டெல்லி கலவர வழக்கு: பிணையை மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம். ரியாஸ்

2020 வட கிழக்கு டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒன்பது செயற்பாட்டாளர்களின் பிணையை டெல்லி உயர்நீதிமன்றம், செப்டம்பர் 2 அன்று மறுத்து தீர்ப்பு வழங்கியது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் மிகப்பெரும் அதிர்வுகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தின. ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல், போராட்டக்காரர்களை நோக்கி பாசிசவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு என வன்முறைகளை கடந்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் முத்தாய்ப்பாக டெல்லி ஷாஹின் பாக் போராட்டம் அமைந்தது. முஸ்லிம் பெண்களை மையமாக வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்திய வருகை அமைந்த தினங்களில் (பிப்ரவரி 24 முதல் 25, 2020) நடத்தப்பட்ட கலவரத்தில் 54 நபர்கள் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம்கள். ஷாஹின் பாக் போராட்டம், டெல்லி வன்முறை ஆகியவற்றை காரணமாக வைத்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். ‘துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுங்கள்’ என்று வெளிப்படையாக மிரட்டிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டவர்கள் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைத்ததன் காரணமாகவே செயல்பாட்டாளர்கள் மீது இந்த கலவர வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசு தரப்பின் வாதத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்கும் ஒரு சட்டத்தை எதிர்த்து ஜனநாயக முறையில் மக்களை திரட்டியதை ஏதோ மிகப்பெரும் சதி போல் அரசு தரப்பு வாதிட்டு வருகிறது. அத்துடன், வன்முறையை நிகழ்த்த ரகசிய சதி ஆலோசனை நடத்தினார்கள், ஆயுதங்களை திரட்டினார்கள், அதற்காக நிதியை திரட்டினார்கள் என்று நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளையும் அவர்கள் முன் வைக்கின்றனர். வாட்ஸ்அப் குழுவில் இடம் பெற்றிருந்ததை மிகப்பெரும் குற்றமாக கூறும் அரசு தரப்பு, தேசத்திற்கு எதிரான உரைகளை நிகழ்த்தினார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறது. ஆனால் தேசத்திற்கு எதிராக உரைகளில் இருந்த கருத்துகள் எதையும் இதுவரை குறிப்பிடவில்லை. இந்த உரைகளை நிகழ்த்தியதற்காக சுமத்தப்பட்ட சில வழக்குகளில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதும், அதே குற்றச்சாட்டுகள் மீண்டும் முன் வைக்கப்படுகின்றன. ஐந்தாண்டுகளாக பிணையும் இன்றி வழக்கு விசாரணையும் இன்றி இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ‘பிணைதான் சட்டம், சிறை என்பது விதிவிலக்கே’ என்பது இவர்களின் விசயத்தில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. 06.03.2020இல் இந்த வழக்கின் (59/2020) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே வருடம் செப்டம்பர் 16இல் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப் பத்திரிகையில் பின்வரும் பதினைந்து நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.அப்துல் காலித் ஸைஃபிஇஸ்ரத் ஜஹான்மீரான் ஹைதர்தாஹிர் ஹூஸைன்குல்ஃபிஷா காத்தூன்சஃபூரா ஸர்கர்ஷிஃபா உர் ரஹ்மான்ஆசிஃப் இக்பால் தன்ஹாஷதாப் அகமதுநடாஷா நர்வால்தேவங்கானா கலிதாதஸ்லீம் அகமதுசலீம் மாலிக்முகம்மது சலீம் கான்அதர் கான்நவம்பர் 22இல் தாக்கல் செய்யப்பட்ட முதல் துணை குற்றப்பத்திரிகையில் ஃபைஸான் கான், ஷர்ஜீல் இமாம், உமர் காலித் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிப்ரவரி 23, 2021 மற்றும் மார்ச் 2, 2022 அன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய தண்டனை சட்டம், ஆயுதங்கள் சட்டம், பொது சொத்துகள் பாதுகாப்பு சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) ஆகிய சட்டங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. தேவnnங்gngngngngகானா, நடாஷா, ஆசிஃப், சஃபூரா, இஸ்ரத் ஆகியோர் பிணையில் உள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், உமர் காலித், ஷர்ஜில் இமாம், அத்தர் கான், காலித் ஸைஃபி, முகம்மது சலீம் கான், ஷிஃபா உர் ரஹ்மான், மீரான் ஹைதர், குல்பிஷா காத்தூன், ஷதாப் அகமது ஆகியோரின் பிணையை நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு மறுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான தஸ்லீம் அகமதின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதே தினத்தில் தள்ளுபடி செய்தது. விசாரணையில் ஏற்படும் தாமதம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலம் ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து ஜாமீன் கோரப்பட்டது. வழக்கில் உள்ள 800 முதல் 900 வரையிலான சாட்சிகளையும் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேகத்தையும் நோக்கும் போது சமீபத்திய எதிர்காலத்தில் விசாரணை முடிவதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் வழக்குரைஞர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால் இதன் அடிப்படையில் மட்டும் ஜாமீன் வழங்க முடியாது என்று சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவும் அரசு தரப்பில் ஆஜரான ஏனைய வழக்குரைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘சாதாரண வாட்ஸ்அப் தகவல்களை அடிப்paபடையாக வைத்து காவல்துறை எழுதும் கதைகளின் அடிப்படையில் பிணையை மறுக்க முடியுமா? அல்லது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியுமா?’ ‘பிப்ரவரி 23-24 இரவில் நடைபெற்ற சாதாரண கூட்டத்தை ரகசிய கூட்டம் என்று காவல்துறை அழைப்பது ஏன்?’ என்று சிறையில் உள்ளவர்கள் சார்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ‘நீங்கள் தேசத்திற்கு எதிராக எதையாவது செய்தால், நீங்கள் விடுதலை செய்யப்படும் வரை அல்லது தண்டனை பெறும் வரை சிறையில் இருப்பதுதான் நல்லது’ என்று கூறினார். தேசத்திற்கு எதிராக இவர்கள் செயல்பட்டதாக எதையும் இதுவரை அரசு தரப்பு நிரூபிக்காத நிலையில், எதற்காக இத்தகைய ஒரு கூற்றை சொலிசிடர் ஜெனரல் கூற வேண்டும்? பொது மனசாட்சியில் இந்த முஸ்லிம் செயல்பாட்டாளர்கள் குறித்த எதிர்மறை எண்ணத்தை எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்து கூறப்பட்டதா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ‘பிணைதான் சட்டம்’ என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி நடைமுறை உள்ள நிலையில், ‘விடுதலையாகும் வரை அல்லது தண்டனை பெறும் வரை சிறையில் இருப்பது நல்லது’ என்று இவர் கூறியதை நீதிபதிகள் கண்டுகொள்ளவில்லை. பல்லாண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு நிரபராதிகள் என்று இவர்கள் விடுவிக்கப்பட்டால் அவர்கள் இழந்ததை சொலிசிடர் ஜெனரல் திரும்பக் கொடுப்பதற்கு தயாராக உள்ளாரா? குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட ஏராளமான வழக்குகளை இதே டெல்லி நீதிமன்றம் கண்டுள்ளது. அதில் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது பொய் வழக்குகள் என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், சொலிசிடர் ஜெனரலின் இந்த வாதம் அபத்தமானது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.நீண்ட நாள் சிறைவாசம் என்பது பிணை வழங்குவதற்கான காரணமாக உள்ள நிலையில், ஐந்து வருட சிறைவாசம் பிணை வழங்குவதற்கு போதுமான காரணம் கிடையாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது நீண்ட நாள் விசாரணை சிறைவாசிகளின் பிணையை கேள்விக்குறியாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், வழக்கு விசாரணை மெதுவாக நடத்தப்படுவது ‘இயல்பனது’ என்று கூறியுள்ளது வழக்குகளை இழுத்தடிக்கும் அரசு தரப்புக்கு சாதகமாகவே அமையும். பிணைதான் சட்டம் என்று தீர்ப்புகள் பல வழங்கப்பட்டாலும் யுஏபிஏ போன்ற கொடிய சட்டங்களும் அதனை கண்டு கொள்ளாத நீதித்துறையும் சிறைதான் சட்டம் என்பதை எவ்வாறு நிலைநிறுத்துகின்றன என்பதற்கு இந்த வழக்கும் உதாரணமாகிறது. கேஸ் டைரி அல்லது காவல்துறை அறிக்கையை ஆராய்ந்த பின், குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் பிணையை மறுக்க முடியும் என்று யுஏபிஏ சட்டத்தின் பிரிவு 43 DDD (5) கூறுகிறது. ஆதாரங்களின் விரிவான விசாரணையை தடை செய்வதன் மூலம் அரசு தரப்பின் கூற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணையை மறுக்கிறது. அதிலும் தேச துரோகம், தேசத்திற்கு எதிராக செயல்படுதல் என்ற பதங்களை பயன்படுத்துவதன் மூலம் நீதிமன்றத்தின் மீதான நிர்ப்பந்தத்தை அரசு தரப்பு இன்னும் வலுப்படுத்துகிறது. இதே வழக்கில் மூன்று நபர்களுக்கு (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் தேவங்கானா கலிதா, நடாஷா நர்வால், ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா மாணவர் ஆசிஃப் தன்ஹா) ஜூன் 15, 2021இல் பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சித்தார்த் மிர்துல் மற்றும் அனுப் ஜெய்ராம் பம்பானி அமர்வு, ‘போராட்டம் நடத்தும் உரிமையயை அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ளது. போராட்டத்திற்கும் பயங்கரவாத செயலுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு அளவுதான் வித்தியாசம் உள்ளது. மாற்றுக் கருத்து கொண்டவர்களை அடக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முனைப்பை பார்க்கும் போது அதன் மனதில் இருந்து அந்தக் கோடு மெல்ல மறைந்து வருவதாகத் தெரிகிறது. அரசின் இந்த எண்ணத்திற்கு வலுசேர்க்கப்பட்டால் அதுதான் ஜனநாயகத்தின் துக்க நாளாகும்’ என்று குறிப்பிட்டது. அமைதியான முறையில் மக்களை திரட்டுவது, அது அரசுக்கு அசௌகரியமாக இருந்தாலும் ‘பயங்கரவாத நடவடிக்கை’ என்று குறிப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டிய வழக்குகளை ‘பயங்கரவாதம்’ என்ற பதத்தை பயன்படுத்தி யுஏபிஏ கீழ் பதிவு செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.இத்தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கிய பிணையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், யுஏபிஏ குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கூறிய கருத்துகளை மற்ற வழக்குகளில் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு நம்பிக்கையை அளித்த போதும் உச்சநீதிமன்றத்தின் கருத்து யுஏபிஏவின் அதிகாரத்தை தக்க வைத்ததுடன் ஏனைய வழக்குகளில் பிணை வழங்கப்படுவதையும் சிரமம் ஆக்கியது.எதிர் கருத்துகளையும் மாற்றுக் கருத்துகளையும் கொண்டவர்களை எல்லையற்ற அதிகாரங்களை கொண்ட சிறப்பு சட்டங்கள் மூலம் ஆளும் வர்க்கம் குறி வைத்து வரும் நிலையில் அதற்கு கடிவாளம் இடும் கடமை நீதிமன்றத்திற்கு இருக்கிறது. ஆனால் பிணைணை மறுக்கும் இத்தகைய தீர்ப்புகள் தண்டனையின்றி வாழ்க்கை சிறையில் கழிந்து விடுமோ என்ற அச்சத்தை விசாரணை சிறைவாசிகளுக்கு ஏற்படுத்துகிறது.