ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?

ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? – 13-2-2026 நடைபெற்ற கருத்தரங்கம் பற்றிய செய்தி குறிப்பு
ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? என்ற தலைப்பில் 22.11.2025 அன்று சென்னையிலும் 23-11-2025 அன்று திருச்சியிலும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் முன்னெடுப்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து 13-2-2026 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று கோவையில் இதே தலைப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவற்றுக்கான பரப்புரையில் பங்கெடுத்து, நிதி கொடுத்து, இணையப் பரப்புரையில் ஈடுபட்டு, நிகழ்வில் கலந்துகொண்டு ”ஊபா சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்த அனைவருக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை கருத்தரங்கம் குறித்த செய்தி குறிப்பைக் கீழே காண்க.
கருத்தரங்கம் கோவை போத்தனூர் சாலையில் உள்ள பிஸி ஃபுட் அரங்கத்தில் மாலை சுமார் 5:15 மணிக்கு தொடங்கியது. சிறைபட்டோர் பற்றிய சிறுகுறிப்புடன் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையேற்றார். இதில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் துரை அசோகன், பியுசிஎல் இன் கோவை மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், தமிழ்த்தேச இறையாண்மையைச் சேர்ந்த தோழர் திருமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் காவேரி வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் தனது தலைமை உரையில், “ஊபா சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை போராடும் உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டம். போராடும் உரிமை மிகவும் அடிப்படையான உரிமை. ஒரே தேசம் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சந்தை என்பதை எதிர்க்கக் கூடியவர்கள் ஊபா சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப் படுகின்றனர்” என்று பேசினார்.
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அருண்சோரி தனது உரையில்,, ஊபா( UAPA ) தொடர்பாக நிலவும் அச்சத்தையும் இதுவொரு பிரச்சனையே அல்ல என்று பார்க்கக் கூடிய போக்கையும் உடைப்பதற்குத்தான் இத்தகைய தொடர் கூட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பேசினார்.
சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் NP குமார் தமது உரையில், ஊபா சட்டத்திற்குப் பின்னால் இருக்கும் பன்னாட்டுப் பரிமாணத்தைப் பற்றி விளக்கினார். ”அமெரிக்க வல்லரசியம் தமக்கு ஓர் உலகளாவிய எதிரியாக இசுலாமியர்களை சித்திரித்து, வல்லரசிய எதிர்ப்புப் போராட்டங்களை ‘பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தி நசுக்குகிறது. பெரும்பான்மை தீவிரவாதம்தான் தீவிரவாதம், சிறுபான்மையினர் வெளிப்படுத்துவது விடுதலைக்கான போராட்ட உணர்வு. அதை ஆதரிக்க வேண்டும்” என்று பேசினார்.
சிறைபட்டோர் உறவான திருமதி ஜெரீனா முஹம்மது அலி ஜின்னா பேசினார். அவர் தமது உரையில், “கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பொதுவாழ்வில் செயல்பட்டு வந்தவர் என் கணவர். முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகம் நிலைபெறவும் முன்னணியில் நின்று செயல்பட்டவர். அவரது செயல்பாடு திறந்த புத்தகம் போன்றது. என கணவ்ர் எந்த குற்றச்செயலும் செய்யவில்லை. எந்த அழிவு வேலையும் செய்யவில்லை. அவர் சிறை செல்கையில் என் மகனுக்கு ஆறு மாதம். இப்போது அவனுக்கு 4 வயது ஆகிறது. தந்தை என்ற நிலையில் அவரால் தன் மகனின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியவில்லை. எங்கள் உள்ளம் உறுதியாகவும், மனசாட்சி நிம்மதியாகவும் இருக்கிறது. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் ஊபா சட்டத்திற்கு எதிராக ஏன் பேசுவதில்லை? அதில் முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்டவர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தினாலா? என்று உணர்ச்சிப் பொங்க பேசினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரை நோக்கி, ”ஊபாவிற்கு எதிராக குரல் கொடுங்கள், வரலாறு உங்களை வாழ்த்தும்” என்று கம்பீரமாக பேசினார்.
அதை தொடர்ந்து கோவை இசுலாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் M.S. சபீர் அலி பேசினார். அவர் தமது உரையில், இந்த தேசத்தின் நலனுக்காக போராடிய சமூகத்தையும் பாடுபட்ட தலைவர்களையும் ஒடுக்குவது முதன்மை வேலையாக செய்யப்படுகிறது. அரசைக் கேள்வி கேட்பது கூட ஒரு தேச விரோத செயலாகப் பார்க்கப்படுகிறது, கோவையை சேர்ந்த A.S. இஸ்மாயில் மிகவும் வீரமாக கம்பீரமாகவும் இருக்கக் கூடியவர். அவர் மன உறுதியோடுதான் இருக்கிறது. அவரது உடல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது கூட அவருக்கு பிணை மறுக்கப்படுகிறது” என்று பேசினார்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் சுசி கணேசன் உரையாற்றினர். அவர் தனது உரையில், இந்து தேசத்திற்கு தடையாக இருப்பவர்களை நோக்கி, இந்துக்களை சிந்திக்க வைப்பவர்களை நோக்கி இந்த அடக்குமுறை சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்று பேசினார்.
தலித் விடுதலைக் கட்சியீன் மாநில பொதுச்செயலாளர் செங்கோட்டையன் தமது உரையில், “ இந்த அடக்குமுறைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றால் வெவ்வேறு அமைப்புகளாகப் பிரிந்து கிடக்கும் நாமெல்லாம் கம்யூனிசம் என்ற இறுதி இலட்சியத்தின் அடிப்படையில் ஒரு தளத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற அறைகூவலை விடுத்தார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பார்த்திபன் தமது உரையில், “கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பலரும் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவ்வழக்கில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிரான பரப்புரையின் பொருட்டு முற்போக்கு சனநாயக ஆற்றல்களை அணுகிய போது, அவர்களுக்கே ஊபா சட்டத்தைப் பற்றிய புரிதல் இல்லை என்பது தெரிய வந்தது. இன்றைய நிலையில் முஸ்லிம்களும் மாவோவியர்களும் ஊபா சட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்” என்று பேசினார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தமது உரையில், “ஆங்கிலேயர்கள் ரெளலட் சட்டத்தை வைத்துக் கொண்டு சுதந்திரத்துக்கு போராடியவர்களை ஒடுக்கினார்கள். அதை ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொண்டுதான் இந்தியாவில் மிசா என்ற சட்டத்தைக் கொண்டு வந்தனர். நெருக்கடி காலத்தில் கொண்டு வரப்பட்ட அந்த சட்டத்தின் கீழ் ஒராண்டு சிறையில் இருந்தேன். பின்னர் தடாவிலும் கைது செய்யப்பட்டு மூன்றரை ஆண்டு காலம் சிறையில் இருந்தேன். அப்போது என் அம்மா இறந்த செய்தியைக் கூட எனக்கு தெரியவில்லை. அந்த கொடிய தடா சட்டத்தின் தொடர்ச்சி தான் பொடா. பின்னர் பொடாவை தொடர்ந்து ஊபா வந்துள்ளது. எவ்வளவோ குற்றங்களை சங் பரிவார சக்திகள் செய்து கொண்டிருக்கும் போது அவர்கள் மீது ஊபா வழக்குப் போடப்படுவதில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
பின்னர் சிறைபட்டோர் உறவினர் திருமதி ஜன்னத்துல் பிர்தெளஸ் A.S. இஸ்மாயில் பேசினார். அவர் தனது உரையில், “என்னுடைய கணவர் 22.9.2022 அன்று கைது செய்யப்பட்டார். 2024 அக்டோபர் 24 அன்று அவர் முடக்குவாதத்திற்கு ஆளானார். அவரை அழைத்து சென்ற சக்கர நாற்காலியில் உள்ள சக்கரம் கழன்று ஓடுகிறது. சிறை மருத்துவமனையில் குடிப்பதற்கு உரிய டம்ளர்கூட இல்லை. சிறைசாலையில் பிஸியோதரபி சிகிச்சை கொடுப்பதில்லை. நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டாலும் தீர்வு கிடைப்பதில்லை. இப்படியே நிரந்தரமாக என்னுடைய கணவருடைய கை கால்கள் செயலிழந்து அவதிப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா? தங்களுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள்தான் இப்போது சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஊபா சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டு, , பிணை மறுக்கப்பட்டு, விசாரணை கைதிகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்களே, இதனை யார் கேட்பது ? எப்போது கேட்பது? என்று பேசினார்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் மாறன் தனது உரையில், “ஸ்டேன் சாமி, பேராசிரியர் சாய்பாபா போன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் இப்போது தியாகி ஆகிவிட்டனர். இந்த நாட்டை ஒரு மிகப் பெரிய சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். – பாசக செயல்பட்டு வருகின்றனர். கனிம வளங்களை அம்பானி, அதானிக்கு தாரை வார்ப்பதற்கு பழங்குடிகளை வேட்டையாடுகின்றனர். இதை எதிர்த்து கேட்பவர்கள் மீது ஊபா சட்டம் பாய்கிறது“ என்று பேசினார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளர் ச.பாலமுருகன் தனது உரையில், ”சிறையில் இருக்கும் மனிதனை மறந்துவிடுவது என்பது அவனை அதல பாதாளத்தில் கைவிடுவதற்கு ஒப்பாகும். மனிதர்கள் மக்களின் நினைவில் இருந்து அப்புறப்படுத்துவது ஒருவித வன்முறை. அவர்களை பற்றி பேச வேண்டும். அவர்களுக்காக வழிபாடு நடத்துவதுகூட ஒருவகையான போராட்டம்தான். ஜெர்மனியை பாசிசம் விழுங்கிய போது அந்நாட்டின் நீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது என்பதை தெரிந்து கொண்டால் இன்று இந்திய நீதிமன்றத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்” என்று பேசினார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பழனி பாரூக் தனது உரையில், ”தமிழகத்தில் வாழுகின்ற மானமும் சூடும் உள்ள ஒவ்வொருவரும் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அண்ணன் இஸ்மாயிலின் தம்பியாக, அண்ணனாக தெருவில் இறங்கிப் போராடினால்தான் இந்த கொடுமைக்கு ஒரு முடிவுகட்ட முடியும்” என்று பேசினார்.
பின்னர் எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமது உரையில், “ ஊபா சட்டத்திற்கு எதிராகப் போராடுவது என்பது இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்காக போராடுவதாகும். PMLA வுக்கு எதிராக போராடுவது என்பது இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடுவதாகும். இஸ்லாமியர்களையும் தலித் மக்களையும் விலக்கி வைத்துவிட்டால் அது இந்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகிவிடாதா?. இந்த கேள்விகளைக் கேட்டால் PMLA, ஊபா ( UAPA) என்ற ஆள்தூக்கிச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறைபடுத்துகின்றனர். இந்தியாவுக்கு தடுப்பு நடவடிக்கை சட்டங்கள் தேவையா? தேவையில்லை என்ற பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.
பின்னர் உரையாற்றிய வெல்ஃபர் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அப்துல் ரகுமான் தமது உரையில், “முற்போக்கு கட்சிகள், இயக்கங்களின் இரட்டைநிலைபபாடு கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியில் இருக்கும் போது மற்றொரு நிலைப்பாடு என்று இரட்டை நிலைப்பாடு எடுக்கின்றன. வெறுப்புக்கு எதிராக அனபை விதைப்போம் என்று சொன்ன உமர் காலித்தும் சர்ஜில் இமாமும் சிறையில் இருக்கிறார்கள். கலவரங்களுக்கு தலைமை தாங்கிய அர்ஜூன் சம்பத்துகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராகப் போராடிய A.S. இஸ்மாயில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அநீதிக்கு எதிராக நாம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், சிறைபட்டோர் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று பேசினார்.
கடைசியாக உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தமது உரையில், “ நான் 12 ஊபா வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறேன். பாப்புலர் ஃப்ரண்ட் தடைசெய்யப்பட்ட வழக்கில் நான் அவ்வமைப்பைத் தடை செய்வதற்கான அடிப்படையே இல்லை என்று வாதாடினேன். ஊபா சட்டத்தின் கீழ் யாரேனும் கைதுசெய்யப்பட வேண்டும் என்றால் முதலில் கைதுசெய்யப்பட வேண்டியவர்கள் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தான்” என்று பேசினார்.
இக்கருத்தரங்கத்தின் வாயிலாக இதில் பங்குபெற்ற பல்வேறு அமைப்புகளும் சனநாயக ஆற்றல்களும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தன.
பீமா கோரேகான் வழக்கு, சிஏஏ எதிர்ப்புப் போராட்ட வழக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு, ஹிஸ்புட்– தெஹ் – ரீர் வழக்கு உள்ளிட்ட அனைத்து ஊபா ( UAPA) வழக்குகளிலும் சிறைப்பட்டிருப்போரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஊபா ( UAPA) பிரிவுகளின் கீழ் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்.
ஊபா ( UAPA ) சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமையைக் ( என்.ஐ.ஏ – NIA ) கலைக்க வேண்டும்.
அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய பாசக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தமது தேர்தல் அறிக்கைகளில் இக்கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
கூடவே, ”நீதிமன்றத்தால் பரோல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீண்ட கால இசுலாமிய சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக பரோல் கொடுத்து விடுதலை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை உரையாற்றிய அனைவரும் முன்வைத்தனர்.
அரங்கம் நிறைந்த நிகழ்வாக இது நடந்தேறியது. சரியாக 10 மணிக்கு கூட்டம் முடிவுற்றது. இக்கூட்டத்தில் நிகழ்வுக்கான செலவை ஈடு செய்வதற்காக நிதி திரட்டப்பட்டது. அதில் மொத்தமாக 7980 ரூபாய் தொகையை கூட்டத்தில் கலந்து கொண்டோர் வழங்கினர்.
கூட்டத்தின் நேரலை பதிவைப் பின்வரும் சுட்டியில் காண்க.
https://www.youtube.com/live/6OQNGLyeI24?si=zfQvjXP4uxEDUpXc
https://www.youtube.com/live/6OQNGLyeI24?si=zfQvjXP4uxEDUpXc