நேபாளத்தில் நடப்பது என்ன? எழுச்சியா? கிளர்ச்சியா? அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியா?

ஆம். கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர் நேபாளத்தில் சென்ற செப்டம்பர் மாதம் நடைபெற்றதை எழுச்சியும் இல்லை; கிளர்ச்சியும் இல்லை என்கின்றனர்.
அவ்வாறெனில் அவர்களின் பார்வையில் அங்கு நடந்ததுதான் என்ன?
அது கும்பல் கலவரம்; இல்லாவிட்டால் அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியாகத்தான் இருக்கவேண்டும்.
ஆனால் இவ்வாறு எதிர்மறையாக சித்திரிக்கப்பட்ட இந்த அரசியல் நிகழ்வின் விளைவாய் பதவி விலகிய பிரதமர் கே. பி. சர்மா ஒலி, தன்னுடைய பதவி விலகலுக்கு காரணமான இந்த அரசியல் நிகழ்வை கும்பல் கலவரம் என்றோ அமெரிக்கப் பின்புலத்தினால வண்ணப் புரட்சி(colour revolution) என்றோ சித்திரிக்கவில்லை.
மாறாக, இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா நேபாளத்தின் மீது 2015ல் பொருளாதாரத் தடையை விதித்ததால் சீனாவை சார்ந்து அதை எதிர்கொண்டதாலும் இந்தியா ஆகஸ்ட் 2019ல் ஜம்மு-காஷ்மீருக்கான சட்டப் பிரிவு 370ஐ நீக்கிவிட்டு அதே ஆண்டின் நவம்பரில் வெளியிட்ட அதிகாரபூர்வ வரைபடத்தில் நேபாளத்திற்கு சொந்தமான நிலப்பரப்புகளான காலாபாணி, லிபுலெக், லிம்பியதுரா ஆகியன இடம்பெற்றதற்கு எதிராக நேபாள அரசியல் சாசனம் திருத்தப்பட்டு நேபாள அதிகாரபூர்வ வரைபடத்தை ஐநாவுக்கு அனுப்பப்பட்டதாலும் இந்தியா தனக்கு எதிராக செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை இன்னொரு தடவையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்தியா இதை மறுக்காததோடு புதிய பிரதமருக்கு வாழ்த்தை தெரிவித்துவிட்டு, உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் கே. பி. சர்மா ஒலி நேபாள Gen-Z இளைஞர்களின் போராட்டத்தை இன்றுவரையிலும் பெரிதாக எதிர்மறையாக குறிப்பிடாததோடு மேற்காண் போராட்ட இளைஞர்களை சுட்டுத் தள்ளிய போலீசாரின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் வழக்கமான ஒன்றல்ல என்கிறார்.
இவர் பதவி விலகி தற்காலிக அரசாங்கம் பொறுப்பேற்ற பின் கூட்டறிக்கை வெளியிட்ட நேபாள காங்கிரஸ், CPN-UML, CPN(Maoist Center), CPN(Unified Socialist), ஜனதா சமாஜ்வாடி கட்சி, லோக்தந்திரிக் சமாஜ்வாடி கட்சி, Nagarik Unmukti Party, ஜனாமாத் கட்சி ஆகியன போராடியோருக்கு எதிராக அமெரிக்க பின்புலத்தினாலான வண்ணப் புரட்சிக்காரர்கள் என்றோ கும்பல் கலவரக்காரர்கள் என்றோ எதிர்மறையாக குறிப்பிடவில்லை.
நேபாள புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (RCPN) எனும் நாடாளுமன்றம் சாரா கம்யூனிஸ்ட் கட்சியும் அவ்வாறே சொல்லியுள்ளது. ஆனால் வீழ்ந்த ஆட்சியாளர்களை திரிபுவாத கொலைகாரர்கள் என்றே கடுமையாக விமர்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையை காண்க. Official RCPN Statement On Recent Protests In Nepal – REDSPARK https://share.google/iXykF8nc4yssOAJ9p
இத்தகையோரே இவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொள்ளும்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரில் சிலர்/ஒரு பிரிவினர் Gen Z போராட்டக்காரர்களை கும்பல் கலவரக்காரர்கள் என்றும் அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சி என்றும் தவறாகச்
சித்திரிக்கின்றனர். ஆதாரங்களை வழங்காமலேயே.
இவர்கள் இவ்வாறு சித்திரிப்பதற்கான ஒரு காரணம் என்னவென்றால் மக்கள் திரள்கள் தன்னெழுச்சியாகப் போராடுவர் எனும் பார்வை இல்லாததே.
ஆனால் வரலாறே வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் என்று கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கிறார்.
இவ்வர்க்கப் போராட்டங்களில் ஏகப் பெரும்பான்மையானவை தன்னெழுச்சி வகைப்பட்டதே. அதனால் கார்ல் மார்க்ஸ் போன்றோர் அவற்றை கும்பல் கலவரங்கள் என்றோ இன்னொரு ஆளும் வர்க்கத்தின் தூண்டுதல் என்றோ எதிர்மறையாக மதிப்பிட்டதில்லை.
இத்தகைய போராட்டங்கள் திட்டவட்டமான தலைமை இன்றியோ பல வித வடிவங்களிலோதான் நடக்கும்.
அவற்றுக்கு கோரிக்கைகளே முக்கியம். ஆளும் வர்க்கத்தின் கையாளுகையும் சில நேரங்களில் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கும்.
போராட்டத்தின் போக்கில் பலவேறு தரப்பினர் ஈடுபடுவர்.
நேபாளப் போராட்டத்திலும் அவ்வாறே.
இதில் முதலாளிய ஜனநாயக சக்திகள், ஊழல் எதிர்ப்பாளர்கள், பாசிச எதிர்ப்பாளர்கள், வெவ்வேறு கம்யூனிஸ்டுகள், முடியாட்சி எதிர்ப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த மார்ச் முதல் மே வரை அந்நாட்டில் நடந்த முடியாட்சி மீட்பு இயக்கம் தோற்றதால், அண்மைய போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முடியாட்சி ஆதரவாளர்களும் இதில் பங்கேற்றனர். தற்போதைய இடைக்கால அரசாங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்று எத்தனிப்பார்கள்.
இத்தகைய நிலைமையில்தான் மேற்காண் எட்டு கட்சிகளில் எக்கட்சியும் இடைக்கால அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும் நேபாள முந்நாளைய பிரதமரும் நேபாள சமாஜ்வாதி கட்சி(புதிய சக்தி)ன் தலைவருமான பாபுராம் பட்டாராய் பங்கேற்றார்.
CPN – UML மற்றும் RCPN தவிர மேற்காண் எட்டு கட்சிகளும் இக்கட்சியும் ஏனைய இரு கட்சிகளும் வரும் மார்ச் 5 ஆம் நாளன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவுள்ளன.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் நிறுவுமாறு உச்சநீதிமன்றத்தை அணுகும் யோசனையில் இருக்கிறது பதவி விலகிய பிரதமர் கே.பி. சர்மா ஓலி தலைமையிலான CPN – UML கட்சி.
எனினும் இதற்கிடையில் நேபாள உயர்நீதிமன்றத்தில் இதே கோரிக்கைக்காக பத்து ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மீதான உச்சநீதிமன்ற விசாரனை வரும் அக்டோபர் 29 அன்று நடைபெறவுள்ளது.
வரும் 2026 மார்ச் 5 அன்று நாடாளுமன்ற தேர்தல் நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில்,
- உச்சநீதிமன்ற விசாரணை முடிவு எப்போது வெளியாகும்?
- இடைக்கால அரசாங்கம் தேர்தல் நடத்துவதற்கான சூழலை உருவாக்கவில்லை என்றும் அதற்கேற்ப 11 நாடுகளுக்கான நேபாள நாட்டின் தூதர்களை திரும்பப் பெற்றது என்பது தேவையில்லாது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. ( ஆனால், இந்தியாவுக்கான தூதர் திரும்பப் பெறப்படவில்லை)
மறுபுறத்திலோ நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று CPN – UML தெரிவித்துள்ளதை மேலே பார்த்தோம்.
இத்தகைய நிச்சயமற்ற சூழலில்தான் முடியாட்சி ஆதரவு சக்திகள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு காத்து கிடக்கின்றன.
”GEN-Z MOVEMENT FOR MONARCHY” என்ற பெயரிலும் செயல்படுகின்றனர்.
- பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.சர்மா ஓலி உள்ளிட்ட மூவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்
- பிரசந்தாவுடைய சொத்துகள் குறித்து புலனாய்வு விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில்
தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்று அரசியல் கட்சிகள் ஐயப்படுகின்றன.
நாடாளுமன்றத்திற்கு புதிய தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே இருக்க வேண்டிய இடைக்கால அரசாங்கம் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது.
GEN-Z இயக்கத்தால் ஆட்சியில் அமர்ந்த இடைக்கால அரசாங்கம் என்ற காரணத்தினால்
- தனிநபர் பரிசுத்தம்/ நேர்மை நிறைந்தோராக கருதப்படும்/ அறியப்படும் நபர்களை இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களாக நியமித்து வருகிறது.
- GEN-Z இயக்கத்தினரையே முதலில் கலந்து ஆலோசித்து வருகிறது.அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் அவற்றிடமும் கலந்தாலோசனைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அதேநேரத்தில், அரசியல் கட்சிகளிடம் உள்ள கட்டமைப்பு GEN-Z இயக்கத்தினரிடம் இல்லாததால் தேர்தலில் தோற்கடிக்கப்படுவர் என்று எண்ணியே அவர்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப இடைக்கால அரசாங்கம் மேற்கண்டவாறாக கே.பி.சர்மா ஓலி, பிரசந்தா ஆகியோர் மீது மேற்காண் நடவடிக்கைகளில் இறங்குகிறது.
***************
நேபாளத்தில் இத்தகைய நிலையற்ற சூழல் நிலவினாலும் ஆட்சிமாற்றம் முதற் கொண்டு இன்றுவரையிலும் இத்தகைய சூழலுக்கு காரணம் அமெரிக்கா போன்ற அந்நிய சக்திகளே என்று இன்றுவரையிலும் எந்த மைய நீரோட்டக் கட்சியும் குறிப்பிடவே இல்லை. நேபாள காங்கிரசு மற்றும் மைய நீரோட்ட இடதுசாரி/ கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றுவரையிலும் இவ்வாறு திட்டவட்டமாக தெரிவிக்காகததோடு GEN-Z எழுச்சியின் உயிர்த்தியாகத்தைப் பாராட்டவே செய்கின்றன.
நேபாள புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் 16.10.2025 தேதியிட்ட பொலிட்பீரோ கூட்ட தீர்மானமும் அவ்வாறே சொல்கிறது. தீர்மானத்தை சுட்டியில் காண்க.
எனினும் இந்தியாவில்/ தமிழ்நாட்டில் உள்ள சில கமயூனிஸ்ட் தோழர்கள் – அமைப்புகள் GEN-Z கிளர்ச்சியை அமெரிக்கப் பின்புலத்திலான சதிச்செயலாக இருக்குமோ என்று கருதுகிறார்கள்.
ஆனால், நேபாளத்தில் உள்ள எக்கட்சியும் அதை சூசகமாகக்கூட குறிப்பிடவில்லை.
இக்கம்யூனிஸ்ட் தோழர்களின் அளவுகோலின்படி GEN-Z இயக்கத்தினர் அண்மைக் காலமாக மடகாஸ்கார், மொராக்கோ, இந்தோனேசியா, பிலிபைன்ஸ், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் போராடி ஆட்சி மாற்றங்களை சாதித்தது என்பது அமெரிக்க சதிச்செயலின் விளைவுகளா?
அவ்வாறெனில் ,
- நேபாளத்தில் நடந்த GEN-Z இயக்கத்தினரின் எழுச்சியை அங்குள்ள வெவ்வேறு விதமான கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எதிர்க்காதது ஏன்? சொல்லப்போனால் இவ்வெழுச்சியில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்துகின்றனரே.
அத்துடன், சில கம்யூனிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்தோர் இதில் பங்குபெற்றனரே. அதை மேற்காண் 16.10.2025 தேதியிட்ட நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ தீர்மானம் சுட்டிக்காட்டுகிறதே.
- நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாவோ இத்தகைய எழுச்சியை தான் எதிர்ப்பார்த்தே வந்ததாகவும் அதை ஏற்கனவே பல தடவைகள் கணித்து, பகிங்ரங்கமாக தெரிவித்ததாகவும் இப்போது தெரிவிக்கிறார்.
- பிலிப்பைன்ஸ் போராட்டமும் hybrid வடிவில் ( நேரடியாகவும் சமூக வலைதள ஒருங்கிணைப்பு வாயிலாகவும் ) நடைபெற்று அதில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர்.
- வங்கதேசப் போராட்டமும் இவ்வாறே. தோழர் பத்ருதீன் உமர் தலைமையிலான மார்க்சிய லெனினிய அமைப்பு இதில் பங்கேற்றது.
- இலங்கையிலோ சமூக வலைதள ஒருங்கிணைப்புடன் ஜேவிபி, முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்றவற்றின் பங்கேற்புடன் நேரடியாக நடைபெற்றது.
*****************
இத்தகைய போராட்ட வடிவங்களுக்கு முன்னோடியாக 2011 இல் அரபு வசந்த எழுச்சி நடைபெற்றது. அதில் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்கள் துனிசியாவிலும் எகிப்திலும் வீழ்த்தப்பட்டனர்.
- துனிசியாவிலோ 25 ஆண்டுகால அமெரிக்க ஆதரவு சர்வாதிகார ஆட்சியானது துனிசிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியால் ( hamma – hamami ) வீழ்த்தப்பட்டது.
- துனிசியாவிலும் எகிப்திலும் அப்போது நடந்த ஆட்சி மாற்றங்களை சாதித்தோர் ஏனைய வர்க்கங்களின் பங்கேற்புடன் பாட்டாளி வர்க்கத்தினரே.
****************************
மீண்டும் நேபாளத்திற்கு வருவோம்.
நேபாளத்தின் பலவித மையநீரோட்டத் தன்மையில் நிலைப்பெற்ற கம்யூனிஸ்ட்/ இடதுசாரி அமைப்புகளும் புரட்சிகர கம்யூனிச்ட் கட்சியும் பரந்துபட்ட நேபாள மக்கள் திரளின் சிக்கல்களான வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றை தீர்க்காததோடு மேற்காண் மையநீரோட்டக் கட்சியினரின் ஆடம்பர வாழ்க்கையினைக் கண்டு அதிருப்தி நிலவிவந்த சூழலில்தான் இந்த எழுச்சி நடைபெற்றது.
அதனால், தமக்கெதிரான சிக்கலாக ஊழல் என்பதையும் கண்டனர். மேற்காண் ஆடம்பர வாழ்க்கைக்கும் விலைவாசி உயர்வுக்கும் வேலையின்மைக்கும் ஊழலுடன் உறவு இருப்பதாக கண்டனர். மேல்நடுத்தர வர்க்கத்தினர் ஊழல் எதிர்ப்புக்காக இந்த எழுச்சியில் பங்கேற்றனர்.
மேற்காண் சிக்கல்கள் தீராததோடு அரசியல் நிலையின்மை ( Political Instability) கடந்த 17 ஆண்டுகளாக நிலவி வருவதால் பரந்துபட்ட மக்கள் திரள்களுக்கு மேலும் அதிருப்தி கூடியது.
கடந்த 17 ஆண்டுகளில் 14 ஆட்சிகள் மியூசிக்கல் சேர் விளையாட்டுப் போல் அமைந்தன. நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் பிரசந்தா அமர்ந்ததும் நடந்தது. ஆனால், அவரது கட்சியோ மிகக் குறைந்த இடங்களையே பெற்றிருந்தன, பிரசந்தா ஆட்சியில் அமர்ந்தது ஒரு வினோதம் போல் இருந்தது.
இதன்மீதான கோபம் அதிகரித்து, பிரசந்தா – பாபுராம் பட்டாராய் போன்றோரது வீடுகள் தாக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் ஜாலாநாத் கனால் என்பவரின் மனைவியும் தாக்கப்பட்டார். நிதியமைச்சரும் ஓடஓட விரட்டப்பட்டார்.
மேலும் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை வளர்ச்சியினால் கட்சி எதிர்ப்பு/ கட்சி சாரா என்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அரசியல் ( depoliticised politics) வளர்ந்ததன் விளைவாய் நேபாள தலைநகர் காத்மண்டு உள்ளிட்டு மூன்று உள்ளாட்சிகளின் மேயர்கள் கட்சி சாரா சுயேட்சை வேட்பாளர்களாக அப்பதவிகளுக்கு வெற்றிப் பெற்றனர்.
காத்மண்டு மேயர் உள்ளிட்டு ஒருசிலர் சமூக வலைதளங்களில் பெரும் எண்ணிக்கையிலான பின் தொடர்பவர்களைப் ( followers) பெற்றுள்ளனர். இத்தகையோரின் பங்களிப்பு இத்தகைய நேபாள எழுச்சிக்கு முதன்மை காரணியாக இல்லாவிட்டாலும் அதற்கே உரிய செல்வாக்கை செலுத்தியது.
இந்த சோசியல் மீடியா இன்புளுன்சியர்கள் முதலாளிய சனநாயக ஆர்வலர்கள் ஆவர். அதனால், அவர்களும் ஊழல் மிகுந்த/ நிர்வாக சீர்கேடு மிகுந்த அரசியல் ஸ்திரமின்மைக்கு காரணமானவற்றை எதிர்த்து இவ்வாறு பங்காற்றுகின்றனர்.
உண்மையில் அமெரிக்க நலனுக்கு ஏற்றவாறு வண்ணப்புரட்சி வெற்றிகரமாக நடந்தேறியது மைய ஆசிய நாடுகளில்தான். மேற்கான துனிசியாவிலோ எகிப்திலோ இப்போது நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளிலோ அல்ல.