இது இந்திய நாடாளுமன்ற சனநாயகத்தின் வாழ்வா? சாவா? போராட்டம்! – செந்தில்

06 Nov 2025

எது இறுதி நம்பிக்கையாக இருந்ததோ அதுவே கேள்விக்குள்ளாகி விட்டது. இந்தியாவின் தேர்தல் சனநாயகம் மரணப் படுக்கையில் இருக்கிறது!

2014 இல் இந்திய தலைமை அமைச்சராக முடிசூடிக்கொண்ட மோடியும் அவரது தளபதியான அமித்ஷாவும் அவரது கூட்டாளிகளான அதானியும் அம்பானியும் இந்நாட்டை தாங்கள் விரும்பும் திசையில் வேகமாக நகர்த்திச் செல்கின்றனர். தேர்தல் நடக்கின்றது என்ற காரணத்தின் பெயரால் இது சனநாயகம் என்று புகழப்பட்டாலும் உண்மையில் இவ்வரசு வெகுதூரம் விலகிப் போய்விட்டது.

நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் தலைமை அமைச்சர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 145 கோடி மக்களின் வாழ்வும் சாவும் வளங்களும் செல்வமும் இன்பமும் துன்பமும் நிகழ்காலமும் எதிர்காலமும் ஒரு சிறு குழுவினரால் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 ஆட்சிக் கட்டிலில் இருப்போர் நான்கு திசையில் நாட்டை வேகமாக இழுத்துக்கொண்டு போகிறார்கள்.

முதலாவது, இந்துராஷ்டிரத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இசுலாமியர்கள், கிறித்தவர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றுவது.

இரண்டாவது, மாநில உரிமைகளைப் பறித்து ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவிப்பதன் மூலம் முழுமையான ஒற்றையாட்சியாக மாற்றுவது

மூன்றாவது, இந்நாட்டின் நிதி வளங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், காடு, மலை, கடல், கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் என அனைத்தையும் அதானி, அம்பானி கைகளுக்கு சேர்ப்பதன் மூலம் உலகளாவிய நிதிமூலதன சந்தையில் போட்டிப் போடக் கூடியவர்களாக அவர்களை வளர்த்தெடுப்பது.

நான்காவது, நாடாளுமன்ற சனநாயகத்தை செங்கல் செங்கல்லாக பெயர்த்து எடுத்து அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாகும்.

இதில் முதல் மூன்று நிகழ்ச்சிநிரல் பற்றி மக்களிடையேயும் அரசியல் ஆற்றல்களிடையேயும் நிலவும் விழிப்புணர்வுகூட நான்காவது விசயத்தில் இல்லை.

நாடாளுமன்ற சனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு ஆட்சியாளர்கள் செய்வதில்லை. நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் தொட்டு வணங்கி நாடகமாடிக் கொண்டே அதை ஒழித்துக்கட்டும் வேலையில் இருக்கிறார்கள். மக்களவை, மாநிலங்களவை, நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், அமைச்சரவை ஆகியவற்றை செல்லாக்காசாக்கிவிட்டு, ஆர்.பி.ஐ., அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ. நீதிமன்றங்கள், நிதி ஆயோக், நிதி ஆணையம் ஆகியவற்றை தமது கைப்பாவை ஆக்கி, அனைத்து முடிவுகளும் மோடி – அமித் ஷா – அஜித் தோவல் குழுவினரால் எடுக்கப்படுகின்றன. இந்த வரிசையில் அதிகாரத்தில் உள்ள முதலைகள் தேர்தல் ஆணையத்தையே விழுங்கிவிட்டன.

களத்தில் நிற்பது யார்?

கெடுவாய்ப்பு என்னவென்றால் நாடாளுமன்ற சனநாயகத்தை ஆட்சியாளர்கள் ஒழித்துக்கொண்டு இருப்பதற்கு எதிராக வெகுமக்களிடையே போராட்டங்கள் எழவில்லை; எதிர்க்கட்சிகளிடையே பதற்றமோ அல்லது இதை தடுப்பதற்கான வேலைத்திட்டமோ இல்லை. அன்னா அசாரேவுடன் ஊழல் எதிர்ப்புக்காக தெருக்களில் இறங்கிப் போராடிய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் இந்நாட்டின் நாடாளுமன்ற சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு தெருக்களில் இறங்கவில்லை.

குடிமை சமூகத்தில் உள்ள சொற்பமான நபர்கள்தான் ஆட்சியாளர்களின் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் தேர்தல் அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள், துடிப்புமிக்க ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர்தான் தமது கடமையாக இதை வரித்துக்கொண்டு களமாடி வருகின்றனர்.

2019 ஜூலை 2 அன்று குடிமைச் சமூகத்தினர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, தேர்தல் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டினார்கள்.  இதே அமைப்பினர் தேர்தல்கள் மீதான குடிமக்கள் ஆணையம் ஒன்றை உடனடியாக அமைத்து இரு ஆய்வறிக்கைகளைக் கொண்டுவந்தனர். அதில், கணிசமான அளவுக்கு வாக்காளர் நீக்கம் நடந்திருப்பதை அம்பலப்படுத்தினர். VVPAT சீட்டுகளை எண்ணிப் பார்க்க வேண்டும், என்று சுட்டிக்காட்டினார்கள்.

இதற்கிடையே தேர்தல் பத்திர ஊழல் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை திரட்டியது பாசக. மேற்சொன்ன குடிமை சமூகத்தின் முயற்சியால், உச்சநீதிமன்றத்தின் வழியாக தேர்தல் பத்திர சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், முறைகேடாக நிதி  திரட்டிய பாசகவை உச்சநீதிமன்றம் கூண்டிலேற்றவில்லை.

2024 மக்களவை தேர்தல் முடிந்தவுடன் Vote for Democracy (VFD) என்ற அமைப்பு தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தது. சுமார் 5 கோடி வாக்குகள் திணிக்கப்பட்டுள்ளதை அது அம்பலப்படுத்தியது. அதன்படி 15 மாநிலங்களில் 79 மக்களவை இடங்களில் பாசக பெற்றுள்ள வெற்றி  மோசடியானது என்று குற்றஞ்சாட்டியது.  தமிழ்நாட்டில் பாசக வின் வாக்கு விழுக்காடு உயர்ந்தது மோசடியால் தான் என்றது VFD. மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் நடைபெற்ற மோசடியையும் வெளிக்கொண்டு வந்தது VFD

இத்தனைக்கும் பிறகே, கர்நாடகாவில் மக்களவை தேர்தலின் போது மகாதேவபுரா தொகுதியில் நடந்துள்ள வாக்குத் திருட்டையும் கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஆலந்த் தொகுதியிலும் மராட்டிய மாநிலத்தில் உள்ள ரஜூரா தொகுதியிலும் நடைபெற்றுள்ள  வாக்குத் திருட்டு முயற்சிகளையும் காங்கிரசு கட்சி அம்பலப்படுத்தியது.

பீகாரில் SIR:

காங்கிரசு இதை தொடங்குவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே, ஜூன் 24 ஆம் நாள் ஒரு புதிய அறிவிப்பைக் கொடுத்தது தேர்தல் ஆணையம். பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு ( SIR ) நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக சொன்னது தேர்தல் ஆணையம். ”பீகார் தேர்தலுக்கு மூன்று மாதங்கள்தானே இருக்கிறது” என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்வியையும் மீறி, SIR ஐ நடத்தி முடித்து, செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம். 2024 மக்களவை தேர்தலின் வாக்காளர் பட்டியலில் இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது சுமார் 47 இலட்சம் பேரது பெயர்கள் இப்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தை எதிர்ப்பார்த்திருந்தன எதிர்க்கட்சிகள். வாக்காளருக்கான சான்று ஆவணமாக ஆதார் அட்டையையும் சேர்த்துக்கொள்ளுமாறு ஆணையிட்டதை தவிர உச்சநீதிமன்றம் உருப்படியாக எதையும் செய்யவில்லை.

செப்டம்பர் 30 அன்று இறுதிப் பட்டியலை வெளியிட்ட கையோடு நவம்பரில் தேர்தலை அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். 2002 சூன் மாதத்திற்கும் 2003 சனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட SIR ஐ தான் மீண்டும் செய்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் சூடமேற்றி சத்தியம் செய்தது தேர்தல் ஆணையம். ஆனால், இப்போது செய்யப்பட்டுள்ள SIR அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

2003 இல் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கான விதிகளை தேர்தல் ஆணையம் மறைத்து வைத்திருந்த நிலையில்,  Association for Democratic Reforms சனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)தான் அதை வெளிக்கொணர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

பருவம் வந்த அனைவருக்கும் வாக்குரிமையை உறுதிசெய்யும் பொறுப்பை தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தி இருந்தது அரசமைப்பு;ச் சட்டம். இப்போது,  தான் ஒரு குடிமகன் என்பதை மெய்ப்பித்து, படிவத்தை நிரப்பித் தந்து, தனது வாக்காளர் அட்டையைப் பெறவேண்டிய பொறுப்பு குடிமகனின் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது.

2003 SIR இன் போது குடியுரிமையை மெய்ப்பிக்கக் கோரும் சான்றுகள் எதுவும் கேட்கப்படவில்லை. வயது, முகவரியை சரிபார்க்க மட்டுமே சான்று ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. படிவங்களை நிரப்பிப் பெற வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைய அதிகாரிக்குத்தானே ஒழிய, குடிமக்களுக்கு இல்லை. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடுவீடாக சென்று சரிபார்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். முந்தைய வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அவரது பெயர் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும், சான்றுகள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. அதாவது வாக்காளர் அட்டை சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், இதற்கு முற்றிலும் நேரெதிராக இந்த SIR செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக இலட்சக்கணக்கானோரது வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையால் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பகுதியினர் இசுலாமியர்கள், தலித் மக்கள், பழங்குடிகள், பெண்கள், உழைக்கும் மக்களாகத்தான் இருப்பர்.

இது தேர்தலில் யார் வெல்வது? யார் தோற்பது? என்பது பற்றிய பிரச்சனையில்லை. வாக்குரிமைப் பறிப்பின் மூலம் இந்நாட்டு குடிமக்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள்? சனநாயகம் புதைக்கப்பட்டுவிட்டது! அந்த புதைமேட்டில் நின்றபடி, தேர்தலை நோக்கிப் போக தொடங்கிவிட்டன எதிர்க்கட்சிகள். அவை போட்டியிடும் இடங்களைப் பிரித்துக்கொள்ளும் சண்டையில் மூழ்கிப் போயின.

வாக்குரிமை இழந்தவர்கள் யார்? அவர்களுக்கு அது தெரியுமா? அவர்கள் இழந்த வாக்குரியை மீண்டும் பெறுவது எப்படி? வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களைக் கொண்டு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் அதை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகிவிட்டன. வெற்று காகிதமாக அரசமைப்பு சட்டம் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

வரலாற்று உரிமை:

”ஒவ்வொரு மாந்தரும் பிறப்பால் நிகர்” என்ற முழக்கத்துடன் மன்னராட்சிக்கு எதிராகத் தொடங்கிய மாபெரும் மக்கள் யுகம் பிறப்பின் அடிப்படையிலான அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் அடித்து நொறுக்கியது. அந்த பெரும் சூறாவளியின் மையத்தில்  எல்லாவித ஏற்றத்தாழ்வையும் மறுத்து மக்களை அடிப்படை சக்தியாக மாற்றும் ”அனைவருக்கும் வாக்குரிமை ( Universal Suffrage)” என்ற கோரிக்கை எழுந்தது.

18 ஆம் நூற்றாண்டில் எழுந்த அமெரிக்க விடுதலைப் போராட்டமும் பிரெஞ்சுப் புரட்சியும் 19 ஆம் நூற்றாண்டில் எழுந்த அமெரிக்க கறுப்பின விடுதலைப் போராட்டமும் நிறைவு செய்யாத இக்கோரிக்கையை 20 நூற்றாண்டில் ஆகாவென்றெழுந்த சோவியத் புரட்சி நிறைவு செய்தது. அனைவருக்கும் வாக்குரிமை என்பதை சட்டமாக்கி மனித சமூகத்தைப் பாய்ச்சலில் முன்னகர்த்தியது சோவியத் ரசியா.

பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை ஒரு தர்மமாக போதிக்கும் இந்திய நாட்டில், சாதி, சமய, பாலின, வர்க்க, கல்வித் தகுதி ஆகிய அனைத்தின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுக்கும் எதிரானப் பாய்ச்சலாக ”அனைவருக்கும் வாக்குரிமை” என்பது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையரான சுக்லா சென் போன்றோரது நாட்டுப்பற்றுமிக்க உழைப்பால், வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை உறுதிசெய்யப்பட்டு, மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு பழக்குவிக்கப்பட்டனர்.

இரண்டு நூற்றாண்டு போராட்டங்களில் வென்றெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை என்ற உரிமையை இப்போது கேள்விக்குள்ளாக்கியுள்ளது மோடி அரசு.

இது யாருடைய போராட்டம்?

2023 ஆம் ஆண்டு திசம்பரில் தேர்தல் ஆணையர் பணி நியமனத்திற்கான குழுவில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. தேர்தல் ஆணையத்தை விழுங்கப் போகிறார் மோடி என்பது அப்போதே புலப்பட்டுவிட்டது. விழிப்புமிக்க எதிர்க்கட்சிகளாக இருந்திருந்தால், தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும்போது இப்படியொரு சட்டத்தை ஆளுங்கட்சி கொண்டு வருவதை மக்களிடம் அம்பலப்படுத்தி, இந்நாட்டைப் போர்க்களமாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளோ வேடிக்கைப் பார்த்தன.

2024 மக்களவைத் தேர்தலை நடத்திய விதம், VVPAT ஐ எண்ணிக் காட்ட மறுத்தது, சிசிடிவி கேமராப் பதிவுகள் உள்ளிட்ட தேர்தல் ஆவணங்களை யாருக்கும் காட்ட முடியாது என்றும் சிசிடிவி பதிவுகளை 45 நாட்களுக்கு மேல் பாதுகாத்து வைக்கத் தேவையில்லை என்றும் விதிகளை திருத்தியமை என இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் தேர்தல் சனநாயகத்தை இந்துத்துவ பாசிசம் விழுங்கிக்கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

மேலும் அவர்கள் அவ்வளவு எளிதில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்போவதில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

எதிர்க்கட்சிகளோ காந்தியும் நேருவும் அம்பேத்கரும் வானத்தில் இருந்து இறங்கி வந்து நாடாளுமன்ற சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு போராடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. காங்கிரசு தவிர ஏனைய எதிர்க்கட்சிகள் தமது மாநிலத்தில் தமது வெற்றி, தோல்விக்கு அப்பால் எந்த விசயத்தையும் சீர்தூக்கிப் பார்க்க தயாராக இல்லை.

எனவே, இந்தியாவின் நாடாளுமன்ற சனநாயகத்தை மீட்க வேண்டியதோ தேர்தல் சனநாயகத்தை உயிர்ப்பிக்க வேண்டியதோ இந்நாட்டின் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் போன்ற கோரிக்கையே அன்றி வேறு எவரது வேலைத்திட்டமும் இல்லை.

நாடாளுமன்ற சனநாயத்தையும் அதன் பகுதியான தேர்தல் சனநாயகத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புக்கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தால் மட்டுமே ஒரு நாட்டில் பாசிச அபாயத்தை முறியடிக்க முடியும், சனநாயகத்தை தக்க வைக்கமுடியும்.

அந்த வகையில், தேர்தல் சனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என்பது இந்திய நாடாளுமன்ற சனநாயகத்தின் வாழ்வா? சாவா? போராட்டமாகும்.

  • செந்தில், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW