சீனா-இந்தியா இணக்கம் மீள்வது டிரம்புக்கு எதிரான எதிர்வினை மட்டுமல்ல…

ஆங்கில மூலம் கிறிஸ்டோபர் ஜாப்ரெலாட்
தமிழில் – அன்புஜெயந்தன்
நன்றி: தி வயர் இணையதளம் (https://thewire.in/diplomacy/china-india-rapprochement-more-than-just-a-response-to-trump)
சீன அழுத்தத்திற்கு இவ்வளவு எளிதாக இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை.
1962 இந்திய–சீன போருக்குப் பின் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுமுறை பெரும் சிக்கலாகவே இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை கூட, அதாவது 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய சீன போர் வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை அடுத்து இந்திய அரசு சீனாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தது. சீனா செல்வதற்காக விசா கொடுப்பது என்பது பெரும்பாலும் தடைசெய்யப்பட்டது. 60 சீன மென்பொருட்களும், இணையதளங்களும் தடைசெய்யப்பட்டன. அண்டை நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு முதலீடுகளை ஒரு சிறப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவிற்குள் வரும் சீன முதலீடுகளையும் கட்டுப்படுத்தியது இந்திய அரசு.
சீனாவால் கைப்பற்றப்பட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள இந்திய நிலப்பகுதிகளின் ஒரு பகுதியையாவது மீட்க, இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராமலேயே இழுபறி நிலையில் இருக்கின்றன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய பிரதமர் நரேந்திரமோடி 2018க்குப்பின் முதல் முறையாக சீனாவிற்கு அரசுமுறை பயணம் செய்துள்ளார். அது ஒரு எஸ்.சி.ஓ. (ஷாங்காய் கோஆபரேசன் ஆர்கனைசேஷன்) கூட்டத்திற்கான பயணம். இந்தக் கூட்டத்தில் ஷிஜின்பிங்கிடம், இந்தியா, இரு நாடுகளின் உறவை “பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை” அடிப்படையில் முன்னேற்ற, உறுதிப்பாட்டுடன் செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், அவர்களின் உறவு மேம்பட்டு வருவதை, குறிப்பாக இமயமலை எல்லைப் பிரச்சினைகளில் பதட்டம் குறைவதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மனப்போக்கு அல்லது அணுகுமுறை என்பது பல வழிகளில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சில வல்லுனர்கள் இந்த நடவடிக்கைக்கு காரணம், டிரம்பின் புதிய வரிவிதிப்புதான் என்று கூறியுள்ளனர். இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஏற்கனவே இருந்த வரிவிதிப்பை அதிகப்படுத்தி 50 விழுக்காடு வரிவிதிப்பை அமல்படுத்தினார் டிரம்ப். இதை சீனா பகிரங்கமாகவும் நேரடியாவும் எதிர்த்தது. சீன அதிபர் பொதுவெளியில் இதை கடுமையாக எதிர்த்தார். மற்றவர்கள் இதை இந்தியாவின் அணிசேரா கொள்கையின் ஒருபகுதியாகக் கண்டனர். “தொலைநோக்கான தன்னாட்சி” கொள்கையின் (Strategic Autonomy) வெளிப்பாடாகவும், அதாவது எந்த ஒரு பெரும் சக்தி வாய்ந்த நாட்டுடனும் முழுமையாக சார்ந்துவிடாமல், நட்புறவை பேணுவதும், அணிசேரா என்ற கொள்கை மாற்றமடைந்து “பன்முக ஒத்துழைப்பு” என்பதை நோக்கி நகர்வதையும், வல்லுனர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.
இத்தகைய விளக்கங்களுக்குப் பின்னால் சில உண்மைகளும் இருப்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அதில் ஒன்று, சீனாவை சார்ந்திருக்கும் தன்மை என்பது, இந்தியா தன்னை சீனாவின் ஆதிக்கத்திற்கு ஒப்படைக்க வழிவகுக்கிறது. அதாவது பீஜிங்கிற்கு எதிராக வாசிங்டனை நிறுத்துவதற்கு பதிலாக அது தன்னுடைய “தொலைநோக்கான தன்னாட்சி” கொள்கையின் சில பகுதிகளை சீனாவிடம் விட்டுக் கொடுக்கவும் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
கசப்பு மருந்தை உண்ணும் கலை
சீன இந்திய நல்லுறவு நடைபெறும் இந்த காலகட்டத்தில், புவிசார் திட்ட முறைகளில் சொல்வதானால், இந்தியா தன்னுடைய இலக்கை அடையவில்லை. இந்திய இராணுவமும், மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) எனப்படும் சீன இராணுவ அமைப்பும் 17முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. டெம்சோக் மற்றும் தெப்சாங் பகுதிகளில் இந்தியாவுடன் சேர்ந்து ரோந்து போகலாம் என்று சொன்னதைத் தவிர சீனா இந்தியர்களுக்கு பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. ஆனால் செயற்கைகோள் படங்களை அடிப்படையாகக் கொண்ட நிபுணர்கள் எடுத்துக்காட்டுவது என்னவென்றால், மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) எனப்படும் சீன இராணுவ அமைப்பு, இந்தியாவின் எல்லையோரமாக 2000 சதுர கிலோமீட்டர் அளவுள்ள, இந்தியாவிற்கு சொந்தமான நிலப்பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். இதில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளும் அடங்கும்.
அக்டோபர் 2024இல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒர் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி இந்தியாவும், சீனாவும் ஓர் உடன்படிக்கையை எட்டிவிட்டதாகக் கூறியது. வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூற்றின்படி, “நாம் 2020ஆம் ஆண்டுவரை எப்படி சுற்றுக்காவல் பணிகளை மேற்கொண்டோமோ, அதைத் தொடர சீனா, இந்தியர்களை அனுமதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா-சீனா பிணக்கு முடிவுக்கு வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த அறிக்கையை வெளியிட்ட மறுதினமே, படைத்தளபதி ஜெனரல் உபேந்திரா திவிவேதி, ஒரு முரண்பாடான அறிக்கையை வெளியிடுகிறார். அதன்படி “2020ம் ஆண்டு ஏற்பட்ட சண்டைக்கு முன் நிலவி வந்த பழைய நிலைமையை மீட்டெடுத்தால் மட்டுமே, இந்த பிணக்குகள், நிறைவுபெற்றதாகக் கருதப்படும்” என்று கூறினார். களத்தில் நின்று செயல்படும் வல்லுநர்கள் தரும் தரவுகளின் அடிப்படையிலும், செயற்கைகோள்கள் அனுப்பிய புகைப்படங்களின் அடிப்படையிலும், அன்றைய தினத்தில் நடந்த இந்தப் பொருண்மையை ஆராய்ந்தால், முந்தைய நிலைக்கு உடனடியாக திரும்புதல் என்பது சாத்தியமில்லை என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் புதுதில்லி, இந்திய-சீன உறவு ஒரு சுமுகமான பாதைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக போலியாக காண்பித்துக் கொள்கிறது. இந்த அறிக்கைகள் வெளியான சில தினங்களுக்குப் பிறகு, கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் [பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளின் கூட்டமைப்பு] உச்சிமாநாட்டில், மோடி ஜி ஜின்பிங்கை சந்திக்கவிருந்தார். இதற்காக அவசரமாக பழைய பகைமைகளை மறந்துவிட்ட தோற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவாகவே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டனர். இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாம் இதன் உள்நோக்கங்களை பற்றி பார்ப்போம்.
இதை ஒத்த காட்சிகள் இந்தியா-பாகிஸ்தான் இடையிலும் எழுந்தது. 2025 ஏப்ரல் 22, அன்று ஜம்மு & காஷ்மீரில் உள்ள பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது 26 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குக் காரணம் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் என்று இந்தியா குறிப்பிட்டது. இந்தியா பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது. இந்த சமயத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்இ பாகிஸ்தானுக்கு ஆதரவான ஓர் அறிக்கையை வெளியிடுகிறார். அதில் அவர் “உறுதியான நண்பனாகவும், எல்லாக் காலங்களிலும் துணையாக இருக்கும் தீர்க்கமான கூட்டாளியும் ஆக நாங்கள் இருப்பதால், பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு சீனா உறுதுணையாக இருக்கும்” என்று கூறுகிறார்.
இந்தியா-பாகிஸ்தானின் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம், இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு, பீஜிங் பாகிஸ்தானின் பக்கமாகவே நின்றது. பாகிஸ்தானின் குரலை சீனா எதிரொலிக்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்இ “பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில், விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ள உடன்படுங்கள்” என்று இந்தியர்களை கேட்டுக்கொண்டார் என்பதிலிருந்து, இதில் பாகிஸ்தானின் ஈடுபாடு எந்த அளவிற்கு உள்ளது என்ற சந்தேகத்தை உறுதிசெய்கிறது.
இந்த மோதல்களின் போது, சீனா, பாகிஸ்தானுக்கு செயற்கைகோள் படங்களை வழங்கியதன் மூலம், பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளது. சண்டையின் போது “சீனாவிலிருந்து பாகிஸ்தான் நேரடி நிகழ் தகவல்களைப் பெற்று வருவதாக” இந்திய இராணுவத் துணைத் தலைவர் (திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம்) துணை இராணுவத் தளபதி ராகுல் ஆர்.சிங் உறுதிப்படுத்தினார். பாகிஸ்தானியர்கள் உபயோகப்படுத்திய ஆயுதங்களில் பெரும்பாலானவை சீன தயாரிப்புகள். பாகிஸ்தான் ஆயுதக்கிடங்குகளில் உள்ள ஆயுதங்களில் 80 விழுக்காடு சீன தயாரிப்புகளே. ஒரு IAFரபேல் விமானத்தைத் தாக்கி அழித்த 200கி.மீ. செல்லக்கூடிய PL15 ஏவுகணை, ஒரு J10-C பைட்டர் ஜெட் (ஏவுகணையை சுமந்து செல்வது) மற்றும் HQ-9 air defence system என்ற மூன்றும் முக்கிய பங்களிப்பு செய்தன.
சமாதானத்திற்கான நல்லெண்ணமும் விருப்பமும்
பகல்காமில் துப்பாக்கிகளின் ஓசை ஓய்ந்த சமயத்தில், சிந்துநதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தனுக்கு தர வேண்டிய பகுதி நீரை தடைசெய்வோம் என்று இந்தியா வெளிப்படையாகவே தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தது. அதற்கு பதிலடியாக பிரம்புத்திரா நதியில் இருந்து இந்தியாவிற்கு வரும் நீரை தடைசெய்வோம் என்று சீனா கூறியது. இராணுவ நடவடிக்கைகள் ஓய்ந்த அதே காலத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பீஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டார்.
இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஏப்ரல்10 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிக்கையில் “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள உறவு என்பது முன்பு இருந்ததைவிட சிறப்பாக உள்ளதாக” குறிப்பிட்டுள்ளார். போரின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ சீனாவிற்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
இந்த சூழ்நிலையில், சீன துணை ஜனாதிபதி ஹான் செங்கை சந்திப்பதற்காக, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜுலை 2025 இல் பீஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கே சென்றபிறகு சமூக ஊடக நேர்காணலில் “இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப்” பாராட்டினார். மேலும், எனது வருகையின் போது நடைபெறும் விவாதங்கள். ஒரு சீரான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமாதானத்திற்கான நல்லெண்ணமும் விருப்பமும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? இராணுவப்படைகளின் சமநிலையின்மை என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதை ஏற்க வேண்டும். இந்தியா ஏவுகணைத் தடுப்பு துறையில் சீனாவுடன் எளிதில் போட்டியிட முடியாது. ஏனெனில் ஏவுகணை என்பது நவீன போர் ஆயுதங்களில் தவிர்க்க முடியாத தீர்க்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில் இந்தியாவிடம் இரண்டு S-400 தொகுதிகள் மட்டுமே உள்ளன (இன்னும் சிறிது காலத்திற்குள் மேலும் மூன்று S-400 தொகுதிகளை பெறவுள்ளது). ஆனால் சீனாவிடம் ஆறு S-400 களோடு கூடுதலாக 3HQ-9கள் உள்ளன. இது S-300s அல்லது அதற்கும் மேலாக S-400s க்கு இணையானது.
கடல்சார் துறையிலும் சீனா இந்தியாவைவிட முன்னணியில் உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆழ்கடல் கடற்படை என்பதை கட்டமைக்க சீனா இதில் அதிக முதலீடு செய்துள்ளது. இந்தியாவிடம் மொத்தம் 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் இரண்டு அணுசக்தியால் இயங்கக்கூடியது. சீனாவிடம் மொத்தம் 65 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் 12 அணுசக்தியால் இயங்கக் கூடியவை.
வான் வழியிலும், சீனாவின் உயர்நிலை உறுதிசெய்யப்பட்டுள்ளது. விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து பறக்கக்கூடிய விமானங்களின் எண்ணிக்கை அதிகம். சீனாவிடம் 60 முதல்70 J-15 விமானங்கள் உள்ளன. மேலும் பல்திறன் போர் விமானங்கள், நான்காம் தலைமுறை ஐந்தாம் தலைமுறை போர்விமானங்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தியாவிடம்45, MiG-29K விமானங்கள் இருக்கின்றன. 36 ரபேல் விமானங்கள் இருக்கின்றன.
சீனாவையும் – இந்தியாவையும் நேருக்கு நேராக வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெரிய வரும் ஏற்றத்தாழ்வு, சீனாவுக்கு எதிராக இந்தியா அடக்கி வாசிப்பதை நியாயப்படுத்த முடியுமானால், கடந்த ஓரண்டாக இருக்கும் மனநிலையான, இந்திய-சீன உறவை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் என்பதில் இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறது?
அதிகரிததுவரும் பொருளாதார சார்பு
பி.எல்.ஏ. (மக்கள் விடுதலைப் படை) எனப்படும் சீன இராணுவம், தான் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளில் இருந்து தன்னுடைய விலகலை குறித்தான பேச்சுவார்த்தைகளை, இந்திய இராணுவ அதிகாரிகளுடன் மிகமிக மெதுவான வேகத்தில் நீண்டகாலமாக நடத்திவந்ததையும், அதனால் இமயமலைப் பகுதிகளில் நிலவிய பதற்றமான நிலைமை குறித்தும் புதுடில்லிஅரசு விமர்சனம் செய்த நிலையிலும், சீனாவிற்கு எதிரான இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் தேவை என்று ஒருசில இந்திய அதிகாரிகள் அறிவுறுத்த ஆரம்பித்துள்ளனர். 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொருளாதார வெளிப்படைத்தன்மைக்கான அறிகுறிகள் உருவாக தொடங்கின. ஜூலை 2024இல் பொருளாதார ஆய்வறிக்கையின் ஆண்டு வெளியீடு தீவிர விவாதத்தைத் ஆரம்பித்து வைத்தது. சீனாவில் இருந்து வரும் அன்னிய நேரடி முதலீடுகள், இந்தியாவின் உலகளாவிய உற்பத்திச் சங்கிலி பங்கேற்பை அதிகரிக்க உதவுவதோடு, ஏற்றுமதிக்கான உந்துதலையும் அதிகரிக்க உதவும் என்று இந்த கருத்துக் கணிப்பு வாதிடுகிறது. இரண்டாவதாக இந்த ஆய்வறிக்கை என்ன சொல்கிறது என்றால் சீன அந்நிய நேரடி முதலீடு என்பது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வழிசெய்கிறது. இது கிழக்கு ஆசிய பொருளாதாரம் கடந்த காலங்களில் செய்ததை ஒத்திருக்கிறது. இறுதியாக இந்த கணக்கெடுப்பு ஒரு கருத்தை சொல்கிறது. அதன்படி அமெரிக்காவும், ஐரோப்பாவும் சீனாவிடமிருந்து உற்பத்திப்பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்வதை மாற்றிக்கொண்டால், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து, தயார் செய்த பொருட்களை பிற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது சீனாவில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, மீண்டும் அவற்றை ஏற்றுமதி செய்வதைவிட மிகச்சிறப்பானதாகும்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால், இவற்றை பரிந்துரை செய்த, மோடி ஆட்சியின், தலைமை பொருளாதார ஆலோசகர் V. ஆனந்தநாகேஸ்வரன் அவர்கள் இருந்த போதிலும், இந்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் ஒத்துழைப்பு இல்லாமல் அவரால் இந்த அளவிற்கு செய்திருக்க முடியாது. அவர் வெளிப்படையாக அந்நிய முதலீடுகள் இந்தியாவில் குறைந்து வருவதைப் பற்றி பொதுவெளியில் தன் கவலைகளை வெளிப்படுத்தினார். 2008-09ல் GDP இல் 3.5% ஆக உயர்ந்த பிறகு, இந்தியாவில் FDIயின் பங்கு கீழ்நோக்கிய போக்கைத் தொடர்ந்து 2022-23ல் GDPயில் 1.25% ஆகக் குறைந்தது. நாட்டிக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆசியா பசிபிக் தலைமை பொருளாதார நிபுணர் அலிசியா கார்சியா ஹெர்ரிரோ விளக்கியது போல், பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் டிஜிட்டல் சேவைகள், ICT (Information and Communication Technologies) போன்ற தகவல் தொழில்நுட்பத் துறைக்குச் செல்கின்றன. இந்திய உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய அமெரிக்காவும் ஐரோப்பாவும் சற்றுத் தயங்குகின்றன.
வெளிநாட்டு அந்நிய முதலீடுகள் குறைந்துவந்ததால், பிரதமர் மோடி பதவியேற்ற, அதிகாரத்திற்கு வந்த அடுத்த நாளே, மிகுந்த ஆரவாரத்திற்கு இடையில் கொண்டுவரப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது. எப்படியிருந்த போதிலும், இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்க, இந்திய தொழிற்துறைக்கு முழுமையான முன்னுரிமை கொடுத்து அதனை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை என்பது பிரதமர் நரேந்திர மோடி முன்உள்ள மிகப் பெரிய சவால்.
சீன முதலீடுகளின் வருகை குறித்து பதட்டமடைந்த பிஜேபி-ன் தலைவர்களுக்கு, குறிப்பாக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, 2024ம் ஆண்டின் பொருளாதார கணக்கெடுப்பு, இரண்டு பரிமாணங்களை காண்பித்தது. அது தலைவர்களின் தயக்கங்களைத் தகர்க்க உதவியது. “இந்திய உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவை உலகளாவிய உற்பத்திச் சங்கிலியில் இணைக்க, இந்தியா தன்னை சீன உற்பத்திச் சங்கிலியுடன் இணைத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது. நாம் இறக்குமதியை மட்டும் நம்பி அதைச் செய்கிறோமா அல்லது சீன முதலீடுகள் மூலம் அதைச் செய்கிறோமா என்பது இந்தியா முன் இருக்கும் தேர்வு. தொடக்கத்தில் வர்த்தகத்தின் வழியாக செய்வதே விரும்பப்பட்டது. இதுதான் கோயலின் விருப்பம். ஆனால் இந்தக் கொள்கை அந்நிய நேரடி முதலீட்டிற்கு சாதகமானதாக அமைந்தது. இறக்குமதியின் மீதான சுங்க வரிகள் குறைக்கப்பட்டன. லித்தியம், நிக்கல், கோபால்ட், வனடியம் ஆகியவைகளின் மீதான சுங்கவரி முற்றிலும் நீக்கப்பட்டதன் மூலம் சீன மின்கல உற்பத்தியாளர்களுக்கு இந்தியா அழைப்புவிடுத்தது. ஏனென்றால் இந்த மின்கல தயாரிப்பு தொழிற் சார்ந்து இந்தியாவின் முன்னேற்றம் என்பது மிகவும் குறைவானதாகவே உள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள மின்கல தயாரிப்பாளர்களுடன் சீன நிறுவனங்கள் இணைந்து, மின்கல தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவதற்கு இந்த வரி குறைப்பு வழிவகுக்கும். செல்போன் மீதான இறக்குமதிக்கான சுங்கவரி 20 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக குறைக்கப்பட்டதும் கூட இதே பாணியிலான உணர்வில்தான்.
இதனால், சீன அரசுறவு அதிகாரிகள் தங்களது தொனியை மாற்றினர்கள். இந்தியாவிற்கான சீன தூதர், வெளிப்படைத்தன்மைக்கான அறிகுறிகளை தொடர்ந்து வெளிப்படையாகக் காண்பித்து வருகிறார். சீனாவில் இந்திய முதலீட்டை அதிகரிப்பதற்கும், இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மறுமலர்ச்சிக்கும் அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் – அதே நேரத்தில், ‘இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்களுக்கு ஆரோக்கியமான வணிக சூழலை இந்திய தரப்பு வழங்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ;
இறுதியாக இந்தியா 2020இல் நடைமுறைப்படுத்திய கொள்கையை 2025வசந்த காலத்தில் மாற்றியமைத்தது. சீன முதலீட்டுத் திட்டங்களை வரவேற்பதாகவும் அறிவித்தது. முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள், அது தொடர்பான அமைச்சகங்களால் விரைவாகப் பரிசீலிக்கப்படும், ஆவணத்திற்குப் பொறுப்பான அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவால் விரைவாக ஆராயப்படும் என்று அறிவித்தது.
சீனாவின் மீதான இந்தியாவின் நல்லெண்ணம் என்பது, சீன முதலீட்டின் மீதான வெளிப்படைத்தன்மைகளாலும் மற்றும் இந்திய அரசுறவு அதிகாரிகள் எனப்படுபவர்கள் தொழிற்துறையில் இந்தியா, சீனாவை சார்ந்திருப்பதை பெரிய அளவில் எதிரொலித்ததன் மூலமும் காண்பிக்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் மேன்மேலும் வளரும் சீன இறக்குமதியை அதிகளவில் சார்ந்துள்ளது.
“2024ஆம் ஆண்டு, 11,800 கோடி டாலர் பொருட்கள் வர்த்தகத்துடன், சீனா மீண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியது; அதற்கு முந்தைய இரண்டு நிதி ஆண்டுகள் அமெரிக்காவே அந்த நிலையை தக்கவைத்திருந்தது. அதே நேரத்தில், சீனாவுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை தொடர்ச்சியாக விரிவடைந்தது—2019‑20‑இல் சுமார் $4,600 கோடி, 2023‑24‑இல் $8,500 கோடி பில்லியன், மற்றும் 2024‑25‑இல் $9,920 கோடி ஆக உயர்ந்தது. இந்திய ஏற்றுமதி என்பது 2024-25இல் $1,500 கோடி என்பது 2018-19ஐ விட குறைவுதான். குறிப்பாக இரும்பு தாதுக்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் முதலியவற்றைத்தான் இந்தியா ஏற்றுமதி செய்தது. அதேநேரம் சீனா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தது $12,400 கோடி. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்கள் என்பவை, உற்பத்திப்பொருட்கள், இயந்திர கருவிகள், கணிப்பொறி, கரிம வேதிப் பொருட்கள், மின்னணுச் சுற்று பலகைகள், நெகிழிகள். சீன வர்த்தகப் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்திய தொழிற்துறை திணறிக் கொண்டிருக்கிறது. அதற்குப் போட்டியிடும் திறன் இல்லை.
2005–2006 காலகட்டத்தில், பொதுவான இந்திய இறக்குமதியைவிட இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சீன பொருட்கள் 2.3 மடங்கு வேகமாக வளர்ந்தன (சீனாவுடனான வர்த்தக உபரி என்பது தற்போது வரை நீடிக்கிறது). 2023-24ல் காலகட்டத்தில், சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த தொழில்துறை பொருட்களின் பங்கு இந்தியாவின் மொத்த தொழில்துறை இறக்குமதியில் 21%இலிருந்து 30%ஆக உயர்ந்தது.
சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் கலவை இங்கே மிகவும் வெளிப்படையானது. 2023-24 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவின் மொத்த தொழில்துறை பொருட்களின் இறக்குமதியில் முழுமையடைந்த பொருட்களாக இறக்குமதி செய்யப்பட்டவை 6.8% மட்டுமே ஆகும், அதே நேரத்தில் இடைநிலை பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் முறையே 70.9% மற்றும் 22.3% ஆகும். இந்த சீனப் பொருட்கள் இந்திய தொழிற்துறையின் பொருள் உற்பத்திக்குத் தேவையான இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. மின்னனுப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் பயன்படுத்தும் முக்கிய மூலப் பொருட்களாக அவை இருக்கின்றன. அல்லது கணிணி (இவற்றை தொழிற்முறை நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் போது மூலதனப் பொருட்கள் (capital goods) என்று வரையறுக்கப்படுகின்றன). இந்த சூழ்நிலை நமக்கு எதை உணர்த்துகிறது என்றால், நாம் ஏன் அதிகமாக இறக்குமதி செய்கிறோம் என்பதுதான், நாம் அதிகமாக ஏற்றுமதி செய்வதற்கான அடிப்படையாக உள்ளது. திறன்பேசி, பயணியர் வாகனங்கள், மற்றும் மருந்துப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்து, முழுமையடைந்த பொருட்களை உற்பத்தி செய்து உலகின் பிற பகுதிகளுக்கு, குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு விற்பனை செய்கிறது இந்தியா.
மின்னணுவியல் ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு. சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் சுங்குவார்சத்திரத்தில் தொழில்துறை தாழ்வாரத்தின் மையப்பகுதியில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் தொழில்சாலையை மிகுந்த ஆரவாரத்துடன் திறந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் திறன்பேசிகள் இப்போது பாதிப் பங்கைக் கொண்டுள்ளன, இந்த மொத்தத்தில் ஐபோன்கள் 70% ஆகும். எப்படியிருந்தபோதிலும், திறன்பேசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாகங்களின் பெரும்பாலான பாகங்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த உதிரி பாகங்களை திறமையான முறையில் தயார் செய்து, தேவையான அளவில் வழங்கும் உள்ளுர் உற்பத்தியாளர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். இந்த விகிதம் என்பது ஐபோன்களுக்கு 95% ஆக உள்ளது. இந்தியா இறக்குமதி செய்யும் 70% மின்னணு துணைப்பொருட்கள் சீனாவில் இருந்தே வருகின்றன. சீனாவிடமிருந்து இந்தியா வாங்கிய மிகப்பெரிய கொள்முதல் என்பது 2023ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வாங்கிய மின்னணு பொருட்கள் மற்றும் மின் சாதனங்களின் இறக்குமதியானது £3,215 கோடியாக இருந்தது. 2021இல் சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட மடிக்கணிணிகளின் மதிப்பு $435 கோடி.
2023இல் சீன தொழில்நுட்பத்தின் வருகையைத் தடுக்கும் நம்பிக்கையில், மடிக்கணினிகள் மற்றும் தனிப்பட்ட கணினி சாதனங்களின் இறக்குமதியில் உரிமக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் இந்தியத் தொழில் குழுக்களிடமிருந்து வந்த விரைவான எதிர்வினைகள் காரணமாக அந்தத் திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.
மருந்து தயாரிப்புத் துறைக்கும் இந்த விவாதங்கள் பொருந்திப் போகக்கூடியதே. அடிப்படையான மருந்துகளை விற்பதன் மூலம், உலக மருந்தகமாக இந்தியா மாறிவருகிறது. இதற்கு அடிப்படை மருந்துகளின் விற்பனைக்கு நாம் நன்றிகூற வேண்டும். அவற்றின் எண்ணிக்கை மொத்தம் 60,000. மிகவும் வெளிநோக்கிய ஒரு துறையாகும் இது. அடிப்படையான மருந்து தயாரிப்பில் £4,200 கோடி நிகரவிற்பனையில், £250 கோடி ஏற்றுமதியில் இருந்து கிடைத்ததே. இன்று அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் 40% ஜெனரிக் மருந்துகள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டவைதான். அமெரிக்கா 50% சுங்கவரி விதித்தால் அது இந்தத் துறைக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கும். இருந்தபோதிலும் 2019இல் மருந்து தயாரிப்பிற்கான மூலப் பொருட்களில் மூன்றில் இரண்டுபங்கு சீனாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டவை. அவற்றின் மொத்த மதிப்பு $240 கோடி. பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவை $160 கோடி. 2023இல் புளும்பெர்க் வெளியிட்ட ஒரு உள்ளார்ந்த ஆராய்ச்சியன்படி, “அரபிந்தோ பார்மா” அடிப்படையான மருந்து ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதில் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தும் மூலப்பொருட்களில் 55% சீனாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டவை.
சீனர்கள் அவர்களின் இந்த வலிமையான நிலையை, சுரண்டலுக்கான வலிமையாகப் பயன்படுத்திக் கொள்ள உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த வசந்த காலத்தில், இந்தியா தன்னுடைய நல்லெண்ணங்களை சீன தரப்புக்கு வெளிப்படுத்தி வந்தபோதிலும், சீனா சில நிலைமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவைக் கேடயமாக பயன்படுத்தி, இந்திய பொருள் உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் சில பொருட்களை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை சீனா கடினமாக்கியது. இந்திய கார் உற்பத்தியாளர்கள் தங்கள் மின்சார வாகனங்களுக்குத் தேவையான அரிய உலோகங்களை கொள்முதல் செய்வதற்கு, மிகக் கடினமான அதிகாரமைய நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதேபோல, இந்திய விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் தயாரிப்பில், சீனாவின் உயர்தர உரங்களை நம்பியிருந்த நிலையில், உர விற்பனையை சீனா நிறுத்தி வைத்தது. சீனா புதிய நியாயமற்ற நடைமுறைகளை அமல்படுத்தியது.
இந்தப் பின்னணியில்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜூலை 14 அன்று பெய்ஜிங்கிற்கும், வாங்யி ஆகஸ்ட் 18 அன்று புது தில்லிக்கும் விஜயம் செய்தனர். இதனால் ஏற்படுத்தப்பட்ட அதிர்வலைகளின் தீவிரத்தன்மை என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் நெருக்கமடைவதை குறிப்பதாயிருந்தது. ஜுலை மாதத்தில் இருந்ததைவிட ஆகஸ்ட் மாதத்தில், “இயல்புநிலைக்கு திரும்புதல்” என்பதைக் குறிக்கும் விதமாக, “உறுதியான நடவடிக்கைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு பாய்ச்சல்களை எளிதாக்குவதற்கு” இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்தவகையான குறியீட்டுத்தனமான முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், பக்கவாட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பக்தர்களுக்கான கைலாச மலை, மானசரோவர் ஏரி இவற்றை மீண்டும் திறந்தனர். இவைதவிர அதிகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பதிவுசெய்யப்பட்ட சில செய்திகளும் இருந்தன. விசா வழங்குதல் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமானப் போக்குவரத்து இவற்றில் இருந்த சிக்கலான நடைமுறைகளை எளிமைப்படுத்தினர்.
இருநாடுகளுக்கும் இடையிலான இறுதி கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட இந்தக் கூறுகளுக்கு மேலாக, சீன ஊடகங்கள் இரு தரப்பினரின் பேச்சு வார்த்தைகளில் இருந்து ஒரு செய்தியை வெளியிட்டன. அது, இந்தியாவைப் பொறுத்தவரை தைவான் இப்போது சீனாவின் ஒரு பகுதி என்பதுதான். இதை இந்திய அதிகாரிகள் மறுக்கவில்லை. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக “ஒரே சீனா” என்ற சொற்றொடரை பயன்படுத்தாமல் இருக்க முயற்சித்த ஒரு நாட்டின் பலவீனத்தின் அடையாளமாக இது தோன்றலாம்.
வாங்இ உடைய இந்திய பயணத்தைத் தொடர்ந்து, இந்திய விவசாயிகள் சீனாவிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்த சீன விவசாய உரங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டன. சீனா இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருந்த அரிய உலோகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டன.
இந்தியாவுக்கு வந்த பிறகு வாங்இ, காபூல் மற்றும் இஸ்லாமாபாத்துக்கு பயணித்தது குறித்து இந்தியா கவலைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசிய அதிபர் ஜனவரி 2025இல்அதுபோன்ற ஒரு ”குழுப் பயணத்தை” பற்றி எதிராக கேள்வியெழுப்பியபோது, புதுடெல்லி அதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தது (அவர் அதன்பிறகு அந்தப் பயணத்தைக் கைவிட்டார்). ஆனால் வாங்இயின் பாகிஸ்தான் பயணம் மூன்று நாட்கள் நீடித்ததோடு மட்டுமல்லாமல் “ஆறாவது பாகிஸ்தான்-சீனா வெளியுறவு அமைச்சர்களின் திட்டமிடல்” என்ற ஒரு சந்திப்பை நடத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் அளித்தது. ஆப்கானை பொறுத்தவரை பயணத்தின் ஒரு பகுதியாக, வாங்இ, இஷாக் தர் மற்றும் இவர்களின் ஆப்கான் வெளியுறவு அமைச்சரை ஒருங்கிணைத்து, “ஆறாவது முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் உரையாடலுக்கு” தலைமை தாங்க அனுமதித்தது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தானுக்கு நீட்டிக்க தன்னுடைய ஆதரவை தெரிவித்தது.
சீனா, மற்றொருமொரு அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் தன் இருப்பை நிறுவ முயற்சிசெய்வதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் ஆப்கானிஸ்தானுடன் உறவுகளை ஏற்படுத்த இந்தியாவும் நீண்ட காலமாக முயன்று வருகிறது.
நாம் கண்கூடாக பார்த்து வரும் இந்த இந்திய-சீன மீள்உறவு என்பது இந்த நேரத்தில் சாத்தியமாவது எப்படி என்றால், இந்தியா தன்னுடைய இமாலய எல்லை பிரதேசங்களின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள பிரச்சினையில் எதையும் செய்ய முடியாத நிலைக்கு வந்து விட்டது. மற்றும் தன்னுடைய நம்பர் ஒன் எதிரியான பாகிஸ்தானுக்கு சீனா உதவுவதையும் காணாமல் விடத் தயாராக உள்ளது.
பன்னாட்டு அரங்கில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்புக்கு வலுசேர்க்கும் விதத்தில், பிரிக்ஸ் மாநாடுகளில், பல வருடங்களாக சீனாவுடன் கூட்டணி அமைத்து, ஒத்துழைப்போடு செயல்பட்டு வருகிறது இந்தியா. இதுஒரு சிறிய மாற்றமாக மட்டுமே பார்க்கப்படலாம். ஒரு சிலர், மேற்கத்திய எதிர்ப்பு மரபு, சீன-இந்திய உறவு ஒருமுகப்படுதல் என்ற இரண்டுக்கும் இடையில் உள்ள உண்மையான தொடர்பை எப்படி பார்க்கிறார்கள் என்றால், ஒட்டுமொத்த தெற்குலகமும் (ரசியா மற்றும் சீனாவை தலைமையாகக் கொண்டு) டொனால்ட் ட்ரம்பின் காப்புவாத கொள்கைக்கு எதிராக அணிதிரள்வார்கள் என்பதையே
பொருளாதார துறையில் சீனாவிற்கு விட்டுக்கொடுத்தல் என்பது பல்வேறு வகையான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். சீனாவின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டல்களை எதிர்க்கும் தன்மையுடையதாகவும், வளரும் சக்தி உடையதாகவும் கருதப்படும் இந்தியாவின் தோற்றத்தை கறைபடுத்தும். பெய்ஜிங்கின் விரிவாக்கத்திற்கு எதிராக இந்தியா ஒரு அரணாக செயல்பட முடியும் என்ற கருத்தை இது குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் சீனாவிற்கு வெளியே உற்பத்திச் சங்கிலிகளை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் இந்தியாவை உள்ளடக்கிய முயற்சிகளை அச்சுறுத்துகிறது. சீனாவை நோக்கிய இந்தியாவின் மன்னிக்கும் பொருளாதாரக் கொள்கை, பூட்டான் போன்ற சிறிய பிராந்திய நாடுகளை சீனாவுடன் இணக்கம் காண ஊக்குவிக்கக்கூடும் – இது இந்தியாவிற்கு தவிர்க்க முடியாத பாதகமாக மாறக்கூடும்.
சீனாவை எதிர்கொள்ளும் இந்தியாவின் மீள்தன்மையின் ஒரு குறிகாட்டியாக – எதிர்காலத்தில் ஆராயப்பட வேண்டியது – அதன் அண்டை நாடுகளில் சீனாவின் இருப்பு குறித்த அதன் எதிர்ப்புகளின் தீவிரத்தன்மை. பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவைகள் சீனாவின் வளையத்திற்குள் நுழையும் தருவாயில் உள்ளன. (ஷேக் ஹசினாவிற்கு இந்தியா ஆதரவளித்தன் காரணமாக வங்கதேசம், இந்தியாவிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது). இந்தமாதியான முன்னேற்றங்களுக்கு புதுடில்லி எதிர்வினையாற்றவில்லையென்றால், இதேமாதிரியான அனுபவங்கள் இந்தியாவிற்கும் ஏற்படக்கூடும்.
இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகள் அவர்கள் உருவாக்கிய இந்தோ-பசிபிக் கொள்கைகளில் உள்ளடக்கமாக உள்ள இந்திய கூறுகள், இன்னும் அதிகமாக சீனாவிற்கு எதிரான வலுவான எதிர் எடையாக இந்தியாவை கருதுகின்றன. இந்தியாவின் தீர்க்கமான தன்னாட்சியைப் பாதுகாக்க மேற்கத்திய நாடுகள் உதவும். அமெரிக்க நிர்வாகம் இன்னும் போக்கை மாற்றிக்கொள்ள முடியும், மேலும் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் ஒரு கணிசமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் இந்த திசையில் நகர முடியும். இந்தியா இங்கு பன்முகத்தன்மை சீட்டை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும் என்பதை எதிர்காலம் சொல்லும்.
கிரிஸ்டோஃப் ஜஃப்ரலோ” பாரிசில் உள்ள CERI – Sciences Po/ CNRS-இன் மூத்த ஆய்வு அறிஞர், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இந்திய அரசியல் மற்றும் சமூக அறிவியல் பேராசிரியர், பன்னாட்டு அமைதிக்கான கார்னகி அறக்கட்டைளையில் தலத்தில் இல்லாத ஆய்வு அறிஞர், மேலும் தெற்காசிய ஆய்வுகளுக்கான பிரித்தானிய கூட்டமைப்பின் தலைவர்