விடுதலை நோக்கில் ஈழத் தமிழர்கள் தமிழகத்தை எப்படி அணுக வேண்டும்?

பணம், பட்டம், பதவி அரசியல் தலைவிரித்தாடும் ஓர் இனத்தில் தாயக கனவில் சாவினை தழுவிய மாவீரர்களின் ஈகத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் ஈழப் போராட்டம். ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பிறகு, மாவீரர்கள் ஈட்டிய வெற்றிக்கு அப்பால் குறிப்பிட்ட குறிப்பிடத் தக்க எந்த வெற்றியையும் தமிழ் மக்கள் ஈட்டிவிட வில்லை. பாலத்தீனம், குர்திஸ்தான் போன்ற விடுதலைப் போராட்டங்களுக்கு பன்னாட்டளவில் கிடைத்துள்ள ஏற்பும் மதிப்பும் ஈழப் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. இது இரண்டாவது பெரிய துயரம்.
கார்த்திகை திங்களில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதேநேரத்தில் அடுத்தக் கட்டத்திற்கு எப்படி முன்னேறிச் செல்வது என்பது குறித்து ஆழமான மற்றும் புதிய சிந்தனையும் கடினமான முடிவுகளும் கட்டுக்கோப்பான நடைமுறைகளும் தேவைப்படுகின்றன.
முள்ளிவாய்க்கால் என்ற பல்கலைக்கழகம் சொல்லும் முதற்பெரும் பாடம் இதுதான்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
ஒரு செயலை செய்யும் முன் அச்செயலின் வலிமையையும் அதற்கு தேவையான தன்னுடைய வலிமையையும் எதிரியின் வலிமையையும் இருவருக்கும் துணையானவர்களின் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
பொருட்பாலில் வ்ரும் இக்குறளில் செயல் என்று சொல்லப்படுவது போர் பற்றி தான்.
ஈழத் தமிழருக்கு ஆத்ரவாக ஒரே ஒரு அரசுகூட இல்லாத நிலையில் எதிரும் புதிருமான அரசுகளின் ஆதரவை திரட்டி, அரசியல் இராஜதந்திரப் போரில் வெற்றியை ஈட்டிக் கொண்ட பின்புதான் சிங்கள பெளத்த பேரினவாதம் நேரடி ஆயுதப் போரில் இறங்கியது.
அன்றைய நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போரை நிறுத்த வலியுறுத்தி போராட்டங்களும் தீக்குளிப்புகளும் நிகழ்ந்த ஒரே இடம் தமிழ்நாடு. ஆனால், அந்த ஆதரவு போதுமானது அல்ல என்பது உண்மை.
தமிழ்நாட்டில் நிலவிய ஈழ ஆதரவு அடித்தளம் 1991 ஆம் ஆண்டு திருப்பெரும்புதூரில் வெடித்த குண்டுகளால் தகர்ந்து போனது என்பதுதான் வரலாறு. தமிழ்நாட்டிலேயே ஒரு சாரார் ஈழப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியதுதான் அந்த நிகழ்வு ஏற்படுத்திய மிக மோசமான விளைவாகும்.
அனைத்து தவறுகளும் ஒன்று சேர்ந்து முள்ளிவாய்க்காலில் போராட்டத்தை மூழ்கடித்துவிட்டது. அறிவாசான் வள்ளுவரின் வழிவந்த மக்கள் கேள்வி கேட்பாரின்றி படுகொலைக்கு ஆளானார்கள்.
இப்போதும்கூட முள்ளிவாய்க்காலில் இருந்து படிப்பினை பெற்று மீள்வதற்கு வழி கண்டாரில்லை! பகைவர்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் போல் ஈழத் தமிழரின் அரசியல் தொடர்து கொண்டே இருக்கிறது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான இந்த 16 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆதரவு பொருட்டு ஈழத் தமிழர்கள் மேற்கொண்ட அணுகுமுறைகள் முள்ளிவாய்க்கால் ஈட்டிக் கொடுத்த ஆதரவை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது.
புவிசார் அர்த்தத்திலும் வரலாற்று வழியிலும் ஈழத் தமிழருக்கு அமைந்துள்ள முதற்பெரும் அரசியல் நட்பு தமிழ்நாடாகும். எனவே, தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாமல் இந்திய அரசின் ஆதரவை பெறுவதும் ஈழத்தை வெல்வதும் சாத்தியம் இல்லை.
தமிழ்நாடு ஈழத்தமிழர்களுக்கு நட்பு சக்தி என்றால் அது இடைக்கால நட்போ அல்லது நீண்டகால நட்போ அல்ல நிரந்தர நட்பாகும். ஊழிகளைக் கடந்து தொடர்ந்துவரும், தொடரப்போகும் ஒரு பந்தமாகும்.
தமிழ்நாட்டில் ஈழ ஆதரவை பெருக்குவது எப்படி? என்று சிந்தித்து செயல்படுவதற்கு மாறாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கொள்கைப் பற்றை, நேர்மையை எடைப் போட்டு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கட்சிக்கு ஆதரவு, இன்னொரு கட்சிக்கு எதிர்ப்பு என்று நிலைப்பாடு எடுத்ததால் ஈழத் தமிழர்கள் விடுதலை நோக்கில் அடைந்தது என்ன என்று யாராவது அறுதியிட்டு சொல்ல முடியுமா?
முள்ளிவாய்க்காலின் போது உலகமே ஈழத் தமிழர்களை எதிர்த்து நின்ற போது தமிழ்நாடு இனவழிப்பு என்பதன் தீவிரத்திற்கு பொருத்தமான வகையில் எழுச்சிக் கொள்ளவில்லை என்பது கடும் விமர்சனத்திற்குரியதுதான். தமிழ்நாட்டு கட்சிகள் அனைத்தும் பதவி அரசியலின் வரம்புக்கு உட்பட்டே போராடின என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலில் இருக்கும் மக்கள்திரள் செல்வாக்கு கொண்ட கட்சிகள் பெரும்பாலும் பதவி அரசியல் கட்சிகள்தான். இதை மாற்றியமைத்து தூய இலட்சியங்களின் மேல் செயல்படும் ஒரு கட்சியையோ இயக்கத்தையோ ஈழத் தமிழர்களால் தமிழ்நாட்டில் உருவாக்கிவிட முடியுமா? முடியாது என்பதைவிட அது ஈழத் தமிழ்ர்களின் வேலையும் கிடையாது.
தேர்தலுக்கு அப்பால் செயல்படும் இயக்கங்களுக்கும் நடைமுறை சார்ந்த, வலிமை சார்ந்த வரம்புகள் இருக்கின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது..
முள்ளிவாய்க்காலின் போது தமிழ்நாட்டு கட்சிகளும் இயக்கங்களும் மக்களும் எழுச்ச்சியுடன் போராடி அதை தடுத்து நிறுத்தவில்லை என்பதால் எந்தவொரு கட்சியிடமும் இயக்கத்திடமும் ஈழத் தமிழர்கள் பகைமை பாராட்டினால் விளையப்போவது ஒன்றும் இல்லை. மாறாக அனைத்து கட்சிகளையும் இயக்கங்களையும் மக்களையும் தமக்கு ஆதரவாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும்.
ஓர் அடிப்படை விசயத்தை ஈழத் தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஈழப் போராட்டம் சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு எதிரானதுதானே தவிர வேறெந்த ஒரு நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானது கிடையாது. எனவே சிங்கள பெளத்த பேரினவாத்தை வெற்றிக் கொள்வதற்கு உலகில் எவருடைய ஆதரவையும் கேட்டுப் பெறுவது ஈழத் தமிழரின் கடமையும் உரிமையும்.
அந்த வகையில் இந்திய அரசின் ஆதரவையும் கேட்டுப் பெற வேண்டும். காங்கிரசு , பாசகவிடமும் ஆதரவு கேட்க வேண்டும். திமுக, அதிமுகவிடமும் கேட்க வேண்டும். பாமக விசிகவிடமும் கேட்க வேண்டும், கம்யூனிஸ்ட்களிடமும் கேட்க வேண்டும். இக்கட்சிகளுக்கு இடையே இருக்கும் முரண்பாட்டைப் பற்றி ஈழத் தமிழர்கள் கவலை கொள்ள வேண்டிய தேவையில்லை.
சிங்கள பெளத்த பேரினவாதத்தை கூண்டிலேற்றாமல் கருணாநிதியையும் ஸ்டாலினையும் சோனியாவையும் ராகுலையும் திமுகவையும் காங்கிரசையும் முதல் பகையாக்கி பிணக் காட்டில் சில்லறை காசு பொறுக்கும் வேலையை ஒருசில தமிழ்நாட்டு கட்சிகள் செய்வதால் அவர்களுக்கு திட்டவட்டமான அரசியல் நலன்கள் இருக்கின்றன. ஆனால், அதனால் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கப் போகும் நலன் என்ன? அதே சேற்றை வாரி ஈழத் தமிழனும் பூசிக் கொண்டு காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து பேசிக் கொண்டிருப்பதால் பகைமை வளருமா? நட்பு வளருமா?
மாறாக திமுக ஆதரவு நிலையெடுத்து பாரதிய சனதா கட்சியையும் நாம் தமிழர் கட்சியையும் பகைத்துக் கொள்வதாலும் ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சி , ஆட்சியில் இல்லாத கட்சி, ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி என்று பிரித்துப் பார்த்து வெவ்வேறு அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டிய தேவை இல்லை.
தமிழ்நாட்டில் ஒரு தலைவரை விமர்சிப்பதும் ஏளனம் செய்வதும் பகை பாராட்டுவதும் என்பது அந்த தலைவருக்குப் பின்னால் இருக்கும் பெருந்தொகுதியான மக்கள் கூட்டத்தில் கனிசமானோரை ஈழத் தமிழர்களுக்கு எதிராக திருப்பிவிடும். அப்படி எதிராக திருப்புவதன் மூலம் ஈழத் தமிழர்கள் தமக்கான ஆதரவை இழக்க நேரிடும்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தமது அரசியல் சதுரங்கத்தில் ஈழத் தமிழர்களைப் பகடைக் காயாக்கும் வேலையை எப்போதும் செய்வார்கள்? கருணாந்தி – எம்.ஜி.ஆர் காலந்தொட்டே தமது லாவணி அரசியலுக்கு ஈழத் தமிழ் அமைப்புகளை கச்சேரி பாட வைக்க முயன்றார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முடிந்தவரை தமிழ்நாட்டின் உள் அரசியலுக்குள் தலையிடாமல் தமிழ்நாட்டு ஆதரவை பெருக்க முயன்றது. தமிழ்நாட்டின் உள் அரசியலில் தலையிடாமல் இருப்பதுதான் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாகும்.
அதுமட்டுமின்றி, ஈழத் தமிழர்களின் நலனை முன்னிட்டு சுனாமிப் பேரிடரின் போதும் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது எதிரியோடு கைகுலுக்குவதற்கும் விடுதலைப் புலிகள் தயங்கவில்லை. இங்கே மக்களின் நலனை, கோரிக்கை நலனை முதன்மைபடுத்தி அதன் மேல் கட்டியெழுப்பப்படுவதுதான் அரசியலில் உறவும் பகையும் ஆகும்.
பதவி அரசியலில் மூழ்கிப் போயுள்ள சந்தர்ப்பவாத மற்றும் பிழைப்புவாத தலைவர்களுக்குப் பின்னால் இருக்கும் மக்கள் எப்படி ஈழத் தமிழர்களின் நிரந்தர நட்பு சக்தியாக இருக்க முடியும்? என்ற கேள்வி எழலாம். இங்கு தமிழ்நாடு என்றால் அது கட்சிகளும் தலைவர்களும் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள்.
தமிழ்நாட்டு மக்கள் என்றால் அது பெருந்திரளான மக்கள் மட்டுமல்ல, அரசியல் உணர்வைத் தாங்கி நிற்கும் அரசியல் முன்னணியினரும்தான். தமிழ்நாடு என்றால் ஈழத் தமிழர்களுக்கு நினைவுக்கு வர வேண்டியது ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியும் திருமாவளவனும் சீமானும் வேல்முருகனும் மட்டும் அல்ல. 19995 இல் யாழ்ப்பான வெளியேற்றத்தின் போது தீக்குளித்த அப்துல் ரவூப்பும் 2009 இல் இனவழிப்புப் போரை நிறுத்தச் சொல்லி தீக்குளித்த முத்துக்குமாரின், மூவர் தூக்கு எதிராக தீக்குளித்த செங்கொடியின் முகங்களும்தான். அது போல் ஆயிரம் ஆயிரம் முகம் தெரியாத தமிழ்நாட்டு உறவுகள்தான் ஈழ ஆதரவுக்கு அடித்தளமாக இருப்பவர்கள். அந்த அழுத்தத்தின் பெயரால்தான் தலைவர்களும் கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படத் துணிகிறார்கள்.
தமிழ்நாடு ஓர் அரச அடக்குமுறையை சந்தித்தால் அதைக் கண்டித்துப் போராடுவதற்கு சுமந்திரனையோ கஜேந்திரக் குமார் பொன்னம்பலத்தையோ ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னெழுச்சியாகப் போராடுவார்கள். அதுபோல், ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு எந்த தலைவரையும் சார்ந்தது அல்ல, மக்களிடையே நிலவும் தன்னெழுச்சியான உணர்வெழுச்சியின் வெளிப்பாடு.
ஈழத் தமிழர்கள் முதலில் தமிழ்நாட்டு மக்களிடமும் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் நட்பை வளர்ப்பதற்கான ஒரு வழிகாட்டு நெறிகளை உருவாக்க வேண்டும். அது வளர்ந்து சென்று பின்னர் இந்திய அரசின் ஆதரவைப் பெறுவதற்கு வழிவகுக்கும். ஈழத்திற்கான கதவைத் திறக்கும்!
தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாமல் ஈழம் மெய்ப்படப் போவதில்லை என்பதை ஈழத் தமிழர்கள் எந்த நாளும் மறந்துவிடக் கூடாது.
- செந்தில், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
நன்றி: உரிமை மின்னிதழ்