தூய்மைப்பணியாளருக்கு பணிநிரந்தரம் / அரசு வேலை தேவையில்லை என்று சொன்ன தோழர் திருமா, என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே ? சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்

தனியார்மயத்தை எதிர்த்தும் பணிநிரந்தரம் கோரியும் 13 நாள் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தை அடக்குமுறை செய்து பெயர் அளவிலான நல திட்டங்களை திமுக அரசு அறிவித்ததை தொடர்ந்து விசிக தலைவர் தொல் திருமா அவர்கள் பேசுகையில் ‘பட்டியல் சமூகம் காலம் காலமாக இந்த பணியை செய்கிறது, இந்த இழி தொழிலில் இருந்து வெளியேற வேண்டும், பணிநிரந்தரம் செய்யக்கூடாது / அரசு வேலை தேவையில்லை ‘ என்று கூறியுள்ளார்.
பட்டியல் சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு சமூக இழிவு என்ற நிலை ஒழிக்கப்படவேண்டும் என்பதிலும் பட்டியல் சமூகம் பெரும்பான்மையாக இந்த தொழிலில் இருக்கக்கூடாது என்பதும் சரியானதே. ஆனால் திருமா அவர்கள் இதற்க்கு தமிழக அரசு என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே ஏன் ? 13 நாட்கள் பணிநிரந்தரம் என்னும் கோரிக்கையை ஆதரித்துவிட்டு 16ஆவது நாள் அதை எதிர்த்து பேசவேண்டிய அவசியம் எங்கிருந்துவந்தது ? திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு சந்தர்பவாதமாக பேசுகிறார் என்றே எடுத்துக்கொள்ளமுடியும். இது ஒருபுறம் இருக்கட்டும்.
ஒரு தூய்மைப்பணியாளர் சுயமரியாதை வாழ்க்கையை வாழ்ந்திட அவரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது மட்டும் போதாது தூய்மைப்பணி குறித்து உள்ள சமூக பார்வை SOCIAL STIGMA நீங்கிட வேண்டும்.
‘பட்டியல் சமூகத்தை இந்த சமூக இழுக்கிலிருந்து விடுவிப்பது எப்படி ?’ என்ற சமூகவியல் நோக்கும் ‘தூய்மைப்பணியாளர் வாழ்வை பாதுகாப்பது’ என்ற வாழ்வாதார நோக்கிலும் ஆக்கபூர்வமான விவாதம் தேவைப்படுகிறது, இதன் மூலம் தமிழகத்திற்கு ஒரு கொள்கை நிலைப்பாடு தேவைப்படுகிறது (TN Policy on Sanitary Work and Workers). இதுவே தற்காலத்து சமூக நீதி நடவடிக்கையாக அமையும் என்று கருத்துகுறேன்.
கடந்த 25 ஆண்டுகளாக இரண்டு லட்சத்திற்கு மேலான தூய்மைப்பணியாளர்கள் தற்காலிக தன்மையில் / ஒப்பந்த முறையில் தமிழகம் முழுவது மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி யில் வேலைசெய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் பட்டியல் சமூகமும் மீதம் MBC/BC சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த சமூக தொகுப்பில் SOCIAL COMPOSITION துல்லியமான பட்டியல் சமூகத்தின் சதவீதம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபடும் அதேவேளையில் கலப்பணி, ஓட்டுநர் எனும் வேலைப்பிரிவினையிலும் மாறுபடுகிறது.
குப்பை அள்ளுதல், பாதாள சாக்கடையை சுத்தம் செய்தல் மற்றும் மருத்துவ கழிவுகள் அகற்றுதல் எனும் மூன்று பெரும் தூய்மைப்பணி நடக்கிறது, வெவேறு துறைகளின் கீழ் இத்தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கையால் மலம் அள்ளும் தொழிலை சட்டப்பூர்வமாக தடை செய்து சென்னை போன்ற மாநகராட்சியில் இயந்திரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது, ஆனால் தமிழகம் முழுமையிலும் இன்னும் இவை அமல்படுத்தப்படவில்லை. குறிகிய தெருக்களில் தற்போது உள்ள இயந்திரங்கள் பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது, Jet Rodding இயந்திரம் பயன்படுத்தும்போது விபத்துக்களும் நடக்கிறது மேலும் தனியார் வளாகங்களில் இருக்கும் கழிவு தொட்டி septic tank யை சுத்தம் செய்யும்போதும் மரணங்கள் நடக்கின்றது, கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் பாதாள சாக்கடையில் இறந்தோரை விட தனியார் வளாகத்தில் (வீட்டு உரிமையாளர் உள்ளிட்ட) இறந்தவர்கள் தான் அதிகம். நகர கட்டுமானம், பொருத்தமான இயந்திரம் இன்மை உள்ளிட்ட பல காரணிகளால் மலக்குழி மரணங்கள் தொடர்கிறது. இவ்வாறான மலக்குழு மரணங்களை முழுமையாக தடுத்திட திட்டம் தேவைப்படுகிறது.
குப்பை அள்ளும் தூய்மைப்பணியாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் நோய் தொற்றும் சாலை விபத்துகளும் அவர்கள் உயிர் இழக்கவும் உடல் நல குறைவு குறைவு ஏற்படவும் காரணமாகிறது. கடந்த மாதம் ஒரு ஒப்பந்த தொழிலாளி சென்னை தாம்பரத்தில் இரவு நேர பணியின்போது சாலை விபத்தில் கொல்லப்பட்டார். மேலும் பணிப்பாதுகாப்பு ஏதும் இல்லாமல் குறைந்த கூலிக்கு 10-20 ஆண்டுகளாக உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். தொழிலாளர் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் ஏதும் வழங்கப்படாமல் அதிமுக – திமுக ஆட்சியாளர்களால் இன்று வரை வஞ்சிக்கப்படுகின்றனர்.
பெருநகர வளர்ச்சி, நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்டவை ஒரு நாளைக்கு பல ஆயிரம் TON கழிவுகளை வெளியேற்றுகிறது. திட கழிவு மேலாண்மை என்பது உலக அளவில் விவாதிக்கப்பட்டு திட்டம் வகுக்கப்படுகிறது, இவை பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் செயல் முறை சார்ந்ததாகவே உள்ளது. ஆனால் தூய்மைப்பணியாளரின் நலன் குறித்து ஏதும் பேசப்படுவது இல்லை. உலகமய கொள்கையின் தொடச்சியாக ‘ஒப்பந்த முறை’ ‘தனியார்மயம்’ என்பது அணைத்து துறையிலும் மத்திய மாநில அரசால் அமல்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது.
எனவே நான்கு இலக்குகளை நோக்கி நாம் விவாதத்தை கட்டியமைக்க வேண்டும் என்று நினைக்கிறன் 1. தூய்மைப்பணியை முழுமையாக இயந்திரமயமாக்குவது 2. பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது, மேம்படுத்துவது 3. அணைத்து சாதியினரையும் தூய்மைப்பணியில் ஈடுபடுத்துவது / பட்டியல் சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு சமூக இழிவு என்ற நிலையை போக்குவது 4. தூய்மைப்பணி, பொது சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் Essential Services தனியார்மயத்தை கட்டுப்படுத்துவது.
தூய்மைப்பணி மற்றும் பணியாளர் குறித்து தமிழகம் முழுவதும் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. நீண்ட காலமாக வேலை செய்துவரும் தொழிலாளர்கள் விரும்பினால் பணிநிரந்தம் – அரசு வேலை பெறுவது அல்லது விருப்ப ஓய்வு பெற்று பணிசெய்த காலத்திற்கு Gratuity தொகை மற்றும் தமிழக அரசின் தொழில்முனைவோர் திட்டத்தில் வேறொரு தொழில் செய்வது. புதிய நியமனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி அணைத்து சாதியினரையும் இந்த பணியில் ஈடுபடுத்துவது, ஒருநாள் குறைந்த பட்ச கூலியை ரூ.1000 ஆக நிர்ணயிப்பது மற்றும் அணைத்து தொழிலாளர் சட்டமும் அமல்படுத்துவது போன்ற முன்வைப்புகளை விரிவான விவாதத்திற்கு முன்வைது ஒரு கொள்கை வரைவு (TN Policy on Sanitary Work and Workers ) தயார்செய்தாள் தமிழ் சமூகத்திற்கு பயனாக இருக்கும் என்று கருத்துக்கறேன்,