லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 7

வெனிசுவேலாவின் எதிர்காலமும் லத்தீன அமெரிக்காவின் நம்பிக்கைகளும்
சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாதுரோ வெற்றி பெற்றது செல்லாது என்று ஊடகங்களில் செய்தியைப் பரப்பியது இந்தக் கூட்டம்தான். கடந்த 20 ஆண்டுகளில், மறு தேர்தல்களுக்கு (Referendum) இடமளித்து 24 தேர்தல்கள்
வெனிசுவேலாவில் நடைபெற்றுள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. வெனிசுவேலாவில் எதிர்க்கட்சிகள் ஒருபோதும் தேர்தலை நேர்மையாக சந்தித்து வெற்றி பெற்றது இல்லை. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாதுரோவுக்கு வாக்குகளை அளித்து வருகிறார்கள். அனைவரும் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும் என்பது வெனிசுவேலாவில் கட்டாயம் அல்ல என்ற போதும், பொதுமக்கள் பெருமளவில் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பொய்யர்களின் புளுகுகளை தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள். அதனால்தான் இப்போது போதைப் பொருள் கடத்தியதாக சொல்லி மாதுரோவை ஒழித்துக்கட்டும் முயற்சி நேரடி படையெடுப்பு வரை வந்துள்ளது…
லத்தீன் அமெரிக்காவை வட அமெரிக்க நுகத்தடியில் இருந்து விடுவிக்க இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பொலீவாரின் வழித்தோன்றல் ஊகோ சாவேஸ். அவர் அரும்பாடுபட்டு உழைத்து, ஃபிதெல் காஸ்த்ரோ தொடங்கி இஸ்த்வான் மேசாரோஸ், மார்த்தா ஆர்னெக்கார், மைக்கேல் லெபோவிட்ஸ், நோம் சாம்ஸ்கி, அலைதா கெவாரா, ஓர்லாந்தோ பொர்ரீகோ , டக்ளஸ் ப்ராவோ, இனாசியோ ராமோனெத், மைக்கேல் மூர் (ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர்) போன்ற உலகப் புகழ் பெற்ற சமூக, அரசியல், பொருளாதார அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று அரசின் திட்டங்களை வகுத்தார்.
முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்திற்கும் அப்பால், முதலாளித்துவத்திற்கு திரும்பவியலாத நிலையான சோசலிச அமைப்புக்கு சாவேஸ் “இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு சோசலிசம்” என்று பெயரிட்டார். இறையாண்மை மக்களிடமே இருக்குமாறு நாடு முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கம்யூன்களை தோற்றுவித்து அதிகாரங்கள் அவற்றின் வசம் இருக்குமாறு சட்டங்களை இயற்றினார். இந்த முயற்சியில் உலகின் மேன்மையான அறிஞர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்தி மக்கள் அதிகாரத்தைப் பரவலாக்கியதில் வெற்றி கண்டார்.
ஒரு நாட்டில் சோசலிசம் இருந்தால் போதுமானதல்ல என்ற சேகுவேராவின் சொற்களை சாவேஸ் மறக்கவில்லை. அதனால் அவர் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பை விரும்பினார். அதற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பரஸ்பர உதவிக்கும் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உறுதியளிக்கும் பற்பல நிறுவனங்களை அவர் ஏற்படுத்தினார். உலக வங்கி சர்வதேச நிதியம் ஆகியவற்றின் நுகத்தடியிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இவற்றை அவர் வெகுவிரைவாக உருவாக்கி செயல்படுத்திக் காட்டினார்.
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தின் மீது தீராத ஆவல் கொண்ட ஜார்ஜ் டபிள்யூ புஷ், சாவேஸ் தனது சோசலிச திட்டங்களை எண்ணெய் வருவாயில் இருந்து சாத்தியமாக்கிக் கொண்டதைக் கண்டு கடும் சீற்றம் கொண்டார். அதனால்தான் நேரடியாக மோதி வெல்ல முடியாததால், புற்றுநோய் கிருமிகளைப் பரப்பி சாவேசின் ஆயுளை முடித்தார். மூன்றாம் உலக நாடுகளின் ஆதர்ச தலைவராக, லத்தீன் அமெரிக்காவின் மீட்பராக உருவான சாவேஸ் இவ்வாறுதான் சதி செய்து கொல்லப்பட்டார். வட அமெரிக்காவின் அழிவு சக்தியினால் வாராது போல் வந்த மாமணியை – சாவேசை நாம் இழந்துவிட்டோம்…
தனக்குப் பின் நாட்டை வழிநடத்த சாவேஸ் தேர்ந்தெடுத்த மாதுரோவும் மிகத் திறமையானவர்தான் என்றாலும், சாவேசின் செயல் ஆற்றல் அவரிடம் குறைவாகவே உள்ளது. மேலும் அவர் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க மாற்று வருவாய் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இது போன்ற பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் பெரும் தடையாக இருந்தன, ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை சந்தேகித்து நாட்டினுள் கலவரத்தை உண்டாக்கின என்பதெல்லாம் உண்மையாக இருந்த போதிலும், அவர் பொருளாதார மேம்பாட்டுக்கான காத்திரமான செயல்களை மேற்கொண்டிருக்க வேண்டும். அதில் அவர் தவறிவிட்டதால் இன்று இந்த கடும் நெருக்கடி நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது .
2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள மெக்ஸிகோவும் உருகுவாயும் முயற்சி மேற்கொண்டன மாதுரோவும் அதை ஏற்றுக் கொண்டார்.
(க்ளாடியோ காட்ஸ், பிப்ரவரி 2019).
இப்போதும் மெக்சிகோ, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகள் வெனிசுலாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமக்குள் பேச்சு வார்த்தை நடத்தி கள நிலைமையை ஆராய்ந்து வருகின்றன. சீனாவின் பெரும் உள்கட்டமைப்பு முதலீடுகள் வெனிசுவலாவின் மாரகெய்போ துறைமுகத்தில் இருப்பதால், வட அமெரிக்க தாக்குதல் உலக அளவில் மேலும் பல சிக்கல்களை விளைவிக்கக்கூடும்.
வட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், நவம்பர் 14ஆம் தேதி வாஷிங்டனில், “எங்கள் மக்களைக் கொல்லும் போதைப்பொருள் பயங்கரவாதிகளை நீக்குவதற்காக லத்தீன் அமெரிக்க கடற்பகுதியில் இன்று நான் ‘சதன் ஸ்பியர்’ நடவடிக்கையை அறிவிக்கிறேன்.” என்று கூறியுள்ளார். இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிலப்பரப்புகளில் தாக்குதல் நிகழக்கூடும். (‘ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ்’).
வெனிசுவேலா கரையோரம் வட அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட ஆயுதங்களை டிரம்ப் அனுப்பி வைத்திருக்கிறார் என்று வட அமெரிக்காவின் ‘கொலம்பியா பிராட்காஸ்டிங் சிஸ்டம்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. வெனிசுவேலாவும் கரீபியக் கடல் பகுதியில் அதிகரித்து வரும் வட அமெரிக்க ராணுவ தலையீட்டை எதிர்கொள்ள, நாடு முழுவதும் படைகளை ஆயத்தப் படுத்தி வருகிறது.
டிரம்ப் முனைப்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையினால் வெனிசுவேலா இறையாண்மை இழந்து, வட அமெரிக்காவின் புழக்கடையாக மாறிவிடுமா? சாவேசின் உயிர்த் தியாகம் வீணாகப் போய்விடுமா ? லத்தீன் அமெரிக்காவின் தலையெழுத்து வரலாற்றில் மீண்டும் மாற்றி எழுதப்பட்டு விடுமா ? இதுபோன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கலாம்…
- அமரந்தா