ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழினவழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

19 Jan 2026

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை

கடந்த   சனவரி 11  ஆம் நாள் ஈழத்  தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது.

அதுபோலவே, ’தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலக  தமிழர்  மாநாடு பாராட்டுக்குரியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்து பண்பாடு, கலை, இலக்கியம், வணிகம், தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்து பேசுவது தமிழர்கள் கூட்டுப் பலத்துடன் உயர்வதற்கு உதவும் என்ற வகையில் இம்முயற்சி தொடர வேண்டும்.

தமிழீழ தாயகத்தில்   இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது ஈழத் தமிழர்களின் பக்கம் தமிழ்நாடு நிற்கிறது என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னான இந்த 16 ஆண்டுகளில் இலங்கை தீவின் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்புக்கு ( Structural Genocide) ஆளாகிவருகின்றனர். நிலப்பறிப்பு, பெளத்த விகாரைகளை நிறுவி பண்பாட்டுத் திணிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், படைக் குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப் படுகின்றன. அத்தகைய ஓர் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பின் பகுதியாகத்தான் புதிய அரசியல்

அமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் மூலம் ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தப் பார்க்கின்றது சிங்கள பெளத்தப் பேரினவாதம்.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி அரசமைப்பு மாற்றப்பட்டு கூட்டாட்சி ஏற்பாடு தமிழர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு பன்னாட்டு சட்டநெறிகளின்படி ஈடுசெய் நீதியாக ( Remedial Justice)  தமிழர்களின் இறைமை மீட்டளிக்கப்பட வேண்டும். 

கடிதத்தில் குறிப்பிட்டது போல் ஈழத் தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது தமிழர்களின் கூற்று மட்டுமல்ல, நம்மைத் தாண்டி பலரும் அதை அறிந்தேற்று வருகின்றனர். எடுத்துக்காட்டாக, 2011 ஆம் ஆண்டு ஐ.நா. அமைத்த மூவல்லுநர் குழு 40,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு ஐ.நா. உள்ளக ஆய்வறிக்கை 70,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லியுள்ளது. கனடா மே 18 ஆம் நாளை தமிழின அழிப்பு நாளாக ஏற்றுள்ளது. அண்மையில் ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிந்தேற்றுள்ளது.

மேலும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்பு குற்றங்களுக்குப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை துச்சமாக மதித்து சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு துணை செய்தே வந்துள்ளது.  எனவே, தமிழ்நாட்டு  சட்டப்பேரவை தீர்மானத்தை நினைவுபடுத்தி, இனவழிப்பையும் கருத்தில் கொண்டு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறோம்.

மேலும், இனவழிப்புக்கு  நிதியும் அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பும் கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை பன்னாட்டு அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு தனித்தும் இந்திய அரசின் வழியாகவும் தொடர்ந்து முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு ஈழத் தமிழரின் அரசியல் தீர்வுக்காகவும் இனவழிப்புக்கு நீதி பெறவும் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

      தோழமையுடன்

                                                            கொளத்தூர் தா.செ. மணி

                                                   தலைமை ஒருங்கிணைப்பாளர்,

                                       ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

                                                                 94433 59666

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW