லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 2

சாவேஸ் என்ன செய்தார்?
சாவேஸ் பதவியேற்ற போது உலகிலேயே அதிகபட்ச பெட்ரோலிய (17%) வளத்தைக் கொண்ட வெனிசுவேலாவின் மக்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் வறுமையில் உழன்று கொண்டிருந்தார்கள். உள்நாட்டு உணவு உற்பத்தி வெறும் ஆறு சதவீதம் மட்டுமே. 70 சதவிகித உணவு இறக்குமதி செய்யப்பட்டது. நாட்டின் 60 சதவிகித விளைநிலங்கள் மக்களில் 1 சதவீதம் பேரின் கையில் இருந்தன. 53 சதவிகித மக்கள் அமைப்புசாரா தொழில்களில் பணிபுரிந்தார்கள். 15.4 சதவிகித மக்கள் வேலை இன்றி வறுமையில் உழன்றார்கள். 1998 ஆம் ஆண்டு இந்த நிலைமை தான் வெனிசுவேலாவில் இருந்தது.
பதவிக்கு வந்தவுடன் நாட்டின் வறுமையை ஒழிக்க சாவேசின் “பொலிவாரிய புரட்சிகர அரசு” பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1. பெட்ரோலிய தொழிலை சாவேஸ் நாட்டுடைமையாக்கி அதனால் கிட்டிய வருமானத்தை மக்களின் நலனுக்கு செலவிட்டார். பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பை (OPEC) கௌரவமான, ஞாயமான அமைப்பாக மாற்றினார்.
2. கடும் வறுமையை நீக்க நாடு முழுவதும் இலவச உணவு விநியோகத்தைத் தொடங்கினார்.
3. பள்ளிகளை முழு நேரப் பள்ளிகளாக மாற்றி மாணவர்களுக்கு இரண்டு வேளை உணவளித்தார்.
4. புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பணியை பெரும்பான்மை பெண்களைக் கொண்ட குழுவிடம் ஒப்படைத்தார். 1999 டிசம்பர் 15ஆம் தேதி புதிய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. சமூகநீதி, அரசியலில் மக்களின் பங்கேற்பு, தேசிய பாரம்பரிய பண்பாட்டுக் காப்பு, மண்ணின் பழங்குடியினரின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு, சட்டத்தின் முன் அனைவருக்கும் சமநிலை ஆகியவற்றை இந்த அரசியல் சாசனம் உறுதி செய்தது.
5. நாட்டினுள் அந்நிய இராணுவ தளம் அமைப்பது தடை செய்யப்பட்டது.
6. நாட்டு மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் நீதிபதிகளில் 50 சதவிகிதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற விதி சட்டமாக்கப்பட்டது.
7. தேசிய பிரதிநிதிகள் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவை குறித்த மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் மக்கள் இவர்களை பதவி இழக்கச் செய்யலாம்.
8. உள்ளாட்சிப் பதவிகளில் இருப்போர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். மக்களின் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்கவில்லையேல், இவர்கள் பதவி இழப்பார்கள்.
9. இராணுவம் மக்கள் உரிமைகளின் பாதுகாவலராக மாற்றப்பட்டது. தேசிய இறையாண்மையையும் நாட்டின் செல்வங்களையும் காக்கும் பணியில் இராணுவம் இணைந்தது. கல்வி, மருத்துவம், நிலப் பகிர்வு, விவசாயம், சுழலியல் பாதுகாப்பு ஆகியவற்றில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது.
10. பெரும்பான்மை மக்களின் பசியைப் போக்க மக்கள் சந்தைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் உணவுப் பொருட்களின் விலை 40% குறைத்து விற்பனை செய்யப்பட்டது. மொத்த உணவு உற்பத்தியில் 35 சதவீதம் இந்த மக்கள் சந்தைகளின் மூலம் விற்கப்பட்டன.
(மிச்சேல் லெபோ விட்ஸ், மே 2016, லிங்க்ஸ் ஜர்னல்)
11. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து மக்களுக்கு அரசியல் சாசனம், கூட்டுறவுத் தொழில்களுக்கான வங்கிக் கடன்கள், மானியங்கள், பயிற்சிகள், ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தார்கள். இவற்றால் பயனடைந்த மக்கள் அரசு ஆதரவு “மக்கள் முன்னணிகளை” உருவாக்கினார்கள்.
12. வேலையற்றோரை பணியமர்த்தி, சுற்றுச் சூழலை மேம்படுத்தி, அனைவருக்கும் பயனளிக்கும் “பொலிவார் திட்டம் 2000” இராணுவத்தின் பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டது. பணப்பயிர் விளையும் நிலங்கள் யாவும் உணவுப்பயிர் விளையும் நிலங்களாக – அதுவும் மரபீனி மாற்ற விதைகளைப் புறக்கணித்து பாரம்பரிய ரக விதைகள் மட்டுமே பயிரிடும் நிலங்களாக மாற்றப்பட்டன.
(ரஃபாயில் அலெக்ரியா, சர்வதேச உறவுகளுக்கான வெனிசுவேலாவின் செயலர், பிப்ரவரி 2004).
இவ்வாறு வெனிசுவேலா மக்கள் நலனுக்கான அரசாக சாவேஸ் செயல்பட்டதை முதலாளிகள் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் செயலில் இறங்கினார்கள்.
- 2002 ஏப்ரல் 11 ஆம் தேதி தொழில் முதலாளிகளும் பெருநில உரிமையாளர்களும் சாவேஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். வட அமெரிக்காவின் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அவர்களுக்குத் தனது ஆசியை வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஊகோ சாவேசை இராணுவ அதிகாரிகள் கடத்திச் சென்று, கண்காணாத இடத்தில் 47 மணி நேரம் சிறை வைத்தார்கள். சாவேஸ் திரும்பி வரவேண்டும் என்ற மக்களின் இடைவிடாத போராட்டத்தினால், சாவேசுக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகள் அவரை மீண்டும் குடியரசுத் தலைவர் மாளிகையில் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
( தி ரெவல்யூஷன் வில் நாட் பீ டெலிவைஸ்டு ஆவணப்படம், கிம் பேட்டர்லி & டோநாகோ ஓ பிரியன்)
2. 2002 டிசம்பர் 2 ஆம் தேதி எண்ணை முதலாளிகள் வேலை நிறுத்தம் செய்து எண்ணை உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்தினார்கள். ஆனால் தொழிலாளர்கள் சாவேஸ் ஆதரவாளர்களாக இருந்ததால், வேலைநிறுத்தம் தோல்வி அடைந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 18,000 உயர் மட்ட / நடுமட்ட மேலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள்.
எதிரிகளின் இந்த இரு தோல்விகளுக்குப் பின் சாவேஸ் வேகமாக தான் செய்ய நினைத்த அனைத்து மாற்றங்களையும் செய்து முடித்தார்.
1) கட்டணம் இன்றி அனைவரும் பள்ளி, கல்லூரி கல்வியை பெற வழி செய்தார்
2) மிஷன் “பர்ரியோ அதென்த்ரோ” என்ற பெயரில் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ திட்டத்தை சட்டம் ஆக்கினார். இதில் கூப மருத்துவக் குழுவினரின் பங்களிப்பு முதன்மையானது. பொது மருத்துவமனைகள் நவீன மருத்துவ சாதனங்களுடன் திறமையாக நாடு முழுவதும் இயங்கத் தொடங்கிவிட்டன.
3) சுற்றுச்சூழல் அமைச்சகம் காராக்கஸ் நகர் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்று மண்டல மாசு அளவைக் குறைக்க இலக்கு நிர்ணயித்துக் கொண்டு செயலாற்றியது. பெட்ரோலியம் அகழ்ந்தெடுக்கும் பணியால் நீர் நிலைகள் மாசடையாமல் காக்கவும், காடுகளைப் பாதுகாக்கவும், இயற்கை வேளாண்மையில் உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யவும், மரபீனி மாற்றப் பயிர்களைத் தடை செய்யவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
4) 1999 டிசம்பர் 15 ஆம் தேதி அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் வரைவதில் பெண்கள் பெரும்பங்கு வகித்தனர் தேசிய பெண்கள் நிலையம் (INAMUJER) தொடர் அமைக்கப்பட்டு மரீயா லியோன் என்ற போராளி, அதன் இயக்குனராக பதவியில் அமர்த்தபட்டார். தேசிய பெண்கள் நிலையத்தின் முயற்சியால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் அரசு ஓய்வூதியம் கிடைக்கும்படி செய்யப்பட்டது.
அனைத்து அரசுத் துறைகளிலும் பெண்கள் பங்கேற்பு 50% ஆக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. சம வாய்ப்பு, சம ஊதியம், சம உரிமை இவற்றோடு சுயதொழில் முனைவோருக்கு குறுக்கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டன. இதற்கென லோரியன் காஸ்தனீதா தலைமையில் புதிய பெண்கள் வங்கி (BANMUJER) தொடங்கப்பட்டது. இதனால் பெண்களுக்கு பல்லாயிரம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்தன. வாராக்கடனுக்கு தண்டனை வழங்காமல், தொழிலை மேம்படுத்தவும் தவறுகளை நீக்கவும் ஆலோசனைகள் அளி
க்கப்பட்டன.
பெண்கள் சமத்துவத்திற்கான தேசிய திட்டம் 2004 – 2009 என்ற ஐந்தாண்டு திட்டத்தை தேசிய பெண்கள் நிலையம் உருவாக்கியது. இந்தத் திட்டத்தினை பெண்கள் இயக்கமும் சாவேசின் பொலீவாரிய அரசும் ஒருங்கிணைந்து செயலாற்றி, பாலின அடிப்படையில் ஒடுக்கு முறையை, உரிமை மறுப்பை, வெனிசுவேலாவில் வேர்விடாமல் தடுக்க முடிந்தது.
(ஸ்டீவ் எலினர், லிங்க்ஸ் இன்டர்நேஷனல் அக்டோபர் 2016)
சாவேஸ் தனது திட்டங்களுக்கான அரசியல் பொருளாதார வழிகாட்டியாக ஏற்றவர் இஸ்துவான் மேசாரோஸ். 2001 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான அவரது “மூலதனத்துக்கு அப்பால்”(Beyond Capital) நூலை பொருளாதாரக் கொள்கை, மூல உத்தி குறித்த நுண்ணறிவு, புரட்சிகர உத்வேகம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாக மதித்து சாவேஸ் அதிலிருந்து கற்றார்.
1993 ஆம் ஆண்டு யாரே (Yare) சிறையில் இருந்து சாவேஸ் எழுதி வெளியிட்ட “மக்கள், வாக்கெடுப்பு மற்றும் ஜனநாயகம்” (Pueblo, Sufragio y Democracia) (People, Suffrage snd Democracy) என்ற சிறு நூலை இஸ்த்வான் மேசாரோஸ் வாசித்திருந்தார். புரட்சி குறித்த சாவேசின் அசாதாரணமான கருத்துக்கள் ரூசோவின் “சமூக ஒப்பந்தம்” (Rousseau’s Social Contract”) நூலுடன் தொடர்புடையதாக இருந்ததை மேசாரோஸ் கண்டார்.
சாவேஸ் மேசாரோசை பலமுறை சந்தித்து அவரிடம் நீண்ட நேரம் ஆலோசனைகள் நடத்தினார். அவரிடமிருந்து முக்கியமான இரண்டு கருத்துக்களை அவர் அறிந்து கொண்டார் :
1) மூலதனம் என்பது தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து வலுவூட்டிக் கொள்ளும் சமூக வளர்ச்சிதை மாற்ற அமைப்பு. இது சிக்கலான சமூக உற்பத்தி உறவுகளை மறு உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த அமைப்பு. இதனை எளிதில் ஒழித்து விட முடியாது.
சமூகத்தில் இயல்பாக கம்யூனல் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் வளர்சிதை மாற்ற அமைப்பினால் மட்டுமே இதற்கு பதிலீடு செய்ய முடியும்.
2) கம்யூனல் சமூக அமைப்பிற்கும் மதிப்பு விதி செயல்படும் சமூகத்திற்கும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு குறித்து மேசரோஸ் அளித்த விளக்கம் தெளிவானது. சமூக உறவுகளை புரட்சிகர அமைப்பாக்கும் மக்கள் கம்யூன்கள் வசம் நாட்டின் இறையாண்மை இருந்தால், இத்தகைய மக்கள் புரட்சியை மாற்ற முடியாது, அழிக்க முடியாது என்று மேசாரோஸ் கூறுகிறார். ஏனெனில் மக்கள் தங்களுக்கு சொந்தமான தாங்களே உருவாக்கிய கம்யூனல் அரசை பாதுகாக்க, காப்பாற்ற, எத்தகைய ஈகத்தையும் செய்யத் துணிவார்கள் என்றார் மேசாரோஸ்.
இது சாவேசுக்கு கம்யூன்கள் குறித்த அடிப்படை உத்திகளை அறிந்து கொள்ள உதவியது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் அரசைக் கைப்பற்றி தங்களுடையதாக்கி மக்கள் இறையாண்மை மிக்க ஆட்சியை – ஒரு புதிய வகை கம்யூனல் அரசமைப்பை உருவாக்க சாவேசால் முடிந்தது.
(ஜான் பெல்லமி பாஃஸ்டர், மந்த்லி ரெவியூ, ஏப்ரல் 2015)
வெனிசுவேலாவில் 2010 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கம்யூன்களுக்கான சட்டத்தின் அடிப்படையில் கம்யூனல் பேரவைக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தப் பேரவை உறுப்பினர்கள் பூர்சுவா ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் போல அல்லாமல், மக்களின் குரலாக – மக்களுக்கானவர்களாகவே செயல்படுகிறார்கள்.
சாவேஸ் பொலீவாரிய புரட்சியின் தலைவராக பதவியில் இருந்த 14 ஆண்டு காலமும் படிப்படியாக, அடுத்தடுத்து அதிகாரம் மக்கள் கைகளுக்கு மாறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் மூலம் மக்கள் தாமாகவே ஒழுங்கமைத்துக் கொண்டு புதிய அமைப்புகளை உருவாக்கி கீழிருந்து அதிகாரத்தைக் கையாளவும் பகிரவும் சாவேஸ் ஊக்குவித்தார். முன்பு அரசின் வசமே குவிந்திருந்த இறையாண்மையை மக்களுக்கே பகிர்ந்து அளித்தார். “அதிகாரத்தை தகர்த்தெறி” என்ற தலைப்பில் அவர் இறுதியாக ஆற்றிய உரையில் கூட, “கம்யூன்கள் இல்லையேல் ஒன்றுமேயில்லை” என்று அவர் முழங்கினார். 21 ஆம் நூற்றாண்டு சோஷலிசம் என்று தான் பெயரிட்ட சோசலிச சபதத்தை நிறைவேற்ற – அதாவது – “நிலையான பின்னோக்கிச் செல்லாத சோசலிச புரட்சியை” உருவாக்க, ஒரே வழி கம்யூன்கள்தான் என்று அவர் கருதினார். (ஜான் பெல்லமி ஃபாஸ்டர், மந்த்லி ரெவ்யூ, ஏப்ரல் 2015)
- அமரந்தா