இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணைபோகும் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்கள் – ஐநாவின் அறிக்கை

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகள் நடந்து வரும் இஸ்ரேலின் காலனியாதிக்கத்திற்கும், சர்வதேச சட்டத்தை மீறும் போர் குற்றங்களுக்கும் துணையாக நின்று அதன் மூலம் லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்களை பற்றிய அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்திற்கான ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பானிஸின் இந்த அறிக்கையில், பாலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமையினை மறுத்தல், அவர்களின் நிலத்தை அபகரித்தல், அழித்தொழித்தல், பாகுபாடு, கட்டாயமான இடபெயர்ச்சி, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் மக்களை பட்டினி நிலைக்கு தள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கு எவ்வாறு துணை போகின்றன என்பதை அந்த அறிக்கை விவரிக்கிறது.
இதற்கு முன்னதாக வெளியான அறிக்கைகள் அனைத்தும் இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமைப்பையும், அரசியல் செயல்பாடுகளையும் மட்டுமே மையப்படுத்திய நிலையில், அல்பானிஸின் இந்த அறிக்கையானது, சுமார் 200க்கும் மேற்பட்ட சமர்பிப்புகளை அடிப்படையாக கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தரவுகளை கொண்டு இனவெறி மற்றும் இனப்படுகொலை உள்பட சர்வதேச குற்றங்களை நிகழ்த்தும் கட்டமைப்புக்கும் சர்வதேச வணிக கட்டமைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளது.
‘ஆக்கிரமிப்பு பொருளாதாரத்தில் இருந்து இனப்படுகொலை பொருளாதாரம் வரை’ (‘From Economy of Occupation to Economy of Genocide,’ ) என்று தலைப்பிடப்பட்டுள்ள 39 பக்க அறிக்கையில் பாலஸ்தீனப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் 48 பன்னாட்டு நிறுவனங்கள், “ஆவணப்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியான வன்முறைகள் அக்டோபர் 7, 2023ற்கு பிறகு குவிந்தபோதும், தெரிந்தே” அவை எவ்வாறு புறக்கணிப்பட்டுள்ளன என்பதனையும் இந்த அறிக்கை விளக்கியுள்ளது.
இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்பினையும், இனவெறியையும், தற்போது இனப்படுகொலையினையும் தடுக்க சர்வதேச அரசாங்கங்கள் செயல்படாதபோதும் , பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இதன்மூலம் இலாபமடைந்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் சுருக்கத்தில் அல்பானிஸ் எழுதியுள்ளார்.
“இது வெறும் மேலோட்டமானதுதான்”, என்று எழுதிய அவர், “கார்ப்பரேட் நிறுவனங்களும், அதன் உயர் அதிகாரிகளும் இதற்கு பொறுப்பேற்று இந்த இனப்படுகொலையினையும், இனவெறி முதலாளித்துவத்தையும் உடனடியாக நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”, எனவும் கூறியுள்ளார்.
குறிப்பாக 1967லிருந்து பாலஸ்தீனர்களை அவர்களின் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றி அதன் மூலம் நேரடியாக இலாபம் அடையும் நிறுவனங்களின் செயல்பாடுகளை வெளிக்காட்டி, இஸ்ரேலின் காலனிய – குடியேற்றத் திட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கை அம்பலபடுத்தியுள்ளார்.
“வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், ஓய்விடங்கள், கால்நடைகள், உற்பத்திச் சொத்துகளான ஆலிவ் தோட்டங்ககள் மற்றும் பழத்தோட்டங்கள் என பாலஸ்தீன மக்களின் அனைத்து உடைமைகளையும் அழிப்பதற்கு தேவையான ஆயுத உபகரண உதவிகளை கார்ப்பரேட் நிறுவனங்களே இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளன” எனக் குறிப்பிடும் அறிக்கை, இது மட்டுமல்லாது சட்டத்திற்கு புறம்பான குடியமர்வுகளை இராணுவமயபடுத்தவும், அவைகளை ஊக்குவிக்கவும் உதவி, பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளை பன்னாட்டு நிறுவனங்களே செய்துள்ளன என அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளர்களான எல்பிட் சிஸ்டம்ஸ்(Elbit Systems), இஸ்ரேல் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து காசாவில் பயன்படுத்தப்பட்டுவரும் F-35 ரக விமானங்களை உற்பத்தி செய்து வரும் அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின்(Lockheed Martin) நிறுவனமும் இந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காசாவின் மீது இதுவரை 85,000 டன்னிற்கும் மேலாக வெடிகுண்டுகள், அவற்றில் பெரும்பாலானவை இலக்குகளின்றி பொதுவாக வீசப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வை “காசாவின் மீதான அழித்தொழிப்பு” என்று அல்பானிஸ் வகைபடுத்தியுள்ளார்.
சர்வதேசப் பெருநிறுவனங்கள்
ஆயுத உற்பத்திக்கு தேவையான ரோபோ இயந்திரங்களை ஜப்பானை சேர்ந்த ஃபனுக் (FANUC) நிறுவனமும், “அமெரிக்காவினால் வழங்கப்படும் இராணுவ தளவாடங்களை தடையின்றி விநியோகிப்பதற்கு” டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஏ.பி,மொல்லர்-மேர்ஸ்க் (A.P. Moller-Maersk) நிறுவனமும் காசாவிற்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு உதவுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
“இஸ்ரேலிய நிறுவனங்களான எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) மற்றும் இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் நடைபெற்றுவரும் இனப்படுகொலையைப் பயன்படுத்தி பெருமளவு லாபத்தை பெருக்கியுள்ளன”, என அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், 2023-2024ம் ஆண்டில் இஸ்ரேல் இராணுவத்திற்கான செலவுகள் 46.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, 65 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில், இராணுவத்திற்காக மிக அதிகமாக செலவிடும் தொகைகளில் ஒன்றாக இது உள்ளது. இது, இந்நிறுவனங்களின் இலாபத்தை வேகமாக வளரச்செய்துள்ளது.
ஆயுத நிறுவனங்கள் மட்டுமல்லாது, அந்தப் பகுதி முழுவதுமான விரிவான கண்காணிப்பில் இஸ்ரேலிய மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பாத்திரத்தை இவ்வறிக்கை காட்டுகிறது. குறிப்பாக மைக்ரோசாப்ட், ஐபிஎம், கூகுள், அமேசான் மற்றும் பலந்தீர்(Palantir) போன்ற நிறுவனங்கள் க்ளவுட் சேவைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மற்றும் பயோமெட்ரிக் கட்டமைப்புகள் போன்ற துறைகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்களுக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளது.
“பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மென்மேலும் தானியங்கி முறையாக்கப்படுகிறது.”, என அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. “பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் இராணுவ தொழில்நுட்பங்களை சோதனை செய்யும் சோதனைக் களமாக ஆக்கிரமிப்பு பகுதிகளை பயன்படுத்திகொள்கின்றன” என அல்பானிஸ் கூறுகிறார்.
வான்வழித் தாக்குதலில் தானே முடிவெடுத்து குறிவைத்து தாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை, பீட்டர் தியல் என்ற பெரும் பணக்காரரால் உருவாக்கப்பட்ட பலந்தீர் டெக்னாலஜீஸ் (Palantir Technologies) வழங்குவதாக பெயரிடப்பட்டுள்ளது. முன் கணிக்கும் காவல் கருவிகள், இராணுவ மென்பொருள் கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு தளங்கள் போன்றவற்றின் மூலம் போர்களத்தின் நிகழ் நேரத் தரவுகளை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பங்களை பலந்தீர் நிறுவனம் வழங்குவதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அல்பானிஸ் தெரிவிக்கிறார்.
மேலும், கேட்டர் பில்லர், ஹெச்டி ஹூண்டாய் மற்றும் வால்வோ போன்ற பெருநிறுவனங்கள் பாலஸ்தீனிய மக்களின் உடமைகளை சேதப்படுத்தவும், அவர்களின் கட்டாய இடப்பெயர்வுக்கும் உதவும் வகையிலான இயந்திர வசதிகளை வழங்குவதாக அந்த அறிக்கை விவரிக்கிறது. “2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியிலிருந்து தற்போது வரை 70 விழுக்காடு காசாவின் கட்டுமானங்களையும் , 81 விழுக்காடு காசாவின் விளைநிலங்களையும் இந்த இயந்திரங்கள் அழித்துள்ளன”, என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், இந்தப் படுகொலையில் கல்வி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்களிப்பினையும் அது விளக்கியுள்ளது. நிறவெறியையும், ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்தும் கருத்தியல் கதையாடல்களை ஊக்குவித்தும், இன அழிப்பிற்கு தேவையான ஆயுத தொழில் நுட்பங்களை உருவாக்கியும், இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் துணை போவதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
“இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் குறிப்பாக சட்டக் கல்லூரிகள், தொல்லியல் மற்றும் மத்திய கிழக்கு குறித்த ஆய்வுகள் சார்ந்த துறைகள், நிறவெறிக்கான கருத்தியல் சார்பை உருவாக்குவதில் பங்களிக்கின்றன”, எனக் குறிப்பிடும் அறிக்கை, பாலஸ்தீனிய வரலாற்றை அழிக்கவும், காலனிய நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவதாகக் கூறுகிறது.
போரிலிருந்து ஆதாயம்
இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களின் இராணுவ ஆராய்ச்சிக்கும் மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கும் உள்ள தொடர்பினையும் அல்பானிஸ் எடுத்துக்காட்டியுள்ளார். உதாரணத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தேவையான இராணுவ ஆராய்ச்சிகள் புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகமான மசாசுசெட்ஸ் பல்கலைக்கழக்கத்தில் (Massachusetts Institute of Technology) மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளின் இராணுவ நடவடிக்கைகாக அந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் ஒரே ஆராய்ச்சி இது மட்டுமேயாகும். இந்த ஆராய்ச்சிகள் டிரோன் கட்டுபாடுகள், துரத்திப் பிடிக்கும் வழிமுறைகள், நீருக்கடியிலான கண்காணிப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
மேலும், அக்டோபர் 2023ற்கு பிறகு, அதிகரித்துவரும் குடியேற்ற நடவடிக்கைகளால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு “கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளதாக” அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாலஸ்தீனிய மக்களுக்கான நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்றவற்றை கிட்டத்தட்ட முற்றிலுமாக தடுத்து நிறுத்தி “திட்டமிடப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் அழிவைப் பயன்படுத்தி இத்தகைய நிறுவனங்கள் இலாபமடைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சமீபத்தில் நடந்த சில சட்டப்பூர்வமான முன்னேற்றங்கள், குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனை குழுவின் அறிவுறுத்தல் இந்த பிரச்சனையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்புகளை மறுவரையறை செய்துள்ளது
“ஐநாவால் ஆதரிக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலானது, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைளில் ஈடுபடாமலும், எந்தவித நிபந்தனைகளுமின்றி இது தொடர்பான ஒப்பந்தங்களிலிருந்து விலக வேண்டுமெனவும் கூறுகிறது”.
பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக இஸ்ரேல் எடுக்க வேண்டும் என கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது சர்வதேச நீதிமன்றம். மேலும், அதற்கடுத்த ஐந்து மாதங்களுக்கு பிறகு, இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமென மீண்டும் அது உத்தரவிட்டது.
அதன் பரிந்துரைகளுள், “சர்வதேச சட்டங்களை மீறிய இத்தகைய தீவிரமான அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது ஐநாவின் உறுப்பு நாடுகள் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”, என அந்த அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சர்வதேச பொறுப்புகளின்படி, சுயநிர்ணய சட்டங்களைப் பாதுகாக்கவும், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டு வரும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வணிக தொடர்பை மற்ற கார்ப்பரேட் நிறவனங்கள் உடனடியாக நிறுத்திகொள்ளவும் அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலின் எதிர்வினை
அல்பானிஸின் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், இந்த அறிக்கை ஆதாரமற்ற, களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை” முன்வைப்பதாகவும், ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7, 2023 அன்று தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையினேயே தாங்கள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குமுன் அதனை கடுமையாக எதிர்த்த அமெரிக்கா, “ஐநாவின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அல்பானிஸை கண்டித்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்”. “அதைத் தவறும் பட்சத்தில் ஐ.நாவின் நம்பகத்தன்மை குறையும், மேலும், அல்பானீஸ் மீது அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுக்கும்”, என ஜூலை 1 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஐ.நாவை மையப்படுத்திய பாஸ்ப்ளூ (PassBlue), என்ற செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர், பொதுச் செயலாளர் குட்டாரெசுக்கு, “அல்பானிசை பதவியிலமர்த்தவோ அல்லது பதவிநீக்கம் செய்யவோ அதிகாரமில்லை. அல்பானிஸ் போன்றோர், ஐ.நாவின் இலச்சினை மற்றும் அவர்களது பெயரின் பின்னால் ஐ.நாவின் பதவி இருந்தாலும்கூட, அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவார்கள். எனவே பொதுச்செயலாளருக்கு, அவர்களது செயல்பாடுகள் என்ன என்பது பற்றியோ, அவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது பற்றியோ தெரியாது”, என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெனிவாவை மையமாக கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து இஸ்ரேலும், அமெரிக்காவும் இந்தாண்டின் தொடக்கத்தில் விலகின. ட்ரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதும், தற்போதும் அமெரிக்கா இத்தகைய விலகல் நடவடிக்கையில் ஈடுபட்டதும் குறிப்படத்தக்கது.
- தி வயர் தளத்தில் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்
- மொழிபெயர்ப்பு – தோழர் விக்னேஷ்.