மதுரை தினேஷ்குமார் காவல் சித்திரவதைப் படுகொலைக்கு கண்டனம்!

மதுரை யாகப்பா நகரில் வசித்து வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞன் தினேஷ்குமார் 9-10-2025 அன்று காலை விசாரணைக்காக எனக்கூறி அண்ணாநகர் காவல்நிலையத்தாரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்….
பிற்பகல் அவர் கால்வாய் நீரில் காவலிலிருந்து தப்பி ஓடி விழுந்து இறந்து விட்டார் எனக் கூறி பெற்றோரை அழைத்த காவல்துறை அவரது உடலைக் காட்டக்கூடத் தயாரில்லை. உறவினர்களும், வழக்கறிஞர்களும், பல்வேறு இயக்கத்தினரும் அண்ணாநகர் காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர்தான் உடலை மதுரை அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு வந்துள்ளனர் ஏன்? இரவு போராடியவர்களைக் கைது செய்து காவல்துறை கலைத்துள்ளது.
இரண்டாவது நாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்களும், தேவேந்திர வேளாளர் சமூக அமைப்புகள், சிபிஐ, சிபிஐ-எம், தகக(மா-லெ-மா), தமிழ்த்தேச மக்கள் முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் திரண்டு போராட்டம் நடத்தினோம். நானும் கலந்து கொண்டேன்…
இதற்கிடையில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் முயற்சியில் வழக்கறிஞர்கள் தெய்வம்மாள், கணேஷ்குமார் இணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது…
வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்திரவிடப்பட்டது. நீதிபதி முன்னிலையில் பிணக்கூராய்வு ஒளிப்பதிவில் நடத்த உத்தரவிடப்பட்டது…
காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாநகர ஆணையரால் மாற்றப்பட்டுள்ளார்…தொடர் வன்முறையில் ஈடுபடும் நாகராஜ் உள்ளிட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்…எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்…
முதலாவது நாள் தொடங்கி நேற்று பிணக் கூராய்வு நடந்து முடியும் வரை சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் சி.கா.தெய்வம்மாள் தொடர் முயற்சி பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் சித்திரவதைப் படுகொலைகள் கண்டனத்திற்குரியது மட்டுமல்லாமல் காவல்துறை அமைச்சர் முதலமைச்சராக உள்ள நிலையில் அக்கறையுடன் தலையீடு தேவைப்படுகிறது…
தினேஷ்குமார் காவல்படுகொலை எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்கள் அமைப்புகளும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டது போல எங்கெல்லாம் காவல் சித்திரவதைகள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் போராட்டக் களத்தில் முன்நிற்பதே தீர்வு…
தோழமையுடன்
மீ.த.பாண்டியன்
அரசியல் தலைமைக்குழு
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி
( மா – லெ – மா)