சனவரி 30 – காந்தியார் ஆர்.எஸ்.எஸ். ஆல் படுகொலை செய்யப்பட்ட நாள்! – மதவெறி எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!

காந்தியைக் கொன்றவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்!
இந்தியா அனைத்து மதத்தவருக்குமான நாடு என்பதிலிருந்து இதை ஓர் இந்து தேசமாக கட்டமைத்து வருகின்றனர்.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாசக அரசின் செயல்திட்டங்கள் காட்டாற்று வெள்ளம் போல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இசுலாமியர்களுக்கு எதிரான வன்கும்பல் அடித்துக் கொலைகள் அன்றாடம் கடந்து செல்லக் கூடிய செய்தியாக மாறிவிட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை சிறப்பு தீவிர வாக்காளர் மீளாய்வு ( SIR) என்ற பெயரில் செயல்படுத்துகின்றனர்.
இசுலாமியர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டது
வஃபு வாரிய சட்டத் திருத்தத்தின் பெயரால் வஃபு சொத்துகளை கைப்பற்ற சட்டம் இயற்றப்பட்டுவிட்டது..
இவற்றுக்கெதிராக போராட தளைப்பட்ட நூற்றுக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் ஊபா ( UAPA) சட்டத்தின் கீழ் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் இந்நாட்டு இசுலாமியர் இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றப்பட்டுவிட்டனர்!
எங்கோ இருக்கும் தூரத்துப் பிசாசு என்று அலட்சியமாக இருந்த தமிழர்களின் காலையும் பாசிச பாசக என்ற பாம்பு சுற்றிவிட்டது.
காந்தியார் கொல்லப்படுவதற்கு முன் தில்லியில் நடைபெற்று வந்த வன்முறைகளுக்கு எதிராகப் பட்டினிப் போராட்டத்தில் இறங்கினார். அப்போது அவரது போராட்டத்தை முடித்து வைக்க, அனைத்து சமயத்தவர்கள் இரண்டு இலட்சம் பேர் கையொப்பமிட்டு ஓர் உறுதி மொழிப் பத்திரத்தைக் கொடுத்தனர். அது பின்வருமாறு.
“தில்லியைச் சேர்ந்த இந்து, சீக்கிய, கிறித்துவ, ஏனைய குடிமக்களாகிய நாங்கள்,” அமைதி சூழவும் பாதுகாப்பாகவும் தன்மானத்துடனும் தில்லியில் வாழவும், இந்திய ஒன்றியத்தின் நன்மை, நல்வாழ்வுக்காக உழைக்கவும் இந்திய ஒன்றியத்தின் இஸ்லாமியக் குடிமக்களுக்கு நம்மில் மற்றவர்களுக்குள்ள அதே சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை உளமார அறிவித்துக் கொள்கிறோம். ”
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற ஓர் உறுதிமொழியை எடுக்க வேண்டிய நிலை தமிழ்நாட்டிலேயே ஏற்பட்டுவிட்டது.
திருப்பரங்குன்றத்தை மையமிட்டு மலை யாருக்கு சொந்தம்? முருகனுக்கா? சிக்கந்தருக்கா? என்ற பிரச்சனையைக் கிளப்பியுள்ளது ஆர்.எஸ்.எஸ.
நீதிமன்றத்தைப் பயன்படுத்தி சிக்கந்தரை வழிபடுவோருக்கும் இருக்கும் ஆடு, கோழி பலியிடும் உரிமை, சந்தனக்கூடு விழாவில் கலந்து கொள்ளும் உரிமை போன்றவற்றைப் பறித்துவிட்டனர்.
இப்போது கோயிலை மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் ஒப்படைப்பதற்கான சதி நடந்து கொண்டிருக்கிறது.
முருகன் இந்துக் கடவுள், தமிழ் கடவுள் என்று சொல்லிக் கொண்டு மதப் பெரும்பான்மைவாதத்தை செயல்படுத்தப் பார்க்கின்றனர்.
இப்போது தமிழ் மக்களிடம் நாம் சொல்ல வேண்டிய செய்தி இதுதான்.
முருகனை வழிபடுவோரது எண்ணிக்கை சிக்கந்தரை வழிபடுவோரின் எண்ணிக்கையைவிட அதிகம் என்ற காரணத்திற்காக சிக்கந்தர் வழிபாட்டு உரிமையைப் பறிக்க முடியாது. அப்படி பறிப்பதற்குப் பெயர்தான் மதப்பெரும்பான்மைவாதம் ஆகும்.
மாறாக முருகனை வழிபடுவோருக்கு இருக்கும் அதே உரிமை சிக்கந்தரை வழிபடுவோருக்கும் உண்டு என்பதுதான் சனநாயகம். அதை செயல்படுத்துவதற்குப் பெயர்தான் மதநல்லிணக்கம் ஆகும்.
எனவே, காந்தியார் படுகொலை செய்யப்பட்ட இந்நாளில், திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இந்துக்களாக அறியப்படும் தமிழர்களுக்கு இருக்கும் அதேஉரிமை
கிறித்தவ, இசுலாமிய தமிழர்களுக்கும் உண்டு என்பதை உளமார ஏற்றுக்கொள்கிறோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம்! மத நல்லிணக்கம் காப்போம்! என்று உறுதியேற்போம்!