ஆகஸ்டு 15 சுதந்திர நாளன்று தேர்தல் சனநாயகத்தை மீட்க உறுதியேற்போம்!   ‘வாக்கு திருடன்’ மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்     

13 Aug 2025

பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற அமைப்பு முறையையும் அதன் பகுதியான தேர்தல் சனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற சனநாயக நெருக்கடி நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு 7 ஆம் நாள் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும் இப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் தேர்தல்கள் இப்போது திட்டமிட்ட நாடகமாக மாற்றப்பட்டுள்ளன என்று கூறுகிறார்.

2024 மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் மொத்தம் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 இல் காங்கிரசு வெற்றி பெற்றிருந்தது. ஆனால், எட்டாவது சட்டமன்ற தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் பாசக பெற்ற வாக்குகளைக்  கொண்டு பெங்களூர் மத்திய தொகுதியில் பாசக வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது.

மகாதேவபுரா தொகுதியில் 1,14,000 வாக்கு வேறுபாட்டில் காங்கிரசு தோல்வி அடைந்தது. அதில் 1,05,000 வாக்குகள் ஐந்து வழிகளில் திருடப்பட்டுள்ளன என்று ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். போலி வாக்காளர் அட்டையுடன் 11965 பேர்,  ஒரே முகவரியில் 10452 பேர்,   தவறான முகவரியில் 40,009 பேர்,  தவறான புகைப்படத்துடன் 4132 பேர், படிவம் 6 ஐ தவறாகப் பயன்படுத்தி வாக்களித்தவர்கள் 33692 பேர் என ஐந்து வழிகளில் இந்த வாக்கு திருட்டு நடந்துள்ளது என்று ராகுல் காந்தி சொல்லியுள்ளார். பல்வேறு தொகுதிகளிலும் இதுபோல் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொல்லியுள்ளார்.   இதன்மூலம் நரேந்திர மோடி மோசடி செய்தே மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளார் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.

இதற்கு முன்பே, மின்னணு வாக்கு இயந்திர(EVM) மோசடி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் உள்ளிட்ட  தேர்தல் முறையீடுகள் பற்றி முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர் போன்ற பலரும் எழுப்பியிருந்தனர். இப்போது நாட்டின் எதிர்க்கட்சியே இதை எழுப்பியுள்ளது.  

இதற்கிடையே பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு ( SIR) நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், இறந்துவிட்டதாக சொல்லி வாக்காளர் பெயர் பட்டியலில் நீக்கப்பட்ட இருவரை உயிரோடு அழைத்து வந்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி இருக்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ். தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் செய்துவரும் சட்டப்பூர்வமான வாக்குத் திருட்டு அம்பலப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையமோ எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதில் தராமலும் பொறுப்புக்கூற முன்வராமலும் உள்ளது. மாறாக சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக பாசக  தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் போல் இதையும் ராகுல் காந்தி நாட்டுக்கு எதிராக பேசுவதாக கதைக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.  

தேர்தலில் வாக்குகளைத் திருடுவதன் மூலம் தேர்தல் சனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துள்ளது மோடி அரசு. 2023 இல் உசசநீதிமன்றத்தின் அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையரைப் பணியமர்த்தும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக அவ்விடத்தில் கேபினட் அமைச்சரை வைத்துக் கொள்ளும் சட்டத்திருத்தத்தை மோடி அரசு செய்தது. இதன் மூலம் தேர்தல் ஆணையர் பணியமர்த்தலைத் தன் கையில் எடுத்துக்கொண்டது மோடி அரசு. இப்போது தமக்கு தோதானவர்களை தேர்தல் ஆணையர்களாக பணியமர்த்துவதன் மூலம் தேர்தல் ஆணையம் பாசகவின் வெகுசன அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சந்தை என்ற திசையில் இந்நாட்டை நகர்த்தி செல்கிறது மோடி அரசு. இந்து , இந்தி, இந்துராஷ்டிரம் என்பதே இவ்விரசின் இலக்கு. இசுலாமியரையும் கிறித்தவர்களையும் இரண்டாம் நிலைக் குடிமக்களாக்கி, மாநில உரிமைகளை அடியோடு பறித்து, அதானி – அம்பானி உள்ளிட்ட மேற்கு இந்திய கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக இந்நாட்டை மாற்றும் வேலைத் திட்டத்தின் பகுதியாக நாடாளுமன்ற அமைப்பு முறையை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

நாடாளுமன்ற அமைப்பு முறையில் தன்னாட்சியுடன் செயல்படும் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது இவ்வரசு. அதில் தேர்தல் ஆணையத்தை முற்றாக கைப்பற்றியதன் விளைவுதான் இந்தியத் தேர்தலகள் தலைமை அமைச்சர் அலுவலகத்தில் திரைக்கதை எழுதப்பட்டு நடத்தப்படும் நாடகமாக மாறியுள்ளன. பறிபோய்விட்ட தேர்தல் ஜனநாயகத்தை மீட்காமல் நாடாளுமன்ற அமைப்பு முறையையோ அல்லது அரசமைப்புச் சட்டத்தையோ பாதுகாத்துவிட முடியாது. எனவே, ’ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற வரலாற்று முழக்கத்தை மீள செயல்படுத்தியாக வேண்டிய இடத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். 

எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய அனைத்துக் கேள்விகளையும் தேசத் துரோகமாகவும் பாகிஸ்தான் ஆதரவாகவும் சித்திரித்துவரும் பாசிச பாசக இவ்விசயத்தில் எளிதில் பின்வாங்கப் போவதில்லை. நாம் உறுதியாக நின்று அனைத்து முனைகளிலும் போராடாமல் தேர்தல் சனநாயகத்தை நம்மால் மீட்க முடியாது.

’ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படை உரிமையை மீட்பதற்கு இந்நாட்டு குடிமக்கள் போராடுவதற்கு அணியமாக வேண்டும். 

வருகிற ஆகஸ்டு 15 சுதந்திர நாள் அன்று ’தேர்தல் சனநாயகத்தை மீட்போம்’ Restore electoral democracy’, என்று உறுதியேற்று பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து கீழிறக்கி, மோடியை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு அணியமாகுமாறு தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல் விடுக்கிறது..   

தோழமையுடன்,

தி.செந்தில்குமார்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்த்தேச மககள் முன்னணி

9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW