தூய்மைப்பணியாளர் நலன் குறித்து திமுக அரசின் பொய் பரப்புரை! -சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்

போராடிவந்த தூய்மைப்பணியாளர்களை நேற்று கைது செய்து தடுப்பு காவலில் வைத்துக்கொண்டே அவர்களுக்கென நல திட்டம் எனும் பெயரில் பொய் பரப்புரையில் இறங்கியுள்ளது திமுக அரசு.
பணியிட பாதுகாப்பு (Occupational Health & Safety) – ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடக்கும் அதேவேளையில் ஜூலை 27 அன்று தாம்பரம் கேம்ப் ரோட்டில் இரவு தூய்மைப்பணி செய்து வந்த 28வயது ராணி மீது அதிவேகமாக வந்த சார் மோதி தூக்கிவீசப்பட்டு, சிகிர்ச்சி பலனின்றி இறந்துபோனார். ஒப்பந்த தொழிலாளி என்பதால் ஒரு மாநகராட்சி அதிகாரி கூட அவரை பார்கவரவில்லை, பொறுப்பேற்கவில்லை . இரண்டு மாதத்திற்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பொது Jet Rodding குழாய் வெடித்து ஒரு ஒப்பந்த தொழிலாளியின் முகம் மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது, மெட்ரோ வாட்டர் நிர்வாகம் பொறுப்பேற்கவில்லை, இதே துரையின் கீழ் இன்னொரு தொழிலாளிக்கு மண்டை ஓடு உடைந்து இரண்டுமுறை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது, அவருக்கான இழப்பீடு வழக்கு நடத்திதான் பெறப்பட்டது. ஒப்பந்ததாரர் எனப்படுவோர் workman compensation policy கூட வைத்திருப்பது இல்லை, மாநகராட்சியோ மெட்ரோ வாட்டர் வாரியமோ அதை உறுதிப்படுத்துவதும் இல்லை. THE TAMIL NADU PROHIBITION OF EMPLOYMENT AS MANUAL SCAVENGERS AND THEIR REHABILITATION RULES, 2022 உபகரணங்கள் வழங்கவேண்டும், 10 லட்சம் வாழ்நாள் காப்பீடு வழங்கவேண்டும் எனும் விதிகள் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அமல்படுத்தவில்லை. உயிர் ஆபத்து ஏற்படும்போதே தூய்மைப்பணியாளர் நிலை இதுதான் என்றால் கழிவுகள் மூலம் ஏற்படும் நோய் தொற்று குறித்தெல்லாம் என்ன ஆய்வு மற்றும் நடவடிக்கை தமிழக அரசிடம் உள்ளது என்பதே கேள்வி.
பணிப்பாதுகாப்பு : ‘எங்கள் தொழிலாளர்கள்’ என்று பல முறை பேசும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அமைச்சர்கள் ஏன் நீதிமன்றங்களில் ‘எங்களுக்கும் அவர்களும் சம்பந்தன் இல்லை…அவர்கள் ஒப்பந்த ஊழியர்கள், ஒப்பந்ததாரர் தான் இழப்பீடு உள்ளிட்ட அணைத்து விஷயங்களுக்கும் பொறுப்பு’ என கூறுகிறார்கள் ? தொழிலாளர் சட்டத்தின்படி 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் அவர்களை பணிநிரந்தரம் செய்திடவேண்டும் என்று விதி இருப்பதால் பணி தொடர்ச்சி இருக்கக்கூடாது என்பதற்காகவே ஒப்பந்ததாரரை அடிக்கடி மாற்றுவதும் தொழிலாளர் நீதிமன்றம் பணிநிரந்தரம் செய்திட உத்தரவிட்டால் மேல் முறையீடு செய்து தூய்மைப்பணியாளர் பணிப்பாதுகாப்பை ஒழித்திடும் வேலையை தான் தமிழகம் அரசு செய்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று CMWSSB மெட்ரோ வாட்டர் வாரியத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது, தொழிலாளர்கள் கையெழுத்தை அதிகாரிகளே போட்டுக்கொள்வார்கள் ஏனெனில் சட்டத்தின் முன் அவர்களை ‘தினக்கூலி’ என்று நிரூபிக்கும் மோசடி வேலை செவ்வனே செய்கிறது தமிழக அரசு. போராடிய தூய்மைப்பணியாளர்களில் பெரும்பான்மையினர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்தவர்கள், பலர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் வாழ்நாளை சென்னை மாநகராட்சிக்கு சேவை செய்தவர்கள் …. பணிப்பாதுகாப்பை அரசுதான் உத்தரவாதப்படுத்த முடியும் என்பது அனைவருக்கும் தெரியும் அனால் குறுகிய கால ஒப்பந்ததாரர் பணிப்பாதுகாப்பு வழங்குறார் என்ற தமிழ அரசின் வாதம் மக்களை முட்டாள்களாக கருதுகிறீர்களா என்று தான் கேட்கத்தோணுகிறது.
ஊதியம் – ரிப்பன் மாளிகை போராட்டம் தொடங்குவதற்கு ஒரு காரணம் NULM திட்டத்தில் அவர்கள் பெற்று வந்த ஊதியத்தை விட குறையான ஊதியத்தை ராம்கி நிறுவனம் வழங்குகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்கள் ஸ்வீடன் நாடு Urbaser Sumeet எனும் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தொடக்க ஊதியம் ரூ. 14000 மட்டுமே. அதுவே தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியரின் சம்பளம் ரூ.11000 மட்டுமே. தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சியில் ஊதியம் மாறுபடுகிறது. சென்னை மண்டலம் 5,6 மற்றும் கோவை மாநகராட்சியில் தொழிலாளர்கள் போராடிய ஊதியத்தை உயர்த்தி உள்ளனர். சென்னை, கோவை போன்ற நகரத்தில் இந்த ஊதியத்தில் ஒரு குடும்பம் வாழ்த்திட முடியாது என்பது நிதர்சனம். எனவே தான் தூய்மைப்பணி முடிந்தபின் ஆட்டோ ஓட்டுவது போன்ற இன்னொரு வேலையை தொழிலாளர்கள் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது, சிலர் இரண்டு shift காலை மற்றும் இரவு தூய்மைப்பணி செய்கின்றனர், சிலர் கணவன் – மனைவி இருவரும் தூய்மைப்பணி செய்கின்றனர். அதனால் தான் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் கோருகின்றனர் ஊதியம் மாதம் ரூ. 30000 கிடைத்திடும். இதனை அறியாதவர்கள் அல்ல ஆட்சியாளர்கள், கடந்தாண்டு தூய்மைப்பணியாளர்களுக்கு ஒரு திட்டம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..’தூய்மைப்பணி செய்த நேரம் போக நீங்கள் தொழில் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறோம்’ எனும் திட்டம், அதாவது ‘உங்களை பணிநிரந்தரம் செய்யப்போவது இல்லை, ஊதியத்தை உயர்த்தப்போவது இல்லை, நீங்கள் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்து குடும்பத்திற்க்கான பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ளுங்கள்’ என்று மனசாட்சி இல்லாமல் பேசுகிறார். நாம் கேட்பது தூய்மைப்பணியாளர்கள் உழைப்பிற்கு ஒரு நாள் கூலி ரூ. 1000/- வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் போராடுவதை ஏற்க நெஞ்சுரம் இருக்கிறதா திமுக அரசிற்கு ?
போலித்தனமான சமூக நீதி : தூய்மைப்பணி என்பது பட்டியல் சமூக மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் தூய்மைப்பணியாளர்கள் பெரும்பான்மை பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் என்றும் அறிந்திருக்கும் திமுக அரசு, என்ன செய்திருக்க வேண்டும் ? வாழ்நாளை தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாத்திட அவர்களை பணிநிரந்தரம் செய்து அடுத்த தலைமுறை தூய்மைப்பணியில் ஈடுபடாமல் இருக்க அவர்கள் பிள்ளைகளுக்கு சிறப்பு திட்டம் அறிவித்து அவர்களை வேறொரு தொழிலில் தொழில் முனைவோராக்குவதே சமூக நீதியாக இருக்கமுடியும். ஆனால் திமுக அரசு செய்தது என்ன ? கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் ‘சென்னை மெட்ரோ வாட்டர் வாரியத்தின் கீழ் தொழில் முனைவோர் திட்டம்’ அறிவித்தார்… அதாவது ஆயிரத்திற்கு மேற்பட்ட பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் தூய்மைப்பணியாளர்கள் பணிநிரந்தரம் கோரி 10 நாள் இரவு பகல் பாராது 2022 ஆண்டில் போராட்டம் நடத்தினர். அவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் அதற்க்கு மாறாக இந்த துறைக்கு வெளியில் இருந்து பட்டியல் சமூகத்தை சார்ந்த 100க்கு மேற்பட்டோரை தேர்தெடுத்து அவர்களுக்கு DICCI நிறுவனம் மூலம் மானியத்துடன் வாகனம் வழங்கி அந்த வாகனத்தில் அணைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலை செய்ய வைத்தார். இது என்ன வகை சமூக நீதி ? 10 ஆண்டு 20 ஆண்டு வேலைசெய்து பணிநிரந்தரம் கோரும் தொழிலாளியை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது மற்றும் பிற சாதியினரை தூய்மைப்பணியில் ஈடுபடுத்துவதற்கு மாறாக மீண்டும் பட்டியல் சமூகத்தையே தூய்மைப்பணியில் தொழில்முனைவோராக்குவது. இதுவே போலித்தனமான சமூக நீதி.
இறுதியாக – தூய்மைப்பணிக்கென சில தனித்தன்மைகள் உண்டு ஒன்று. தொழிற்நுட்ப வளர்ச்சி இயந்திரங்கள் மூலம் தூய்மைப்பணியை நவீன / civilised வேலையாக மாற்றிடலாம் அனால் இல்லாமல் ஆகிட முடியாது, இரண்டு பட்டியல் சமூக மக்கள் மீது திணிக்கப்பட்டு சமூக இழுக்கு social stigma உடைய பணியாக உள்ளது மூன்று, பிற பொது சேவையை காட்டிலும் தூய்மைப்பணியை ஏழை முதல் பணக்காரர் வரை நாட்டின் அணைத்து குடிமக்களுக்கும் பயன்பெறுகின்றனர். குடியிருப்புகள் மற்றும் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றும் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் மெட்ரோ வாட்டர் தூய்மைப்பணியாளர்கள், மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை அகற்றும் தூய்மைப்பணியாளர்கள், என பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் மூன்று பிரிவுகளாக தூய்மைப்பணி நடைபெறுகிறது.
இயந்திரங்கள் கொண்டு தூய்மைப்பணியை நவீன/ civilised வேலையாக மாற்றுவது, பணியாளர்களில் வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் அணைத்து சாதியினரையும் இந்த பணியில் ஈடுபடுத்துவது என்பதை உள்ளடக்கிய கொள்கை வகுக்க வேண்டிய காலம் இது. முயற்சிப்போம்!
*திமுக அரசே !
வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சுயமரியாதை வாழ்கை சாத்தியமா ?
எதிலும் ஒப்பந்த முறை! அனைத்தும் தனியார்மயம் என்பது
சமூகநீதி ஆகுமா ?
15.08.25
9500056554