மாநில அந்தஸ்து: ஜம்மு கஷ்மீர் மக்களின் தொடரும் எதிர்பார்ப்பு – ரியாஸ்

ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு 370யை ஆகஸ்ட் 5, 2019 அன்று நீக்கிய ஒன்றிய பாஜக அரசாங்கம், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்ட்டது இது முதல் நிகழ்வாகும். 370வது பிரிவு நீக்கப்பட்டதை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் கூட மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்தனர். யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது தற்காலிக நடவடிக்கைதான் என்று கூறிய ஒன்றிய அரசாங்கம், விரைவாக ஜம்மு கஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று அப்போது கூறியது, இப்போதும் அதையே கூறி வருகிறது.
370வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிவு 370 நீக்கப்பட்டதை ஒருமனதாக அங்கீகரித்து டிசம்பர் 11, 2023 அன்று தீர்ப்பு வழங்கியது. செப்டம்பர் 2024ற்குள் ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், மாநில அந்தஸ்தை ‘விரைவாக’ வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. மாநில அந்தஸ்தை வழங்குவதற்கான அந்த ‘விரைவான’ காலம் எப்போது வரும் என்பதற்கு இதுவரை விடையில்லை.
மாநில அந்தஸ்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்குவதற்கு ஒன்றிய அரசாங்கத்திற்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த வருடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போதும் விசாரணை கட்டத்திலேயே இருக்கிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 10க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆகஸ்ட் 25 அன்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ‘நீங்கள் கள யதார்த்தங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். பஹல்காமில் நடைபெற்றதை நீங்கள் புறந்தள்ள முடியாது’ என்று ஆகஸ்ட் 14 விசாரணையின் போது நீதிபதிகள் குறிப்பிட்டனர். ‘மனுதாரர்கள் எதற்காக இத்தருணத்தில் இந்த பிரச்சனையை எழுப்புகின்றனர்?’ என்று கேள்வி எழுப்பி, தன் பங்கிற்கு கவனத்தை திசை திருப்ப முயன்றார் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா.
பண மதிப்பிழப்பு, மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது என்று எதை செய்தாலும் பயங்கரவாத்தை ஒழிப்பதற்கே செய்வதாக ஒன்றிய அரசாங்கம் கூறியது. அவ்வாறு இருந்தும் ஏன் பயங்கரவாதம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை. ‘இரண்டு வருடங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதி குறித்துதான் மனுதாரர்கள் கேட்கிறார்களே அல்லாமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அவர்கள் விரும்பவில்லை’ என்று துஷார் மேத்தாவிற்கு யாரும் அறிவுரை வழங்கவில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
இதனிடையே ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத் தொடரில் ஜம்மு கஷ்மீர் மாநில அந்தஸ்து குறித்து ஏதும் அறிவிப்புகள் வெளியாகும் அல்லது தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து மறைமுகமாக குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எதுவும் நடைபெறவில்லை.
‘ஜம்மு கஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சி முன்னுரிமை வழங்கும்’ என்று அக்கட்சியின் ஜம்மு கஷ்மீர் தலைவர் தாரிக் அகமது கர்ரா கூட்டத் தொடருக்கு முன் தெரிவித்திருந்தார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஜம்மு கஷ்மீரில் அக்கட்சி சில போராட்டங்களையும் நடத்தியது.
‘மாநில அந்தஸ்திற்கான கோரிக்கை ஜம்மு கஷ்மீரின் ஒவ்வொரு தனி நபரின் கோரிக்கையும் அரசாங்க தலைவர்கள் வழங்கிய வாக்குறுதியுமாகும்’ என்று மூத்த தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான பரூக் அப்துல்லாஹ் கூறினார்.
‘2019இல் எங்களிடம் இருந்து தன்னிச்சையாக பறிக்கப்பட்ட அரசியல் சாசன உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோமே அல்லாமல் சலுகை எதையும் கேட்கவில்லை. ஜம்மு கஷ்மீர் அப்படியே இருக்கட்டும். எங்களின் மக்கள் தொகையையும் கலாசாரத்தையும் மாற்றாதீர்கள்’ என்று அவாமி இத்திஹாத் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஷீத் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், பரோலில் வந்து நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மாநில அந்தஸ்திற்கான கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வருடமே சட்டமன்றத்தில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி விட்டோம். இனி உச்ச நீதிமன்றத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். உச்சநீதிமன்றம் ஒரு காலவரையறையை நிர்ணயம் செய்து ஜம்மு கஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்று நம்புகிறோம்’ என்று கையை விரித்து விட்டார் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாஹ். மாநில அந்தஸ்தை கோரி வீடு வீடாகச் சென்று கையெழுத்து வாங்கும் பிரச்சாரத்தை உமர் அப்துல்லாஹ் தொடங்கி வைத்துள்ளார்.
‘மாநில அந்தஸ்து விவகாரத்தில் பாஜக கூறுவதையே உமரும் கூறுகிறார்’ என்று மொத்த பழியையும் அவர் மீது போடப் பார்க்கிறார் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான மெஹ்பூபா முஃப்தி. பாஜகவுடன் கூட்டணி வைத்தும் தனியாகவும் ஜம்மு கஷ்மீரை சீரழித்ததில் தங்களின் பங்கை இவ்விரு கட்சிகளும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஜம்மு கஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025
ஜம்மு கஷ்மீருக்கு ஒன்றிய அரசாங்கம் மீண்டும் வழங்கவுள்ளதாக கூட்டத்தொடர் முடியும் தருவாயில் பரபரப்பு பற்றிக் கொண்டது. கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டு முப்பது நாட்கள் தொடர்ந்து சிறையில் உள்ள அமைச்சர்கள், முதல் அமைச்சர்கள், பிரதமர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியல் சாசன (130வது திருத்த) மசோதாவை ஆகஸ்ட் 20 அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இத்துடன் தொடர்புள்ள யூனியன் பிரதேச திருத்த மசோதா, 2025 மற்றும் ஜம்மு கஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத்தான் ஜம்மு கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாக ஒரு தினத்திற்கு முன் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சில ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. ஆனால், மாநிpல அந்தஸ்திற்கும் இந்த மசோதாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் அமைச்சர் அல்லது அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவது குறித்தே இந்த மசோதா பேசுகிறது.
மாநில அந்தஸ்து குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, ஆகஸ்ட் 4 அன்று ஜம்மு கஷ்மீரை ஒன்றிய அரசாங்கம் இரண்டாகப் பிரிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து மக்களை ஒருவித பதற்றம் பற்றிக் கொண்டது. 2019இல் ஒன்றிய அரசாங்கம் நடந்து கொண்ட விதமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது நூற்றாண்டை கொண்டாடி வரும் நிலையில் அதன் முக்கிய கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றலாம் என்ற எண்ணமும் மக்களிடம் இருந்தது. ஜம்மு, கஷ்மீர், லடாக் என்று மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் நீண்ட கால கோரிக்கையாகும்.
மாநில அந்தஸ்தை கோரும் மக்களிடம் மீண்டும் ஒரு பிரிவினை அச்சம் உருவானது. ‘மாநில அந்தஸ்தை திரும்ப வழங்குவதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே அல்லாமல் ஜனநாயகம் மீதான மற்றொரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை’ என்று காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர் இது குறித்து கருத்து கூறினார்.
கஷ்மீர் குறித்த புத்தகங்களைக் கூட அனுமதிக்காத பாஜக அரசாங்கம் அப்பகுதிக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். அரசியல் ஆதாயங்களை கடந்து தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயக கட்சியும் இன்னபிற கட்சிகளும் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதில்தான் மாநில அந்தஸ்தை பெறுவது அடங்கியிருக்கிறது. தங்களின் அரசியல் சாசன, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதில் உச்சநீதிமன்றம் துணையாக நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அம்மக்களிடம் இருக்கிறது. மக்களின் உரிமைகளை ஜனநாயகத்தின் தூண்கள் நிலைநிறுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.