டிரம்பின் வர்த்தகப் போர் பகுதி -4 – தோழர் சமந்தா

15 Aug 2025

ஏம்ப்பா டிரம்ப், நாங்க அமெரிக்காவோட டாலர்ல வர்த்தகம் பண்றதே ஒங்களுக்கு வரிகட்டுற மாதிரி தான், இதுல கூடுதலா 50% காப்புவரி வேற கட்டணுமா ஒன் பேராசையில இடி விழ!
டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராயிட்டாருண்ணு தெரிஞ்சதுமே மோடியும், நிம்மியும் பயந்தடிச்சு 2025 ஃபிப்ரவரி பட்ஜெட்லயே அமெரிக்க இறக்குமதிகள் மேலான காப்புவரிகளை கொறைச்சுட்டாங்க. ஆனா அதுலயும் டிரம்பு திருப்திபடாம சாக்குபோக்கு கண்டுபுடிச்சு 25% வரி போட்டு கொஞ்ச நாள் பொறுத்து பார்த்துட்டு இப்ப 50% வரி போட்டுருக்காரு. 21 நாள் கெடு வேற கொடுத்துருக்காரு. எதுக்கு பேரம் பேசத்தான். ஆனா ஏன் அநியாயமா 50% வரி போடுறீங்கண்ணு இந்திய அரசு தரப்புலிருந்து கேட்டா, இந்தப்பாரு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது, கேட்டீண்ணா வரியை இன்னும் அதிகமாக்குற மாதிரி “ஸெகண்டரி டேக்ஸ்” போடுவேண்ணு பிளாக்மெயில் பண்ணி மெரட்டுறாரு. மோடி அமெரிக்க அடிவருடியா இருக்குறதால தான் டிரம்ப், மோடி தலையில குட்டி குட்டி குனியவெக்கலாம்ணு பாக்குறாரு. அதுனால மோடி நீங்க குட்ட குட்ட குனியாம முழு வீச்சுல பேரம் பேசுனா தான் வரியைக் கொறைக்கமுடியும். எப்புடியோ மோடி அரசோட சந்தர்ப்பவாத வெளிநாட்டுக் கொள்கைக்கு டிரம்ப் ஆப்புவெச்சுட்டாரு. அதே மாதிரி டிரம்போட சந்தர்ப்பவாத வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிரா உலக நாடுகள் ஒண்ணு சேராத வரைக்கும் டிரம்போட மெரட்டல், உருட்டல் எல்லாம் அதிகமாயிட்டுத் தான் இருக்கும்.
உக்ரைனுக்காக முதலைக் கண்ணீர் விடுற டிரம்ப்க்கு ஏன் பாலஸ்தீனிய இனப்படுகொலை மட்டும் இனிக்குது. கேலியம், கிராஃபைட், லித்தியம் உள்பட உக்ரைன்ல உள்ள 22 தாதுவளங்கள் மேல தான் டிரம்புக்கு அக்கறையே தவிர உக்ரைனியர்கள் மேல இல்ல. அந்த தாதுவளங்களை கொடுத்தா கூட உக்ரைனோட பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கமுடியாதுண்ணு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுல அவமானப்படுத்தி அனுப்புனவர் தான் இந்த டிரம்ப். ஒங்களுக்கு விசயம் தெரியுமா? அமெரிக்காவுல இல்லாத ஆய்வுக்கூடங்களா சொல்லுங்க, ஆனா டிரம்ப் தனக்கு கோவிட் தொற்று இருக்காண்ணு பரிசோதனை பண்ண ரத்தத்தை ரஷ்யாவுக்கு தான் அனுப்பிவெச்சாரு.
காசாவுல உள்ள பாலஸ்தினியர்களை வெளியேத்தி காஸாவை சுற்றுலாத்தளமாக்கனும்ணு சொன்ன டிரம்ப், பாலஸ்தீன இனஅழிப்புக்கு உதவி செய்யுற போர்க்குற்றவாளி. அதுனால உலக நாடுகளுக்கு இஸ்ரேலோடு மட்டும் இல்லாம, டிரம்பின் அமெரிக்க அரசுடனான வர்த்தக உறவுகளை நிறுத்துறதுக்கும், பொருளாதாரத் தடை விதிக்குறதுக்கும் தார்மீக உரிமை இருக்கு. ஆனா உலக நாடுகள் நாலாறு பாதையில சிதறிக் கெடக்கு. பிரிக் கூட்டமைப்புக்குள்ளயே கருத்தொற்றுமை இல்லாததால முற்போக்கான நடவடிக்கைகள் வெறும் பேச்சோட நிக்குறது தான் எதார்த்த நெலைமையா இருக்கு.
டிரம்ப்-மோடியோட சந்தர்ப்பவாத நடவடிக்கைகளால இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படப் போகுது, அமெரிக்கப் பொருளாதாரமும் பாதிக்கப்படப்போகுது. இதுனால அதிகம் பாதிக்கப்படப் போறது இந்தியாவுலயும், அமெரிக்காவுலயும் உள்ள தொழிலாளர்கள் தான்.
இந்தியா அமெரிக்காவுக்கு 8,650 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்யுது. இந்தியாவின் ஏற்றுமதியில கிட்டத்தட்ட 20% அமெரிக்காவுக்கு செய்யப்படுது. அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியின் ஜிடிபி மதிப்பு 2%. டிரம்பின் 50% வரியால தோல், வேதிப்பொருட்கள், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் ஏற்றுமதி பாதிக்கப்படப்போகுது. அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில 55% டிரம்பின் 50% வரியால பாதிக்கப்பட இருக்கு.. இதனால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1% அளவுக்குக் குறையலாம்.
டிரம்பின் அடாவடி வரிகளால ஏற்படுற உடனடி பொருளாதார இழப்புகளை தவிர்க்கமுடியாது தான். ஆனாலும் அமெரிக்கா போன்ற நம்பகத்தன்மையில்லாத வல்லரசு நாடுகளுடனான வர்த்தகத்தை குறைப்பது நீண்ட கால அளவுல இந்தியாவுக்கு நல்லது தான். இந்தியா தன்னோட இறக்குமதிகளுக்கும், ஏற்றுமதிகளுக்கும் ஒரு சில நாடுகளை மட்டுமே சார்ந்து இருக்காம பன்மையப்படுத்தவேண்டியது அவசியம். இந்திய அரசு ஏற்றுமதி சார்ந்த கொள்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்காம உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியதன் அவசியத்தை இந்த நெருக்கடியில கூட புரிஞ்சுக்கமுடியலைனா முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை. அதுனால இந்திய அரசு உள்நாட்டுக்கான உற்பத்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கனும்.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதிகளுக்கு மட்டும் தான் டிரம்ப் 50% வரி போட்டுருக்காரு. சேவை ஏற்றுமதிகளுக்கு வரி போடல. அந்த அடிப்படையில மார்க்சியப் பொருளாதார அறிஞர் மைக்கேல் ராபர்ட்ஸ் இந்தியாவுக்கு வழங்குன பரிந்துரைகளை இப்ப கேப்போம்.
“டிரம்பின் வரித் தோட்டாவைத் தவிர்க்க சேவைத் துறையை மையப்படுத்துதல்:
நீண்ட கால அடிப்படையில், மற்ற ஆசிய நாடுகளைப் போலவே, இந்தியாவும், டிரம்பின் வர்த்தகப் போரால் தூண்டப்பட்ட மாறிவரும் புவிசார் அரசியல் நிலப்பரப்புக்கு ஏற்ப சேவை சார்ந்த வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை ஏற்றுக்கொள்வது, டிஜிட்டல்மயமாக்கம், செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவது மற்றும் அதிக பிராந்திய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அமெரிக்காவும் சீனாவும் இருதரப்பு வர்த்தகப் போரில் ஈடுபட்டால், ‘RCEP’-யில் உறுப்பினராக இருப்பதன் மூலம் இந்தியா பயனடையலாம். டிஜிட்டல் சேவைகளில் சர்வதேச வர்த்தகம் 2024 இல் 9.4% உயர்வைப் பதிவு செய்தது. டிஜிட்டல் முறையில் வழங்கக்கூடிய சேவைகள் ஏற்றுமதிகள் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அதிகரித்தன அதன் பின்னர் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உலக சேவைகள் ஏற்றுமதி 9.7% அதிகரித்துள்ளது, இந்தியாவின் ஏற்றுமதி 12% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலும் சேவைத் துறையே சமூகத்திற்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை அளிக்கிறது. வளரும் பொருளாதாரங்களில், 2023 ஆம் ஆண்டில் மொத்த வேலைவாய்ப்பில் இது சுமார் 45% பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், உலகின் சிறந்த சேவை ஏற்றுமதியாளர்களின் பட்டியலில் இடம்பெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. தொலைத்தொடர்பு, கணினி, தகவல் சேவைகளில் ஒப்பீட்டளவில் இந்தியா ஆதாயத்தைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சீனாவின் ஆதாயம் உற்பத்தியிலும் போக்குவரத்திலும் உள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிக வளர்ச்சி விகிதங்களையும், உலக சேவைகள் வர்த்தகத்தில் அதிகரித்து வரும் பங்கையும் கொண்டுள்ளது. இது சீனா மற்றும் கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் காப்பு வரிப் போரால் (tariff war) அல்லது போட்டியால் பாதிக்கப்படாத ஒரு பகுதி; அல்லது உலகளாவிய பொருட்கள் வர்த்தகத்தில் நிகழும் சரிவின் எந்த அறிகுறியையும் காட்டாது. இதுவே செல்ல வேண்டிய வழி.”

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW