மோடி 3.0 – ஆட்சி மாற்றம் சாத்தியமா?

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 5
தேசிய சனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை மக்களவையில் பாசகவுக்கு 240, தெலுங்கு தேசக் கட்சிக்கு 16, ஐக்கிய ஜனதாதளத்திற்கு 12, சிவசேனா( சிண்டே அணி)க்கு 7, லோக் ஜனசக்திக்கு 5, இராஷ்டிரிய லோக் தளத்திற்கு 2, ஜனசேனா கட்சிக்கு 2 இடங்களும் மற்றும் 7 கட்சிகளுக்கு தலா ஓர் இடமும் என மொத்தம் 293 இடங்கள் உள்ளன. 14 கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் இருக்கிறது பாசக.
மாநிலங்களவையைப் பொறுத்தவரை தேசிய சனநாயகக் கூட்டணிக்கு 115 இடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 245 இடங்களில் 237 இடங்கள் நிரப்பப் பட்டுள்ளன. பாசகவுக்கு மொத்தம் 96 இடங்கள் உள்ளன. தேசிய சனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 115 இடங்கள் உள்ளன. தேசிய சனநாயக கூட்டணிக்கு ஆதரவாக 6 நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் இருக்கின்றார். இவர்களின் உதவியுடன் பெரும்பான்மைக்கு தேவையான 119 ஐ எட்ட முடியும். இந்தியா கூட்டணிக்கு மொத்தம் 85 இடங்கள் உள்ளன.
ஒடிசா, ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் தேசிய சனநாயக கூட்டணி அடைந்திருக்கும் வெற்றி அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநிலங்களவையில் வெளிப்படும். அடுத்துஅடுத்து வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாசக அடையப் போகும் வெற்றி, தோல்வி மாநிலங்களவை இடங்களாக வெளிப்படும்.
அரைகுறை நாடாளுமன்ற சனநாயகத்தை ஒழித்துக்கட்டுதல், அரைகுறை கூட்டாட்சியை ஒழித்துக்கட்டுதல், நிதிமூலதன சிறுகும்பலாட்சி, இந்துராஷ்டிர பாதை என்று நான்கு முனைகளில் கடந்த காலத்தில் பயணித்த அதே திசைவழியில்தான் இந்த ஆட்சியும் பயணிக்கப் போகிறது.
2025 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். இன் நூற்றாண்டு நிறைவை அரச விழாவாகவே மோடி அரசு முன்னெடுக்கப் போகிறது. அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளில் கலந்துகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மோடி அரசு அரசாணை வெளியிட்டிருப்பது இனி நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு முன்னோட்டமாகும்.
மோடி அரசு அரைகுறை நாடாளுமன்ற சனநாயகத்தை சிதைப்பதைப் பார்த்து விழிப்படைந்துள்ள குடிமை சமூகத்தினர், குறிப்பாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஓய்வுபெற்ற அதிகார வர்க்கத்தினர், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட இடது மற்றும் தாராளிய சனநாயக ஆற்றல்கள் மோடி ஆட்சியை முன்பைவிடவும் தீவிரமான கண்காணிப்புக்கும் திறனாய்வுக்கும் உட்படுத்துவர்.
அரைகுறை கூட்டாட்சியை சிதைப்பதை மீண்டும் தலையெடுத்துள்ள மாநிலக் கட்சிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டா.
பாசகவின் கூட்டணிக் கட்சிகளில் முகன்மையானவர்கள் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளைப் பெரிதும் ஆதரிப்பவர்கள்தான். எனவே, பொருளியல் துறையில் செய்யக்கூடிய சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளின் கெடுபிடி இருக்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் பொருளியலில் அதானி, அம்பானி உள்ளிட்டோரது ஏகபோகத்தை கடந்த காலத்தைவிடவும் கூர்மையாக விமர்சிப்பர். உழவர் போராட்டம் மட்டுமின்றி ஏகபோகத்தால் ஒட்டச் சுரண்டப்படும் ஏனைய வர்க்கப் பிரிவினரது எதிர்ப்புப் போராட்டங்கள் மென்மேலும் அதிகரிக்கும்.
பாசகவின் பார்ப்பனிய நிகழ்ச்சிநிரலிலும் இசுலாமியர்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்ச்சிநிரலிலும் கடந்த காலம் போல் விரைவு ஓட்டம் சாத்தியமில்லை. எடுத்துக்காட்டாக, 2024 ஆகஸ்ட் மாதத்தில் அனைத்திந்திய அரசுப் பணி தேர்வாணையம் நேரடி பணி அமர்த்தலுக்காக செய்த விளம்பரம், வக்பு வாரியச் சட்டத்திருத்தம், கன்வார் யாத்திரை அறிவிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இசுலாமியர்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மையினரிடம் நிலவும் சோர்வு மனநிலையை முறியடித்து பாசிச எதிர்ப்புப் போராட்டக் களத்தில் அணிவரிசையை ஏற்படுத்த வேண்டிய கடமை இடது சனநாயக ஆற்றல்களுக்கு உண்டு.
தேசிய சனநாயக கூட்டணியில் தெலுங்குதேசக் கட்சியும் (16) ஐக்கிய ஜனதாதளமும் (12) முகன்மையானவை. இக்கட்சிகள் கடந்த காலங்களில் பாசகவுடன் கூட்டணி வைத்திருந்தவைதான். அதேநேரத்தில், சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் 2019 இலும் 2024 இலும் பாசகவுக்கு எதிராக அனைந்திந்திய கூட்டணியைக் கட்டுவதற்கு முன்முயற்சி எடுத்தவர்களும்கூட. இவர்கள் கூட்டணிகளை உருவாக்குவதில் வல்லவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். 1996 கால கட்டத்தில் ஏற்பட்ட கூட்டணி ஆட்சி போன்ற சூழல் உருவாகக்கூடும் என்று எதிர்பார்த்து முடிசூட தருணம் பார்த்து காத்திருப்பவர்கள்.
பாசகவைப் பொறுத்தவரை இக்கட்சிகள் மீதான சார்புத் தன்மை 2024 நிதிநிலை அறிக்கையில் வெளிப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையே ஆந்திர – பீகார் நிதிநிலை அறிக்கை என்று சுட்டும் அளவுக்கு பாசகவுக்கும் இக்கட்சிகளுக்கும் இடையிலான பேரப் பின்னணி வெளிப்பட்டது.
நிதிஷ் குமாரைப் பொறுத்தவரை பாசகவுடன் கூட்டணி வைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கிறார் என்பதால் பாசக மீது சார்பு தன்மை இருக்கிறது. பீகாரில் அரசியல் செல்வாக்கில் இறங்குமுகத்தில் இருக்கும் தலைவர் அவர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டு அதன்படி இட ஒதுக்கீட்டில் 50% க்கு மேல் மாற்றம் கொண்டுவர முயன்று உச்சநீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டவர். நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பும் இட ஒதுக்கீட்டை 50% க்கு மேல் உயர்த்துவதும் பாசகவோடு நேரடியாக முரண்படும் இடங்களாகும். பாசக பீகாரில் ஒரு சக்தியாக வளர்ந்து வருகிறது. பிரசாந்த் கிசோரும் தனிக்கட்சி தொடங்கி பீகார் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2025 இல் நடக்கப்போகும் பீகார் சட்டப்பேரவை தேர்தல் பீகார் அளவிலும் இந்திய அளவிலும் முகன்மையுடையதாக மாறப் போகிறது.
தெலுங்குதேசக் கட்சியைப் பொறுத்தவரை ஓய்.எஸ்.ஆர். காங்கிரசு கட்சியுடன் கணக்குத் தீர்த்துக் கொள்வதுதான் சந்திரபாபு நாயுடுவின் முதல் கவலை. ஆந்திர மாநிலத்திற்கு பாசக சிறப்புத் தகுதி கொடுக்கவில்லை என்ற காரணத்தின் பெயரால்தான் முன்பு பாசக கூட்டணியில் இருந்து வெளியேறினார் சந்திரபாபு. இப்போதும் அந்த கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. சுமார் 9.5 % இசுலாமியர்களைக் கொண்ட ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவுக்கு இசுலாமிய வாக்குவங்கி உள்ளது. இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதை பாசகவை கூட்டணியில் வைத்துக் கொண்டே சந்திரபாபு தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்தார் என்பது வருங்கால முரண்பாட்டை அடையாளம் காட்டும் ஒன்றாகும்.
இவ்விரு கட்சிகளும் தத்தமது மாநில மக்களின் அழுத்தத்திற்கு அடிபணியக் கூடியவர்கள். எனவே, பீகாரிலும் ஆந்திராவிலும் உள்ள இடது சனநாயக ஆற்றல்கள் பாசிச மோடி – அமித் ஷா கூட்டணிக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் போது அது பாசகவுடன் இக்கட்சிகள் வைத்திருக்கும் கூட்டணியைக் கேள்விக்குள்ளாக்கும். இக்காலகட்டத்தில் இப்பணியைச் செய்ய வேண்டியது இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்த இடது சனநாயக ஆற்றல்களின் கடமையாகும்.
செப்டம்பரில் சம்மு காசுமீர் ஒன்றிய ஆட்சிப்புலத்திலும் அரியானாவிலும் தேர்தல் நடந்து முடிந்து அரியானாவில் பாசகவும் சம்மு காசுமீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணியும் ஆட்சி அமைத்துள்ளன. இதை தொடர்ந்து தில்லி, மராட்டியம், ஜார்க்கண்ட் தேர்தல்கள் நடக்கவுள்ளன. அடுத்த ஆண்டு அக்டோபர் வாக்கில் நடக்கவிருக்கும் பீகார் தேர்தலும் 2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தலும் முகன்மையுடையவையாக மாறும். மாநிலங்களில் உள்ள இடது சனநாயக ஆற்றல்கள் பாசகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இந்த தேர்தல்களை வெறும் மாநிலத் தேர்தல்களாகப் பார்க்காமல் பாசகவைப் பலவீனப்ப்டுத்துவதற்கான களங்களாகப் பாவிக்க வேண்டும்.
வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்கக் கோரும் உழவர்களின் போராட்டம் இவ்வாண்டு இறுதியில் இருந்து மீண்டும் தீவிரப்படப் போகிறது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ( SKM ) இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் முன்னெடுத்து வருகிறது. உழவர் போராட்டம் தொடர்வது பாசகவை மென்மேலும் தனிமைப்படுத்துவதற்கு உதவும்..
பாசிச பாசகவை தோற்கடிப்பதற்காக இசுலாமியர்கள் எவ்வித சமரசமுமின்றி தேர்தலில் வாக்களித்துள்ளனர். , அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், ”கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி என்பது சாதிகளுக்கு இடையிலான கூட்டணியாக பரிணமிக்காவிட்டால் வெற்றியை உறுதிசெய்ய முடியாது என்பதை மீண்டும் மெய்ப்பித்துள்ளது. எனவே, பாசகவின் சமூகப் பொறியமைவு முயற்சிகளை முறியடிப்பதற்கான தனித்த வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதை செயல்படுத்த வேண்டும்.
மோடி அரசு நீதித்துறையை நிலைகுலையச் செய்திருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையானது. அதேநேரத்தில், நீதித்துறை முற்றிலுமாக பாசகவின் கைப்பாவையாக மாறிவிட்டதா? என்ற கேள்வியும் உள்ளது.
நீதித்துறையின் அவ்வப்போதைய தலையீடுகள் ஆட்சி எதிர்ப்புப் போராட்டத்தில் முகன்மை பங்கு வகிக்கின்றன. தேர்தல் பத்திர சட்டத்தை நீக்கியது மட்டுமின்றி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு ஆணையிட்டது போன்றவை பாசிச பாசக ஆட்சிக்கு எதிரான கருத்துருவாக்கத்திற்குப் பெரிதும் உதவின.
குடிமைச் சமூகத்தினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்ட அழுத்தம் இருந்தால் ஒன்றிய பாசக அரசின் பக்கம் நீதித்துறை சாய்வதை அது மட்டுப்படுத்தும். ஆட்சிக்கு எதிராக நீதித்துறை வழங்கக்கூடிய தீர்ப்புகள் ஆட்சிக்கு எதிரான போராட்டக் களத்தை விரிவாக்குவதற்கு உதவும்.
பெகாசஸ் உளவுக்கருவியை மோடி அரசு பயன்படுத்துவதை வெளிக் கொணர்ந்த சான்றுகள், அதானி குழுமத்தை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைகள், குஜராத் படுகொலைகளுக்கு மோடி துணைபோனதை அம்பலப்படுத்திய பிபிசி ஆவணப்படம், ரபேல் விமான ஊழலை அம்பலப்படுத்திய அறிக்கை, இந்திய அரசியல்வாதிகளிடம் புழங்கும் கறுப்புப் பணம் பற்றி நிதிச் செயல்பாடுகளுக்கான செயலணி ( Financial Action Task Force ) வெளியிட்ட கருத்து, எழுத்தாளர் அருந்ததிராய் மீது ஊபா வழக்குப் போடப்பட்டதைக் கண்டித்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அறிக்கை போன்ற பன்னாட்டுத் தலையீடுகளும் பாசிச எதிர்ப்புப் போராட்டக் களத்திற்கு துணை செய்துள்ளன.
இத்தகைய பன்னாட்டுத் தலையீடுகளுக்குப் பின்னால், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு மோடி அரசை சீனா, இரசியாவுக்கு எதிராக திருப்பும் நோக்கம் இருக்கிறது என்றாலும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிரான போராட்டக் களத்தைப் பலப்படுத்த சிறுகும்பலாட்சியை அம்பலப்படுத்தும் அறிக்கைகளைப் பயன்படுத்தத் தவறக்கூடாது.
ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியப்பாடுகள்:
இன்றளவில் பாசக அறுதிப் பெரும்பான்மையின்றி கூட்டணிக் கட்சிகளை நம்பி ஆட்சி அமைத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளும் இடது சனநாயக ஆற்றல்களும் குறிப்பான, இலக்கு வைக்கப்பட்ட (focussed) நிகழ்ச்சிநிரலைக் கட்டமைத்தால் அது தேசிய சனநாயக கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும்.
இடது சனநாயக ஆற்றல்களும் குடிமை சமூகத்தினரும் முன்னெடுக்கக் கூடிய இயக்கங்கள், வெகுமக்களது போராட்டங்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாசிச மோடி – அமித்ஷா சிறுகும்பலாட்சியை எதிர்ப்பதில் இருந்து இந்தியா கூட்டணி தடம்புரளாமல் இருப்பதற்கு வழிவகுக்கும்; இந்தியா கூட்டணி குலையாமல் இருப்பதற்கான புறநிலை அழுத்தமாக அமையும்; இந்தியா கூட்டணி ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி என்ற நிலையிலிருந்து பாசிச பாசக எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி நகர்வதற்கு அழுத்தம் கொடுக்கும்.
எடுத்துக்காட்டாக, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் முன்னெடுத்த போராட்டம் பஞ்சாபில் அகாலிதள – பாசக கூட்டணியை முறித்தது. அதுமட்டுமின்றி, வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை காங்கிரசுக்கு ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் முன்னெடுத்த பரப்புரை இயக்கங்களும் போராட்டங்களும் அதிமுக – பாசக கூட்டணிக்கு முடிவுகட்டியது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள வலுச்சமநிலை மாற்றம் வெகுமக்கள் போராட்டங்கள் எழுந்துவருவதற்கான சனநாயக வெளியை விரிவுபடுத்தும். வெகுமக்கள் போராட்டங்கள் நாடாளுமன்றத்தில் பாசகவின் வலிமையை மேலும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.
அரசியல் நெருக்கடிகள், நீதிமன்றத்தின் வழியாக மோடி அரசுக்கு வரக்கூடிய நெருக்கடிகள், பன்னாட்டு தலையீடுகள் வழியாக வரக்கூடிய நெருக்கடிகள் வெகுமக்கள் இயக்கமாக மாற்றப்படுமானால் தேசிய சனநாயக கூட்டணிக்குள் பிளவு ஏற்படும். அது 2029 க்கு முன்பாகவே ஒன்றிய அரசில் மோடி – அமித் ஷா – அஜித் தோவல் சிறுகும்பலாட்சிக்கு முடிவுகட்டும்.
முதன்மை முரண்பாடு:
மேற்கண்ட அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்த நாட்டின் மிகப் பிற்போக்கான, கொடிய வலதுசாரி பாசிச இராணுவ அரசியல் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஐ அரசியல் அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது. இந்த அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், வர்க்க ரீதியாக கடந்த காலத்தில் இருந்த ஒட்டுமொத்த நிலவுடைமை சக்திகளும் சார்பு பெருமுதலாளிகளும் ஏகாதிபத்தியவாதிகளும் இணைந்த முதன்மை முரண்பாடு என்பது மாறி ஏகபோக நிதிமூலதனத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க முனையும் நிதி மூலதனத்தின் சிறுகும்பலும் அவர்களை ஆதரிக்கிற ஏகாதிபத்தியவாதிகளும் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாசக சிறுகும்பல் ஆட்சியுமே முதன்மை முரண்பாடு என்றாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்கள் எதிர் காவி-கார்ப்பரேட் பாசிச அரசு என்பதே முதன்மை முரண்பாடு என மாறியுள்ளது.
பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன?
பகுதி – 1
பகுதி – 2
பகுதி – 3
பகுதி – 4