பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து – பகுதி – 1

03 Jan 2026

தமிழ்த்தேசிய பேரியக்கம் முன்னெடுத்துள்ள இந்தியாவை முழு கூட்டரசாக்கக் கோரும் முழக்கத்தையும் தமிழக மக்கள் முன்னணி அண்மையில் முன்னெடுத்த ”முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு” என்ற முழக்கத்தையும் எடுத்துக்காட்டாக கொண்டு பாசிச எதிர்ப்புக் காலத்தில் கோரிக்கைகளை எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றி விவாதிக்கும் முயற்சியே இந்த கட்டுரை.

அறிவாசான் வள்ளுவர் பொருட்பாலில் வலியறிதல், காலமறிதல், இடனறிதல் ஆகிய மூன்று அதிகாரங்களை அமைத்துள்ளார். நமக்கும் எதிரிக்குமான வலுச்சமநிலை, குறிப்பிட்ட காலம், இடம் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றீன் அடிப்படையிலேயே போரைத் தொடங்க வேண்டும் என்கிறார்.

ஞாலம் கருதினுங் கைக்கூடும் காலம்

அறிந்து இடத்தாற் செயின்

பாசிச எதிர்ப்புக் காலம்:

காலம் பற்றிய விழிப்பு நிலை மிகவும் முக்கியம். கடந்த 12 ஆண்டுகாலமாக ஒன்றிய அரசில் பாசக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. இதுமற்றுமொரு ஆட்சி என்று சொல்வதற்கு மாறாக கட்டமைப்பு வகைப்பட்ட அடிப்படை மாற்றங்களை செய்து வருகிறார்கள்.

காசுமீரை துண்டாடினர்; சிறப்பு உரிமையை பறித்தனர்.  ஜி.எஸ்.டி. யின் வழியாக வரிக் கொள்ளை. கீழடிக்கு தடை , இந்தித் திணிப்பு, நிதி கொடுப்பதில் பாரபட்சம், தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகளை குஜராத்துக்கு மடைமாற்றுவது, சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் மறுப்பு, மாநிலங்களை உடைக்கச் சதி  என மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு பெரும் பட்டியலையே கொடுக்க முடியும். அரைகுறை கூட்டாட்சியை முழுமையான ஒற்றையாட்சி ஆக்கும் தீவிரத்தில் மோடி – அமித்ஷா சிறுகும்பல்.

நாடாளுமன்ற சனநாயகத்தை செங்கல், செங்கல்லாக பெயர்த்து வருகின்றனர். அமலாக்கத் துறை, நிதி ஆயோக், அமைச்சரவை, என்.ஐ…ஏ, நடுவண் புலனாய்வு நிறுவனம், தேர்தல் ஆணையம் என எல்லா நிறுவனங்களும் மோடியின் சட்டைப் பைக்குள் போய்விட்டன.  அரைகுறை நாடாளுமன்ற சனநாயகத்தை ஒழித்துகட்டும் முயற்சி இவை.

சமய சிறுபான்மையினர் மீதான தாக்குதல், இனவழிப்பு நிகழ்ச்சிநிரல், பார்ப்பனியப் பண்பாட்டுத் தாக்குதல், சமற்கிருதத் திணிப்பு பற்றி தமிழ்நாட்டார் அறியாமல் இல்லை.

அதானி, அம்பானியின் நிதிமூலதன ஏகபோகத்திற்கு அல்லும்பகலும் அரசியல் பொருளியல் துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.

மொத்தத்தில், ஒரே தேசம், ஒரே சந்தை என்ற ஒருங்கிணைப்பில் இந்து, இந்தி, இந்துராஷ்டிரம் என்ற திசையில் ஆர்.எஸ்.எஸ். ம்  மேற்கு இந்திய கார்ப்பரேட்களும் பாசிச அரசை நோக்கி நாட்டை இழுத்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

பாசிசத்தின் குறித்த பண்பாக, ஆளும் வகுப்பின் ஒரு பகுதியை அடித்து துவைப்பது, தனக்குப் பின்னால் ஒரு வலுவான, போர்க்குணம் நிறைந்த மக்கள் திரள் அமைப்பை வைத்திருப்பது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பாசிச இயக்கம் என்பது ஓர் எதிர்புரட்சி இயக்கமும் ஆகும்.

இந்துராஷ்டிரத்திற்கான கட்டமைப்பு வகைப்பட்ட மாற்றங்களை பாசிச பாசக அரசு செய்துவரும் நிலையில், இதை தடுத்து நிறுத்துவதற்கு இந்த சிறுகும்பலாட்சியை ஆட்சியில் இருந்து கீழ் இறக்குவது நமது உடனடி, அவசர இலக்காகும்.

இந்திய சனநாயகம் எவ்வளவு அரைகுறைத் தன்மை கொண்டதாக இருந்தாலும் அதை ஒழித்துக்கட்டுவதை தடுக்காமல் தமிழ்த்தேசியத்தின் வழியாக இந்திய சனநாயகத்தைவிடவும் மேம்பட்ட ஒரு சனநாயகத்திற்கு தமிழ்நாடு போக முடியாது.

எனவே, இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டுதான் அடுத்தகட்ட கோரிக்கைகளுக்குப் போக முடியும். இவர்கள் ஆட்சியில் இருந்து கீழே இறக்கப்படாமல் 2014 க்கு முன்பு நாம் பேணிவந்த எந்த ஒரு கோரிக்கையையும் நாம் முன்னகர்த்த முடியாது..

மோடி – அமித்ஷா – அஜித் தோவல் ஆகியோரின் சிறுகும்பலாட்சியை முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காக கொண்டே அனைத்துப் போராட்டப் பாதையும் வடிவமைக்கப்பட வேண்டும்.

பாசிச இயக்கம் அனைத்து தரப்பார் மீதும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள போராடுவதன் வழியாகத்தான் நமது புதிய கோரிக்கைகளை நோக்கி முன்னேற முடியுமே ஒழிய எழுமாத்திரத்தில் புதிய கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு உழவர் போராட்டம் ஆகும். கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிய போராட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் ( MSP) என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.  மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொண்ட பாசக, MSP க்கு சட்டம் இயற்ற மறுத்துவிட்டது. உழவர் போராட்டத்தின் அழுத்தத்தால் ஆளூம் வகுப்பு கட்சியான காங்கிரசு மேற்படி கோரிக்கையை ஒப்புக்கொண்டது.  பாசக அரசின் தாக்குதலுக்கு எதிராகப் போராடுவதில் தொடங்கி அதிகபட்ச கோரிக்கையை நோக்கி உழவர்கள் முன்னேறுகின்றனர். இந்த அதிகபட்ச் கோரிக்கை நிறைவேறுவதற்கும்கூட பாசிச பாசக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டின் கால்கள் தில்லியுடன் இறுக்கிக் கட்டப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகம் மட்டுப்படுத்தப்படுவதும் பின்னுக்கு தள்ளப்படுவதும் நடந்து வருகிறது. குஜராத்தும் உத்தரபிரதேசமும் அரியானாவும் பீகாரும் மராட்டியமும் மத்திய பிரதேசமும் என இந்தி மாநிலங்களில் பாசக பெறும் இடங்கள் அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகிறது. தமிழ்நாட்டின் விருப்பத்தையும் மீறி தமிழ்நாட்டின் மீது பாசிச பாசக ஆட்சி திணிக்கப்பட்டு வருகிறது.

இது கவலைக்குரியது என்றாலும் இதை புரிந்து கொண்டு காலம் நம்மை எங்கே நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்தே நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். மாறாக கனவுலகில் கால் பதித்து விண்ணை அளந்துவிட முடியும் என்று நினைத்தால் அது மன விருப்பங்களாக வடிந்துபோகும்.

திமுகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக எழுப்பப்படுவதே பாசிச பூச்சாண்டி என்றும் பாசிசமாவது பாயசமாவது என்றும் சொல்பவர்கள்:  அரசு, அரசமைப்பு சட்டம், பொருளாதாரம், பொதுப் போக்கு, உலகளாவிய நிலைமைகள் ஆகிய எதைப் பற்றியும் கவலையின்றி  இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்து காலத்தையும் சூழலையும் மதிப்பிட வேண்டும் என்ற அக்கறையும் இன்றி பேசுவோர் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

மேலும் பாசிச பாசகவும் திமுகவும் மறைமுக கூட்டாளிகள், ஆரியமும் திராவிடமும் பங்காளிகள் என்றெல்லாம் சொல்லி சமரச சக்திகளான திராவிட முன்னேற்றக் கழகத்தை அம்பலப்படுத்துவதையே முழுநேர வேலையாக வைத்திருப்போர் காலத்திற்கும் வரலாற்றுக்கும் மக்களுக்கும் வெளியேயும் மேலேயும் தம்மை நிறுத்திக்கொண்டு காலப் பொருத்தம் அற்ற கோரிக்கைகளை பரப்புரை செய்வதன் மூலம் தம்மை தூய இலட்சியவாதிகளாக காட்டிக்கொள்கின்றனர்.

குறிப்பிட்ட அரசியல் களத்தில் சக அமைப்புகளோடு போட்டிபோடும் அமைப்புகள் தமது தலைமையை நிறுவுவதற்காக அதிகபட்ச கோரிக்கையை முன்வைக்கும் ஓர் அரசியல் பண்பாடும் தமிழர்களிடையே இருக்கிறது. அதில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

கூடவே, இவர்கள் இந்து தேசியம், இந்திய தேசியம் என்று பகுத்துப் பார்ப்பதும் இல்லை. இவர்களைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றே, ஏகம் பரபிரம்மம் எனற தத்துவ நெறியில் பயணிப்பவர்கள்.

இதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு தமிழ்த்தேசிய பேரியக்கம் முன்னெடுத்திருக்கும் ”இந்தியாவை முழு கூட்டரசாக்குக” என்ற பரப்புரை இயக்கமாகும். இந்தியாவை முழு ஒற்றையாட்சி ஆக்கும் திசையில் பாசிச் பாசக அரசு நகர்ந்து வரும் நிலையில், இதை தடுப்பதற்கான போராட்டங்களை நடத்தாமல் கூடுதலான அதிகாரத்திற்கான போராட்டம் உருவாக முடியாது.

 இந்தியாவை முழு கூட்டராக்கு என்ற இக்கோரிக்கையை இக்காலத்தில் முன்வைப்பதே பாசிச அபாயம், பாசிசத் தாக்குதல் என்பதை மறுப்பதை அடிப்படையாக கொண்ட நிலைப்பாடாகும். 

பாசிச பாசக அரசு ஒன்றிய பட்டியலையும் ஒத்திசைவு பட்டியலையும் தாண்டி மாநில பட்டியலில் இருக்கும் இனங்களிலும் ( categories) தலையிட்டு மாநில  அதிகாரத்தை மேலும் குறுக்கிக் கொண்டிருக்கிறது. இப்படி அதிகாரப் பறிப்பை செய்வதற்கு எதிராக போராடாமல் இந்தியாவைக் கூட்டரசாக்கும் கோரிக்கைக்கு மக்களை அணியப்ப்டுத்த முடியும் என்று தோழர் பெ.மணியரசன் நம்புகிறாரா?

பாசிச அபாயத்தை அறிந்தேற்றுக் கொண்டாலும் கோரிக்கைகளை வடிவமைக்கும்போது இச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் முற்றதிகாரத் தமிழ்நாடே முதன்மை இலக்கு, ஆளுநர் பதவியை ஒழித்துக் கட்டு ஆகிய முழக்கங்களை தோழர் பொழிலன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னணி முன்வைத்திருப்பது மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.

பாசிச எதிர்ப்புக் காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம், அதிகபட்சம் என்று கோரிக்கைகளை வரையறுத்துதான் நாம் இப்போது முன்செல்ல முடியும்.

இந்தியாவைக் கூட்டரசாக்குவதும் முற்றதிகார தமிழ்நாடும் நமக்கு உவப்பானதே. ஆனால், அதை வெறும் பரப்புரை முழக்கமாக பார்க்காமல் செயல் முழக்கம் ஆக்க வேண்டுமானால் எங்கிருந்து தொடங்க முடியும் என்பதே நம் முன் உள்ள கேள்வி.

தொடரும்…

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW