பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 4

03 Jan 2026
tiruparankundram-2

பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்?

திருப்பரங்குன்றமலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை  இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்குமான சிக்கலாக மாறியுள்ளது.

100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட நிலங்கள், தர்கா தவிர முழு மலையும் கோவில் சொத்து என தேவஸ்தானம் தொடர்ந்த பல வழக்குகள் நடந்து வந்துள்ளன. நெல்லித்தோப்பு, தர்கா இடம், கொடிக்கம்பப் பகுதி, தர்கா படிக்கட்டுப்பாதை தொடர்பான வழக்குகள் அவை. பல்வேறு தீர்ப்புகளும் மலையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் தர்கா நிர்வாகத்துக்கே உரியவை என்றே  கூறின.

100 ஆண்டுகளாக சட்டச் சிக்கல்கள் நடந்துவந்தபோதும் இருதரப்பு மக்களும் எந்தவித மோதல்களிலும் ஈடுபடவில்லை என்பதோடு முரண்பாடுகளும் எழுந்திராவண்ணம் வழக்கம்போல் இரண்டு இறைவழிபாட்டிடங்களிலும் வழிபாடுகள் தொடர்ந்தே வந்துள்ளனர் என்பதே வரலாறு.

ஆனாலும் இரு தரப்பின் நியாங்களுக்கான தரவுகளை இன்னமும் கொடுத்துவருகிறார்கள். இந்து அமைப்புகள் இது முருகனின் முதல்படை என்றும் 2500 வருட முருகனின் தலம் என்று சங்கப்பாடல்களைக் கொண்டு நிறுவ முயலுகிறார்கள். இலக்கியச் சான்றுகளையே முதன்மைச் சான்றாக வைத்து அதன் ஆதரவு அறிவாளிகள் பேசிவருகிறார்கள். இக்கோயிலுக்கான தொன்மைத் தொல்லியல் சான்றுகளை அவர்களால் காட்டமுடியாது உள்ளது.

சான்றுகளில் நம்பத்தன்மை வாய்ந்த சங்க காலத்திலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை புறச்சான்றுகள் ஏராளமாக  காணக்கூடியதாக உள்ளவை அனைத்தும் இன்றுவரை சமணம் சார்ந்தவையாகவே உள்ளன.

கி.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. 1908 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு சமணத் துறவிகளுக்காக புரவலர்களால் எடுப்பிக்கப்பட்ட 10 கற்படுக்கைகள் உள்ளன. அதில் வரலாற்றில் ஈழம் என்று சொல்வருகின்ற முதல் கல்வெட்டாகவும் காணப்படும் ஒரு பொறிப்பில்,

எருகாடுர் இழ குடும்பிகன் பொலாலையன்

செய்தா ஆய் சயன் நெடு சாதன்

என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

அதன் அருகிலே 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 5 சமணத் துறவிகளுக்கான நினைவுக் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. கற்படுக்கைகளுக்கானப் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் பெரிதும் சிதைந்துள்ளது.

யார அதிற என்று படிக்கலாம் என அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அ சிதைந்துள்ளதால் அதிட்டானம் எனப்படிக்கலாம் என்கிறார்கள். அதிட்டானம் என்றாலும் படுக்கை என்றே பொருள்.

சிக்கந்தர் மலையின் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று அரிட்டநேமி படாரர் என்னும் சமணத்துறவி வடக்கிருந்து உயிர்நீத்த செய்தியைக் குறிக்கிறது. இது கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள்.

சிக்கந்தர் மலை – காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயில் பக்கவாட்டில் உள்ள சுனையின் மேற்பக்கத்தில் சமணத் தீர்த்தங்கரர்களான மகாவீரர், பார்சுவநாதர் இயக்கிகளுடனான சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. அதற்கான எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. இச்சிற்பங்களுக்கு அடியில் இச்சிற்பங்களை அமைத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. வெண்டி நாட்டுக்குறண்டி என்ற ஊரிலிருந்த சமணப்பள்ளியிலிருந்து வந்த மாணவர் ஒருவரின் பெயர் ஒரு சிலையின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிலையின் அடியில் பலதேவன் என்ற சமணத்துறவி ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை 9,10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கலாம் என்கிறார்கள் தொல்லியல் அறிஞர்கள்.

மலையுச்சி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு முன் உள்ள பெரிய பாறையில் சமணச் சிற்பங்கள் உள்ளன. பாறையின் மீது பாகுபலியின் உருவமும், பார்சுவநாதரின் உருவமும்  புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் சுனையருகே புடைப்புச் சிற்பமாக இருந்த சமணச் சிற்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அழிப்பின் அடையாளங்கள் தெரிகின்றன. பிற்காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை கட்டுவதற்காகப் போட்டியாகப் பொறிக்கப்பட்ட சைவ சிற்பங்களைக் காணலாம். சமணச்சிற்பங்கள் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள்.

மலையின் தென்பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள இன்னொரு சமணக் குடைவரைக் கோயில் சமயக் காழ்ப்புணர்வு காரணமாக சைவக்குடைவரைக் கோயிலாகவும் சமண தீர்த்தங்கரர் பைரவராகவும் மாற்றப்பட்டுள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நம்பகத்தன்மை கொண்ட தொல்லியல் தடங்களின் காலத்தைப் பொறுத்தவரை இம்மலை சங்க காலத்திலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை சமணர்களின் திருத்தலமாக விளங்கியிருப்பதை அறிய முடிகிறது.

மதுரையில் உள்ள எட்டு சமணக் குன்றுகளில் சிறப்பு வாய்ந்த முதல்தலமாக பரங்குன்றையே போற்றிவந்தனர்.

பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி

யருங்குன்றம் பேராந்தை யானை இருங்குன்றம்

என்றெட்டு வெற்பு மெடுத்தியம்ப எல்லார்க்குச்

சென்றெட்டு மோபிறவித் இங்கு?

என்கிறது சமண பெருங்கதை.

சைவம் இம்மலையைத் தன்வயப்படுத்தியபோது சமணர்களின் முதல்வீட்டை தன் முதல்வீடாக அறிவித்தது. வடதிசை என்பது சமணர்களுக்கு புண்ணிய திசை என்பது அறிந்ததே. சைவ- வைணவக் கோயில் விதிப்படி கிழக்கு நோக்கி  இருக்கவேண்டியவையே. ஆனால் மலைக்குன்றுகளில் உள்ள அறுபடைவீடுகளும் வடக்கு நோக்கியே உள்ளன. குடைவரைக் கோயிலின் வாயிலைத் திசைதிருப்பமுடியாதபோது கூடுதலான கட்டிடங்கள் வழியாக மாற்றப்பட்டுள்ளன. பரங்குன்ற மூலவர் சிலை இன்னதென்று அறிவிக்கப்படாமல் உள்ளது. புதிதாக முருகன் உள்ளிட்ட சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோயிலின் உள்ளே உள்ள ஸ்ரீதடாகம் என்னும் இத்திருக்குளத்தைப் பராந்தக நெடுஞ்சடையனின் சாமந்த பூமனாகிய சாத்தன் கணபதி என்பவன் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் திருத்துவித்ததாக இங்குள்ள அவனது வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. ஸ்ரீ தடாகம் என்பது சமணர்களுக்குரியது. இக்கோயில் முன்பு சமணக் கோயிலாக இருந்து சைவக் கோயிலாக மாற்றம் பெற்றபொழுது ஸ்ரீ தடாகம்  திருத்துவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் இது இலட்சுமி தீர்த்தம் என்றும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட சமணத் தடயங்களின்படி இம்மலை சமணர்களின் சிறப்பு வாய்ந்த மலையாக இருந்து பக்தி இலக்கிய காலப்பகுதியில் சைவ ஆதரவு மன்னர்களால் குடைவரை திருத்தப்பட்டு பின்னர் முழுமையான சைவத்தலமாக மாறியுள்ளது.

12 ஆம் நூற்றாண்டில் இசுலாமிய மதப்பிரச்சாரகராக அரபு தேசத்திலிருந்து வந்த சிக்கந்தர் துல்கருணை சூஃபி ஞானியாக மாறினார் என அவரது வரலாறு சொல்கிறது. மலைக்குன்றுகளில் உள்ள தர்காக்கள் பலவும் சமணத் தடயங்கள் கொண்ட இடங்களில் சமண வழிபாட்டுடன் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை அறியும்போது சூஃபி ஞானிகள் தங்களது கொள்கைகளை ஒத்துள்ள சமண மலைகளில் அடக்கம் ஆகியுள்ளனரே தவிர, இந்து மதத் தலங்களைக் கைப்பற்றும் நோக்கம் இத்தர்காக்களுக்கு இல்லை என்று அறியமுடிகிறது. அதன் ஒருபகுதியாகவே திருப்பரங்குன்ற மலையைத் தேர்ந்தெடுத்து சமணப் பாழி போன்ற இடத்தில் உயிர்துறந்துள்ளார்.

இம்மலை தொன்மை அடிப்படையில் சமணர்களுக்கு உரியதாகவும் பின்னர் சைவத்தினுடையதாகவும் பின்னர் அவுலியாக்களின் தலமாகவும் இன்று மத நல்லிணக்க மலையாகப் பரிணமித்துள்ளது. வரலாற்றில் என்றோ நடந்த பகை முரண்பாட்டை இன்று தீர்த்துக் கொள்வது சரியாக இருக்காது. திருப்பரங்குன்றம் ஆதியில் சமணத்தினுடையது என்பது வரலாற்றில் சொல்லப்பட்டே வரவேண்டும். எண்ணிக்கையில் தமிழ்ச்சமணர்கள் குறைவு என்பதே கைப்பற்றுதலுக்கான நியாயமாகாது.

தொல்லியல் அடிப்படையில் பரங்குன்ற மலை சமண மலை என்று தெரிந்திருந்தாலும் திருப்பரங்குன்ற மலையை ஒட்டி நடக்கும் சிக்கல்கள் பெரும்பாலும் இந்து – இசுலாம் என்றே விவாதிப்பது வழக்கமாக இருக்கிறது. மூன்றாவது ஒன்று, தொன்மையான ஒன்று இருப்பதையே புறந்தள்ளும் போக்கு சமகால தமிழக வரலாற்றில் படர்ந்து வருகிறது. இன்றைய சூழலில் இந்த மலையைச் சமணர் மலை என அறிவிக்கக் கோர முடியாது.

ஆனால் கோருவதற்கான நியாயக் காரணிகள் எப்போதும் உண்டு என்பதை மறுக்கக்கூடாது !

( மானுடம் திங்களிதழில் வெளிவந்த கட்டுரை 4 தொடர் கட்டுரையாக வெளியிடப்படுகிறது. மானுடம் இதழ் குழுவுக்கு நன்றி)

  • தோழர் காளிங்கன்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW