அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள்? – ரியாஸ்

இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து, சில மாநிலங்களில் முற்றிலுமாக இல்லை என்ற நிலையில், அதனை குறித்து விரிவாக பேசுவதும் செயலாற்றுவதும் அவசியமாக இருக்கிறது.
அரசியல் அதிகாரம் ஒரு சமூகத்திற்கு மிக இன்றியமையாதது. அதிகாரம் இல்லையென்றால் அது அடிமைத்தனத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். அதிகாரத்தை அடையாத சமூகங்கள், அல்லது அதிகாரத்தை இழந்த சமூகங்கள் இந்த சிக்கலை அனுபவித்தும் வருகின்றனர். இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை அனைத்து நிலைகளிலும் மிக மோசமான இருக்கிறது என்பதை அதிகம் விளக்கம் வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளின் செய்திகளை கவனித்து வந்தாலே அவை இந்திய முஸ்லிம்களின் நிலையை படம் பிடித்துக் காட்டிவிடும்.
வாழ்வும் வாழ்வாதாரமும் இன்று இந்திய முஸ்லிம்களுக்கு கேள்விக்குறியாகி விட்டன. சமூக, பொருளாதார குறியீடுகளில் இந்திய முஸ்லிம்கள் அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினரை விட மோசமாக உள்ளனர் என்பதை இருபது ஆண்டுகளுக்கு முன் சச்சார் கமிட்டி அறிக்கை தெரிவித்தது. இன்றைய நிலை அதைவிட மோசமாகவே இருக்கிறது. கருப்புச் சட்டங்களில் கைது செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் நீண்ட கால சிறைவாசிகளின் விடுதலையை நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொருபுறம் யுஏபிஏ சிறைவாசிகள் அதைவிட பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். சிஏஏ, என்.ஆர்.சி., எஸ்ஐஆர் என விதவிதமான பெயர்களால் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அடையாளம், சமத்துவம், பாதுகாப்பு என அனைத்து கிளைப் பிரச்சனைகளுக்கும் நாம் தனித் தனியாக தீர்வை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்திற்கும் சர்வ ரோக நிவாரணியாக அரசியல் அதிகாரம் இருக்காது என்றாலும் இதில் பெரும்பான்மை பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான் அரசியல் அதிகாரம் அவசியம் என்று வாதிடுகிறோம்.
இத்தாலியின் தத்துவஞானியும் அரசியல் சிந்தனையாளருமான ஜார்ஜியோ ஆகம்பன் புறக்கணிப்பு அரசியல் குறித்து பேசுகிறார். இச்சிந்தனையை முன் வைக்கும் போது அவர் ‘bare life’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அதாவது, ஒரு மனிதன் உயிருடன்தான் இருக்கிறான். ஆனால் அரசியல் உரிமைகள், அரசியல் குரல், பாதுகாப்பு என எதுவும் இல்லாமல் இருக்கிறான். அதாவது, பெயருக்கு உயிரோடு இருக்கிறான். அரசியல் உரிமைகள் இல்லாத மனிதனும் இதே நிலையில்தான் இருக்கிறான். அவனை கோமா நிலையில் உள்ள மனிதனுடன் ஒப்பிடலாம்.
முஸ்லிம்களுக்கு வாக்குரிமை இருக்கிறது, இன்று அதுவும் கேள்விக்குறியாக்கப்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய வேறு விசயம். அரசியல் முடிவுகளில் அவர்களுக்கான இடம் இல்லை. அவர்களுக்கான சரியான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இல்லை. முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவைகள் அமைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் இல்லாத சட்டமன்றங்களை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.
State of Exception குறித்தும் ஆகம்பன் பேசுகிறார். சில குழுக்களை அல்லது சமூகங்களை சந்தேகத்திற்குரியவர்களாக, ஆபத்தானவர்களாக அரசு கருதி, அவர்களுக்கான சிறப்பு சட்டங்களை பயன்படுத்துவது ஸ்டேட் ஆஃப் எக்சப்சன் எனப்படும். இத்தகையவர்கள் குடிமக்களாக கருதப்பட்டாலும் அவர்களுக்கான சட்டப்பாதுகாப்பும் சம உரிமையும் குறைக்கப்படும்.
இவர் பேசும் மூன்றாவது விசயம், முகாம்கள். அதாவது சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாத பகுதிகள். இதில் உள்ளவர்கள் சமூகத்திற்குள் இருந்தாலும், அவர்கள் அரசியல் உரிமைகளுக்கு வெளியே இருப்பார்கள். முகாம்கள் என்று நாம் கூறும் போது அவை தடுப்பு முகாம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முழுமையான கண்காணிப்பு, தடைகள், ஆவண சிக்கல்கள் ஆகியன செயல்படுத்தப்படும் இடங்கள் முகாம்களாக கருதப்படும்.
ஆகம்பன் குறிப்பிடும் ‘பேர் லைஃப்’ வாழ்க்கையைத்தான் இன்று இந்திய முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கறுப்பு இன மக்களின் வாழ்க்கையை குறித்து வாசிக்கும் போது அவர்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதை நம்மால் காண முடியும். ஆனால் கறுப்பு இன மக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது, நமக்கு அந்த நிலை இல்லை என்று நினைத்துக் கொண்டேன். இன்று எஸ்ஐஆர் அந்த வேற்றுமையை அகற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏனைய சமூகங்களை விட முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் நீக்கப்பட்டுள்ளதை புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. பீகார் மக்கள் தொகையில் 17.7 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 32.1 சதவிகிதம் முஸ்லிம்களாவர்.
‘பேர் லைஃப்’ வாழ்க்கையை விட ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்பதை இது உணர்த்துகிறது. அதனால், அரசியல் அதிகாரத்திற்கான குரலை இன்னும் வலுவாக உயர்த்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இந்திய அரசியல் முறையே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்தும் வகையில் உள்ளதை Absent in Politics and Power புத்தக ஆசிரியரும் முன்னாள் ஐ. பி. எஸ். அதிகாரியுமான அப்துல் ரஹ்மான் தெளிவாக விளக்குகிறார். (ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடம் இல்லை என்ற பெயரில் இதன் தமிழ் மொழிபெயர்ப்பு சீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது). தேர்தல் முறை மாற்றம் பிரதிநிதித்துவ மாற்றத்தை ஏற்படுத்தும். சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த பல நாடுகள் வெவ்வேறான தேர்தல் முறைகளை பின்பற்றி வருகின்றன. ஆர்மீனியா, ஜோர்டான், ஈரான் போன்ற நாடுகள் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கியுள்ளன. நம்மைப் போன்றே தேர்தல் முறையை கொண்டுள்ள பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜோர்டானிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது.
நமது அண்டை நாடான இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ முறை நடைமுறையில் இருக்கிறது. 1977 வரை நம்மை போன்று எஃப்பிடிபி முறையை (FPTP – First Past The Post. அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறும் முறை) பின்பற்றி வந்த அந்நாடு பின்னர் அரசியல் சாசனத்தில் திருத்தத்தை மேற்கொண்டு விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு மாறியது. இதன் காரணமாக அங்கு சிறுபான்மையினருக்கு சட்டம் இயற்றும் அவைகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. முஸ்லிம்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ பத்து சதவிகிதம் உள்ளனர். 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தற்போது ஏறத்தாழ 18 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
எனவே, தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்தாலே விளிம்பு நிலை மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். நமது நாட்டிற்கு ஏற்ற, அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கக் கூடிய தேர்தல் நடைமுறையை கொண்டு வருவதற்கான உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எட்டப்பட வேண்டும்.
அதே போன்று, அட்டவணை சாதியினருக்கு தொகுதிகளில் இட ஒதுக்கீடு உள்ள போதும் அதில் முஸ்லிம்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனையும் தீர்க்கும் வகையில் சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசியல் சாசன திருத்தங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய மாற்றங்கள் ஒருபுறம் இருக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அல்லது மேற்கொள்வதற்கு எளிதான வாய்ப்புகளும் உள்ளன. வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவது இதில் முக்கிய அம்சமாகும். முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் முதலில் உணர வேண்டும். மால்கம் எக்ஸ்-ன் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘உணவகத்தில் இருவர் உணவருந்த இருக்கும் போது, எனக்கு முன்னால் உணவுத் தட்டு இல்லை என்றால் நான் உணவருந்தி விட்டேன் என்று அர்த்தம் கிடையாது’. எல்லோரும் தட்டுகளில் உணவருந்தும் போது முஸ்லிம்கள் மட்டும் உணவுத் தட்டு இல்லாமல் இருக்கின்றனர்.
எனவே முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதை முக்கிய கட்சிகள் அங்கீகரித்து அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை கொடுக்க வேண்டும். குறிப்பாக, 2014ற்கு பிறகு முஸ்லிம்கள் இல்லாத இந்திய அரசியலை உருவாக்குவதில் பாசிச சக்திகள் முனைப்பாக செயல்படும் போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சமூக நீதியை நிலைநாட்டும் கடமை இந்த கட்சிகளுக்கு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த முஸ்லிம்கள் திராவிட அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கச் செய்யும் கடமை திராவிட கட்சிகளுக்கு இருக்கிறது.
முஸ்லிம்கள் இன்று அரசியல் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். முஸ்லிம் வாக்காளர்களை நிறுத்தினால் வெற்றி கிடைக்காது என்ற சிந்தனை பெரும்பான்மை கட்சிகளிடம் வந்துவிட்டது. இந்த நிலை இன்னும் மோசமாகி தங்கள் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை பிரச்சாரத்திற்கு அழைத்தால் வாக்குகள் கிடைக்காது, எனவே அவர்களை பிரச்சாரத்திற்கு கூட அழைக்க வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாசிசத்தின் இந்த பிரச்சாரத்திற்கு ஏனைய கட்சிகளும் பலியாகிவிட்டன என்பது ஒரு கசப்பான உண்மை. பாசிசத்தின் பிரிவினைவாத அரசியலுக்கு நாங்கள் பலியாகவில்லை என்பதை இக்கட்சிகள் நிரூபிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதன் மூலம் மட்டுமே அதனை நிரூபிக்க இயலும்.