நேற்று கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு இரங்கல்!உயிரிழப்புகளுக்கு காரணம் – திமுக அரசின்  காவல் துறையின் நிர்வாக திறனின்மை!  தவெகவின் பொறுப்பற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள்!

28 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்

நேற்று கரூரில் தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ள 40 பேருக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் 80 பேர் காயமடைந்துள்ளனர், சிலர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். பலியாகியுள்ள 40 பேரில் 10 பேர் குழந்தைகள் மற்றும் இன்ன பிற அனைவரும் 30 அகவையை ஓட்டியவர்கள். இது லடாக் அல்லது வேறு போராட்டக் களங்களில் மக்கள் கூடி இருப்பது போல் அல்ல. ஒரு திரைநாயகனின் கட்சிக் கூட்டத்திற்கு அவரைக் காண சென்றவர்கள் உயிரை இழந்துள்ளனர். நிச்சயமாக இதுவொரு விபத்தல்ல.

கரூரில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்கு நண்பகல் 12 மணிக்கு அனுமதி பெற்றிருந்ததது தவெக. ஆனால், கட்சித் தலைவர் விஜய் இரவு 7:10  மணிக்குதான் அங்கு சென்றுள்ளார். காலை 8:45 மணிக்கு நாமக்கல்லில் இருந்திருக்க வேண்டிய திரு விஜய், அந்த நேரத்தில் சென்னையில் விமானத்தில் ஏறியிருக்கிறார். இது அவருக்கு முதல் கூட்டம் அல்ல. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்து, மணிக்கணக்கில் காத்திருந்து தன்னைப் பார்க்கிறார்கள் என்பதை அவர் அறியாதவர் அல்ல. ஆனால், மக்கள் காத்திருப்பது பற்றியோ அல்லது காத்திருப்பவர்களுக்கு தண்ணீர், அவசர ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கு திட்டமிடல் தேவை என்பது பற்றியோ திரு விஜயும் அவரது கட்சியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும், ஒரு கட்சி நடத்துவதற்கு கவர்ச்சிமிக்க தலைவர் மட்டும் போதாது, கட்சிக் கட்டமைப்பும், பொறுப்புடைய கட்சி நிர்வாகிகளும் வேண்டும். இது வெறும் இரசிக மனநிலையில் கூடும் கூட்டமாக இல்லாமல் கொள்கையால் வழிநடத்தப்படும் கூட்டமாக இருந்திருந்தால் இந்த அவலம் நேராமல் தடுத்திருக்க முடியும்.

தாம் நடத்தும் மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு இப்படியோர் துயரம் நேர்ந்ததற்கு தமக்கு கொஞ்சமும் பொறுப்பில்லை என்று தவெக கருதுகிறதா? நிச்சயமாக இல்லை. ஒரு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சாவுகள் ஏற்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கட்டாயமாக பொறுப்புக்கூற வேண்டும்.

விஜய் நடத்திய மாநாடுகளில் பரப்புரை கூட்டங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது என்பது புதிய செய்தியல்ல. இதிலிருந்து நாமக்கல், கரூரில் எவ்வளவு கூட்டம் கூடும்? அதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? அவர்களின் பாதுகாப்பு, குடிநீர் தேவை, அவசர மருத்துவ உதவி  ஆகியவற்றிற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? உளவுத் துறை இது குறித்து முன்கூட்டியே கொடுத்த அறிக்கை என்ன? இந்த நிகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட இடம் பொறுத்தமுடையதா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

தவெகவின் திட்டமிடலின்மையையும் கட்சிக் கட்டமைப்பு இல்லாததையும் காரணம் காட்டுவதோ இதை ஒரு விபத்தாக சித்திரிப்பதோ அரசு தனது பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்ளும் செயலாகும்.

கோயில் திருவிழாவோ, மெரினாவில் விமானப் படையின் சாகச நிகழ்ச்சியோ, கடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டமோ, கட்சிக் கூட்டமோ மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டியது அரசுதான். குடிமக்களின் உயிருக்குப் பொறுப்பேற்றிருக்கும் காரணத்தினால்தான் சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தும் ஒருவரை கைது செய்து அவரது உயிரைக் காப்பதை தனது கடமையாக அரசு செய்கிறது. இந்த 40 பேரது உயிரிழப்பில் அரசின் பொறுப்பே முதன்மையானது. தவெகவையும் விடவும் பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் தமிழக அரசே இருக்கிறது.

இதை வெறும் தவெகவின் பிரச்சனையாக சுருக்கி அவர்களின் தலையில் மொத்தப் பழியையும் போட்டு தப்பித்துவிடாமல், கூட்ட நெரிசல் சாவுகளை தடுப்பதில் நம் நாட்டு அரசுகளிடம் இருக்கும் நிர்வாகப் பிரச்சனைகளை, போதிய தயாரிப்பு இன்மையை எப்படி சீர் செய்வது என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டு மட்டும் எத்தனை கூட்ட நெரிசல் சாவுகள் இந்தியாவெங்கும் நடந்துள்ளன என்று ஒரு பெரிய பட்டியலையே ஆங்கில இந்து இதழ் பதிவிட்டுள்ளது. பெங்களூரில் ஐ.பி.எல் வெற்றிக் கொண்டாட்ட கூட்டத்தில் நெரிசல் சாவுகள் (ஜூன் 4, 11 பேர்), கும்பமேளாவுக்கு செல்லக் காத்திருந்த பயணிகள் தில்லி இரயில் நிலையத்தில் எதிர்கொண்ட கூட்ட நெரிசல் சாவுகள் ( பிப்ரவரி 15, 18 பேர்) , கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்கள் எதிர்கொண்ட கூட்ட நெரிசல் சாவுகள் ( சனவரி 29, 30 பேர்), கோவாவில் லைரா தேவி கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் சாவுகள் ( மே 3, 7 பேர்) என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. மக்கள் அளவின்றி கூடும் இடங்களில் எல்லாம் இப்படியான கூட்ட நெரிசல் சாவுகளை எதிர்கொண்டு வருகிறோம்.    

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பொறுப்பில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், தூத்துக்குடி  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிக் சூட்டு சம்பவம் பற்றி இதே நீதிபதி வழங்கிய பரிந்துரைகளை திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தவில்லை. குறிப்பாக, துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்ட் உயர் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்தவே இல்லை. வேதாந்தாவின் கைக்கூலியாக செயல்பட்ட அந்த கொலைகாரர்கள் இன்னும் மதிப்புமிக்க உயர் பொறுப்புகளில் வலம்வருகிறார்கள். இந்த விசயத்திலும் அருணா ஜெகதீசன் வழங்கக்கூடிய அறிக்கையை திமுக அரசு கிடப்பில் போட்டுவிடக் கூடும் என்ற அச்சம் எழுகிறது. எனவே, உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து கரூர் கூட்ட நெரிசல் சாவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

இப்படி ஆணையம் அமைப்பதே தமது பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கும் போக்காகவே பார்க்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் RCB அணி 18 ஆண்டுகள் கழித்து பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் 11 பேர் செத்தார்கள். இதை ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அமைத்த முதலமைச்சர் சித்தராமையா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம், பணீயிட மாற்றம் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு பொறுப்புக் கூறினார். அதை முன்மாதிரியாக கொண்டு, தமிழ்நாடு அரசும் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், உளவுத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கரூர் கூட்ட நெரிசல் சாவுகள் பற்றிய கவலையைவிடவும் இந்த சாவுக் கணக்கைப் பயன்படுத்தி எப்படி 2026 க்கான தேர்தல் ஓட்டப்பந்தயத்தில் முந்திச் செல்வது என்ற நோக்கத்தில் மட்டுமே இப்பொருள் குறித்த விவாதங்கள் நடந்து வருவது அருவெறுக்கத்தக்கதாக இருக்கிறது. மாறாக, கூட்ட நெரிசல் சாவுக்கான காரணங்கள் பற்றியும் இனி இப்படி நிகழாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றியும் பேச வேண்டும்.

தடுத்திருக்க வேண்டிய இந்த உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்கு திமுக அரசின் காவல் துறையின் நிர்வாக திறனின்மையும் தவெகவின்  பொறுப்பற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளுமே காரணம் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக சுட்டிக் காட்டுகிறோம்.

தோழமையுடன்,

தி. செந்தில்குமார்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்த்தேச மககள் முன்னணி 

9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW