இந்திய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (Indian Nuclear Energy Watch (I-NEW)) விளக்கவுரை

17 Jan 2026

அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ( NAAM)  28-12-2025  அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

’SHANTI’ என்பது தீர்வல்ல!

அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை இந்தியா ஏன் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் சொல்லும் காரணங்கள்?

  • இந்தியாவின் நீர் மற்றும் காற்று வளம் வரம்புக்குட்பட்டது, மேலும் சூரிய மின்னாற்றுலுக்காக மிக அதிகளவிலான நிலத்தை பயன்படுத்துவது என்பது இயலாத காரியம். இவை வரம்புக்குட்பட்டதும், அதிக பொருட்செலவும் ஏற்படுத்தவல்லவை.
  • நீர் – காற்று – சூரிய ஆற்றல் மட்டுமே மனிதவள மேம்பாட்டு குறியீட்டை(HDI (Human Development Index)) 0.9-ற்கு மேல் அதிகரிக்க  போதுமானதாக இருக்காது.         
  • இறுதி ஆற்றல் பயன்பாட்டில்(FEC (Final Energy Consumption) ) மின்சாரத்தின் அளவு 22 விழுக்காடு மட்டுமே உள்ளது. இது நிச்சயமாக  குறிப்பிட்டத்தக்க அளவு அதிகரிக்கப்பட வேண்டும்.
  • சூரிய மற்றும் காற்று சக்தியை போலல்லாமல் அணுமின் சக்தியின் உற்பத்தியானது காலநிலையையோ நாளின் நேரத்தையோ சார்ந்தது அல்ல.

இந்தியாவிற்கான நன்மைகளாக கூறப்படுபவை எவை?

  • எரிசக்தி கட்டமைப்பிற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது
  • அதிகளவு கன நீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • அழுத்தமிக்க கன நீர் உலை (Pressurized Heavy Water Reactor – -PHWRs) அமைப்பதற்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு உள்ளது.
  • பயன்படுத்தப்பட்ட அணு எரிப்பொருட்களிலிருந்து மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்க தேவையான தொழல்நுட்பங்கள் உள்ளன.
  • அணுக்கழிவுகளைக் கையாள தேவையான தொழில்நுட்பங்கள் உள்ளன.
  • 1980களில் உருவாக்கப்பட்ட அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) அணுமின் நிலையங்களை முறைப்படுத்த தேவையான திறன்களைக் கொண்டுள்ளது. .
  •  எனவே அணுமின் உற்பத்தி என்பது தொழில்நுட்பம், பொருட்செலவு மற்றும் பாதுகாப்பு என அனைத்து வகையிலும் இந்தியாவிற்கு ஏற்ற வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தியாவின் குறைபாடுகள் என்னென்ன?

  • இந்தியாவிற்கு தனியார் நிதி தேவை.
  • உலைகளுக்காக அயல்நாட்டு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.
  • யுரேனியம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

’SHANTHI’ தனியார் முதலீட்டிற்கும், அயல்நாட்டு எந்திரங்களுக்கும், உலகளாவிய சந்தைப்படுத்துதலுக்கும் வழிவகுக்கும்! SHANTI! SHANTI! SHANTI என்பதன் மூலம் இந்தியா இனி எப்போதும் மகிழ்ந்திருக்க முடியும்!

ஆனால், அணுசக்தியின் உண்மை நிலவரம் எவ்வாறு உள்ளது? மிக மிக மாறுபட்டிருக்கிறது!

[1] அதிக நிதி மற்றும நேர செலவு: “நவீன அணு மின்சாரம் அதன் வெற்றியால் அல்லாமல் தோல்வியாலேயே வரையறுக்கப்படுகிறது.” பிரான்சின் 1,600 மெகவாட் EPR (European Pressurised Reactor) உலையானது அதீத செலவீனத்தையும் கால தாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்தின் Olkiluoto-3 உலை 12 ஆண்டு கால தாமதத்திற்கு பின்னே திறக்கப்பட்டது. இங்கிலாந்தில்(UK) உள்ள ஹிங்க்ளி பாயிண்ட் சி உலை அதீத பொருட்செலவை சந்தித்து வருவதுடன் வரலாற்றிலேயே அதிக செலவில் மின் உற்பத்தியை செய்து வருகிறது.

[2] அதிகரிக்கும் நிதிச்சுமை: தனியார்மயம் என்பது அரசின் நிதிச்சுமையை குறைக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மை அதற்கு மாறாக உள்ளது. அதீத மூலதன செலவு, நீண்ட கட்டுமான காலம் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் போன்றவற்றின் காரணமாக தனியார் முதலீட்டாளர்கள் உறுதியான விலை, அரசாங்க காப்பீட்டு உதவி, எரிபொருள் விநியோக உதவி மற்றும் சொத்து பாதுகாப்பு போன்ற சலுகைகளையும், உத்திரவாதங்களையும் வேண்டி கோரிக்கை விடுக்க நேரிடும்.

[3] தோல்வியடைந்த திட்டங்களினால் ஏற்படும் பிரச்சனைகள்: ஒருவேளை அணுசக்தி சார்ந்த நிறுவனங்களோ அல்லது திட்டங்களோ தோல்வியடைந்தால் அவற்றை சூரிய மற்றும் காற்று மின்சார திட்டங்கள் போல் அப்படியே விட்டுவிட முடியாது. செயல்படாத உலைகளுக்கும் எரிபொருள், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படுகிறது. இந்த மிகப்பெரிய இழப்பை இந்திய அரசாங்கமே கையாள வேண்டியிருக்கும்.

[4] சிறிய மாதிரி உலை எனும் மாயை: அரசாங்கமானது இத்தகைய சிறிய மாதிரி உலைகள் செலவுகள் மற்றும் அபாயங்களை குறைக்கும் என வாதிடுகிறது. ஆனால், இவை உலகில் எங்கும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படவில்லை. மேலும், இவை புதுப்பிக்கதக்க ஆற்றல்களை விட மலிவானதாக இல்லாமலும் போகலாம். 

[5] அணுசக்திக்கு எதிரான போக்கு: கடந்த பத்தாண்டில் மட்டும் புதுப்பிக்கதக்க ஆற்றலின் விலை 90 விழுக்காட்டிற்கு கீழ் குறைந்துள்ளதுடன் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் அவற்றின் விலை மென்மேலும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. சேமிப்பு தொழில்நுட்பங்களும் இதே போக்கினையே கொண்டுள்ளன. இன்று சூரிய ஆற்றலை 22 விழுக்காடு மின்சாரமாக மாற்றும் நிலை உள்ள நிலையில் perovskite-cum-silicon  என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இது விரைவில் 44 விழுக்காடாக அதிகரிக்கும் நிலை உள்ளது. இதேபோல பெரிய காற்றாடிகளின் மூலம் காற்றின் வேகம் மித வேகமாக இருக்கும்போதும் காற்றாலைகளை இயக்க முடிவதால் காற்றாலைகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கக்கூடும்.  இவற்றின் காரணமாக சூரிய மற்றும் காற்று சக்தியின் விலை குறையக்கூடும். மாறாக, அணுசக்தி கட்டமைப்புகளை அதிகரிப்பதன் மூலம் அவற்றின் விலை நிச்சயமாக குறையாது.

[6] வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள்: காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் கவலைகளினால் புதிய தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன. பச்சை ஹைட்ரஜன் மற்றும் அதிக கால சேமிப்பு போன்ற தொழில்நுட்பங்கள் விரைவில் ஆற்றல் சார்ந்த சந்தைகளை புரட்டிப்போட இருக்கின்றன. மேலும், உலகளாவிய மின்சார வணிகமானது புதிய கட்டத்தை எட்டவுள்ளது. சவுதி அரேபியாவின் மித மிஞ்சிய சூரிய சக்தியை கடலுக்கடியில் குழாய்கள் அமைத்து இந்தியாவிற்கு விற்பனை செய்யும் திட்டம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாகும்.

[7] முட்டாள்தனமான செயற்பாடுகள்: 100 ஜிகாவாட் என்று உத்திரவாதம்  அளிப்பது இந்தியா அடுத்த 60 முதல் 80 ஆண்டுகளுக்கு கடினமான மற்றும் அதிக செலவுமிக்க தொழில்நுட்பத்தில் சிக்கிக்கொள்ள வழிவகுக்க நேரிடும். தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்திற்கும் 2047ம் ஆண்டிற்கும் இடையில் எவ்வளவு புதிய தொழில்நுட்பங்கள் வரும் என்பது நமக்கு தெரியாது. எனவே துறை ரீதியான இலக்குகளை இப்படி பல பத்தாண்டுகளுக்கு முன்னதே நிர்ணயிப்பது தவறான முடிவாகும்.

[8] சிறந்த உத்தி தேவை: வாய்ப்புகளை திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும். குறைந்த செலவும், நெகிழ்வுத்தன்மையும் மிக்க  தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பரிமாற்றம் மற்றும் சேமிப்பு முறைகளை விரிவுப்படுத்த வேண்டும். ஆய்வுகளில் முதலீடு செய்ய வேண்டும். எல்லை கடந்த மின்சார வணிகத்தை நிறுவ வேண்டும். முடிவாக சொல்வது என்னவெனில், மாற்றமடையாத நிலையான ஒரு முறையை தவிர்த்து நெகிழ்வுதன்மைகளை உள்ளடக்கிய முறைகளே விதியாக இருக்க வேண்டும். மேற்சொன்ன காரணங்களாலேயே, ’SHANTI’ என்பது தீர்வல்ல!

Sources:

[1] R. B. Grover, “A bold step amid an ambitious nuclear energy target,” The Hindu, December 19, 2025.

[2] Swaminathan SA Aiyar, “Push, not rush. India shouldn’t lock itself into nuclear power,” The Times of India, December 7, 2025.

 மொழிபெயர்ப்பு – தோழர் விக்னேஷ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW