தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 – அறிக்கை

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்!
பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு!!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எப்படி அணுகுவது?, களத்தில் போட்டியிடக் கூடிய கூட்டணிகளை எப்படி மதிப்பிடுவது?, யாரைத் தோற்கடிப்பதற்காக யாருக்கு வாக்களிப்பது?, பாசிச எதிர்ப்பில் சமரசமற்ற அக்கறையுடைய சனநாயக ஆற்றல்களின் கடமை என்ன? ஆகியவைப் பற்றி பேசுவதே இவ்வறிக்கையாகும்.
இது வெறுமனே சட்டப்பேரவைக்கான தேர்தலா?
இதுவொரு சட்டப்பேரவை தேர்தல்தானே என்ற எண்ணத்தில் நடைபெற்று முடிந்த ஆட்சியை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த தேர்தலை ஒரு சட்டப்பேரவைக்கான தேர்தலாக மட்டும் கருதிவிடக் கூடாது என்பதுதான் முதற்பெரும் எச்சரிக்கையாகும்.
இந்திய அரசு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் என்ற இறைமைப் பகிர்வு ஏற்பாட்டின் வழியாக தொழில்படுகிறது. ஒன்றிய அரசில் கடந்த 12 ஆண்டுகளாக பாசக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஒரே தேசம், ஒரே, மதம், ஒரே மொழி, ஒரே சந்தை என்ற நோக்கில் இந்து, இந்தி, இந்துராஷ்டிரம் என்ற திசையில் இந்நாட்டை இழுத்துச் செல்கிறது. அம்பானி – அதானி ஆகிய இருபெரும் மேற்கு இந்திய கார்ப்பரேட்டுகளும் மோடி – அமித்ஷா ஆகிய இருவரும் உள்ளடங்கிய ஒரு சிறுகும்பலின் ஆட்சியாக இவ்வாட்சி நடந்து கொண்டிருக்கிறது.
நிதிமூலதனக் குவிப்பும் அரசதிகாரக் குவிப்பும் இணைந்து இந்திய முதலாளிய அரசு பாசிச அரச வடிவம் எடுக்கும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்களைக் கைப்பற்றியும் முழுமையான ஒற்றையாட்சியை நிறுவும் நோக்கில் அரைகுறை கூட்டாட்சியை ஒழித்துக்கட்டியும் நிதி மூலதன குவிப்பின் வழியாக அதானி – அம்பானி நிறுவனங்களின் ஏகபோகத்திற்கும் எல்லைக்கடந்த நிதிமூலதன விரிவாக்கத்திற்கும் வழிவகுத்தும் இசுலாமியர்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாக்கி இனவழிப்புக்கு உள்ளாக்கக் கூடிய, வகையில் செயல்பட்டுக் கொண்டும் பாசிச இந்துராஷ்டிர அரச வடிவமெடுப்பதை நோக்கி மோடி ஆட்சி முன்னேறி வருகிறது. பாசிசத்தை நோக்கிய மேற்படி நான்கு முனை முன்னகர்வுக்கும் அதை தடுத்து நிறுத்தும் போராட்டத்திற்கும் இடையிலான வெற்றி தோல்வியில்தான் இந்நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
இந்த வரலாற்றுப் பின்புலத்தில், சட்டப்பேரவை தேர்தலை எப்படி அணுகுவது என்பதுதான் நம்முன்னே இருக்கக் கூடிய கேள்வியாகும். ஒன்றிய பட்டியல், ஒத்திசைவு பட்டியல் மாநிலப் பட்டியல் ஆகிய ஏற்பாட்டின் வழியாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பட்டியலிலும் ஒத்திசைவுப் பட்டியலிலும் வழங்கப்பட்டுள்ள அதிகார இனங்களில் ஒன்றிய அரசிடம் முழு இறைமை இருக்கிறது. மாநில பட்டியலில் உள்ள இனங்களில்கூட பெரும்பாலானவற்றில் ஒன்றிய அரசு தலையிடுவதற்கு அரசமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது. இருப்பினும் மாநிலப் பட்டியலில் உள்ள 19 இனங்களில் மாநில அரசுக்கு முழு இறைமை உண்டு.
பாசக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மாநில அரசுக்கு இருக்கக்கூடிய இந்த குறைந்த பட்ச அதிகாரத்தைக்கூட செயல்படுத்தவிடாமல் ஆளுநரை வைத்து அடாவடிகள் செய்வது, சட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுத்து ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடுவது, நிதி கொடுக்க மறுத்து பட்டினிப் போடுவது, கடன் வாங்குவதற்குகூட கட்டுப்பாடுகள் விதிப்பது, செஸ் வரி, மேல் வரிகளின் மூலம் வரிகளை சுருட்டிக் கொள்வது, அமலாக்கத் துறையின் வழியாக மாநிலக் கட்சிகளை மிரட்டுவது, என்.ஐ.ஏ வின் வழியாக மாநிலப் பட்டியலில் உள்ள சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையிடுவது, மாநிலப் பட்டியலில் உள்ள இனங்களில் சட்டம் இயற்றுவது என அதிகார மீறல் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. அதாவது, மாநில அரசில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிதளவு உரிமையைக்கூட விழுங்கக் துடிக்கிறது மோடி அரசு.
பாசக ஆட்சி செய்யும் மாநிலங்களைக் காட்டி அது ’டபுள் இன்ஜின்’ அர்சாங்கம் என்றும் அதனால் அம்மாநிலங்களில் வளர்ச்சி ஏற்படுகிறதென்றும் அளந்துவிடுவது மோடிக்கு ஒரு வாடிக்கை ஆகிவிட்டது. மாநிலத்தில் தனித்தோ கூட்டாகவோ பாசக ஆட்சியில் இருந்தால் என்னவாகும் என்பதற்கு மெய்த்தி – குக்கி இன மோதலில் பிளவுண்டுப் போன மணிப்பூரும் இரு மாநிலங்களாக துண்டாடப்பட்ட சம்மு காசுமீரும், நூற்றுக்கு 40 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகியுள்ள குசராத்துமே சான்றுகளாகும்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி – அமித் ஷா சிறுகும்பலாட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பாடாற்றிய சனநாயக ஆற்றல்கள், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பொருத்தமான நிலைப்பாடு எடுக்கவும் அதன் பொருட்டு செயல்படவும் தய்ங்குவதையும் மயங்குவதையும் கண்டு வருகிறோம். சட்டப்பேரவை தேர்தலையும் மக்களவை தேர்தலையும் மாநில அரசையும் ஒன்றிய அரசையும் முற்றிலும் தொடர்பற்ற ஒன்றாக பார்க்கும் கண்ணோட்டம் இது.
ஒரு சாரார் ஒன்றிய அரசுக்கு இந்நாட்டின் அரசியல் பொருளியல் வாழ்க்கையை தீர்மானிப்பதில் பாத்திரம் இல்லை என்பது போலவும் மாநில அரசே முழு அதிகாரம் படைத்த அரசென்றும் கருதுகின்றனர். இதனால், மாநில அரசுக்கான தேர்தலை அணுகுவதில் ஆட்சியில் இருக்கும் திமுகவை மையமிட்டு சிந்தித்து முடிவு எடுக்கின்றனர். இன்னொரு சாராரோ, மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஒன்றிய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் இருக்கிறது. எனவே, மாநில சட்டப்பேரவைக்காக நடைபெறும் தேர்தலில் ஏனோ தானோ என்று முடிவு எடுக்கலாம் என்று கருதுகின்றனர்.
ஒரு சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் திமுக, சிபிஐ(எம்), திரினாமுல் காங்கிரசு போன்ற கட்சிகள் மாநில அதிகாரத்தில் நீடிப்பதுதான் இறுதியிலும் இறுதியான இலட்சியம் என்று எண்ணிக் கொண்டு தமது பாசிச எதிர்ப்பு அணி சேர்க்கையை குலைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எத்தனிக்கின்றன. பாசிச பாசக ஒன்றிய அரசில் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் அவர்கள் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை இக்கட்சிகள் மறந்துவிடுகின்றன.
பாசகவோ மாநிலத் தேர்தல்களை ஒன்றிய அரசதிகாரத்தில் இருந்து துண்டித்த ஒன்றாக கருதுவதில்லை. ஏன் அவர்கள் மாநகராட்சி தேர்தலைக் கூட அரசதிகாரத்திற்கான ஊற்று மூலங்களில் ஒன்றாகத் தான் பார்க்கிறார்கள்.
நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்களைக் கைப்பற்றி தலைமை அமைச்சர் அலுவலகத்தில் அதிகாரத்தை குவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மாநில சட்டப்பேரவைகளைக் கைப்பற்றுவதன் மூலம் மென்மேலும் அதிகாரத்தை தமது கையில் குவித்துக் கொள்வதற்கு செயல்படுகிறார்கள். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலும் திருவனந்தபுரம் மேயர் தேர்தலில் பாசக வெற்றி பெற்றதும் முக்கியத்துவம் உடையதாக அவர்களால் பார்க்கப்படுகிறது.
மாநிலங்களின் அதிகாரத்தை மென்மேலும் பறிப்பதன் வழியாகவும் மாநில சட்டப்பேரவைகளைக் கைப்பற்றுவதன் மூலமாகவும் இந்திய அரசை அரைகுறை கூட்டாட்சியில் இருந்து முழுமையான ஒற்றையாட்சி அமைப்பாக மாற்றுவதன் வழியாக இந்திய அரசு முழுமையான பாசிச அரச வடிவம் எடுத்துவிடும் என்பது திண்ணம். எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாசக வெற்றி பெறுவது என்பது பாசிச பாசக அரசை மேலும் வலுபடுத்த உதவுமே ஒழிய தமிழ்நாட்டு மக்களின் சன்நாயகத்திற்கு உதவப் போவதே இல்லை. பாசிச பாசக – அதிமுக கூட்டணியின் ஆட்சி அமைவது என்பது பாசிச ஆட்சியை வலுப்படுத்தி விடும் என்பதே முதற்பெரும் கவலையாகும்.
ஆளும் வகுப்புக் கட்சியான திமுக சொல்வது போல் ஸ்டாலின் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல இந்த தேர்தலின் மையக் கேள்வி. இந்த தேர்தலின் மையக் கேள்வி என்பது பாசிச பாசக – அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதா? கூடாதா? என்பதே ஆகும். அதாவது பாசிச பாசக ஆட்சி வலுப்பட வேண்டுமா? கூடாதா? என்பதே ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையின் மீதும் எதிர்காலத்தின் மீதும் சிறிதளவு அக்கறை உள்ள எவரும் பாசிச பாசக கூட்டணி வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். எனவே, இந்த தேர்தலில் நமது முதல் பெரும் அறைகூவல் என்பது பாசிச பாசக – அதிமுக கூட்டணி நேரடியாகவோ மறைமுகமாகவோ தனித்தோ கூட்டாகவோ ஆட்சியில் பங்குபெற்றுவிடக் கூடாது என்பதால் அக்கூட்டணி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.
யாருக்கு வாக்களிப்பது?
இருமுனைப் போட்டிதான் என்றால் இக்கேள்விக்கு இடமே இல்லாமல் போய்விடும். பலமுனை போட்டி இருக்கும் நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இக்கேள்விக்கான விடை, எது சரியான கொள்கை உடைய அணி, எது சமரசமற்ற அணி என்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை. சமரசப் போக்குடன் குறைந்தபட்ச பாசிச எதிர்ப்புக் கொண்ட அணிதான் வலிமையாக இருக்கிறது என்றால் அதைதான் ஆதரித்தாக வேண்டும் என்ற கள யதார்த்ததில் இருக்கிறோம்.
களத்தில் நிற்கும் எதிர் அணிகள் என்னென்ன? திமுக தலைமையிலான அணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் இன்ன பிற கட்சிகள். கணிசமான வாக்குகளை பெறவல்ல அணி எவை என்று பார்த்தால் திமுக அணி, தவெக, நாதக என்ற மதிப்பீட்டை வந்தடையலாம். இம்மூன்றில் திமுக தலைமையிலான அணிதான் பாசக அணியை தோற்கடிக்கவல்ல, மெய்ம்பிக்கப்பட்ட வாக்குவங்கியைக் கொண்டிருக்கிறது. நாதகவைப் பொருத்தவரை 8% வாக்குகள் பெற்றிருப்பினும் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வைக் கூட கொண்டிராத கட்சியாகும். தவெக இப்போதுதான் அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறது இந்த தேர்தல் முடிந்த பிறகுதான் அவர்களின் மெய்யான வலிமை தெரியும். இந்நிலையில் திமுக தலைமையிலான அணிதான் பாசக அணியை தோற்கடிக்கவல்ல அணி என்ற முடிவுக்கு வருவதில் எவ்வித இடர்பாடும் இல்லை. தவெக, நாதக ஆகிய இரு கட்சிகளும் பாசக எதிர்ப்பு கொள்கை கொண்டவையாக தம்மை அறிவித்துக் கொண்டாலும் நடைமுறையில் அவர்களது அரசியல் என்பது மாநில அரசியல் எதிர்ப்பு அல்லது திராவிட அரசியல் எதிர்ப்பு என்ற அடிப்படையில் திமுக எதிர்ப்பை முதன்மைப்படுத்தியதாகவே இருந்து வருகிறது.
இந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி, அவர்களே சொல்வது போல் அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இருந்ததா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கையை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அந்நிய முதலீடு சார்ந்த வளர்ச்சிக் கொள்கையையே நாட்டின் பொருளியல் வாழ்க்கைக்கான ஒரே வழியாக செயல்படுத்தக் கூடாது என்பதை இவ்வாட்சியின் தொடக்கத்திலேயே திமுக தலைமைக்கு வெளிப்படையாக சுட்டிக்காட்டினோம். ஆயினும் தமது அரசியல் பொருளியல் கொள்கையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி, கடந்த காலம் போலவேதான் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியையும் நடத்தி முடித்திருக்கிறது திமுக. சாம்சங் தொழிற்சங்கப் போராட்டம் தொடங்கி, பணி நிரந்தத்திற்காகவும் குறைந்தபட்ச ஊதியத்திற்காகவும் அரசு பணியில் இருக்கும் தொழிலாளர்கள் அன்றாடம் தெருக்களில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருந்தது. ஆற்று மணல், கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளக் கொள்ளையைக் கட்டுப்படுத்துவதற்கு திமுக ஆட்சி எவ்வித முயற்சியும் செய்யவில்லை. எப்போதும் போல வேளாண் துறை அவசர சிகிச்சை பிரிவில்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைவிடவும் ( Unemployment ) தகுதிக்கு ஏறற வேலைகள் இல்லை ( Under employment ) என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
மாநில உரிமைகள் தொடர்பில் சடடப்பேரவை தீர்மானங்கள், கடிதங்க்ள், சட்ட வரைவுகள் டிவிட்டர் பதிவுகள், சட்டப் போராட்டங்கள் என்பதோடு தன்னை நிறுத்திக் கொள்கிறது திமுக. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கக்கூடிய சட்ட வரைவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாசக ஆட்சியில் இருந்து என்றாவது ஒருநாள் வெளியேறும்போது மேற்படி சட்ட வரைவுகள் சட்டமாகும் என்று தமிழ் மக்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருக்கிறது திமுக. ஒன்றிய பாசக அரசுக்கு எதிராக சட்டப் போராட்டத்தைத் தாண்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதற்கு திமுக அணியமாக இல்லை. ஆட்சியில் நீடிப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் வாய்த்த காமதேணு என்பது போல் திமுக பாசிச பாசக எதிர்ப்பு அர்சியலை வரம்புக்கு உட்பட்டு பாவித்து வருகிறது
சமூகநீதிக் கொள்கையை செயல்படுத்துவதில் முன்னோடியான திமுக அரசோ தலித் மக்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. வேங்கைவயல்களுக்கு நீதி இல்லை, ஆணவக் குற்றங்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்படவும் இல்லை, பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்படும் நிதியை எடுத்து அனைத்துப் பிரிவினருக்கான செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. ஒருபக்கம் சனாதன எதிர்ப்பு என்று வாள் வீசும் திமுக, தலித் மக்களுக்கு எதிரான சாதி ஆதிக்க பிரச்சனைகளில் வாளாவிருக்கிறது. இவை மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நிலையையும் அதிலும் பின் தங்கியிருக்கும் சாதிகளின் நிலையையும் அறிவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் என்பது பின் தங்கிய சமூகங்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும்போது, கர்நாடகமும் தெலங்கானாவும் பீகாரும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிந்திருக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என சாக்குப்போக்கு சொல்லி வருகிறது திமுக அரசு. உள்ளாட்சி தேர்தலையும் நடத்தாமல் ஆட்சிக் காலத்தை முடித்துவிட்டது
மதச்சார்பின்மைக் கூட்டணியில் முக்கிய அங்கம் வைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் இசுலாமியர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் மனத்திட்பம் இன்றி இருக்கிறது திமுக. இசுலாமியர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் என்.ஐ.ஏ.வுக்கு எதிராகவும் ஆண்டுக்கணக்கில் அவர்களை சிறைபடுத்திக் கொண்டிருக்கும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை (UAPA) எதிர்த்தும் மூச்சுக்கூட விட மறுக்கிறது திமுக. அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புக் குழுவோ ( ATS ) என்.ஐ.ஏ வையும் விஞ்சி இசுலாமியர்களைக் குற்ற சமூகமாக பார்த்து விசாரணை வளையத்திற்குள் அடைத்து வருகிறது. திருப்பரங்குன்றம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் இந்துப்பெரும்பான்மை வாதத்திற்குப் பலியாகி ஆடு, கோழி வெட்டி நேர்த்திக் கடன் செய்ய சிக்கந்தரை வழிபடுவோர் பெற்றுள்ள உரிமைக்கு எதிராக நீதிமன்றத்தில் சமரசம் செய்து கொண்டது திமுக அரசு.
மனித உரிமை களத்திலோ காவல் கொட்டடி மரணங்கள், காவல் நிலைய சித்திரவதைகள், போலி மோதல் கொலைகள் குறையவில்லை. டாஸ்மாக்கைப் படிப்படியாக குறைத்துக் காட்டுவோம் என வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால், டாஸ்மாக்கின் எண்ணிக்கை குறையவில்லை, மாறாக குடிப் பழக்கத்தால் க்ணவனை இழந்த இளம் பெண்களின் எண்னிக்கைதான் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. போதை ப்ழக்கங்கள் இளைஞர்களிடம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.
காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் என வரவேற்கத்தக்க நலவியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாலும் முழுமையாக இவ்வாட்சியை மதிப்பீடு செய்தால் உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு உட்பட்டு மக்கள் நலவியத்திற்கு எதிரான அரசாகத்தான் இது செயல்பட்டு வருஇறது
திமுக அணி வெற்றி பெற வேண்டும் என்று கருதுவது திமுக ஆட்சியின் சாதனைகளின் பொருட்டோ அல்லது திமுக தமக்கு தாமே பெயரிட்டுக் கொண்டுள்ள திராவிட மாடலின் (புதுத்தாராளிய மாடலின் தமிழ்ப் பதிப்பு) பொருட்டோ அல்ல, மாறாக, திமுக ஆட்சியின் மீது மேற்படி எல்லாத் திறனாய்வுகளும் இருப்பினும் பாசிச பாசக – அதிமுக அணியைத் தோற்கடித்து மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திமுக அணியை தவிர்த்த பிறிதொரு வலிமையும் குறைந்தபட்ச பாசிச எதிர்ப்புக் கொள்கையும் கொண்ட அணி களத்தில் இல்லை என்பதால் பாசிசத்திற்கு வழிவகுத்த அரசியல் பொருளியல் கொள்கைகளைக் கொண்ட காங்கிரசு – திமுக அணியை ஆதரிக்க வேண்டிய நிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
திமுக ஆட்சியின் மீதான திறனாய்வுகளின் பொருட்டு திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் திமுக அணியை வீழ்த்துவதற்கான கொள்கையும் வலிமையும் கொண்ட அணி களத்தில் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். மக்களின் நலனைப் பொருட்டு திமுக அணி ஆட்சியில் நீடிக்கக் கூடாதென்று ஒருவர் கருதுவாரானால் திமுக அணியைவிடவும் மோசமான கொள்கை கொண்ட பாசிச பாசக அணி ஆட்சி அமைக்கும் வகையில் வாளாய் இருப்பது அறிவுடைமை ஆகுமா?
ஒருபக்கம் பாசிச பாசக அணியை வீழ்த்துவதற்கு திமுக அணியைத் தவிர்த்த வலிமையான அணி ஒன்று இல்லை என்பதைப் போலவே திமுகவை வீழ்த்தி அவ்விடத்தில் அமரவல்ல வலிமையும் பாசிச எதிர்ப்புக் கொள்கையும் கொண்ட வேறொரு அணியும் தேர்தல் களத்தில் இல்லை என்பதால் பாசிச பாசக வை தேர்தலில் தோற்கடிப்பதற்கு பாசிசத் தன்மை அல்லாத, ஓரளவுக்கு பாசிச எதிர்ப்புக் கொண்ட திமுக அணிக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தவெக, நாதக பற்றிய நிலைப்பாடு:
தனி முனையாக இருக்கக்கூடிய தவெகவும் நாதகவும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடிய கட்சிகளாகும். நாதக பாசக, காங்கிரசு, திமுக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் ஒன்றென நிலைப்பாடு கொண்டது. இந்நான்கு கட்சிகளுக்கு மாற்றாக தம்மை முன்வைத்து தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றது. பாசகவும் திமுகவும் ஒன்றென நிலைப்பாடு கொண்டது தவெக.
ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாசகவையும் ஏனைய கட்சிகளையும் சமப்படுத்துவது பாசிச பாசகவுக்கு சேவை செய்யக்கூடிய போக்காகும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு. அவ்வகையில் பாசகவையும் ஏனைய கட்சிகளையும் சமப்படுத்தும் தவெக, நாதக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு பாசக எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் நிலைப்பாடு ஆகும். இன்னொருபுறம், பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்தாத தவெக, நாதக போன்ற அமைப்புகளின் கொள்கையை விமர்சித்து அம்பலப்படுத்துவதற்கு மாறாக அக்கட்சிகளை பாச்கவின் பீ – டீம் என்று முத்திரையிடுவது ஓர் எளிமையான வழிமுறையாக தெரியலாம். 2021 சட்டப் பேரவை தேர்தலில் கமலஹாசனையும் அவர் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தையும் பாசகவின் பீ – டீம், ஐந்தாம் படை, பார்ப்பனிய சக்தி என்றெல்லாம் சொன்னவர்கள் இன்று அதை மறுத்து விளக்குவதற்குகூட அரசியல் தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். இவ்விரண்டில் இருந்தும் நாம் முற்றிலும் மாறுபடுகிறோம்.
தவெகவும் நாதகவும் பாசக – அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் குறிப்பாக பாசக போட்டியிடக் கூடிய தொகுதிகளில் வாக்குகளை வகைதொகையின்றி பிரித்து பாசகவுக்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்துவிடக் கூடாது என்று தவெக, நாதக தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
பாசிச பாசக ஆட்சியில் நீடிப்பது என்பது புதிய ஆற்றல்கள் மேலெழுந்து வருவதற்கு பெரும் தடையாக் இருக்கிறது என்ற எளிய உண்மையை நாதகவும் தவெகவும் நாம் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. உண்மையிலேயே நாதகவும் தவெகவும் அரசியலில் மேலெழுந்து வர வேண்டும் என்றால் பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து கீழிறக்குவதற்கு முதன்மை கவனம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நமது முதன்மை இலக்கு என்ன?
தமிழ்நாட்டில் உள்ள பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்ற்லகளின் முதன்மை இலக்கு என்ன?
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது பாசக என்ற கேள்விக்கு விடையாக, பாசக தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன, “ நான்கரை ஆண்டுகளாக நாங்கள் சட்டப்பேரவையில் எழுப்ப்பிய கேள்விகளுக்கு நீங்கள் ( திமுக) பதில் சொல்லிக் கொண்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? என்று கேள்வி கேட்டார். கூட்டணி வைத்துதானே பாசக வெற்றி பெற்றது? என்றொருவர் சொன்னதற்கு ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, “விசிக, மதிமுக, சிபிஐ சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் கூட கூட்டணியில்லாமல் வெற்றி பெற முடியாது என்பதற்காக அக்கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்வீர்களா? பாசகவும் தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.
பாசகவின் இருப்புக்கு மிக முக்கிய அளவுகோலாக இருப்பது சட்டப்பேவையில் அவர்களின் இருப்பாகும். இன்றளவில் அவர்களில் 4 பேர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 3 இல் இருந்து 5 மடங்கு உயர வேண்டும் என்று பாசக திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பாசகவின் இடங்கள் 4 இல் இருந்து உயரப் போகிறதா? குறையப் போகிறதா? என்பது பாசகவுக்கு முதன்மை கேள்வி என்றால், பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களுக்கும் அதுதான் முதன்மை கேள்வியாக இருக்க முடியும்.
தமிழ்நாடு மக்கள் பாசகவினருக்கு சட்டப் பேரவைக்குள் இடம் கொடுக்கவில்லை, முழுவதுமாக கதவடைத்துவிட்டார்கள் என்ற தேர்தல் முடிவை அடைவதுதான் பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
பாசக 30 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்றால் அதில் அவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அந்த தொகுதிகளில் ஏற்கெனவே பாசக – அதிமுக அணிக்கும் திமுக அணிக்கும் திடப்பட்டுள்ள வாக்குகளை விட்டுவிட்டு முடிவைத் தீர்மானிக்கப் போகும், ஊசலாடும் வாக்குகளைக் குறி வைத்து பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்கள் உழைப்பைச் செலுத்தினால், குறைவான பலத்திலும்கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும்.
ஆகவே, நடைபெறவிருக்கும் சட்டப்பேர்வை தேர்தல் பாசிச எதிர்ப்புப் போராட்டக் களத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் முடிவுகள் பாசிச எதிர்ப்புக் களத்தின் அடுத்தஅடுத்த போராட்டக் களங்களை தீர்மானிக்க வல்லவை என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.
பாசிச பாசக – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்!
பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி
9941931499