ஈழத்தமிழர் அரசியல் தீர்வும் இனவழிப்பு நீதியும்: பிரிக்க முடியாத கோரிக்கைகள்

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதியும், ஈழத்தமிழர் தேசிய இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வும் அடிப்படைக் கோரிக்கைகள்! ஒன்றிலிருந்தொன்று பிரிக்க முடியாதவை!
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை
கடந்த திசம்பர் 18ஆம் நாள் தமிழீழத் தாயகத்திலிருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் சென்னை வந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு குறித்தும் மீனவர் சிக்கலுக்கான தீர்வு குறித்தும் இரு கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரையும் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர்.
இக்குழுவினரின் வருகையும், தமிழ்நாடு அரசிடமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடமும் தமிழீழத்தின் நிலைமையை விளக்கி,ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியும் வரவேற்புக்குரியவை.
ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு குறித்த கோரிக்கை விண்ணப்பத்தில் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றி, தேசிய சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான கூட்டாட்சித் தீர்வை இந்திய அரசு வலியுறுத்தத் தமிழ்நாட்டரசு அழுத்தம் கொடுக்கக் கோருவதும், இந்திய-இலங்கை உடன்படிக்கையின் படியான 13 ஆவது சட்டத்திருத்தம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை விளக்குவதும் சரியானது.
கூட்டாட்சி கேட்பது தமிழீழக் கோரிக்கையைக்கைவிடுவதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்ட இனவழிப்புக்குப் பன்னாட்டுப் புலனாய்வின் வழி நீதி கோராமால் கூட்டாட்சி உட்பட எந்த அரசியல் தீர்வை முன்வைத்தாலும் உருப்படியான முன்னேற்றம் காண இயலாது எனக் கருதுகிறோம். நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டி இந்திய அரசின்
நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் தீர்வுக்கான கோரிக்கைக்கு முன்னதாக வலியுறுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு அளித்த விண்ணப்பத்தில் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி என்ற கோரிக்கை இடம்பெறவே இல்லை என்பதை ஒரு பெருங்குறையாகக் கருதுகிறோம்.
இனவழிப்புக்குக் குற்றவியல் நீதி என்ற அடிப்படையில் பன்னாட்டுப் புலனாய்வு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு வழக்காடல் உள்ளிட்ட கோரிக்கைகளும், தமிழீழத் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பொதுவாக்கெடுப்புக் கோருவதும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத இன்றியமையாக் கோரிக்கைகளாகும். இந்தியா உள்ளிட்ட வல்லரசுகள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை அறிந்தேற்க மறுத்துவரும் நிலையில் இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்பதைத் தவறாமல் இந்திய அரசிடமும் தமிழ்நாட்டரசிடமும்முன்வைக்க வேண்டும் எனக் கருதுகிறோம்.
இந்தக் கோரிக்கைகளின் வெற்றிக்குத் துணைசெய்யும் படி தமிழ்நாட்டு அரசையும் மக்களையும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இந்தக் கோரிக்கைகளைத் தமிழீழத் தாயகமும் புலம்பெயர் தமிழர்களும் வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்

கொளத்தூர் தா.செ. மணி
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
94433 59666