உதவாமல் வீழ்ந்தவர்கள் எஞ்சிப் போக தப்பிப் பிழைத்தவர்கள் முன்னேறி வருவதுதான்.

ஆனால், இந்துத்துவ தேசியத்தைக் கட்டமைக்க, உயிரற்ற கான்கிரீட் கட்டுமானமான படேல் சிலைக்கு மூவாயிரம் கோடி ரூபாய் செலவிடுவதும் விவசாய நிலங்களைப் பெருந்திட்டங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு பசுமை வழிச்சாலைப் போல் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும் இவர்களுடைய ’திட்டமிடப்பட்ட’ பொருளாதாரம். காவி தேசியத்திற்கும் கார்ப்பரேட் வளர்ச்சிக்குமான பேரிடர் பொருளாதாரம்!

 

பாலன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW