மதுரையில் இந்து முன்னணி – பாசக குண்டர்கள் தொடர் அடாவடி! தமிழ்நாடு அரசே! வேடிக்கை பார்க்காதே, நடவடிக்கை எடு! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

இந்து முன்னணி – பாசக குண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று இடையூறு செய்தனர். கூட்டத்தில் புகுந்து கூச்சலிட்டு, கலவரம் செய்ய முயன்ற இருவரையும் கைது செய்யவில்லை காவல்துறை!
நேற்றோ ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அறைகூவலுக்கு ஏற்ப அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு எதிராக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று பாசக குண்டர்கள் போராட்டக் காரர்களைத் தாக்கியுள்ளனர். அதில், மூன்று சக்கர வண்டியில் அமர்ந்திருந்த விவசாயத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தோழர் ஜோதி இராமலிங்கமும் தமிழ்நாடு உழவர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் தங்கபாண்டியனும் தாக்கப்பட்டுள்ளனர். தோழர் ஜோதி இராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதிலும் முதலில் போராட்டக்காரர்கள்தான் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டார்கள். பின்னர், போராட்டக்காரர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இருவரின் பெயர்களை மட்டும் குறிப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. ஆனால், பாசக குண்டர்கள் யாரையும் சிறைபடுத்தவில்லை!
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் முறையாக காவல்துறை அனுமதி பெற்று, அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) யின் தலைமைக் குழு உறுப்பினருமான மீ.த.பாண்டியன் தலைமையில் நடைபெற்றதாகும. ஆனால் அதே இடத்தில் அதே நேரத்தில் கூட்டமைப்பிற்கு எதிராக் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக இந்து முன்னணி அறிவித்தது. அறிவித்தபடியே ஆர்ப்பாட்ட இடத்திற்கு அருகில் 60 பேர் கூடினர். அனுமதி பெற்று நடக்கும் ஒரு போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என ஓர் அமைப்பு அறிவிக்கும் பட்சத்தில் அவர்களை அவ்விடத்தில் கூடவிடாமல் தடுத்திருக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பாகும். ஆனால், காவல்துறை அப்படி செய்யவில்லை. அதுமட்டுமின்றி ஆர்ப்பாட்ட இடத்திற்குள் நுழையவும் அனுமதித்தது. மேலும் அப்படி அத்துமீறி நுழைந்து கலவரம் செய்ய முனைந்தவர்களை கைது செய்யவும் இல்லை.
சட்டப்புறம்பாக கூடி கலவரம் செய்ய முயன்றவர்களை ஏன் முன்கூட்டியே கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கவில்லை.? ஏன் கலவரக்காரர்களை ஒன்றுகூட அனுமதித்தது? அதுமட்டுமின்றி ஒன்றுகூடியவர்களில் இருவர் காவல் துறை பாதுகாப்பையும் மீறி எப்படி ஆர்ப்பாட்டத்திற்குள் செல்ல முடிந்தது? ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை?
இவை யாவும் மதுரை மாவட்டக் காவல்துறை இந்து முன்ன்ணி குண்டர்களின் கலவர முயற்சியைக் கட்டுப்படுத்துவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் தவறியதை தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன.
நேற்று போராட்டம் நடக்கும் இடத்திற்கே வந்து பாசக குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு இதை ஏன் முன் கூட்டியே கண்டறியவில்லை? தாக்குதலில் ஈடுபட்ட பாசகவினரைக் ஏன் கைது செய்யவில்லை?
இந்து முன்னணி – பாசக குண்டர்கள் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டப் பார்க்கின்றனர். இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ”இந்துத்துவக் குண்டர்களுக்கும் சன்நாயக ஆற்றலகளுக்கும் இடையிலான சண்டை இது , நமக்கென்ன வந்தது?” என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டக் கூடாது.
தமிழ்நாடு காவல் துறை இந்து முன்னணி – பாசக குண்டர்களைக் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் தமிழ்நாட்டு சனநாயக ஆற்றல்கள் வினையாற்ற வேண்டிய தேவை எழும்.
இத்தகைய பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள்தான் பாசிச எதிர்ப்புக் களத்தை உருவாக்கி, பேணி வருகின்றனர். கடந்த 2019 இல் இருந்து திமுக தலைமையிலான கூட்டணி தொடர் தேர்தல் வெற்றிகளை ஈட்டி வருவதில் பாசிச எதிர்ப்பு களத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நிலைமை இப்படி இருக்க, பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்கள் சங் பரிவாரங்களால் தாக்கப்படுவதும் சிறைபடுத்தப்படுவதும் நடைபெறுமானால் அது பாசிச எதிர்ப்புக் களத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்பதை திமுக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
கலவரக்காரர்களைக் கைது செய்ய மறுக்கும் மதுரை மாவட்ட் காவல்துறையின் உயரதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அதன் அடிபப்டையில் கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசக சதி திட்டம் தீட்டி மதுரையில் கலவரம் செய்ய நினைக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அதை தடுக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும், போராட்டங்களில் புகுந்து இடையூறு செய்த இந்து முன்னணி – பாசக குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி 99419 31499