சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!

14 Oct 2025

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை

ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்றது.  

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் ஆகியவற்றுக்கு நீதியை உறுதிசெய்யப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் , செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைக்குழிகளை ஆய்வு செய்வதற்கு பன்னாட்டுப் பொறிமுறை வேண்டும் என்று தமிழர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் முயற்சியால் மேற்படி கோரிகைகளை வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  விசிக தலைவர் தொல் திருமாவளவன், சிபிஐ தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகண், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஐயூஎம்எல் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு ஆகியோரிடம் இசைவு  பெற்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு அரசுகளுக்கு கடிதம் அனுப்பபட்டது.

கடந்த அக்டோபர் 6 ஆம் நாள் சிறிலங்காவீல் பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கத்திற்கான 60/1 தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்மானமும் உள்நாட்டுப் புலனாய்வை வலியுறுத்துகிறதே அன்றி பன்னாட்டுப் புலனாய்வு கோரி ஐ.நா. பாதுகாப்பு மன்றத்திற்கு அனுப்புமாறு ஐ.நா பொதுப்பேரவைக்கு பரிந்துரைக்கவில்லை.

இந்த தீர்மானத்தை இங்கிலாந்து, கனடா, மலாவி, மாண்டிநிக்ரோ, வட மாசிடோனியா ஆகிய ஐந்து நாடுகள் முன்மொழிந்தன. கிட்டதட்ட 30 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இசைவு தெரிவிப்பதாக கைச்சாத்திட்டதால் வாக்கெடுப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சீனாவும் க்யூபாவும் இத்தீர்மானத்தை எதிர்த்துப் பேசின. இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஒருவேளை வாக்கெடுப்பு நடந்திருந்தால் எப்போதும் போல் இந்தியா வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் விலகியிருக்கும்.

இந்த நீர்த்துப் போன தீர்மானத்தையே அநுர தலைமையிலான சிறிலங்கா அரசு ஏற்க மறுத்துவிட்டது. கடந்த 51 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிறிலங்காவின் பொறுப்புக்கூறலுக்கான திட்டம் (Sri Lankan Accountability Project ) என்ற பெயரில் ஓர் அலுவலகம் ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் உயர் ஆணையர் அலுவலகத்திற்குள் இயங்கி வருகிறது. அவ்வலுவலகம் மனித உரிமை மீறல்களுக்கான சான்றுகளை திரட்டி, சேகரித்து, பாதுகாத்து வைக்கும் பனியை செய்து வருகிறது. தீர்மானத்தின் இந்த பகுதியைத்தான் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசு எதிர்த்து வருகிறது.  

இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில் இருந்து ( 30/1 (2015),  46/1 (2021) 51/1 (2022), 57/1 (2024)  )   ஒருபடி கீழே இறங்கிவிட்டது.  இந்த தீர்மானத்தில் முதல் முறையாக “பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு உதவியுடனான பொறுப்புக்கூறல் பொறிமுறை என்ற பேரவையின் முந்தைய உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் குறிப்பதாகும். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது. ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் புலனாய்வு என்று பேசுகிறது.

பயங்கரவாத தடை சட்டம் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது, காணாமலாக்கப்போருக்கு இன்னும் நீதி உறுதி செய்யப்படவில்லை, புதைக்குழிகளைத் தோண்டியெடுக்கும் ஆய்வுப் பணியில் பன்னாட்டுப் பங்கேற்பு தேவை, நெடுங்காலமாய்த் துப்புத் துலக்கப்படாமல் இருந்துவரும் யாவருமறிந்த வழக்குகள் புலனாய்வு செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட வேண்டும், பொருளியல் தேவைகளுக்காக தமிழர் நிலங்கள் படையினரால் பயன்படுத்தப்படுகின்றன, சிவில் சமூகப் பெயராளர்களுக்கும் மனிதவுரிமைக் காப்பாளர்களுக்கும் இதழாளர்களுக்கும் துயர்ப்பட்டோருக்கும் குடும்பங்களில் உயிர்பிழைத்திருப்பவர்களுக்கும் குறிப்பாகப் பெண்களுக்கும் சிறிலஙகாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது  ஆகியவற்றை மனிதவுரிமைப் பேரவை ஒப்புக்கொள்கிறது. இவையாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் வடக்குகிழக்கு வாழ் தமிழர்கள் ஒரு கட்டமைப்பியல் இனவழிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்ற முடிவுக்கு வர முடியும்.  மென்மேலும் சிறிலஙகா அரசுக்கு கால அவகாசம் கொடுப்பது என்பது கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை செய்து முடிப்பதற்கு துணைசெய்யுமே ஒழிய பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாது.

தலைமை சட்டத் தரணியே வழக்கு தொடுநராக இருப்பதால் அரசின் அழுத்தங்களுக்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் சுதந்திரமான வழக்குதொடுநர் அலுவலகம் ஒன்றை அமைக்கவிருப்பதாக அநுர அரசு உறுதியளித்துள்ளதை மனிதவுரிமைப் பேரவை வரவேற்றுள்ளது. ஆனால் அத்தகைய சுதந்திரமான வழக்குதொடுநர் அலுவலகம்  தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது. கிரிசாந்தி வழக்கைத் தவிர கடந்த 30 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளில் தொடர்புடைய ஒருவர்கூட சிறிலங்கா அரசால் தண்டிக்கப்படவில்லை. மேலும் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அமைப்புசார் குற்றங்கள் என்பதை மனிதவுரிமை பேரவையால் கொண்டு வரப்பட்ட OISL அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்காவின் ஒட்டுமொத்த அரச இயந்திரமும் சிங்கள பெளத்த பேரினவாதத்தில் ஊறித் திளைத்ததாக இருப்பதால் தற்சார்பான புலனாய்வு என்பதற்கு உள்நாடில் இடமே இல்லை.

கடந்த 16 ஆண்டுகளாக சிறிலஙகாவில் பல்வேறு ஆட்சிகள் மாறிவிட்டன. ஆனால்,  பொறுப்புகூறல் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஏனெனில் சிறிலங்கா அரசுக்கு தமிழர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்கான மனத்திட்பம் இல்லை. ஆயினும் மனிதவுரிமை பேரவை உள்நாட்டுப் புலனாய்வை வலியுறுத்திக் கொண்டிருப்பது சிறிலங்கா அரசு மீதான நம்பிக்கையீன் பாற்பட்டு அல்ல. ஐநா அரசுகளின் மன்றம் என்ற வகையில் அதிலுள்ள அரசுகள் தத்தமது புவிசார் நலன்களுக்கு ஏற்ப முடிவு எடுக்கின்றன. எனவே, சிறிலங்காவை அதன் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதில்தான் தமது புவிசார் நலன்கள் இருப்பதாக பெரும்பாலான அரசுகள் கருதுவதால் இத்தகைய நீர்த்துப் போன தீர்மானங்கள் வருகின்றன.

தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டத்தில் சோர்வடைந்து விட வேண்டியதில்லை. ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி கோருவதையும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்துவதையும் முதன்படுத்தி ஓரணியில் திரள வேண்டும்.

தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தத்தமது அரசுகளை  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருப்புவதில் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் வலுப்பெற்றால்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை.

இன்றைய உலக ஒழுங்கின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு இதில் பொருந்திப் போகக்கூடிய வகையிலும் தமது இருப்பைப் பாதுகாத்த்க் கொள்ளும் வகையில் தமிழர்கள் தமது உத்திகளை வகுத்துக்கொண்டு புதிய சிந்தனையுடன் தம்மை வலுப்படுத்தி கொள்வதில்தான் அடுத்தக் கட்ட முன்னேற்றம் தங்கியிருக்கிறது. எனவே, தமிழர்கள் தம்மை தாமே ஒருங்கிணைத்துக் கொள்வதே இப்போதைய உடனடி, அவசர பணியாகும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

                                                            தோழமையுடன்’

                                                கொளத்தூர் தா.செ.மணி

                                             ஒருங்கிணைப்பாளர்,

                                    ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

                                                94433 59666

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW