துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதே தமிழர்களுக்கும் சனநாயகத்திற்கும் நல்லது!

21 Aug 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

துணைகுடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக கூட்டணி சார்பாக ஆர்.எஸ்.எஸ். ஐ. சேர்ந்தவரும் மராட்டியத்தின் ஆளுநருமான சி.பி. இராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொருபுறம் இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியர் B. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சிகளின் தீர்மான முன்மொழிவை மாநிலங்களவையில் முன்வைக்கப்போவதாக துணை குடியரசு தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் சொன்னார். உடனே, மோடி – அமித் ஷா சர்வாதிகார மையம் அவரை பதவியில் இருந்து நீக்க முனைந்ததை தொடர்ந்து தானே விலகல் கடிதத்தை எழுதி கொடுத்து பதவியை விட்டு விலகினார் தன்கர்.

இப்போது துணை குடியரசு தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டு அரசியலைக் கணக்கு வைத்து கோவையை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளது பாசக. தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் இவர் ’தமிழர்’ என்ற காரணத்திற்காக ஆதரிக்க வேண்டும் என்று பாசக தனது பகடையை உருட்டுகிறது. நல்ல வேளையாக திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த சூழ்ச்சி வலைக்குள் மாட்டி கொள்ளாமல் சிபி. இராதாகிருஷ்ணனை ஆதரிக்க மறுத்துள்ளன. இது வரவேற்புக்கு உரியது.

துணைகுடியரசு தலைவர் தேர்தல் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் மற்றொரு களம் ஆகும். இதில் பாசிச பாசக ஆட்சியின் வேட்பாளராகத்தான் சி.பி. இராதாகிருஷ்ணனைப் பார்க்க வேண்டுமே ஒழிய அவரது இனம், மதம், மொழி, சாதி, பாலினம் ஆகிய அடையாளங்களைப் பார்ப்பது சனநாயகத்தைப் பாதுகாக்கும் அரசியlலாகாது.

பாசக தமிழர்களின் இருப்பை மறுத்து இந்துத்துவ அடையாளத்தை  திணிக்கிறது; தமிழர்களின் கல்வியைப் பறிக்கும் வகையில் கல்வி நிதியை கொடுக்காமல் வஞ்சிக்கிறது; தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் அவற்றை சாகடித்துக் கொண்டிருக்கிறது; குடியுரிமை திருத்தச் சட்டம் வழியாக தமிழர்களை சமயத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி இசுலாமிய தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்க நினைக்கிறது; தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகளை குஜராத்துக்கு மடைமாற்றுகிறது; கீழடி, சிவகளையில் இருந்து வரலாற்றை திருத்தி எழுத புறப்பட்டு வரும் உண்மைகளை மீண்டும் மண்ணுக்குள் புதைக்க துடிக்கிறது. தமிழ்நாட்டை துண்டாட சதித்திட்டம் தீட்டுகிறது. வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் காவி வண்ணம் பூசி கபளிகரம் செய்யத் துடிக்கிறது. இவை மட்டுமின்றி, வாக்குரிமையையே ஒழித்துக் கட்டும் வகையில் தேர்தல் சனநாயகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி தமிழ், தமிழர், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து மொழிவழித் தேசியங்களுக்கு எதிராகவும் சமயச் சிறுபான்மையினருக்கு எதிராகவும் உழவர்கள், தொழிலாளர்கள், சிறுகுறு தொழில் செய்வோர், சிறு வணிகர் உள்ளிட்டோருக்கு எதிராகவும் நாடாளுமன்ற அமைப்புமுறைக்கு எதிராகவும் இந்து, இந்தி, இந்துராஷ்டிரம் என்ற பெயரில் மேற்கு இந்திய கார்ப்பரேட் ஏகபோக ஆட்சிக்கு அடித்தளம் இட்டுக்கொண்டிருக்கும் மோடி – அமித் ஷா – அஜித் தோவல் ஆட்சி துணை குடியரசு தேர்தலில் ’தமிழர்’ என்ற முகமூடி அணிந்து வருகிறது.

பழங்குடிகள் மீது உள்நாட்டு இனவழிப்பு போரை நடத்திக் கொண்டு பழங்குடிப் பெண் முர்முவை குடியரசு தலைவராக்கியது போல் உயர் சாதி – உயர் வகுப்பாருக்கான ஆட்சியை நடத்திக் கொண்டு இராம்நாத் கோவிந்த என்ற தலித் குடியரசு தலைவராக்கியது போல் இசுலாமியருக்கு எதிரான இனவழிப்பு ஆட்சியை நடத்திக் கொண்டே அப்துல் கலாமை குடியரசு தலைவர் ஆக்கியது போல் அடையாளங்களை முன்வைத்து பாசாங்கு செய்வதில் பாசகவுக்கு இணை பாசகவே. எனவே, ’தமிழர்’ என்ற அடையாளத்தைக் காட்டுவதால் எக்காரணத்தைக் கொண்டும் தமிழர்கள் மயங்கிவிடக் கூடாது.

பாசிச பாசக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசக் கட்சி தெலுங்கு பேசும் சுதர்சன ரெட்டி என்பதற்காக இந்தியா கூட்டணி வேட்பாளரான அவரை ஆதரிக்க முன்வரவில்லை. மாறாக பாசிச பாசக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது என்பதை உற்று நோக்க வேண்டும்.

’வாக்குத் திருட்டின் வழியாக பாசக ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. நாட்டின் சனநாயகத்திற்கு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசியல் சூழலை சரியாக மதிப்பிடத் தவறும் கட்சிகள் வரலாற்றில் பெரும் பழிக்கு ஆளாக நேரிடும். பாசகவையும் காங்கிரசையும் சமப்படுத்திக் கொண்டு மூன்றாவது தரப்பாக நின்று கொண்டிருக்கும் கட்சிகளான பாரதிய ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போன்ற கட்சிகள் பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்த வேண்டும். சிபி இராதாகிருஷ்ணனை தோற்கடிக்கும் வகையில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

பாசகவுடன் கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், அதிமுக போன்ற கட்சிகள் பாசகவுடன் கூட்டணியில் இருந்து தம்மை தக்க வைத்துக் கொள்ள முடியாது. பாசகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு மட்டுமே இருத்தலுக்கான நியாயம் இருக்கப் போகிறது. எனவே, பாசக கூட்டனியில் இருக்கும் க்ட்சிகளும் அதில் இருந்து வெளியேற வேண்டும். துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசக முன்னிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 

இந்த துணை குடியரசு தேர்தல் இனத்தைப் பார்த்து வாக்களிப்பதற்கானது அல்ல, பாசிச ஆதரவு பாசிச எதிர்ப்பு என்ற புள்ளியில் இருந்து வாக்களிப்பதற்கான களமாகும். துணை குடியரசு தலைவர் தேர்தலில் சிபி இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதுதான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் சனநாயகத்திற்கும் நன்மை பயக்கும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக வலியுறுத்துகிறோம்.                                                                                                

தோழமையுடன்,

  தி. செந்தில்குமார்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்த்தேச மககள் முன்னணி              99419 31499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW