தூய்மைப்பணியாளர் மீதான திமுக அரசின் அடக்குமுறை – சமூக நீதியை குழிதோண்டி புதைத்தமைக்கு வன்மையான கண்டனம் !

சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
13 நாளாக போராடிவரும் தூய்மைப்பணியாளர்களை நேற்று இரவு கைது செய்துள்ளது தமிழக அரசு, போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் சார்ந்த தொழிலாளர்கள் இந்த நிமிடம் வரை 4-5 மண்டபத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் NULM திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலைசெய்து வந்த தூய்மைப்பணியாளர்களை ஒப்பந்த முறையில் தனியார் நிருவனமான ராம்கி இடம் விடகூடாது, தமிழக அரசு பணிநிரந்தரம் செய்திடவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து போராடி வந்தனர்.
13 நாட்களாக பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வாய்ப்புகள் இருந்தும் அதனை செய்யமறுத்துள்ளது திமுக அரசு. போராட்ட குழு தலைமை பேச்சுவார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தபோதும் குறைந்தபட்சம் STATUS QUO (நடப்பு நிலை) தொடரட்டும் என்று கூட அரசு தரப்பு முன்வைக்கவில்லை. Outsourcing தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் ராம்கி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து தூய்மைப்பணியாளர்கள் NULM திட்டத்தின் கீழ் பணியை தொடரட்டும் என்ற உடனடி தீர்வை கூட தட்டி கழித்து தனியார்மய கொள்கையை – கார்ப்ரேட் ஆதரவு கொள்கையை உயர்த்திப்பிடித்துள்ளது திமுக அரசு.
தூய்மைப்பணி என்பது பட்டியல் சமூக மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் போராடும் தூய்மைப்பணியாளர்கள் பெரும்பான்மை பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் என்று அறியாதவர்கள் அல்ல ஆட்சியாளர்கள்.
இயந்திரங்கள் கொண்டு தூய்மைப்பணியை நாகரிகமான வேலையாக மாற்றுவது, பணியாளர்களில் வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் அணைத்து சமூகத்தினரையும் இந்த பணியில் ஈடுபடுத்துவது என்பதை நோக்கி திட்டம் வகுக்கவேண்டிய சூழலில் திமுக அரசின் இந்த அடக்குமுறை தமிழகத்தின் சமூகநீதி கொள்கையை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.
தற்போதைய மோடி ஆட்சி காவி – கார்ப்ரேட் பாசிசம் என்று சொல்கிறோம், ஏனெனில் அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்ரேட் மூலதனத்திற்கு சேவை செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளார்கள், பாஜக வின் மதவாதத்தை எதிர்க்கும் திமுக, பாஜக வின் கார்ப்ரேட் ஆதரவு கொள்கையில் உடன்படுகிறது என்பது நிதர்சனம்.
தூய்மைப்பணியாளர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு தமிழகத்தில் மக்கள் நல அரசு என்றோ சமூக நீதி அரசு என்றோ இனியும் பேச போகிறீர்களா ?