திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பிரச்சனை: நாம் இந்துப் பெரும்பான்மைவாதத்தை எதிர்த்து கொண்டிருக்கிறோமா?

11 Dec 2025

திருப்பரங்குன்றம் சிக்கலில் தைப்பூசத்தில் எழுச்சிக் கொண்டு, கார்த்திகை திருநாளை ஒட்டி ஒரு குட்டிக் கலவரத்திற்கு அச்சாரம் இட்டு இந்திய அளவிலான கவனத்தைப் பெற்றுவிட்டன தமிழ்நாட்டு சங்கிகள்

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்து முன்னணி திருப்பரங்குன்றத்தில் கலவரத் தீயைப் பற்ற வைக்க வேண்டும் என்று விரும்பினாலும் மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலம்தான் அதற்கு வழியேற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து சனநாயக ஆற்றல்கள் தொடங்கி தமிழ்நாடு அரசு வரை அனைவரும்  ஓரணியில் நின்று ஆர்.எஸ்..எஸ். – பாசக – இந்து முன்னணியின் சதியை முறியடிக்க முயன்று வருகின்றனர். எப்படியோ தமிழ்நாடு அரசு காட்டிய உறுதியின் காரணமாக இந்து முன்னணியால் கார்த்திகை தீபத்தை சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள எல்லைக் கல்லில் ஏற்ற முடியாமல் போனது. இது நமக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த இடைக்கால வெற்றிதான்.

எல்லைக் கல்லா? தீபத் தூணா? நீதிபதி சுவாமிநாதன் செய்தது சரியா? தவறா? என்று வாதப் பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. எப்போதும்போல் ஆர்.எஸ்.எஸ். தரப்பு நெல்லிக்காய் மூட்டையை அவிழ்ப்பது போல் பொய் மூட்டையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது. பகவத் கீதை வழிகாட்டல்படி அவர்களுக்கு இலக்குதான் முக்கியம்; வழிமுறை முக்கியமல்ல. பொய் அவர்களது அறமாக இருக்கிறது. தெரிந்தே பொய் சொல்வதற்கு கொஞ்சமும் அஞ்சாதவர்கள் சங்கிகள்!

ஒருவழியாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் உதவியுடன் சிக்கந்தர் தர்காவின் அருகில் இருப்பது தீபத் தூண் அல்ல, எல்லைக் கல் என்று நிறுவப்பட்டுவிட்டது.

இந்து முன்னணி கார்த்திகை நாளில் செய்த கலவரத்தின் போது பாரத் மாதா கீ ஜே என்று முழங்கியதன் மூலம் அவர்களின் பக்த வேடம் கலைந்து அவர்கள் ‘கலவரக்காரர்கள்’ என்பது நன்றாக அம்பலப்பட்டுவிட்டது.

அதேநேரத்தில் அவர்கள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. ஏனென்றால் ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரம், நீதித்துறை, ஊடகம், அளவற்ற பணம் என எல்லாம் அவர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் எப்படியும் திருப்பரங்குன்றம் சதிதிட்டத்தை தொடரத்தான் போகிறார்கள்.

இதுவரை நாம் எப்படி எதிர்கொண்டு வருகிறோம் என்று பார்ப்போம்.

இந்த சுற்றில் அவர்களுக்குப் பின்னடைவு. ஆனால், முதல் சுற்றில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது. ஒருவழியாக சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செய்யவிடாமல் தடுத்துவிட்டார்கள் சங்கிகள். சிக்கந்தர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் விரும்பிய நேர்த்திக் கடனை செய்யும் உரிமையை மீட்பதுதான் திருப்பரங்குன்றம் – சிக்கந்தர் தர்காவைப் பொறுத்தவரை நமக்கு இறுதி இலக்காகும்.

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தம் என்றும் சிக்கந்தர் தர்கா இசுலாமியர்களின் ஆக்கிரமிப்பு என்றும் சொல்லும் போது சனநாயக ஆற்றல்கள் அதற்கு முகம் கொடுப்பதற்கு மாறாக, ”நீ இந்து என்று சொல்கிறாயே, அனைத்து சாதியும் அர்ச்சகராக ஒப்புக் கொள்வாயா? தமிழில் அருச்சுனை செய்ய ஒப்புக்கொள்வாயா?” என்று கேட்டு சங்கிகளை மடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், சங்கிகள் சற்றும் சட்டை செய்யாமல் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்துக்களுக்கு மலையே சொந்தம், சிக்கந்தர் ஆக்கிரமிப்பாளர் என்பதில் பல்லிளித்துக் கொண்டிருக்கும் இந்துப் பெரும்பான்வாதத்தை எப்படி பார்ப்பன முற்றுரிமை எதிர்ப்பும் சமற்கிருத எதிர்ப்பும் கேள்விக்குள்ளாக்கும்? உண்மையில் அது கேள்விக்குள்ளாக்கவில்லை.

சிக்கந்தர் தர்காவுக்கு எதிராக அவர்கள் ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டியது போல் அனைத்து சாதியையும் அர்ச்சராக்கவும் தமிழில் அர்ச்சனை செய்யவும் இறை அன்பர்கள் எப்போதாவது ஆயிரக்கணக்கில் திரட்டப்பட்டதுண்டா? அவை வெகுமக்கள் கோரிக்கை ஆகவேண்டும் என்பது வேறு. ஆனால், அவை இன்றளவில் வெகுமக்கள் கோரிக்கை அல்ல என்பதே யதார்த்தம். அதைவிட முக்கியம் இந்து பெரும்பான்மைவாததை இந்த முழக்கங்கள் கேள்விக்குள்ளாக்குமா? மக்களை சனநாயகப் படுத்துமா?

இல்லை.

இந்து என்ற தொகுதிக்குள்தான் பார்ப்ப்னர் எதிர் பார்ப்பனரல்லாதோர் அர்சியல் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ்> ஐ பார்ப்பன மேலாதிக்கத்திற்கான  அமைப்பாக கருதுவதால்தான் பார்ப்பன எதிர்ப்பு முதன்மைப்படுத்தப் படுகிறது.

இந்துக்கள் பெரும்பான்மை என்று அவர்கள் வாள் வீசும் போது அதை கேள்விக்குள்ளாக்காமல் இந்துக்கள் என்று அறீயப்படுவோரிடம்  பார்ப்பனப் பண்பாட்டு மேலாதிக்கம் இருப்பதைப் பற்றி பேசுவது மறைமுகமாக இந்துப் பெரும்பான்மைவாதத்தை ஒப்புக் கொள்வதாகாதா?

முன்னரங்கில் வந்து சிக்கந்தர் தர்காவுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் யார் என்று பாருங்கள்? காடேஸ்வரன், ராம ரவிக்குமார், வானதி, ராம சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன் – இவர்களில் யார் பார்ப்பனர்கள்? இசுலாமிய எதிர்ப்பு வாதத்தில் அவர்கள் அணி திரட்ட முயலும் போது ‘ ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியவர் வந்து புகல் என்ன நீதி?’ என்ற பாரதியாரின் வரிகள்  மிக இலகுவாக மக்களை ஈர்க்கும். வெளிச்சண்டையைத் தீர்த்துக் கொண்டு உள்சண்டையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசிப்பது மனித வாழ்வில் யதார்த்தமான ஒன்று தானே.

இந்த நூறாண்டு கால பயணத்தில் ஆர்.எஸ்.எஸ். சாதி தொடர்பான தனது அணுகுமுறையை மாற்றி வந்திருக்கிறது. குறைந்தபட்சம் உலகத்திற்கு காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ். இன் தலைமையாக இராஜேந்திர சிங் என்ற பார்ப்பனரல்லாத உயர்சாதிக்காரரை சிறிதுகாலம் அனுமதித்தது.

இசுலாமியர்களை  வேட்பாளர்களாகக்கூட நிறுத்தாத ஆர்.எஸ்.எஸ் சாதி விசயத்தில் இடப் பகிர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. குறைந்தபட்சம் அரசியல் தளத்தில் இந்து அடையாளத்தை உயர்த்திப் பிடித்து ஏனைய அடையாளங்களை அதற்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்கிறது. அதேநேரத்தில், சமூக பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை செய்யத் துணிவதில்லை என்பது உண்மையே..  

எதிர்காலத்தில், இவ்விசயங்களிலும் அவர்கள் தளர்வை ஏற்படுத்தி முன்னோக்கிச் செல்லவே முயல்வர். ஒரு வாதத்திற்காக, ஆர்.எஸ்.எஸ். – பாசக – இந்து முன்னணியினர் தமிழில் அர்ச்சனை செய்வதையும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றால் சிக்கந்தர் தர்கா வழிபாட்டு உரிமைக்கான போராட்டத்தை எப்படி நடத்த முடியும்?

ஒரு சிக்கலில் ஒளிந்து கொண்டிருக்கும் முரண்பாடு என்ன? அந்த முரண்பாட்டில் முதன்மை அம்சம் என்ன? முதன்மையல்லாத அம்சம் என்ன? என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதற்கு உரிய வகையில் நமது செயலுத்தி சார்ந்த முழக்கத்தை வைக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சிக்கலில் நாம் மக்களை சிந்திக்க வைக்க இன்னும் கடினமான முயற்சிகள் தேவை.

அதேநேரத்தில் இதை இந்துப் பெரும்பான்மைவாதம் எதிர் முஸ்லிம் பிரச்சனையாக மேலோட்டமாக எதிர்கொண்டு சங்கிகளின் சதியை முறியடிக்க முடியுமா?

முடியாது.

தொடரும்…

  • தோழர் செந்தில்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW