பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து – பகுதி – 2

03 Jan 2026

பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து

குறைந்தபட்சக் கோரிக்கைகள், அதிகபட்ச கோரிக்கைகள் பற்றிய வரையறையைக் காண்பதற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ- மாவோ சிந்தனை) வெளியிட்டுள்ள குறிப்பான திட்டத்தில் இருந்து சில வரிகளை தேவை கருதி இங்கே பகிர்கிறேன்.

” ”பாசிச மோடி – ஷா சிறுகும்பல் நடைமுறையில் இருக்கின்ற சமூக நிறுவனங்களையும் அரசியல் நிறுவனங்களையும் உடைத்தெறிந்துவிட்டுதான் அவர்களுடைய பாசிச அரசமைப்பை நிறுவமுடியும். அந்த வகையில் அவர்கள் எதையெல்லாம் முதலில் தாக்கி தகர்க்கிறார்களோ அதையெல்லாம் குறைந்தபட்சம் காப்பாற்றிக் கொள்வதும் அதிலிருந்து பாசிச எதிர்ப்புக் கோரிக்கைகளையும், சனநாயக இயக்கத்தையும் விரிவடையச் செய்வதும் அடுத்தக் கட்டமாக மக்களை அணிதிரட்டுவதற்கு ஏற்ப சனநாயக இயக்கத்தை முழுநிறைவானப் பொருளில் முன்தள்ளுவதும் நமக்கு தேவைப்படுகிறது. இப்போது இருக்கின்ற அரைகுறை சனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பது நம்முடைய குறைந்தபட்சக் கோரிக்கையாகும். அதிலிருந்து, பாசிச சக்திகள் மீண்டும் எழாதபடி சனநாயக  சமூக, அரசியல் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதுதான் பாசிச எதிர்ப்பு காலகட்டத்திற்கான அதிகபட்சக் கோரிக்கையாக அமையக்கூடும்.

குறைந்தபட்சக் கோரிக்கைகள்:

  1. பாசிச மோடி – ஷா சிறுகும்பல் சர்வாதிகாரம் நாடாளுமன்ற மக்களாட்சிமுறை மீது நடத்தும் தாக்குதலை முறியடிப்போம்.  
  2. ஒற்றையாட்சி அதிகாரக் குவிப்பைத் தடுத்து நிறுத்துவோம். மாநிலங்களிடம் உள்ள அதிகாரங்களையும் நிலவும் கூட்டாட்சி வடிவங்களையும் பாதுகாப்போம்.
  3. நிதிமூலதன ஏகபோகங்களுக்கு வழிவகுத்திருக்கும் மோடியின் நிதி, பொருளியல் சீர்திருத்தங்களை ரத்து செய்வோம். ஏகபோகங்களையும் சூறையாடும் முதலாளிகளையும் செல்வக் குவிப்பையும் கட்டுப்படுத்தும் வரிவிதிப்பு மற்றும் நிதி, பொருளியல்  கொள்கைகளை அமலாக்குவோம்

அதிகபட்சக் கோரிக்கைகள்:

  1. மாநிலங்களின், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அதிகபட்ச மாநில அதிகாரத்திற்காகப் போராடுவோம்.
  2. ஏகபோக நிதிமூலதனப் பொருளியல் கொள்கைக்கு மாற்றாக, சந்தைத் தன்னைத்தானே ஒழுங்கு செய்துகொள்ளும் என்றும் தொழில் செய்வது அரசின் வேலையல்ல என்றும் விளக்கப்படுத்தப்படும் புதிய தாராளவாதப் பொருளியல் கொள்கைக்கு மாற்றாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்போம். வேளாண் துறையில் நிலச்சீர்திருத்தத்தை மேற்கொண்டு கூட்டுறவு உற்பத்தியை ஊக்குவிப்போம். சிறுகுறு தொழில் மற்றும் வணிகங்களுக்கு அரசு ஆதரவையும் முதலீட்டையும் உருவாக்குவோம். பணிப்பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் அனைத்தையும் அரசே பொறுப்பேற்கும் சமூகநல அரசு, சமூகநீதிக் கொள்கைகளை அமல்படுத்துவோம்.
  3. இந்துராஷ்டிரக் கொள்கைக்கு மாற்றாக நவீன மதச்சார்பற்ற  தேசிய குடியரசுக் கோட்பாடுகளைக் கொண்ட கூட்டரசுக்காகப் போராடுவோம்!

இந்த கோரிக்கைகளில் குறைந்தபட்ச சனநாயக கோரிக்கை வெற்றியடைவதும் அது வளர்ந்து படிப்படியாக அதிகபட்ச சனநாயக கோரிக்கைகளை நோக்கி பாசிச எதிர்ப்பு முகாம் முன்னேறுவது என்பதும் பாசிச எதிர்ப்பு இயக்கம் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் பயணித்து அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வர்க்க சக்திகளின் கூட்டுச் சேர்க்கை, தலைமை தாங்கும் வலிமை எந்த வர்க்க சக்திக்கு இருக்கிறது ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

பாசிச எதிர்ப்பு இயக்கம் காங்கிரசு, திமுக உள்ளிட்ட மாநில ஆளும்வகுப்புக் கட்சிகளின்கீழ் தலைமை தாங்கப்பட்டு, பாசிச பாசக வீழ்த்தப்பட்டால், இப்போதிருக்கும் அரைகுறை நாடாளுமன்ற சனநாயக எல்லைக்குள் மிக குறைந்தபட்ச சனநாயக கோரிக்கைகளை மட்டும்தான் வெல்ல முடியும். மாறாக, பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் நாடு முழுவதும் உள்ள இடதுசாரிகளும் தேசிய இன இயக்கங்களும் சமூகநீதி இயக்கங்களும் விவசாய – தொழிலாளர் வர்க்கத்தின் சங்கங்களும் ஒருங்கிணைந்த வகையில் பலம்பெற்று செல்வாக்கு செலுத்தினால் பாசிச எதிர்ப்பு இயக்கம் அதிகபட்ச சனநாயகக் கோரிக்கைகளை வெல்லக்கூடும்.

மேற்படி விளக்கத்தை எளிமையாக பின் வருமாறு சொல்லலாம். அதிகபட்ச கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையும் அதன் தோற்றத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிரானதல்ல, ஆனால், எது அதிகபட்சம், எது குறைந்தபட்சம், எங்கிருந்து தொடங்குவது என்பதில் தெளிவின்றி அதிகபட்ச கோரிக்கையை குறைந்தபட்ச கோரிக்கையாக முன்வைத்துக் கொண்டிருந்தால் அது நடைமுறை பொருளில் போகாத ஊருக்கு வழிசொல்லும் வேலைதான்; கோரிக்கை நலனுக்கு எதிரான முன்வைப்புதான்!

  1. இரட்டை ஆட்சி நடத்திவரும் ஆளுநர் இரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் போராட்டத்தின் வழியாகத்தான் ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்டும் கோரிக்கையை மக்கள்மயமாக்க முடியும்.
  2. ஆயிரக்கணக்கில் சிறைபட்டுள்ள ஊபா சிறைவாசிகளை விடுதலை செய் என்ற கோரிக்கையின் வழியாகத்தான் ஊபா சட்டத்தை ரத்து செய், என்.ஐ.ஏ வை கலைத்திடு என்ற கோரிக்கைகளை நோக்கிச் செல்ல முடியும்.
  3. நீட் விலக்கு சட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போராட்டத்தின் வழியாகத்தான் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று என்ற கோரிக்கையை நோக்கிச் செல்ல முடியும்.
  4. தமிழ்நாட்டு சட்டப்பேரவை இயற்றியுள்ள, மாநில பட்டியலுக்குள் வரும் சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் கோரும் போராட்டத்தின்  வழியாகத்தான்  புதிய அதிகாரங்களுக்கான கோரிக்கைகளை மக்கள்மயமாக்க முடியும்.
  5. அதானியின் முதலீடுகளை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்று என்ற போராட்டத்தின் வழியாகத்தான் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைக்கும் கார்ப்பரேட் ஏகபோகத்திற்கும் எதிராக மக்களின் உணர்வை வளர்த்தெடுக்க முடியும்.

இவை போன்ற பல்வேறு குறைந்தபட்சக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களின் வழியாகத்தான் அதிகபட்சத்தை நோக்கிச் செல்ல முடியும். இந்த போராட்டங்களின் உடனடி இலக்காக மோடி – அமிதஷா சிறுகும்பலாட்சியை தூக்கி எறிவது அமைய வேண்டும். ஏனெனில், அது நடக்காமல் எது ஒன்றையும் இந்நாட்டில் உருவாக்கிவிட முடியாது.

தமிழ்நாட்டில் பாசிச பாசக அரசுக்கு எதிரானப் போராட்டக் களம் படுத்துக்கிடக்கிறது. தமிழ்நாட்டு ஆளும்வகுப்புக் கட்சித் தலைமைகள் சிறந்த மேய்ப்பர்கள்; மக்களை  வேலி தாண்டாமல் பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள். பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் தலைமையை தமது கைகளில் வைத்துள்ளனர்; போராட்டக் களங்களையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

மக்களைத் திரட்டிப் போராடுவதில் அக்கறையும் முனைப்பும் கொண்ட இயக்கங்களோ திராவிட எதிர்ப்பு – திராவிட ஆதரவு, திமுக எதிர்ப்பு – திமுக ஆதரவு, பெரியார் எதிர்ப்பு – பெரியார் ஆதரவு என்று பிளவுண்டு கிடக்கின்றன்.

விஜய் பாசிசமா? பாயசமா? என்று கேட்டதைக் கலாய்த்த சனநாயக ஆற்றல்கள், உண்மையில் தமது சொல்லிலும் செயலிலும் பாசிசம் பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்துகிறார்களா? அப்படியான புரிதல் இருப்பின், இப்படி சிதறிக்கிடப்பார்களா?

நாமெல்லோரும் ஒன்றுபட்டு இருந்தாலே நமக்கிருக்கும் வலிமை மிகக் குறைவே. பிளவுபட்டிருந்தால் என்ன வலிமை இருக்கப் போகிறது?

இப்போது நம் முன் உள்ள கேள்வி, நமக்குள் சண்டையிட்டு எதிரியிடம் சரணடையப் போகிறோமா? அல்லது நாம் கோரிக்கை அடிப்படையில் ஒன்றுபட்டு நின்று தமிழ்த்தேசத்தையும் தமிழ் மக்களையும் காத்துக்கொள்ளும் போராட்டத்திற்கு வலுசேர்க்கப் போகிறோமா? என்பதுதான்.

இதில் தூய்மைவாதம், குறுங்குழுவாதம், அகநிலைவாதம் ஆகியவற்றினால் உந்தப்பட்டு ஒன்றுபட மறுக்கும்  தலைவர்கள் வரலாற்றில் கூண்டிலேற்றப் படுவார்கள்!

  • முற்றும்.
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW