இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகள் அன்றாட நிகழ்வாகிவிட்டனவா? – ரியாஸ்

சமகால இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து சமீபத்தில் யூ டியூப் தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தேன். வீடியோவிற்கு வந்த பெரும்பான்மை கருத்துகள் வெறுப்பை உமிழ்ந்தன. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளில் ‘பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்’ என்று வழக்கமாக கூறியவர்கள் இப்போது பங்களாதேஷையும் இணைத்துக் கொண்டார்கள். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் ட்ரோலிங் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் முஸ்லிம்கள் விசயத்தில் ட்ரோலிங்கையும் கடந்து ஒருவித வெறுப்பு வெளிப்படுத்தப்படுவதை இப்போது யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் தொடங்கி சாமான்ய முஸ்லிம் வரை இந்த வெறுப்பின் தாக்கத்தை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்கள்.
சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் ஆர்கனைஸ்ட் ஹேட் என்ற நிறுவனம் இந்தியாவில் 2025இல் நிகழ்த்தப்பட்ட வெறுப்பு பேச்சுகள் குறித்த விரிவான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அரசியல்வாதிகள் தொடங்கி சாதாரண மக்கள் வரை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு எந்தளவிற்கு கட்டமைக்கப்படுகிறது என்பதையும் அது ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுவதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தேர்தல் காலங்களில் உச்சத்தை அடையும் இந்த பேச்சுகள் மற்ற நாட்களிலும் விடுமுறை எடுப்பதில்லை. சிறுபான்மை வெறுப்பு, குறிப்பாக முஸ்லிம் வெறுப்பு, இயல்பான குணமாக மாறிவிட்டதோ என்ற கேள்வியை இப்போக்கு ஏற்படுத்துகிறது.
அரசியல் கூட்டங்கள், மத ஒன்றுகூடல்கள், உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் பேசிய பேச்சுகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ‘ஒரு நபரையோ அல்லது ஒரு குழுவையோ அவர்கள் யார் என்பதன் அடிப்படையில், அதாவது அவர்களின் மதம், இனம், தேசியம், குலம், நிறம், மரபு, பாலினம், அல்லது பிற அடையாளக் காரணிகளின் அடிப்படையில், தாக்குகின்ற அல்லது இழிவுபடுத்தும் அல்லது பாகுபாடு காட்டும் மொழியைப் பயன்படுத்தும் பேச்சு, எழுத்து அல்லது நடத்தை சார்ந்த எந்தவொரு தகவல் தொடர்பும் வெறுப்பு பேச்சாகும்’ என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
ஒரு பேச்சு பேசப்படும் சூழல், அதனை பேசுபவர், அதன் நோக்கம், அதன் உள்ளடக்கம், அதன் பரப்பளவு, மற்றும் அதனால் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு ஆகிய ஆறு காரணிகளும் ஒருசேர அமையும் போதுதான் ஒரு பேச்சு வெறுப்புப் பேச்சாக கருதப்படும். ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட ரபாத் செயல்திட்டம் இந்த வரையறைகளை வரைந்துள்ளது. இவற்றை அளவுகோலாக வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்துத்துவ கும்பல்கள் மேற்கொள்ளும் வெறுப்பு பேச்சுகளை வெறும் கோபத்தின் வெளிப்பாடு என்று கூற முடியாது. சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய பேச்சுகள் அவர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு அறைகூவல் விடுக்கின்றன. காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப புதுப்புது கட்டுக்கதைகளைக் கண்டுபிடித்து வெறுப்புப் பேச்சுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2024ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2025இல் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சுகள் அவை இந்திய சமூக மற்றும் அரசியல் தளத்தில் ஓர் அங்கமாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. 2024இல் 1165 வெறுப்பு பேச்சுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2025இல் இந்த எண்ணிக்கை 1318ஆக அதிகரித்துள்ளது. 2023இல் 668 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளின் தலைவர்கள் வெறுப்புப் பேச்சுகளை பேசுவதில் முன்னணியில் உள்ளனர். இந்த போக்கு அடிமட்டம் வரை படர்ந்துள்ளது. முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அயலார்களாகவும் தேச துரோகிகளாகவும் மதம் மாற்றுபவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் இந்தியப் பண்பாட்டை சிதைப்பவர்களாகவும் நிலத்தையும் வளங்களையும் அபகரிப்பவர்களாகவும் சித்திரிப்பதில் இந்துத்துவ தலைவர்களும் மத தலைமைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2025 வெறுப்புப் பேச்சு பட்டியலில் உத்தர்காண்ட் முதல் அமைச்சர் புஷ்கர் சிங் தாமி முதல் இடத்திலும் அன்தராஷ்ட்ரிய இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
1947ற்கு முன்னர் பல்வேறு மாகாணங்களாகவும் குறுநில அரசுகளாகவும் இருந்த இந்திய துணைக் கண்டம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கப்பட்டதை ‘தேச பிரிவினை’ என்று குறிப்பிடப்பட்டு அதற்கான பழி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் மீதும் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டை மையமாக வைத்தே வெறுப்புப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. இப்போது மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சின் பல்வேறு கிளைகளுக்கும் ஆணி வேராக இந்த குற்றச்சாட்டே அமைந்துள்ளது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வெறுப்புப் பேச்சுகள் 2014ற்கு பிறகு மைய நீரோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன. முஸ்லிம்கள் நமது நிலங்களையும் வேலைகளையும் அபகரித்து விடுவார்கள், நம்மைவிட மக்கள் தொகையில் முந்தி விடுவார்கள், காங்கிரஸ் வெற்றி பெற்றால் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கற்பனைகளும் சதி கோட்பாடுகளும் மக்கள் மன்றத்தில் முன் வைக்கப்பட்டன. பத்து வருடங்களுக்கு முன் ’லவ் ஜிகாத்’ என்று ஒரேயொரு பொய் பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் இன்று ஹலால் ஜிகாத், பாப்புலேசன் ஜிகாத், யுபிஎஸ்சி ஜிகாத், லேண்ட் ஜிகாத், வோட் ஜிகாத், எஜூகேஷன் ஜிகாத், ரயில் ஜிகாத், எக்கனாமிக் ஜிகாத், ஹலால் ஜிகாத், நார்காடிக் ஜிகாத் என்று அனைத்து சொற்களுடனும் ஜிகாத் என்ற வார்த்தை இணைக்கப்பட்டு வெறுப்பு தகவல்கள் பரப்பப்படுகின்றன.
முஸ்லிம் ஹோட்டல்களில் எச்சிலை துப்பி உணவுகளை பரிமாறுகிறார்கள் என்ற முட்டாள்தனமான பிரச்சாரம் சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மதச்சார்பின்மை உச்சத்தில் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்ளும் கல்வியறிவு அதிகம் கொண்ட கேரளாவில்தான் இந்த பிரச்சாரம் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் காலங்களில் இந்த வெறுப்புப் பேச்சுகள் உச்சத்தை அடைகின்றன. ரோஹிங்யா மற்றும் வங்கதேச வந்தேறிகள் என்ற வார்த்தைகளை தேர்தல் காலத்தில் நம்மால் அதிகமாக கேட்க முடிகிறது. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாத பாஜக தலைவர்கள் வெறுப்புப் பேச்சுகள் மூலம் வாக்குகளை அறுவடை செய்து வருகின்றனர். வெறுப்புப் பேச்சுகளை பேசும் பாஜக அமைச்சர்களை தேர்தல் காலங்களில் மட்டுமே நம்மால் காண முடிகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களைக் கடந்து தற்போது உள்ளாட்சி தேர்தல்களிலும் வெறுப்புப் பேச்சுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில், ‘காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஒரு கான் மும்பையின் மேயராக பதவி ஏற்பார்’ என்று பாஜக தலைவர்கள் பேசினர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக முஸ்லிம் மேயர் வேட்பாளர் முன்னிறுத்தப்படாத போதும் இந்த பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டனர். எந்த கட்சியும் அரசியலில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்பது வேறு கதை. வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டிற்கு உட்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகமானவர்கள் பாஜக-வை சேர்ந்தவர்கள் என்று இஸ்லாமோஃபோபியா ஸ்டடீஸ் சென்டர் 2019இல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வகுப்புவாத குற்றங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் அவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத வேட்பாளர்களைவிட வெற்றி பெறுவதற்கு நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் 2019 அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வருடம் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வெறுப்புப் பேச்சுகள் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் சந்தேகமும் எழுவதை தடுக்க இயலவில்லை.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கும் புறக்கணிப்பிற்கும் இந்த வெறுப்புப் பேச்சுகளே தொடக்கப் புள்ளியாக உள்ளன. முஸ்லிம்கள் வீடுகளிலும் வீதிகளிலும் விடுதிகளிலும் கல்வி நிலையங்களிலும் வியாபார தளங்களிலும் குறிவைக்கப்படுவதற்கு எங்கோ நிகழ்த்தப்பட்ட வெறுப்புப் பேச்சு காரணமாக இருக்கிறது. ‘வெறுப்புப் பேச்சு வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிடுவதில்லை. அது வன்முறைக்கான ஒரு சமிக்ஞை. ஒரு சமூகத்திற்கு எதிரான வெறுப்பான கருத்துகள் பொதுவெளியில் அங்கீகரிக்கப்படும் போது, அது அந்த சமூகத்திற்கு எதிரான நேரடித் தாக்குதல்களை சட்டப்பூர்வமாக்குகிறது அல்லது நியாயப்படுத்துகிறது’ என்று நாதன் லீன் தனது ‘இஸ்லாமிய வெறுப்புத் தொழில்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
வெறுப்பு பேச்சுகள் ஏற்படுத்திய தவறான சிந்தனையின் காரணமாக முஸ்லிம்களுக்கு வீடு கிடைப்பதும், வேலை கிடைப்பதும், ஏன் பொது போக்குவரத்துகளில் இடம் கிடைப்பதும் கூட பிரச்சனையாக உள்ளது. முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் புறக்கணிப்பு, முஸ்லிம் வியாபாரிகள் மிரட்டப்படுவது என முஸ்லிம்களின் பொருளாதார நிலையும் பாதிக்கப்படுகிறது. மிக முக்கியமாக, முஸ்லிம்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளும் வெறுப்புப் பேச்சுகளால் புறந்தள்ளப்படுகின்றன. முஸ்லிம்களை மற்றவர்களாக (Others) சித்திரிப்பதில் வெறுப்புப் பேச்சுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் நாதன் லீன் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் புறக்கணிப்புகளையும் கடந்து அரசின் கொள்கை முடிவுகளாகவும் சட்டங்களாகவும் வெறுப்புப் பேச்சுகள் பரிணாமம் அடைந்துள்ளன. கடும் பிரிவுகளுடன் பல்வேறு மாநிலங்களில் மத மாற்ற தடைச் சட்டங்கள் இயற்றப்படுவதை, லவ் ஜிகாத் மற்றும் மத மாற்றம் குறித்த வெறுப்புப் பேச்சுகளுடன் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் கடந்து முஸ்லிம்களை அழிப்பதற்கு இந்துக்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று அறைகூவல் விடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள், பாஜக அரசாங்கங்கள் இவை குறித்து அக்கறை கொள்வதில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. பாஜக தனித்து அல்லது கூட்டணியில் ஆட்சி செய்யும் மாநிலங்களில் 1,082 வெறுப்புப் பேச்சுகள் பேசப்பட்டுள்ளன. பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் 154 வெறுப்புப் பேச்சுகள் பேசப்பட்டுள்ளன. வெறுப்புப் பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் பேசுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், பாஜக முதல் அமைச்சர்களே வெறுப்புப் பேச்சுகளை பேசுவதில் முன்னணியில் உள்ள நிலையில், எங்கிருந்து நடவடிக்கை எடுக்கப்படும்?
முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் வெளிப்படையாக பேசிய சாமியார் நரசிங்கானந்த் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2025இல் வெறுப்புப் பேச்சை பேசிய மத தலைவர்களில் அவர் முன்னணியில் உள்ளார்.
வெறுப்புப் பேச்சுகளை பேசும் இந்துத்துவவாதிகள் மீது அரிதாகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறையில் அடைத்தாலும் இரண்டு வாரங்களில் எளிதாக பிணையில் வந்து விடுகின்றனர். ஆனால், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேசிய முஸ்லிம்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். வெறுப்புப் பேச்சுகள் விவகாரத்தில் தானாக முன் வந்து வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டிய நீதிமன்றங்களும் அமைதியாகவே உள்ளன. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் மீது சுமத்தப்பட்ட வெறுப்புப் பேச்சு வழக்கில் ராம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதன் காரணமாக அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் ‘முஸ்லிம்களை சுட்டுத் தள்ளுங்கள்’ என்று 2020இல் டெல்லியில் வெளிப்படையாகவே வெறுப்பைக் கக்கிய பாஜகவின் கபில் சர்மா தற்போது டெல்லியின் கேபினட் அமைச்சராக வலம் வருகிறார். வெறுப்புப் பேச்சு வழக்குகளில் வழங்கப்படும் நீதியும் இரட்டை நீதியாகவே உள்ளது.
வெறுப்புப் பேச்சு வழக்குகளில் புகார்களுக்கு காத்திராமல் காவல்துறை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று 2022இல் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுரையை காவல்துறை முறையாக கடைப்பிடித்திருந்தால், அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தால் வெறுப்புப் பேச்சுகளின் எண்ணிக்கை இப்படி அதிகரித்துக் கொண்டிருக்காது. நீதிமன்ற உத்தரவுகள் உள்ள போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஷஹீன் அப்துல்லாஹ் என்பவர் தொடுத்த அந்த வழக்கில் அவர் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முறையிட்ட போது, ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்போது கடுமையாக எச்சரித்தது. ஆனால், நிலைமையில் எந்த மாற்றமும் இதுவரை இல்லை என்பதை சமீபத்திய அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
வெறுப்புப் பேச்சிற்கு எதிராக கர்நாடகா அரசாங்கம் சமீபத்தில் கொண்டு வந்த வெறுப்புப் பேச்சு தடுப்பு மசோதா சிறிதளவு நம்பிக்கையை அளிக்கிறது.
அரசாங்கத்தை விமர்சிக்கும் பதிவுகளை நீக்குவதில் மும்முரமாக செயல்படும் சமூக ஊடகங்கள் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. பல நிகழ்வுகளில் வெறுப்புப் பேச்சுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட போதும் அவற்றை ஃபேஸ்புக்கும் யூ டியூப்பும் தடுக்கவில்லை. கம்யூனிட்டி ஸ்டேன்டர்ட் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் வாய்ஜாலங்களை நிகழ்த்தி வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.
நாட்டின் வடக்கு, மத்திய, மற்றும் மேற்கு பகுதிகளில் வெறுப்பு பேச்சுகள் அதிகளவில் பேசப்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 266 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. கடந்த வருடம் உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெறாத போதும் தேர்தல் நடைபெற்ற முந்தைய ஆண்டைவிட வெறுப்பு பேச்சுகள் பத்து சதவிகிதம் அதிகரித்துள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற்ற முந்தைய ஆண்டைவிட வெறுப்புப் பேச்சுகள் சற்று குறைந்துள்ளன. தமிழ்நாட்டில் வெறுப்பு பேச்சு நிகழ்வு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து, அவர்களுக்கு எதிரான சிந்தனைப் போக்கையும் செயல்பாடுகளையும் உருவாக்குவது ஒட்டுமொத்த தேச நலனிற்கும் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வெறுப்பு பேச்சிற்கு எதிரான வலுவான சிந்தனை பொது சமூகத்தில் உருவாக வேண்டும். வெறுப்பின் முகவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதுடன் சமூக ரீதியான புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டால்தான் வெறுப்புப் பேச்சுகளுக்கு முடிவுகட்ட முடியும்.
Hate Speech Events in India அறிக்கையின் முக்கிய தகவல்கள்
2025இல் இந்திய சிறுபான்மையினருக்கு எதிரான 1318 வெறுப்புப் பேச்சுகளை இந்தியா ஹேட் லேப் பதிவு செய்துள்ளது. இது கடந்த வருடத்தைவிட 13 சதவிகிதம் அதிகமாகும். 2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 97 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சராசரியாக ஒரு நாளில் நான்கு வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.
1,289 வெறுப்புப் பேச்சுகள் (98 சதவிகிதம்) முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்துள்ளன. இதில் 1,156 நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் 133 நிகழ்வுகள் கிறிஸ்தவர்களையும் அவர்களையும் இணைத்துப் பேசப்பட்டன.
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 12 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 41 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.
உத்தர பிரதேசம் (266), மகாராஷ்ட்ரா (193), மத்திய பிரதேசம் (172), உத்தர்காண்ட் (155), டெல்லி (76) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் வெறுப்புப் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1,164 வெறுப்புப் பேச்சுகள் (88 சதவிகிதம்) பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் ஏழு மாநிலங்களில் 154 வெறுப்புப் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 34 சதவிகிதம் குறைந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ராம நவமி ஊர்வலங்கள் நடைபெற்ற ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் (158) வெறுப்புப் பேச்சுகள் பேசப்பட்டுள்ளன.
பல்வேறு கற்பனை ஜிகாத்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட வெறுப்புப் பேச்சுகள் எண்ணிக்கை 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியவை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் (22 சதவிகிதம்) வெறுப்புப் பேச்சுகள் பேசப்பட்டுள்ளன.
71 வெறுப்புப் பேச்சுகளை நிகழ்த்திய உத்தர்காண்ட் முதல் அமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெறுப்புப் பேச்சு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
இந்து சாமியார்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் 145 வெறுப்புப் பேச்சுகளைப் பேசியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகமாகும்.
ஃபேஸ்புக் மூலமாகவே அதிக எண்ணிக்கையில் (942) வெறுப்புப் பேச்சு வீடியோக்கள் பரவியுள்ளன. யூடியூப் இரண்டாவது இடத்தில் (246) உள்ளது.
References:
Report 2025: Hate Speech Events in India, Centre for the Study of Organized Hate
Islamophobia in India Stoking Bigotry, Islamophobia Studies Centre
இஸ்லாமிய வெறுப்புத் தொழில், நாதன் லீன், அடையாளம் பதிப்பகம்
வெறுப்பின் முகவர்கள், புதிய விடியல், ஜனவரி 16-31, 2022
வெறுப்பு பேச்சுகளை தடுப்பது யார்?, புதிய விடியல், நவம்பர் 16-30, 2022