லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 1

மரியாவுக்கு நோபல் பரிசு – வெனிசுவேலாவை வீழ்த்தவா?
மரியா கொரீனா மச்சாதோ என்ற பெண்மணிக்கு இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பரிசளித்தவர்கள் வாசித்தளித்த சான்றில் மரீயா,
” வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை ஊக்குவிக்க இடையறாது உழைத்தவர், நாட்டை சர்வாதிகாரத்திலிருந்து ஞாயமான அமைதியான முறையில் ஜனநாயகத்திற்கு மாற்றப் போராடியவர்” என்று போற்றப்பட்டிருந்தார்.
54 ஆண்டுகளுக்கு முன்னால், 1971 ஆம் ஆண்டு சீலே நாட்டு கவிஞர் பாப்லோ நெரூதாவுக்கும் இலக்கியத்திற்காக நோபல் பரிசு டிசம்பர் 12 ஆம் தேதி வழங்கப்பட்டது.
அதன் பிறகு தொடர்ச்சியாக சீலே நாட்டில் சோசலிச குடியரசுத் தலைவர் சால்வதோர் ஐயந்தே வின் அரசுக்கு எதிராக வட அமெரிக்கா பற்பல நாச வேலைகளை கட்டவிழ்த்து விட்டது. இறுதியில் 1973 செப்டம்பர் 11ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையின் உள்ளேயே, சால்வதோர் ஐயந்தே சீலே இராணுவ அதிகாரிகளால் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பினோசெத் என்ற இரத்த வெறி கொண்ட மிருகம், இராணுவ ஆட்சிக்கு தலைமை ஏற்றபின் செய்த படுகொலைகளால் சீலே தெருகளில் இரத்த ஆறு ஓடியது.
சரியாக 12 நாட்கள் கழித்து நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா விஷ ஊசி ஏற்றி கொல்லப்பட்டார் என அவரது அருகில் இருந்த அவரது ஓட்டுநர் தெரிவிக்கிறார். Clostridium Botulinum என்ற உயிர்க்கொல்லி மருந்து ஊசி மூலம் அவருக்கு செலுத்தப்பட்டிருந்தது என்பது பிற்பாடு அவரது உடற்கூறு பரிசோதனைக்குப் பின் கண்டறியப்பட்டது.
யார் இந்த மரீயா கொரீனா மச்சாதோ ? அவர் ஒரு பொறியியல் பட்டதாரி (Industrial Engineer). பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர். “சுமாதே” என்ற பெயரில் “தேர்தல்களில் வாக்களிப்பு மேற்பார்வை அமைப்பு” ஒன்றை அவர் வட அமெரிக்க தேசிய நிதியத்தின் (NED) கொடையினால் வெனிசுவேலாவில் 2001 முதல் 2010 வரை நிர்வகித்தார். 2010 முதல் 12 வரை “ஜஸ்டிஸ் ஃபர்ஸ்ட்” என்ற அரசு சாரா நிறுவனத்தையும் நிர்வகித்தார். 2012 முதல் “வெந்தே வெனிசுவேலா” ( வெனிசுவேலாவுக்கு வாருங்கள்) என்ற கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு வெனிசுவலாவில் தேர்தலை ஒட்டி நடைபெற்ற கலகங்களுக்கு இவரே காரணமாக இருந்தார். 2023 ஆம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். 2024 இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற மரீயா, பின்னர் எத்முந்தோ கொன்சாலேஸ் உர்ரூதியா என்பவரை வேட்பாளராக்கினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் கொன்சாலேஸ் நிக்கோலாஸ் மாதுரோ விடம் தோல்வியடைந்தார்
(எக்கனாமிக் டைம்ஸ் , 10, அக்டோபர் 2025).
அதனால்தான் மரீயா நோபல் பரிசு பெற்றது குறித்து சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு வயிறு கலங்குகிறது…
1998 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஊகோ சாவேஸ் என்ற இராணுவ லெப்டினென்ட் கல்னல், சீமோன் பொலிவார் வெனிசுவேலாவில் உருவாக்க விரும்பிய சோசலிச அரசை நிறுவினார். 2013 ஆம் ஆண்டு தான் கொல்லப்படும் வரை வெனிசுவேலாவை வழிநடத்தினார்.
- அமரந்தா