பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 3

02 Jan 2026
tiruparankundram-2

வரலாற்றில் பரங்குன்றமும்  முருகன் கோயிலும்

இந்திய – தமிழக வரலாற்றில் கோயில் என்பது ஒரு வழிபாட்டு அமைப்பு அல்ல. சமய வரலாற்றையும் அரசியல், கலை, சமூக, பண்பாடுகளின் வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை நிற்பதில் முதன்மைச் சான்றுகளில் ஒன்றாக கோயில்கள் இருக்கின்றன. தொடக்கத்தில் வழிபாட்டு இடமாக தோன்றி பின்னர் சமூகத்தை ஆட்சி செய்யும் அதிகார அமைப்பாக மாறின. சாதியப்படிநிலை அடுக்குகளை சமூக ஒழுங்கிற்குள் கொண்டுவந்து நிலவுடமை அமைப்பை – பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் நிறுவனம் என்ற அமைப்பாக நீண்ட காலம் நிலைத்து நின்றது.

அதேநேரம் அவை நாட்டின் சமய வரலாற்றுக்கும் சமூகம், கலை, பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இடமளித்தும், இக்கோயில்கள் குடிகளைத் தழுவியும், குடிகள் கோயில்களைத் தழுவியும் இருந்து வந்துள்ள நிலைமையையும் வரலாற்றில் காணமுடிகிறது. இன்றைய காலத்தில் மக்களின் நம்பிக்கை சார்ந்த அம்சங்களுக்கான முதன்மை அமைப்பாக இருந்துவருகிறது.

தமிழக சமய வரலாற்றில் கோயில் என்ற அமைப்பு பல்வேறு கால கட்டங்களில் மாறுதலை அடைந்தே வந்துள்ளது. மண், செங்கல், குடைவரை, கட்டடிடம் என பரிணமித்து வந்துள்ளது. ஒரு கோயில் அமைப்பு உயிர் – உடல் என்ற தத்துவ அம்சத்தை பேச முற்படும்போது உடலைச்சிறப்பிக்கும் தத்தவமாக உடலை கோயிலாகச் சிறப்பித்து கோயில் வழிபாட்டுக்காக உருவான ஆகமம் என்ற வழிகாட்டும் நூலின் துணையுடன் அமைக்கப்பட்டன. ஆகமக் கோயில் உருவாக்கத்துக்கு முன்பு இக்கோயில்கள் (இந்து) வேத சமயத்துக்கு முந்தைய அவைதிக சமயங்களுக்குச் சொந்தமானது என வரலாறு தொல்லியல் உதவியுடனும் சான்றுடனும் விளக்குகிறது. மன்னர்கள் ஆதரவு – சமயப் பூசல்களினால் கோயில்கள் மாற்றமடைகின்றன. கால ஓட்டத்தில் முந்தைய சமய அமைப்புகள் வலுவிழந்து போகையில் புனரமைப்புச் செய்து கொண்ட மதத்துக்கே பின்னர் அக்கோயில் உரியதாகிறது.

இலக்கிய நோக்கில் திருப்பரங்குன்றம்

இக்குன்றைக் குறித்து அகநானூறு, கலித்தொகை, மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கியங்களில் பாடப்படுகின்றன.

சங்கப்பாடல்களில் பிந்தையதாகக் கருதப்படும் பரிபாடலின் இருபத்திரண்டு பாடல்களில் எட்டுப் பாடல்கள் செவ்வேள் பற்றிப் பாடப்பட்டுள்ளன. எல்லாப் பாடல்களிலும் பரங்குன்றத்தின் இயற்கை வளமும் அருவியோசையும் வண்டின் ஒலியும் பறவைகளின் ஆரவாரமும் குயில்களின் கூவலும், மயில்களின் ஆடலும் பேசப்படுகின்றன.

முந்தைய பாடல்களில் பரங்குன்றம் குறித்த இயற்கை வர்ணனைகளே மேலாங்கி நிற்கின்றன. சில பாடல்களில் முருகன் குறித்துப் பேசப்பட்டாலும் குன்றில் உறைவோனாகச் சொல்லப்படுகிறதே தவிர அங்குள்ள கோயிலில் உறைவோனாகப் பாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்துக்குப்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது 400 ஆண்டுகளுக்குப் பிறகு பரங்குன்றத்துக் கோயில் ஒன்றைப் பற்றி தேவாரப்பாடல்களில் இடம்பெறுகிறது. அதன்பிறகே திருக்கோவையார், பெரியபுராணம், கல்லாடம், திருப்புகழ், கந்தப்புராணம், திருவிளையாடல்புராணம், திருப்பரங்கிரி புராணம் ஆகியவற்றில் இக்கோயில் பாடப்படுகிறது.

தேவாரத்தில் இக்கோயில் சிவன்கோயில் என்ற வகையில் சிவனைக் குறித்து மட்டுமே பாடுகிறது. பக்தி இலக்கிய காலத்தில் (கிபி.7-9) இப்பரங்குன்றக்கோயில் சிவனைப்பற்றிப் பாடப்பட்டு 12ஆம் நூற்றாண்டுக்குப்பிறகே முருகனைப்பற்றிய பாடல்கள் பிந்தைய இலக்கியங்களில் இடம்பெறுகிறது.

தொல்லியல் நோக்கில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

தொல்லியல் நோக்கில் இக்கோயிலை அணுகினால் 8ஆம் நூற்றாண்டில் பராந்தகன் நெடுசடையனின் ஆறாம் ஆட்சியாண்டில் குடைவரைக்கோயிலாகச் செதுக்கப்பட்டதென்பர்.

இங்குள்ள கிரந்தக் கல்வெட்டு இக்கோயில் சிவனுக்காகத் தோற்றுவிக்கப்பட்டு துர்க்கைக்கும் ஜேஸ்டா தேவிக்கும் அமைக்கப்பட்டதாகக் கூறுவதிலிருந்து இது சிவன் கோயிலாக இருந்து பின்னர் முருகனுக்காக அமைக்கப்பட்டது என்று தெரிகிறது.

“தெய்வயானையின் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இங்குள்ள மூலவர் சிலை திருமணக் கோலத்துடன் அமைக்கப்படவில்லை என்று கூறுகிறார் ஆய்வாளர் நாகப்பா நாச்சியப்பன்.

திருப்பரங்குன்றம் கோயிலில் முருகனுக்கென்று தனிக் கருவறையோ, தனிச் சிலையோ இல்லை என்றும் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் என எண்ணி வணங்கும் சிலை சேட்டா தேவியின் சிலை என்கிறார் ஆய்வாளர் டி.ஏ. கோபிநாதராவ்.

நமக்கு எழும் ஐயங்கள் அடிப்படையில் இக்கோயில் சிவனுக்கான கோயிலாகவே ஏற்படுத்தப்பட்டது என்பதும் மேலும் ஆராயத்தக்கது. கோயிலிலுள்ள முருகன் கருவறை பற்றிய குறிப்புகள், இக்கோயில் பற்றிய எழும் ஐயங்கள் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

முதல்படைவீடா?

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஆறு தலங்களில் முருகன் தங்கியிருப்பதாகப் பாடியதில் முதலாவது தலமாக அவர் திருப்பரங்குன்றத்தைப் பாடியதால் முதல்படைவீடு என்றானது என்பர். புராண அடிப்படையில் இக்கோயிலை முதல்படைவீடு என்பதை மறுப்பவர்களும் உண்டு.

வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் படைவீட்டில் முதலாவது திருச்செந்தூரேயென்று காரணம் காட்டுவர். முருகப்பெருமான் திருச்செந்தூரில் முதலில் வந்து தங்கி, வீரவாகுத் தேவரைச் சூரனிடம் தூதனுப்பினர்.  போரில் வென்றனர். அதன் காரணமாகத் திருப்பரங்கிரியில் தெய்வயானையார் இருமணம் நடந்தது, நக்கீரர் குகையிலடைபட்டுத் துதித்தபோது முருகன் வேலால் மலைக்குகையையும்  கற்கிமுகி என்ற பேயையும் அழித்தனன். எனவே நக்கீரர் தமக்கருள் செய்த திருப்பரங்கிரியை முதலிற் கூறினர். ஆகவே முதலாவதாகத் தங்கிய இடம் திருச்செந்தூரே எனக்கூறுகிறார் அன்புநெறியே தமிழர் நெறி எனும் நூலில்    மொ. அ. துரை அரங்கசாமி அவர்கள்.

முருகப்பெருமான் சூரசம்காரம் செய்தற் பொருட்டுப் படை வீடு (பாசறை) அமைத்துத் தங்கிய இடம் திருச்செந்தூர். ஆகவே படைவீடு என்ற பெயர் திருச்செந்தாருக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார் க. வெள்ளைவாரணார்.

எட்டாம் நூற்றாண்டில் சிவனுக்காக எடுப்பிக்கப்பட்ட குடைவரைக்கோயில் 400 ஆண்டுகளுக்குப்பிறகு முருகன் கோயிலாக மாற்றப்பட்டு நாயக்கர் ஆட்சிக்காலம்வரை கட்டிடங்களால் புதிப்பிக்கப்பட்டு வந்து இன்று முருகன் கோயிலாக பரிணமித்துவிட்டது. கோடானகோடி சைவர்களின் முதல்படைவீடாகவும் பழமையானதும் என்று மனதில் நிலைத்து நிற்கிறது.

வடக்கு நோக்கி வாசலைக் கொண்ட குடைவரைக்கோயில் ஆகமங்களுக்கு உட்படாமலும் ஆகம வருகைக்குப் பிறகு புதிய கட்டிடங்கள் வாயிலாக ஆகமத்தை நோக்கில் கோயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இங்கு மட்டுமல்ல ஏராளமான சைவ – வைணவத் தலங்களிலும் இத்தகைய மாற்றங்களைக் காணமுடியும்.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறதா?

பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுக்கப்படுகிறது என்று இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் 20 ஆண்டுகளாகப் பேசி வருகின்றன. தொடக்க காலத்தில் சிக்கந்தர் தர்கா அருகே தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் சுல்தான்கள் ஆட்சியில் மறுக்கப்பட்டதாகவும் பரப்புரை செய்து வருகின்றனர். அவ்வாறே இருந்திருந்தாலும் மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது அவர்களுக்கு இருந்த அதிகாரத்தால் மாற்றப்பட்டிருக்கலாம். அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறாக முருகன் கோயிலுக்கும் நேர்மேலே உள்ள குன்றில் இன்றும் ஏற்றப்பட்டுவருகிறது. அங்குள்ள தீபத்தூண் ஒன்றில் நாயக்கர் கால கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டு இருக்கிறது. அதில்,

உ. ஆண்டவ

ற் சிற உச்சி

மலையில்

(ப) கம்பம் தீ

நாட்டியதின்

பெரில் சகல

புண்ணிய

õன்களும் தி

பம் பொடலம்

சா. சிவமயம்

அதாவது இது ஆண்டவனின் உச்சியில் நாட்டப்பட்டிருக்கிறது. புண்ணியவான்கள் அனைவரும் இதில் தீபம் ஏற்றலாம் எனப் பொறிக்கப்பட்டு உள்ளது. பன்னெடுங்காலமாக இங்கே தீபம் ஏற்றப்பட்டுவருகிறது. கோயில் நிர்வாகமும் அர்ச்சகர்களும் இங்கேயே ஏற்றிவருவதால் இந்து முன்னணியின் கோரிக்கை ஏற்கப்படால் இருந்துவருகிறது.

அதே நேரம் இத்தீபமேற்றல் உள்ளூர் வழிபாடாகத் தொடங்கிய சமணமரபால் செழுமைப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். தமிழகம் தழுவிய அளவில் தீபம் ஏற்றப்படும் குன்றுகள் அனைத்தும் சமணத்துடன் தொடர்புடைதென்றும் சமணத்தின் தீர்த்தங்கரர்களோடு பிறப்பும் இறப்புமான நாளை பௌர்ணமிக்கு நகர்த்தி வழிபடப்படும் ஆதிச்சமணமரபு என்றும் இன்றும் கார்த்திகை பௌர்ணமி நாளில் தொடங்கி தீபம் ஏற்றும் வழக்கத்தை இன்றும் தமிழ்ச்சமணர்கள் ஏற்றுவது குறித்தும் கார்த்திகை தீபம்: சமண மரபால் செழுமைப்பட்ட நீத்தார்வழிபாடு என்னும் கட்டுரையில் விரிவாக விளக்குகிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

காசிவிஸ்வநாதர் ஆலயமும் தர்காவும்

பரங்குன்ற மலையின் உச்சியின் பின்பகுதியில் ஒரு சுனை இருந்துவருகிறது. அதைக் காசிச்சுனை என அழைக்கிறார்கள். இக்கருவறை மேற்கு நோக்கி உள்ளது.

முருகன் கோயிலில் இருக்கும் முருகனின் திருக்கை வேலை மக்கள் அனைவரும் பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு மலையுச்சியில் உள்ள காசிச்சுனைக்கு எடுத்துச்சென்று, அங்கு நீராட்டி அலங்காரங்கள் செய்து, அங்கேயே சோறு, கறி இவைகளை ஆக்கி, வேலுக்கு வைத்துப் படைத்து எல்லோரும் கூடியிருந்து உண்டு திரும்பும் விழா வேல் திருவிழா எனப்படுகிறது. இஃது ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமையொன்றில் நடைபெறுகிறது. இதற்கு மலைமேல் குமரன், வேல் இருவிழா என்று பெயர்கள் வழங்குகின்றன. முருகப் பெருமான் நக்கீரரைக் காத்தல் பொருட்டு வேலினால் மலையைப் பிளந்தார். அவ்வனுபவத்தை நினைவு கூர்தற் பொருட்டு இவ்வேல் இருவிழா நடைபெறுகிறது என்று இங்கு சிலர் கூறுகிறார்கள். முருகன் கையிலுள்ள வேலை இங்குள்ள சுனைநீரில் நீராட்டி, பூசைகள், படையல்கள் செய்து ஊரோடு சேர்ந்து வணங்கும் வழக்கம் இங்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவ்வாறு வேல் மலைக்குச் சென்று வந்தவுடனே எந்த வறட்டுக்காலத்திலும் இங்கு மழை பெய்து விடும் என்று கூறுகிறார்கள் . இதற்கும் புராணத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்கிறார் திருப்பரங்குன்றம் பற்றி ஆராய்ந்த அறிஞர் நாகப்பா. நாச்சியப்பன்.

இது வளமைத்திருவிழா என்பதாக அறியமுடிகிறது என்பதோடு மலையுச்சியில் உயிர்ப்பலி இட்டுவந்துள்ளதையும் தெரிந்து கொள்முடிகிறது. இச்சமூக நிகழ்வு நக்கீரருடன் இணைக்கப்பட்டு திருப்பரங்குன்றக் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சென்ற நூற்றாண்டுவரை தர்கா நிர்வாகம் காசிச்சுனையில் நீரெடுத்து வந்துள்ளது. புனிதமான காசிச்சுனையில் நீரெடுப்பதை இந்துக்கள் தடுத்து பிரச்சினை செய்துவந்தனர். அதன் பொருட்டு அங்குள்ள சமணச்சிற்பங்களைச் சிதைத்து சமீபகாலத்தில் காசிவிஸ்வநாதர் கோயிலைக் கட்டியதாகத் தெரிகிறது. வைதிகக் கோயிலுக்கான கிழக்கு நோக்கிய கருவறையை அமைக்ககூடியதாக இக்கோயிலில் வாய்ப்பிருந்தும் மேற்குப்புறமாக கருவறை வாசல் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேற்குப்புறமாக தர்கா நிர்வாகம் நீர் எடுப்பதைத் தடுக்கும் பொருட்டே மேற்கு நோக்கிய கருவறை அமைக்கப்பட்டுள்ளது என்றே கருதமுடிகிறது. இக்கோயில் உருவாக்கத்துக்காக வழக்கம்போல் அதற்கான தலபுராணம் ஒன்று புனையப்பட்டுள்ளது. அதன்படி கோயில் சுனையில் நீரெடுப்பது ஆகாது என இசுலாமியர்களுக்கு இது தடுக்கப்பட்டிருக்கிறது.

( மானுடம் திங்களிதழில் வெளிவந்த கட்டுரை 4 தொடர் கட்டுரையாக வெளியிடப்படுகிறது. மானுடம் இதழ் குழுவுக்கு நன்றி)

  • தோழர் காளிங்கன்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW